தொடுவானம் 127. மருத்துவத்தில் பகுத்தறிவு …

This entry is part 1 of 21 in the series 10 ஜூலை 2016
 
Hippocrates and patient
(ஹிப்போகிரேட்டஸ் சிறுவனுக்கு சிகிச்சை)

‘ நான் குணமாக்கும் தெய்வமான அப்போலோ, அஸ்கிலிபியுஸ் , ஹைஜீயீயா , பானசீயா, இதர எல்லா தெய்வங்களின் மீதும், அவர்களை சாட்சியாகவும், நான் இந்த உறுதிமொழியை என்னுடைய திறமைக்கும், நேர்மைக்கும் ஏற்றவகையில் இதைக் கடைப்பிடிப்பேன் என்று உறுதி கூறுகிறேன் .

எனக்கு இந்தக் கலையைப் பயிற்றுவித்த ஆசிரியரை என் பெற்றோருக்குச் சமமாக மதிப்பேன்.அவரை என் வாழ்க்கைப் பாதையில் உறுதுணையாகக் கொள்வேன். அவருக்குத் தேவையான வேளையில் என் செல்வத்தை அவருடன் பகிர்ந்துகொள்வேன். அவருடைய குடும்ப உறுப்பினர்களை என்னுடைய சகோதரர்களாக ஏற்பேன். அவர்கள் விரும்பினால் இக் கலையை அவர்களுக்கும் ஊதியம் பெறாமல் கற்றுத் தருவேன். இது தொடர்பான அனைத்து கலைகளையும் என் மகன்களுக்கும் என்னுடைய ஆசிரியரின் மகன்களுக்கும் கற்றுத் தருவேன். இந்த உறுதிமொழியை எடுத்துள்ள இதர மாணவர்களுக்கும் நான் இக் கலையைக் கற்றுத் தருவேன்.இவர்கள் தவிர வேறு யாருக்கும் இக் கலையை  நான் கற்றுத் தரமாட்டேன்.

என்னுடைய திறமைக்கு ஏற்ப நான் நோயாளிகளுக்கு உதவுவேன். ஆனால் தவறு செய்யவோ காயப்படுத்தவோ மாட்டேன். யாராவது விஷம் தரச்சொல்லி கேட்டால் நான் தரமாட்டேன்.அதை ஊக்குவிக்கவும் மாட்டேன். அதுபோலவே பெண்ணுக்கு கருவைக் கலைக்கும் மருந்தையும் நான் தரமாட்டேன். ஆனால் என்னுடைய தொழிலையும் வாழ்க்கையையும் நான் புனிதமாகவும் பக்தியாகவும் காப்பேன். நான் கத்தியைப் பயன்படுத்த மாட்டேன். கற்களால் ( சிறுநீரகக் கற்கள் )  பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் கத்தியைப் பயன்படுத்தாமல் அதில் தேர்ந்தவர்களிடம் அவர்களை ஒப்படைப்பேன்.

எந்த வீட்டில் நான் நுழைந்தாலும் நோயாளிக்கு உதவவே செல்வேன்.எந்தவிதமான தீய நோக்கமும் இல்லாமல் செல்வேன். குறிப்பாக பெண்களின் உடலையோ, ஆண்களின் உடலையோ,அல்லது அவர்களின் அடிமைகளின் உடல்களையோ நான் மாசுபடுத்தமாட்டேன்.என்னுடைய தொழிலில் அல்லது வெளியில் நான் சந்திக்கும் மனிதர்களைப்பற்றி நான் பார்த்ததையும் கேட்டதையும் வெளியிடக்கூடாது என்ற நிர்ப்பத்தம் உண்டானால் அவற்றை நான் வெளியிடாமல் புனிதமான இரகசியங்களாகக் கருதிக் காப்பேன்.

இப்போது, இந்த உறுதிமொழியை நான் தவறாமல் கைக்கொண்டால், என்னுடைய வாழ்விலும் கலையிலும் நான் என்றென்றும் பேரும் புகழும் பெறுவேன். ஆனால் நான் அப்படிக் கைக்கொள்ளாமல் மீறி வேறு விதமாக நடப்பேனானால் இவற்றுக்கு நேர்மாறானவை என்மேல் விழுவதாக. ”

