1956. அப்போது நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில பட்டதாரி ஆசிரியர் பயிற்சி படித்துக் கொண்டிருந்தேன். அந்த ஆண்டு தீபாவளிக்காக சிதம்பரம் – விருத்தாசலம் பேருந்தில் எனது ஊருக்குச் சென்று கொண்டிருந்தேன். முன்னிரவு. பஸ் குறுக்கு ரோடில் நின்றது. மறுநாள் தீபாவளி என்பதால் பலரும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்கள். கூட்டமாக பேருந்தில் ஏற முண்டியடித்தார்கள். நடத்துனர் அவ்வளவு பேரையும் சமாளித்து ஏற்றிக் கொண்டு விசில் கொடுத்தார்.
பேருந்து நகரத் தொடங்கியதும் சீட்டு போடத் துவங்கினார். ஓட்டுநர் இருக்கைக்குப் பின்னால் என்னருகே வந்து அமர்ந்திருந்த ஒரு ஏழைத் தம்பதியர் பதற்றத்துடன் இருப்பதைக் கண்டேன். “கால் ரூவா குறையுது” என்று கணவன் கவலையுடன் சொல்ல, “கண்டக்டருகிட்டே சொல்லிப்பாரேன்’ என்றாள் மனைவி. அதற்குள் நடத்துனர் அவர்கள் அருகில் வந்து கை நீட்டினார். hhகணவன் சங்கடத்துடன் நடத்தனரிடம் “ஐயா ஓரு நாலணா குறையுதுங்க…..” என்றார். “அதுக்கு நா என்ன செய்யறது? யார்ட்டியாவது கேட்டுப் பாரு. இல்லேண்ணா எறங்கிக்கோ” என்று சொல்லிவிட்டு அடுத்தவரிடம் சென்றார். கணவன் சோகமாக சுற்றுமுற்றும் பார்த்தான். மனைவி முன் பக்கம் ஓடடுநருக்கு பக்கத்து இருக்கையில் (அப்போதெல்லாம் அப்படி ஒரு இருக்கை இருந்தது) அமர்ந்திருந்த செல்வந்தர் போலக் காட்சி தந்தவரைச் சுட்டிக் காட்டி, “அங்க பாரு, நம்ப ஊரு கண்டிராக்டர் இருக்காரு. அவரக் கேட்டுப் பாரேன்” என்றாள். எழுந்து நின்று அவரை அழைத்து பணிவுடன், “ஐயா! டிக்கட்டுக்கு நாலணா குறையுது. கொஞ்சம் பெரிய மனசு பண்ணி குடுத்து உதவினீங்கன்னா ஊர்ல போயிக் குடுத்துடுவேன்” என்றான். அவர் இவனைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை. இவன் மீண்டும் கெஞ்சினான். அவர் வெறுப்புடன், “ஏம்’பா எங்க போனாலும் பஞ்சப் பாட்டு தானா? எங்கிட்ட சில்லறை இல்லே!” என்றார் கடுப்பாக. “இல்லேண்ணா எறக்கி உட்டுடுவாருங்க! ஊட்ல புள்ளைங்க காத்துக்கிட்டிருக்கும்….” என்றான் பரிதாபமாக. அவர் இரங்குவதாக இல்லை. மாணவனான எனக்கு மனம் துடித்தது. நடத்துனர் இறங்கச் சொல்லி கடுமை காட்டினால் நான் அந்த நாலணாவைக் கொடுத்து விட முடிவு செய்தேன். எல்லோருக்கும் சீட்டுப் போட்டு முடிந்தும் நடத்துனர் நெருங்கி வந்து “என்னய்யா காசு தரப் போறியா, எறங்கப் போறியா?” என்றார் தாட்சண்யம் காட்டாமல். அவன் பரிதாபமாக மனைவியைப் பார்த்தான். அவள் “ ஐயா. கொஞ்சம் தயவு பண்ணுங்க. எறங்குனதும் தெரிஞ்ச கடையில வாங்கிக்கு குடுத்தடறோம்” கெஞ்சினாள். “அதல்லாம் சரிப்படாது! சாவுக்கிராக்கிக்கங்க! எறங்குங்க! ‘ஓல்டான்’ என்ற ஊதலை ஊதினார். கணவனும் மனைவியும மிகுந்த துக்கத்துடன் தடுமாறி தம் மூட்டை முடிச்சுடன் இறங்க யத்தனித்தபோது நான் குறுக்கிட்டேன். அதற்குள் நடத்துனரின் மனிதம் உந்தியதோ என்னவோ, ”ஒக்காரு ஒக்காரு!. தெனம் ரெண்டு கேசு இப்படி வந்து கழுத்த அறுக்குதுங்க!” என்று சலித்துக்கொண்டு, ரைட்! போ’லாம்” என்றார். வேகம் குறைந்த வண்டி மீண்டும் வேகம் பிடித்தது. தம்பதிகள் நிம்மதியுடன் நடத்துனரைக் கும்பிட்டபடி அமர்ந்தனர். என்னை இந்த நிகழ்ச்சி வெகுவாக உறுத்திற்று. நடத்துனருக்கு இருக்கும் மனித நேயம் இந்த முதலாளிக்கு ஏன் இல்லாமல் போயிற்று? மனம் கனத்தது இதுவே இந்த முதலாளிக்கு பணம் குறைந்து இதே நடத்துனர் அவரை நடுக்காட்டில் இறக்கிவிட்டால் எப்படி இருக்கும் என்று ஒரு குரூர ஆசை எழுந்தது. வீட்டுக்கு வந்ததும் உடனே அதையே கற்பித்து கதையாக எழுதினேன். அதுதான் ‘மனிதனுக்கு மனிதன்’ என்ற கதை.
மாணவனாக 1966இல் எழுதிய இந்தக் கதையை 1963இல் குமுதத்துக்கு அனுப்பி அது பிரசுரமும் ஆயிற்று. ஆனால் தலைப்பை மாற்றி இருந்தார்கள். ‘கொஞ்சம் குறைகிறது’ என்று தலைப்பிட்டிருந்தார்கள. பத்திரிகை ஆசிரியருக்கு அந்த உரிமை உண்டென்றாலும் முதலில் எரிச்சல் ஏறபட்டாலும் கதை பிரசுரமானதே – அதிலும் அப்போது பிரபலமாயிருந்த குமுதத்தில் என்று மகிழ்ச்சி ஏற்பட்டது. அந்தக் கதைக்கு சன்மானம் 30ரூ. வந்தது. 1963ல் அது பெரிய தொகை. அப்போது பட்டதாரி ஆசிரியராய் பணியாற்றிய எனக்கு மாத ஊதியம் 180ரூ. தான்!
அடுத்த வாரம் ஆசிரியருக்கு வந்த கடிதங்களில் எனது இந்த கதை பற்றி விமர்சனங்கள வந்திருந்தன. ‘கொஞ்சம் குறைகிறது’ தலைப்பு பிரமாதம்; பணம் மட்டுமல்ல, பண்பாடும் குறைகிறது என்பதைக் காட்டுகிறது’- என்று ஒரு வாசகர் எழுதியிருந்தார். கதையில் பணக்காரரை அவரது மணிபர்ஸ் தொலைந்து விட்டதால் டிக்கட்டுக்கு பணம் தர முடியாத நிலையில் கண்டக்டர் அவரை தாட்சண்யமின்றி இறக்கி விட்டுவிடுவதாக எழுதி இருந்தேன். அதைக் குறிப்பிட்டு ஒரு வாசகர் ‘அந்தப் பகுதியின் பிரபலமான ஒரு காண்டிராக்டரை இறக்கி விடுவது யதார்த்தமாக இல்லை’என்று குறிப்பிட்டு விட்டு’ஆனாலும் இப்படிப்பட்டவர்களை தாட்ணசண்யமின்றி இறக்கிவிடத்தான் வேண்டும் என்று கதை சுட்டுவது ஆரோக்கியமானது’என்றும் குறிப்பிட்டிருந்தார்.
