முனைவர் சி.சேதுராமன்,
தமிழாய்வுத் துறைத்தலைவர்,
மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி,
புதுக்கோட்டை.
E-mail: Malar.sethu@gmail.com
ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாகத் திகழ்வது சீவகசிந்தாமணிக் காப்பியமாகும். இக்காப்பியம் கவிச்சிறப்பாலும் கட்டமைப்புக் கூறுகளாலும் சிறந்து விளங்குகின்றது. இதைத் தமிழறிஞர்கள் பலரும் தம் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.
இச்சிந்தாமணிக் காப்பியத்தை நச்சினர்க்கினியரின் உரையோடு பதிப்பித்தவர் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையர் ஆவார். சீவகசிந்தாமணியின் சிறப்பினை, “சிந்தாமணியின் அருமை வரவர எனக்கு நக்கு புலப்படலாயிற்று. செந்தமிழ்க் காப்பியங்களுக்கு எல்லாம் அதுவே உரையாணி என்பதைத் தெரிந்து கொண்டேன்” என்று உ.வே.சா. அவர்கள் தன்னுடைய என் சரிதம் எனும் நூலில் குறிப்பிடுகின்றார். இத்தகைய அரிய காப்பியத்தை இயற்றியவர் திருத்தக்கதேவர். இவர் கவிச்சக்கரவர்த்தி என்பதை, “திருத்தக்கதேவர் தமிழ்க் கவிஞர்களுள் ஒரு கோமகனாய் விளங்குகிறார்” என்று குறிப்பிடுவதாக மு.வை.அரவிந்தன் தன்னுடைய ‘சிந்தாமணி தரும் ஒளி’ என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.
உவமைக்கவிஞர் சுரதா,
“முதலடியைத் தேனாக்கி அடுத்தடுத்து
முளைக்கின்ற தொடரடியை அமுதமாக்கி
விதம்விதமாய்ச் சந்தநய நட்புண்டாக்கி
வியப்புமிகு உவமைகளால் புதுமை தேக்கி,
பதமுடைய பாவினமாம் விருத்தமாக்கி,
பதின்மூன்றிலம்பகமாய் வகுத்துத் தூக்கி
இதயம் அதை இறைவன்பால் பதிய வைத்தோன்
இன்பச் சிந்தாமணிநூல் இயற்ற லானான்”
என்று தம்முடைய தேன்மழை எனும் நூலில் சிந்தாமணியைப் பற்றிக் குறிப்பிடுகின்றார்.
சிந்தாமணி நூலமைப்பு
வடமொழியில் மிகவும் சிறப்புடையதாக விளங்கிய சீவகன் கதையைத் திருத்தக்கதேவர் தமிழ்மொழியில் எழுதினார். இவரது காப்பியம் நாமகள் இலம்பகம் 408 பாடல்களையும் கோவிந்தையார் இலம்பகம் 84 பாடல்களையும் காந்தருவதத்தையார் இலம்பகம் 358 பாடல்களையும் குணமாலையார் இலம்பகம் 315 பாடல்களையும் பதுமையார் இலம்பகம் 246 பாடல்களையும் கேமசரியார் இலம்பகம் 145 பாடல்களையும் கனகமாலையார் இலம்பகம் 332 பாடல்களையும் விமலையார் இலம்பகம் 106 பாடல்களையும் சுரமஞ்சரியார் இலம்பகம் 107 பாடல்களையும் மண்மகளிலம்பகம் 225 பாடல்களையும் பூமகளிலம்பகம் 51 பாடல்களையும் இலக்கணையாரிலம்பகம் 221 பாட்களையும்முத்தியிலம்பகம் 547 பாடல்களையும் பெற்று மொத்தம் 3145 பாடல்களாகவும் 13 இலம்பகங்களாகவும் அமைந்துள்ளது.