          இதுவே ஹிப்போகிரேட்டஸ் உறுதிமொழி.
          ஹிப்போகிரேட்டஸ் மருத்துவ வரலாற்றில் பெரும் புரட்சியை உண்டுபண்ணியவர். அதனால்தான் மருத்துவ வரலாறு கூட அவருக்கு முன்னும் பின்னும் என்று இரண்டு கூறுகளாகப் பிரிக்கப்படுகிறது.
          அவருக்கு முற்பட்டக் காலத்தில் மருத்துவமும் மதமும் இரண்டரக் கலந்திருந்தது. அதற்க்கு காரணம் நோய்கள் என்பது சாபம் என்றும், அவை கடவுளால் தரப்படும் தண்டனையாகவும் கருதப்பட்டது. ஆதலால் அப்போதெல்லாம் சமய பூசாரிகளும் மந்திரவாதிகளும் நோய்களைக் குணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் மந்திரவாதி – வைத்தியர் ( Witch – Doctor ) என்றே அழைக்கப்பட்டனர். அவர்கள் பல்வேறு மந்திரங்களையும்,  மாயாஜால வித்தைகளையும், தாங்கள் தயாரித்த ஒருசில மருந்துகளையும் பயன்படுத்தி நோய்களைக் குணப்படுத்த முயன்றனர்.
          அந்த மந்திரவாதிகள் சில பூஜைகளும் செய்ததால் அவர்கள் பூசாரி – வைத்தியர்கள் ( Priest –  Physician  ) என்றும் அழைக்கப்பட்டனர்.
          ஆனால் ஹிப்போகிரேட்டஸ் வந்தபின் அந்த மந்திரங்கள், மாயாஜாலங்கள், பூசைகள் போன்றவற்றை அப்புறப்படுத்தியதோடு, மருத்துவத்தை மத நம்பிக்கைகளிலிருந்து பிரித்தெடுத்தார். இது அவ்வளவு எளிதான காரியமன்று. காரணம் இக்காலம் போன்றே அக்காலத்திலும் மக்கள் மத நம்பிக்கையில் வெறியர்களாகவே வாழ்ந்துள்ளனர். அவற்றையெல்லாம் எதிர்கொண்டு அவர் வெற்றி பெற்றுள்ளது இமாலயச் சாதனையே!
          ஹிப்போகிரேட்டஸ் மருத்துவத்தில் பகுத்தறிவைப் புகுத்தினார். நோய்கள் உண்டாவது கடவுள்களின் தண்டனைகளோ, பிறர் இட்ட சாபங்களினாலோ, செய்வினைகளாலோ அல்ல என்பதை அவர் மக்கள் மத்தியில் பரப்பினார். உடலில் உள்ள சமநிலையில் உண்டாகும் மாற்றங்களால்தான் நோய்கள் உருவாகின்றன என்றார். ஒவ்வொரு வகையான நோய்க்கும் சில குறிப்பிட்ட தனிப்பட்ட தன்மைகள் உள்ளனவென்றார். அவற்றை அறிந்து அதற்கேற்ப சிகிச்சை தரவேண்டும் என்றார்.
          நோயாளிகளிடம் நோய் பற்றிய கேள்விகளைக் கேட்பது மிகவும் முக்கியமானது என்றார், அந்த நோய் எப்போது உண்டானது, எப்படி தோன்றியது, எவ்வளவு நாட்கள் நீடித்தது, அதனால் உண்டான அறிகுறிகள் என்னென்ன என்பதை நோயாளியிடமும் அவரின் உறவினர்களிடமும் கேட்டு தெரிந்துகொள்வதோடு அவற்றை முறையாக குறிப்புகளில் பதிவு செய்யவேண்டும் என்றார். அப்படிச் செய்தால் பின்பு வேறொரு நோயாளிக்கு அதுபோன்ற நோய் அறிகுறிகள் தென்படும்போது அவற்றை ஒப்பிட்டுப் பார்த்து அதே முறையில் சிகிச்சை தரலாம் என்றார்.
          அவர் அன்று சொன்ன குறிப்பெடுக்கும் முறை இன்றும் பின்பற்றப்படுகிறது என்பது வியப்பானது! இன்றுகூட அதே முறையைப் பின்பற்றித்தான் நோயாளிகளிடம் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதை நோய் பற்றிய வரலாறு சேகரித்தல் ( History Taking ) என்கிறோம். அவற்றை வரிசைப் படுத்திக் குறித்துக்கொள்கிறோம். உதாரணமாக காய்ச்சல் என்றால் அது எத்தனை நாட்கள், அது காலையில் அதிகமா, அல்லது இரவில் அதிகமா, குளிர் உள்ளதா, தலைவலி உண்டா, இருமல், சளி, வாந்தி, பசியின்மை, மலச்சிக்கல், பலவீனம் போன்றவை உள்ளதா என்ற கேள்விகள் கேட்டு பதிவு செய்துகொள்ள வேண்டும்.