கதையில், ஏழைக்கு உதவ முயலும் ஒரு சாமியாரிடம் பக்கத்தில் இருக்கிற காண்டிராக்டர் ‘நீங்க எதுக்கு? அவன் போடுறது வேஷம்’ என்று தடுக்க முயன்ற போது, சாமியார்‘போகட்டும்! ஏதோ மனிதனுக்கு மனிதன்… ‘ என்று சொல்கிறார். பிறகு பணம் இல்லாததால் கண்டக்டர் இறங்கச் சொன்ன போது சாமியாரிடமே உதவி கேட்கிறார். சாமியார் தாட்சண்யமின்றி மறுக்கிறார். அப்போது பணக்காரர், ‘என்னங்க, மனிதனுக்கு மனிதன் இது கூடச் செய்யக் கூடாதா’என்று அவரது வாசகத்தை அவரிடமே படிக்கிறார். சாமியார் அமைதியாக, ‘உண்மைதான்! மனிதனுக்கு முன்பே நான் செய்து விட்டேன்’என்கிறார். இதை ஒட்டிதான் நான் கதைக்கு தலைப்பை ‘மனிதனுக்கு மனிதன்’என்று வைத்தேன். பத்திரிகை ஆசிரியர் அருமையான தலைப்பை இப்படி மாற்றி விட்டாரே என்று நான் வருத்தப்பட்ட போது, என் நண்பர் டாக்டர் பூவண்ணன், ‘இதில் என்ன வருத்தம் வேண்டிக் கிடக்கிறது? அவர் தலைப்பை மாற்றினால் தான் என்ன? நூலாக உங்கள் கதைகளைத் தொகுத்து வெளியிடும் போது நீங்கள் விரும்புகிற மாதிரி போட்டுக் கொள்ள வேண்டியது தானே?’என்றார். அதன்படி கதை எனது அடுத்த தொகுப்பில் ‘மனிதனுக்கு மனிதன்’ என்றே வந்தது. 1978இல் அக்கதை தமிழக அரசின் எட்டாம் வகுப்பு தமிழ் பாடநூலில் புதிய பாடத் திட்டத்தின்படி, சிறுகதை இலக்கியமும் இடம் பெற வேண்டும் என்ற விதிப்படி முதன் முறையாக எனது இந்தக் கதையும் இடம் பெற்றது! 0
- நிறை
- எனது கதைகளின் கதை – 2. மனிதனுக்கு மனிதன்
- தென் அமெரிக்காவின் ஈகுவடார் & ஜப்பான் நாடுகளில் நேர்ந்த பூதப் பூகம்பத்தால் பலர் மரணம், பேரிடர்ச் சேதாரங்கள்
- நைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க பிரமிடுகள் -2
- காப்பியக் காட்சிகள் 1.சீவகசிந்தாமணியில் சமயங்கள்
- தெறி
- தொடுவானம் 117. சிங்கப்பூரில் உல்லாசம்…..
- ராஜசுந்தரராஜன் கவிதைகள் — ஒரு பார்வை
- கனவுகளுக்கு அர்த்தம் சொல்பவன்
- சங்ககாலப் போரில் பெண்கள்மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகள்
- மெல்பனில் ‘ திரைவிலகும்போது’ நாடக நூல் அறிமுகவிழா
- அன்னியமாய் ஓர் உடல்மொழி
- ’ரிஷி’யின் நீள்கவிதை – பிள்ளைக்கனியமுதே கண்ணம்மா…..!
- நித்ய சைதன்யா கவிதை
- ஹாங்காங் தமிழ் மலரின் ஏப்ரல் 2016 மாத இதழ்