இலம்பகம் என்பதற்கு மாலை என்பது பொருளாகும். இது வடசொல் என்று நச்சினார்க்கினியர் குறிப்பிடுவார். இக்காப்பியம் விருத்தப்பாவினால் முதன்முதலாக எழுதப்பட்டதாகும். காப்பியத் தலைவன் சீவகன் எண்மரை மணந்து கொள்வதால் இதற்கு மணநூல் என்ற வேறு பெயரும், முத்தியைப் பற்றி இக்காப்பியம் எடுத்துரைப்பதால் முத்திநூல் என்றும் இதற்கு வேறு பெயர்கள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சிந்தாமணியில் சமயங்கள்
சிந்தாமணி காப்பியகாலச் சமுதாயத்தில் பலவகைப்பட்ட சமயங்கள் இருந்தன. அக்கால மக்களின் சமய வாழ்க்கையின் உண்மையான நிலைகளைக் காட்டுவனவாக உள்ளன. மனித வாழ்வு சமயங்களோடு கலந்த வாழ்வு. சமயம் இல்லையென்றால் வாழ்வு இல்லை என்னும் நிலையில் சமயம் வாழ்வோடு இணைக்கபட்டுள்ளது என்ற உண்மையைச் சீவகசிந்தாமணி வழி அறியலாம்.
சிந்தாமணியில் சைவம், வைணவம், பெளத்தம், சமணம் போன்ற சமயக்கடவுள்களின் புராணக்கருத்துக்களும் கொள்கைகளும் காணப்படுகின்றன.
சைவம்
சிந்தாமணியில் சைவ சமயச் சார்புடைய சிவன், பார்வதி, முருகன் ஆகிய தெய்வங்கள் குறிக்கப்படுகின்றன. இக்கடவுள்களின் செயற்கரிய செயல்களும், புராண நிகழ்ச்சிகளும் பல இடங்களில் வெளிப்படுகின்றன. சைவத்தின் முதன்மைக் கடவுளான சிவபெருமான் தலையில் பொன்னிறமான சடைமுடியைக் கொண்டவன்(சீவகசிந்தாமணி, பா.208) அதில் திங்களைச் சூடியவன்பா.598(). அவன் நெற்றிக் கண்ணால் காமனை எரித்தவன்(பா.,695). அவன் சிரிப்பால் திரிபுரங்களையும் எரித்துச் சாம்பலாக்கியவன்(பா.1087) அவனின் நீலநிறமிடற்றில் சாமவேதம் இருந்தது(பா.,2038). அவன் கையில் திரிசூலத்தை ஏந்தி நிற்பவன்(பா.,2105). அவன் பார்வதியை உடலின் ஒரு பாகமாகக் கொண்டவன்(பா.,208) என்று சிவபெருமான் குறிப்பிடப்படுவது நோக்கத்தக்கது.