          நோயைப் பற்றிய இத்தகைய தகவல்களைத் தெரிந்து கொண்டபின்பு நோயாளியை பரிசோதித்துப் பார்க்கவேண்டும். இதையே பரிசோதனை ( Inspection ) என்கிறோம். இதில் நோயாளி படுத்திருக்கும் விதம், அவன் வலியடன் உள்ளானா, சுவாசிக்கும் தன்மை, கண்களின்  நிறம்,தோலின் நிறம், வெப்பத்தின் அளவு, வயிற்றில் அல்லது கால்களில் வீக்கம், இருமல், சளி, தொண்டை வலி போன்ற இதர பாதிப்புகள் உள்ளனவா என்பதை ஆராய வேண்டும். அவற்றில் கண்டறிந்தவைகளை உடன் குறித்துக்கொள்ளவேண்டும். இதன் பிறகு கையால் நோயாளியைத் தொட்டு, அழுத்திப் பார்த்து ஏதும் வீக்கம், வலி உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்கவேண்டும். இதை தொடும் பரிசோதனை ( Palpation ) என்பர். அதைத் தொடர்ந்து நெஞ்சு, வயிறு பகுதிகளை விரல்களால் தட்டிப்பார்ப்பது இதில் ஓசை வித்தியாசங்கள் எழும். இதை தட்டைப் பார்ப்பது ( Percussion ) என்பர். அதன்பின்புதான் ஸ்டெத்தஸ்கோப் பயன்படுத்தி இருதயத் துடிப்பு, சுவாசத்தின் ஓசை முதலியவற்றை செவிகளில் கேட்டு அறியவேண்டும்.அந்தக் காலத்தில் ஸ்டெத்தஸ்கோப் இல்லாததால் காதை நெஞ்சில் வைத்து அழுத்தி கேட்டிருக்கலாம்.இதை காதால் கேட்பது ( Auscultation ) என்பர்.
          மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் ஹிப்போகிரேட்டஸ் ஏதன்ஸ் நகரத்தில் தமது தந்தையிடம் மருத்துவம் கற்றபின்பு அக்கால வழக்கின்படி அவர் கிரேக்க நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மருத்துவப் பணி செய்துள்ளார். அவற்றில் காஸ் தீவு ( Cos island ) குறிப்பிடத்தக்கது. அங்கு ஒரு அரச மரத்தடியில் அவர் தமது மாணாக்கர்களுக்கு மருத்துவம் போதித்துள்ளார்.
          அவரைப்பற்றி அதிகம் குறிப்புகள் இல்லைதான். அவருக்கு ஒரு சிலை கூட இல்லை. ஆனால் அதைவிட அரிய பொக்கிஷமாக அவர் சேகரித்து வைத்துள்ள மருத்துவ நூல்கள் கருதப்படுகின்றன. அவை மிகவும் பிரசித்திப்பெற்றவை. அந்த நூலகத்தில் நூற்றுக்கணக்கான மருத்துவத் தொகுப்பு நூல்கள் இருந்தன. அவற்றின் வாயிலாக அவர் எழுதியுள்ள மருத்துவ நூல்களின் மூலமாக மருத்துவத்திற்கு புத்துணர்வை ஊட்டியுள்ளார். மருத்துவத்திலிருந்து மந்திரவாதிகளும், மதவாதிகளும்,  தத்துவஞானிகளும் முற்றிலுமாக அகற்றப்பட்டனர். நோய்களுக்கு இயற்கை ஆற்றல் கடந்த காரணங்கள் ( supernatural causes ) உள்ளன என்ற தவறான போதனையை அகற்றி, நோய்களுக்கு இயற்கையான விளக்கங்கள் உள்ளன என்பதை வலியுறுத்திய பெருமை அவருக்கு உள்ளது.
          மந்திரவாதி – வைத்தியர் , பூசாரி – வைத்தியர் ஆகியோரின்  போலியான வைத்திய முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, முறையான அறிவியல் பூர்வமான, நவீன, பகுத்தறிவான மருத்துவம் பிறந்தது.

          முதல் நாள் , மருத்துவம் பற்றிய வரலாறு அறிந்துகொண்டது எனது ஆர்வத்தை அதிகரித்தது. இத்தகைய புனிதமான ஒரு தெய்வீகத் தொழிலை நான் கற்க வந்துள்ளது நான் பெற்ற பெரும் பேராகக் கருதினேன். இந்த வாய்ப்பு எல்லாருக்கும் அவ்வளவு எளிதில் கிடைக்காது என்பதை நானறிவேன். என் எதிர்காலம் ஏதோ ஒரு முக்கிய குறிக்கோள் கொண்டது என்பதை உணரலானேன். நான் பலருக்கு, குறிப்பாக ஏழை எளியோருக்கு மருத்துவச் சேவை புரியவேண்டும் என்று சபதம் கொண்டேன்!

          ( தொடுவானம் தொடரும் )
Series Navigationபூதக்கோள் வியாழனை நெருங்கிச் சுற்றிவரும் விண்ணுளவி ஜூனோ
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *