காஷ்மீர் – ஒரு பின்னோட்டம்

This entry is part 9 of 17 in the series 18 செப்டம்பர் 2016

kahmir

காஷ்மீர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. 1942 இல் இந்தியா முழுவதும் பற்றி எரிந்துகொண்டிருந்த நிலை நிலவியது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுவார்கள், அன்று வெள்ளைக்காரர்கள் ஆண்டுகொண்டிருந்தார்கள். நம் சொத்துகள் கொள்ளை போய்க் கொண்டிருந்தன. அவர்களிடமிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதில் ஒரு நியாயம் இருந்தது.  ஆனால், காஷ்மீரில் கொடுங்கோல் ஆட்சியா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது?!

ஒரு நாட்டைப் பிரிக்க வேண்டும் என்று கூக்குரல் எழுப்புபவர்களின் நோக்கம் பெரும்பாலும் ஒன்றுதான். பிரிக்கப்பட்ட பகுதியின் முதன்மை அமைச்சராகவோ, அந்நாட்டின் அரசுத்தலைவராகவோ ஆகி, வரலாற்றில் இடம்பெறும் புகழாசைதான். தன் பேராசையால் எண்ணற்ற மக்கள் இறந்து போவது பற்றிய துளி உறுத்தலும் புகழாசை கொண்டோர்க்குக் கிடையவே கிடையாது.

1947 இல் பாகிஸ்தான் பிரிக்கப்பட்டதற்கும் எந்த நியாயமும் இருக்கவில்லை. ‘இந்தியாவை இந்துக்களின் நாடு, முஸ்லிம்களின் நாடு என்று பிரிப்பதா! நான்சென்ஸ்!’ என்று அன்று கூவிய ஜனாப் முகம்மது அலி ஜின்னா அவர்கள்தான் பின்னாளில் வெள்ளைக்காரர்களின் சதித் திட்டத்துக்குப் பலியாகி இந்தியாவைப் பிரித்தே ஆகவேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றார். ‘இந்தியா பிளவு படக்கூடாது. நீங்களே முழு இந்தியாவுக்கும் பிரதமராக இருங்கள்’ என்று கூட ஜின்னா அவர்களைக் காந்தியடிகள் கெஞ்சியது நமக்குத் தெரிந்ததே.

அது போகட்டும். நடந்து முடிந்துவிட்ட கதை.  காஷ்மீர்ப் பிரச்சினையைப் பொறுத்த வரையில் தொடக்கத்தில் என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.  இந்தத் தகராறு நம் நாடு விடுதலை பெற்ற உடனேயே – 1947 இலேயே – தொடங்கிவிட்டது. இந்தியா மத அடிப்படையில் இரண்டு நாடுகளாய்ப் பிரிக்கப்பட்ட போதிலும், அதில், சமஸ்தானங்கள் என்று அழைக்கப்பட்ட, அறுநூற்றுக்கும் மேற்பட்ட குட்டி இராஜ்ஜியங்கள் இருந்தன.  சர்தார் வல்லபாய் படேலின் கெடுபிடியான நடவடிக்கைகளால் மட்டுமின்றி அவற்றின் மக்களே கூட மன்னர்களின் ஆட்சியினின்று விடுதலை பெற முயன்றதால் அவற்றில் பெரும்பாலானவை இந்தியாவுடன் இணைந்தன. எந்த நாட்டுடன் இணைவது என்பதற்கு அவற்றின் மன்னர்களின் இணக்கம் போதுமானதாக விதிக்கப்பட்டது. எல்லைப் புறப் பகுதிகள் இவ்விரு நாடுகளில் எதனுடனும் இணைந்து கொள்ளும் உரிமை பெற்றன. காஷ்மீரைப் பொறுத்த வரையில் அதை ஆண்டுகொண்டிருந்த மன்னர் மகாராஜா ஹரி சிங் எந்த நாட்டுடனும் இணையாமல் காஷ்மீரைத் தனி நாடாக அறிவித்து அதை ஆள விரும்பினார்.  மன்னரின் இந்தப் போக்கைச் சாதகப் படுத்திக்கொள்ளத் திட்டமிட்ட பாகிஸ்தான் 1947 அக்டோபர் மாதத்தில் முஸ்லிம் மலைவாழ் மக்களைக் காஷ்மீருக்கு அனுப்பி அங்கே ரகளைகளை ஏற்படுத்தியதோடு, காஷ்மீரின் மீது படை எடுக்கவும் முற்பட்டது. எனவே, மகாராஜா ஹரி சிங் இந்தியாவின் உதவியை நாடினார். அதற்கு உகந்த நடவடிக்கையாக அவர் இந்தியாவுடன் காஷ்மீரை இணைக்கச் சம்மதித்தார்.

இவ்வாறாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான போர் 1947 இல் தொடங்கியது.  இந்தியா மிக எளிதாகப் பாகிஸ்தானை வென்று அதன் படைகளை விரட்டியிருந்திருக்க முடியும்.  ஆனால், அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவாஹர்லால் நேரு –  மிக, மிக, மிக நியாயமாக நடந்து கொள்ளும் வகையில் – பாகிஸ்தானின் செயல் பற்றித் தேவையே இல்லாமல் ஐக்கிய நாடுகளின் அவையில் புகார் அளித்தார். பின்னாளில் இந்திரா காந்தி அமெரிக்காவுக்குச் சென்றிருந்த போது,  “காஷ்மீர்ப் பிரச்சினையை ஐக்கிய நாடுகள் அவைக்கு என் தந்தை எடுத்துச் சென்றது மிகப் பெருந்தவறு என்பது என் சொந்தக் கருத்து” என்று பத்திரிகை நிருபர்கள் கூட்டத்தில் அறிவித்தார்.  இதற்காக நேருவைக் குறை கூறிய அன்றைய பிரதமர் வாஜ் பேயி அவர்களும் இதே தவற்றை இந்தியப் பாராளுமன்றம் பாகிஸ்தானின் சதியால் தாக்கப்பட்ட போது அமெரிக்காவிடம் முறையிட்டதன் மூலம் செய்தார். இதற்கும் காஷ்மீர்ப் பிரச்சினைக்கும் தொடர்பு இல்லை யெனினும் இதனை நினைவு கூர்ந்தமைக்குக் காரணம் இந்தியா எவ்வளவு பொறுமையுடன் செயல்பட்டு (மகா பாரத நாளிலிருந்து) போரைத் தவிர்க்க முற்பட்டு வந்துள்ள நாடு என்பதைக் காட்டத்தான்.

பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் செயல் ராஜதந்திரமற்ற ஒன்று என்றாலும், அவர் அளித்த புகாரின் பேரில் பெரும் விவாதத்துக்குப் பின்னர் ஐ.நாவின் பாதுகாப்புச் சபை 1948, ஆகஸ்டு மாதம் 13 ஆம் நாளில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன் படி பாகிஸ்தான் தனது படையைக் காஷ்மீர்ப் பகுதியிலிருந்து அகற்றிக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் இந்தியா காஷ்மீரின் பாதுகாப்புக்குத் தேவையான குறைந்த பட்சப் படையை அங்கே நிறுத்திவிட்டு மீதிப் படையை வாபஸ் பெற வேண்டும். அதன் பின்னர்தான் இந்தியாவுடன் இணைவதா, அல்லது பாகிஸ்தானுடன் இணைவதா என்பது பற்றிய வாக்கெடுப்பு சாத்தியமாகும் என்றும் அத் தீர்மானம் அறிவித்தது. வாக்கெடுப்பின் விளைவு இந்தியாவுக்கே சாதகமாக இருக்கும் என்னும் நிலை இருந்தது. இதற்கு அடிப்படை காஷ்மீர் மக்களின் செல்வாக்குப் பெற்ற அரசியல் தலைவர் ஷேக் அப்துல்லா நேருவின் பக்கம் இருந்து ஆதரித்ததுதான். ஷேக் அப்துல்லாவின் தலைமையில் 1948 இல் அவரைப் பிரதமராய்க்கொண்டு காஷ்மீர் அரசு அவசர நடவடிக்கையாக நிறுவப்பட்டது.