சிவபெருமானைக் குறித்த இத்தொடர்கள் அனைத்தும் அச்சமயக்கடவுளின் ஆற்றலை வெளிப்படுத்துவனவாக அமைந்துள்ளன. சிவபெருமான் தீமையை வென்று நன்மையைத் தழைத்தோங்கச் செய்வதில் வல்லவர். ஆணுக்குப் பெண் சமம் என்ற கருத்தை விளக்குபவர். நிலையாமைத் தத்துவத்தை விளக்குபவர். ஆனால் சீவகசிந்தாமணி சிவன் உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டதை நீங்காத பழியினைப் பெற்றவன் என்று குறிப்பிடுகிறது. இது சைவ சமயக் கடவுளர்களின் மீது உள்ள வெறுப்பை வெளிப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முருகனைப் பற்றிய தொன்மச் செய்திகள்
சிவபெருமானின் மகனான முருகனைப் பற்றிய பல தொன்மச் செய்திகளை இந்நூல் குறிப்பிடுகின்றது. முருகன் அழகு நிரம்பியவன்(பா.,1692). தாமரை மலரில் தோன்றி, மலைமீது வாழ்பவன்(பா.1311). தன் கையி செம்பொன்னைப் போன்ற வேலைத் தாங்கியவன்(பா.1664). சூரபதுமனோடு நடந்த போரில் தன் கை வேலால் கிரவுஞ்சத்தை இரண்டாகப் பிளந்தவன்(பா.,1291). தன் வாகனமாக மயிலைக் கொண்டிருப்பவன்(பா., 812, 1261). வள்ளி என்ற குறப் பெண்ணை மனைவியாகப் பெற்றவன்(பா., 482) என்றும் முருகனைப் பற்றிய பிறப்பு வளர்ப்பு, அவனது வீரம், அருட்டன்மை, மணம் புரிந்தமை ஆகியவற்றைப் பற்றிய தொன்மச் செய்திகள் சிந்தாமணியில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இத்தொன்மச் செய்திகள் அனைத்தும் காப்பிய நாயகன் சீவகனைச் சிறப்பிப்பதற்காக திருத்தக்கதேவர் கையாண்ட உவமைத் தொடர்களாகக் காப்பியத்தில் இடம்பெற்றிருப்பது சிறப்பிற்குரியதாகும். இதிலிருந்து சீவகசிந்தாமணி காப்பிய கால மக்களால் சைவசமயக் கடவுள்களைப் பற்றிய செய்கள் பரவலாக அறியப்பட்டிருந்ததை நாம் உணரலாம். (தொடரும்……1)
வைணவம்
சீவகசிந்தாமணியில் திருமால், திருமகள் ஆகிய வைணவ சமயக் கடவுளர்கள் குறித்த செய்திகள் இடம்பெற்றுள்ளன. திருமால் பாம்புக் கொடியைக் கொண்ட துரியோதனனின் படைகெட குதிரை பூட்டிய தேரினைச் செலுத்தியவன்(பா.456). இராகுவின் வாயிலிருந்து நிலவை விடுவித்தவன்(454). திருமாலின் மகன் காமன்.(681,1339). காம இன்பத்தில் அலைக்கழிக்கப்பட்டவன்(961). கருடனை வாகனமாகக் கொண்டவன்(449). நப்பின்னையை மணந்தவன்(482). பாற்கடலைக் கடைந்து தேவர்களுக்கு அமிழ்தம் வழங்கியவன்(492). பாரதப் போரில் வலம்புரிச் சங்கை எடுத்து ஊதியவன்(811). மேருமலையை மத்தாகக் கொண்டு பாற்கடலைக் கடைந்தவன்(963). கையில் சங்கையும் சக்கரத்தையும் கொண்டவன்(1559). கண்ணனாகப் பெண்களின் ஆடையைக் கவர்ந்து கொண்டு குருந்த மரத்தில் ஏறியவன்(208). இராமனாக இருந்து மரா மரத்தைத் துளைத்தவன்(1643). என்று திருமாலின் அவதாரச் சிறப்புகளையும் வலிமையையும் வெளிப்படுத்தும் வகையில் தொன்மச் செய்திகள் சிந்தாமணியில் இடம்பெற்றுள்ளன. திருமாலின் கண்ணன், இராமன், மோகினி அவதாரச் செய்திகள் இதில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
திருமாலின் மனைவியாகிய திருமகள் செல்வத்தின் அடையாளமாகக் குறிக்கப்படுகிறாள்(383). இவள் செந்தாமரை மலரைத் தன்னுடைய இருப்பிடமாகக் கொண்டவள்(523,639,1326). இவள் பதுமை என்னும் குளத்தில் உள்ள தாமரை மலரில் வாழ்பவள் என்று குறிக்கப்படுகின்றாள்(1001). சிந்தாமணியில் திருமகள் அழகை வெளிப்படுத்தும் வகையில் வந்துள்ள தொடர்கள் அனைத்தும் செல்வ வளத்தைக் குறிப்பிடும் இடங்களில் மட்டுமே குறிக்கப்பெற்றுள்ளன. திருமகளைச் சிறப்பிக்க எந்த இடத்திலும் பயன்படுத்தப்படவில்லை என்பது நோக்கத்தக்கது.
இதற்கு மாறாக திருமகள் பொதுமகள் என்று சிந்தாமணிக் காப்பியத்தின் ஓரிடத்தில் குறிக்கப்படுகின்றாள்(1150). மற்றோரிடத்தில் நிலையாக இல்லாமல் மறைந்து போகக் கூடியவள்(2941). என்று குறிப்பிடப்படுகிறது. செல்வம் நிலையில்லாதது என்பதைச் சுட்டிக் காட்டுவதாக இவை அமைந்துள்ளன.
பிரமன்
படைப்புக் கடவுளாகவும் மும்மூர்த்திகளுள் ஒருவராகவும் பிரமன் சைவ சமயத்தில் குறிப்பிடப்படுகின்றார். நான்கு முகங்களைக் கொண்ட காரணத்தால் அவரை நான்முகன் என்றும் அழைப்பர். பிரமன் முனிவர்களைவிட உயர்ந்தவர்(707). இவரின் வஜ்ரத்தின் நுனியால் எழுதிய எழுத்து அழியாத தன்மை வாய்ந்தது(1534). இவர் திலோத்தமையின் மீது காதல் கொண்டு தன்னுடைய முகத்தை நான்கு முகங்களாகப் படைத்துக் கொண்டார்(207). அப்படியும் திலோத்தமையை அடைய முடியாமல் தன்னிலை தாழ்ந்து மண்ணகம் புகுந்து தவம் செய்து மீண்டார். அப்படியிருந்தும் தன்னுடைய பழியைப் போக்க இயலாதவனாக இருந்தார்(207). மும்மூர்த்திகளுள் ஒருவராக மதிக்கப்படும் கடவுள். மனிதப் பிறவிகளைப் படைக்கும் ஆற்றல் பெற்றிருந்தும் ஒரு பெண்ணின் மீது கொண்ட காமத்தால் தன் உருவை நான்கு முகமாக மாற்றிக் கொண்டு இழிவடைந்து பழியேற்றான் என்று சீவகசிந்தாமணி குறிப்பிடுகின்றது.
இந்திரன்
இந்திரன் ஆயிரம் கண்களைக் கொண்டவன்(473). அவனுடைய விண்ணுலகம் செல்வ வளமுடையது(473). கற்பக மாலையைச் சூடியவன்(754). முத்தாரம் தவழும் அழகிய மார்பைக் கொண்டவன்(3121). அமைச்சர் சொல்லைக் கேட்டு அதன்படி இந்திரலோகத்தை ஆள்பவன்(473). அருகனைத் தலைதாழ்த்தி வணங்குபவன்(3085). இந்திரலோகத்தில் வாழும் அழகிய பெண்களை நுகர்ந்து வாழ்பவன்(3121,3131). இவன் நிலையில்லாத வாழ்க்கையைக் கொண்டவன்(1264). இவனின் இப்பதவி கடுந்தவத்தைச் செய்பவர்கள் அடையக்கூடியது(473,528).
மண்ணுலகில் வாழ்பவர் இவனைச் செல்வத்தின் உறைவிடம் என்று கருதினர்(681,1339). இவன் வாழும் நகரமும் பொருள்களும் விலை மதிக்க முடியாதவை என்று கருதினர். விலையுயர்ந்த பொருளை வளமிக்க நகரைக் குறிப்பிட இவன் பெயரைப் பயன்படுத்தினர்(486). என்று சீவகசிந்தாமணி இந்திரனைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. இந்திர பதவி என்பது தம் முயற்சியால் தவம் செய்வார் பெறும் பெரும் பதவி. இப்பதவி பெற்றோர் வானுலகப் பெண்களுடன் இன்பம் துய்த்து வாழும் சிறப்புடையவர். பின்னர் காமத்தை ஒழித்து அருகனை வழிபட்டால் மண்ணுலகில் பேரரசர்களாகப் பிறந்து பின்னர் துறவு ஏற்று முத்தி பெறும் தன்மை கிடைக்கும் என்றும் சிந்தாமணிக் காப்பியம் தெளிவுறுத்துகின்றது.
காமன்
திருமாலின் மகன் காமன்(851,995) என்று அழைக்கப்பட்டவன். இவனை மன்மதன் என்றும் அழைத்தனர். இவன் கையில் வளைந்த கரும்பு வில்லை உடையவன்(851,995). ஐந்து மலரம்புகளைக் கொண்டவன்(1851,995). வேனிற்பருவத்தை வரச் செய்து காம இன்பத்தை அனைவருக்கும் ஊட்டுபவன்(1261). சுறாமீன் கொடியைக் கையில் தாங்கியவன்(2052). இவனுக்கு அழகிய கோவிலிருந்தது(2052). அக்கோவிலில் திருமணமாகாத பெண்கள் வழிபாடு செய்தனர்(695,1063). அவர்கள் தமக்குப் பிடித்த கணவனைத் தருமாறு காமனிடம் வேண்டினர்(638). காமன் சிவனால் எரிக்கப்பட்டவன்(917,1839) என்று மன்மதனைப் பற்றிய பலவகையான தொன்மச் செய்திகள் திருத்தக்கதேவரால் சிந்தாமணியில் குறிக்கப்பட்டுள்ளன.
எமன்
எமன் உயிரைக் கவர்ந்து கொள்ளக் கூடியவன்(1080). இரக்கமின்றி உயிரைக் கொல்பவன்(1080). இவன் குடல்களை முடிக் கண்ணியாகவும் மாலையாகவும் கொண்டவன்(1080). இவன் குருதியைச் சந்தனமாகப் பூசியவன்(1487). இவன் நிணத்தை மேலாடையாகக் கொண்டவன்(210). இவன் ஒரு கையில் மணிகள் பதித்த வேலையும் மற்றொரு கையில் பாசக் கயிற்றையும் கொண்டவன்(210) என்று எமனைப் பற்றிய செய்திகள் சிந்தாமணியில் இடம்பெறுகின்றன. எமனை உயிர்களைக் கொல்லும் கொடிய தெய்வமாகவும் கோர வடிவைக் கொண்டவனாகவும் சிந்தாமணி குறிப்பிடுவது நோக்கத்தக்கது.
(தொடரும்)
- நிறை
- எனது கதைகளின் கதை – 2. மனிதனுக்கு மனிதன்
- தென் அமெரிக்காவின் ஈகுவடார் & ஜப்பான் நாடுகளில் நேர்ந்த பூதப் பூகம்பத்தால் பலர் மரணம், பேரிடர்ச் சேதாரங்கள்
- நைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க பிரமிடுகள் -2
- காப்பியக் காட்சிகள் 1.சீவகசிந்தாமணியில் சமயங்கள்
- தெறி
- தொடுவானம் 117. சிங்கப்பூரில் உல்லாசம்…..
- ராஜசுந்தரராஜன் கவிதைகள் — ஒரு பார்வை
- கனவுகளுக்கு அர்த்தம் சொல்பவன்
- சங்ககாலப் போரில் பெண்கள்மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகள்
- மெல்பனில் ‘ திரைவிலகும்போது’ நாடக நூல் அறிமுகவிழா
- அன்னியமாய் ஓர் உடல்மொழி
- ’ரிஷி’யின் நீள்கவிதை – பிள்ளைக்கனியமுதே கண்ணம்மா…..!
- நித்ய சைதன்யா கவிதை
- ஹாங்காங் தமிழ் மலரின் ஏப்ரல் 2016 மாத இதழ்