பாகிஸ்தான் அரசு ஐ. நா. பாதுகாப்புச் சபையின் தீர்மானத்தைப் பொருட்படுத்தவில்லை. தன் வசப்பட்ட காஷ்மீர்ப் பகுதியிலிருந்து தன் படைகளைத் திரும்பப் பெற அது மறுத்ததோடு போரையும் தொடர்ந்தது. வாக்கெடுப்புக்குச் சாத்தியமான சூழல் பாகிஸ்தானின் இந்த நியாயமற்ற போக்கால்தான் நாசமானது என்பதை யறியாமலோ அல்லது இந்தியாவைத் துண்டாடும் எண்ணத்தால் வசதியாய்ப் புறக்கணித்துவிட்டோ சில பிரிவினைவாதிகள், வாக்கெடுப்பு நடக்காததற்கு இந்தியாவின் மீது வீண் பழி போட்டுப் பேசியும் எழுதியும் வருவது துரதிருஷ்டமானது. வருந்தத் தக்கதும் கூட. சில விஷயங்களில் மக்களின் வாக்கெடுப்பு என்பது தப்பான விளைவுக்கு அடிகோலிவிடும் அபாயமும் உள்ளது.

எல்லைப் பகுதிகளை ஆளும் மன்னரின் விருப்பப்படி அப்பகுதி எந்நாட்டுடனும் சேரலாம் என்கிற விதி அப்போது இரு தரப்பினராலும் ஏற்கப்பட்டது. அதன்படி பாகிஸ்தானில் இப்போது இருந்து வரும் ஒரு பகுதி (கட்ச் வளைகுடாவுக்கு அருகே உள்ள பகுதி) அதன் பெரும்பான்மை மக்கள் இந்துக்களாக இருந்த போதிலும் அதன் மன்னர் இஸ்லாமியராக இருந்து, அதைப் பாகிஸ்தானுடன் அதை இணைக்க அவர் சம்மதித்ததால் அப்படியே நடந்தது.  அதே நிலைதான் காஷ்மீருக்கும்.

65% நிலப்பகுதி இந்தியாவின் வசமும் 35% பகுதி பாகிஸ்தானின் வசமும் இருந்த நிலையில் எல்லைகள் வகுக்கப்பட்டுப் போர் நிறுத்த ஒப்பந்தம் ஆகியது. 1957 இல் காஷ்மீர் இந்திய யூனியனுடன் அதிகாரப் பூர்வமாக இணைந்தது. ஆனால் அதற்கு இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 370 ஆம் விதிப்படி சிறப்பு அந்தஸ்துத் தரப்பட்டது. 1965 இல் மீண்டும் போர் மூண்டு, அப்போதைய பிரதமர் லால் பகாதுர் சாஸ்திரி அவர்களுக்கும் பாகிஸ்தான் தலைவர் ஆயூப் கான் அவர்களுக்கும் இடையே ரஷ்யாவின் டாஷ்கண்ட்டில் 1966 செப்டம்பரில் மீண்டும் ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.

அதன் பின் ஏற்பட்ட பங்களாதேஷ் போராலும் வேறு பல உள்நாட்டுப் பிரச்சினைகளாலும் இரண்டு நாடுகளும் காஷ்மீர் பற்றிய தகராறை ஒத்திப்போட்டன என்றுதான் சொல்ல வேண்டும். எனினும் அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்திக்கும் பாகிஸ்தானின் பிரதமர்  ஜாஃபர் அலி புட்டோவுக்குமிடையே டாஷ்கண்ட் ஒப்பந்தத்தை வலியுறுத்திய சிம்லா ஒப்பந்தம் கையெழுத்தாகியது.

எனினும் இவற்றால் எந்தப் பயனும் விளையவில்லை. காஷ்மீரில் நிலவிவரும் பாகிஸ்தானின் ஏவுகணையான பயங்கர வாதத்தின் விளைவாக அங்கிருந்த மண்ணின் மக்களான காஷ்மீர்ப் பண்டிட்டுகள் என்று அழைக்கப்படும் மூத்த குடிமக்களான இந்துக்களில் பெரும்பான்மையோர் அங்கிருந்து                                                                                                                                                                                                                                                                                                                                                         விரட்டப்பட்டு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நாடிழந்த அகதிகளாய் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தின் விளைவாக இந்தியா அப்பகுதிக்குக் கோடிக்கணக்கான தொகையை வழங்கிக்கொண்டிருந்தது.  ஆனால் காஷ்மீர் முன்னேற்றமுற வில்லை. தொடக்கத்திலிருந்து அதை ஆண்டுவந்துள்ள ஷேக் அப்துல்லா, ஃப்ரூக் அப்துல்லா, முஃப்தி முகம்மது சயீது. உமர் அப்துல்லா ஆகியோரே அதற்குப் பொறுப்பாளர்கள். தவிர, ஒரு மாநிலத்துக்கு வழங்கப்படும் நிதி ஒழுங்காய்ச் செலவு செய்யப்படுகிறதா என்று கண்காணிக்கும் பொறுப்பு மைய அரசுக்கு உண்டு. அதைச் செய்யாது – சிறப்பு அந்தஸ்தின் பெயரால் – ஒதுங்கி யிருந்து விட்ட மெத்தனம் இந்திய அரசின் தவறு. இந்திய அரசின் உளவு நிறுவனம் சரியாகச் செயல்பட்டிருந்தால் அங்கே பயங்கர வாதம் தலை எடுக்காமல் பாதுகாத்திருந்திருக்க முடியும். அதைச் செய்யாததும்     இந்தியாவின் தவறாகும். அண்மையில் மோசமான வெள்ளத்தின் போது இந்திய ராணுவம் பொது மக்களுக்குச் செய்த மகத்தான சேவையைக் காஷ்மீர மக்கள் பெரிதும் பாராட்டினர். இந்திய ராணுவத்தினர் காஷ்மீர மக்களின் நண்பர்களாய்ச் செயல் படுவதும் பிரிவினையைத் தடுக்கவல்லது.

ஒரு நாட்டின் பகுதியைப் படை வலிமையால் வென்றோ அல்லது அகதிகளாய் அங்கே குடியேறியோ வாழும் அந்நியர்கள் பின்னர் அந்நாட்டை அல்லது நிலப்பகுதியைத் தங்களுடையது என்று வலியுறுத்தும் அவலம் உலகெங்கணும் நிலவி வருகிறது. திபேத்தைச் சைனா விழுங்கியது ஒர் உதாரணம். இதுதான் காஷ்மீரிலும் இன்று நிலவுகிறது. பிரிவினைவாதிகளில் பெரும்பாலோர் பதவிக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டே நாடுகளைப் பிரிக்கப் பார்க்கிறார்கள் என்பது தெளிவு. இந்தியா மீது சைனா துரோகத்தனத்துடன் 1962 அக்டோபரில் படையெடுத்த உடனேயே “திராவிட நாடு” கோரிக்கையைத் தாம் கைவிடுவதாக அறிஞர் அண்ணா அவர்கள் தமிழகமெங்கணும் சுவரொட்டிகளை ஒட்டச் செய்த அறிவுசார்ந்த செயலை நினைவுகூராதிருக்க முடியவில்லை.

……… 

Series Navigationபிரான்சு கம்பன் கழகம் நடத்தும் 15 ஆம் ஆண்டுக் கம்பன் விழாடமில் வலர்க!!!
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

2 Comments

  1. Avatar
    ஷாலி says:

    //ஆனால், அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவாஹர்லால் நேரு – மிக, மிக, மிக நியாயமாக நடந்து கொள்ளும் வகையில் – பாகிஸ்தானின் செயல் பற்றித் தேவையே இல்லாமல் ஐக்கிய நாடுகளின் அவையில் புகார் அளித்தார்…//
    இந்தப் பிரச்சினையில் நேருவைக் குறை கூறுபவர்கள் இரண்டு விஷயங்களை மறைத்துவிடுகிறார்கள்.

    ஒன்று, காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்ததை ஆமோதிக்கும்போதே இந்திய அரசு வாக்கெடுப்பையும் ஆமோதித்துவிட்டது. இது நேரு எடுத்த முடிவல்ல; எல்லோரும் கூடி எடுத்த முடிவு.

    இரண்டு, முஸ்லிம் அரசர் ஒருவர் ஆண்டுகொண்டிருந்த இந்துப் பெரும்பான்மை சமஸ்தானத்தை (ஜுனாகத்) இந்தியாவோடு இணைத்தபோது அங்கு வாக்கெடுப்பு நடத்தி மக்கள் கருத்து கேட்கப்பட்டது. காஷ்மீரைப் பொறுத்தவரையில் இந்து மகராஜா முஸ்லிம் பெரும் பான்மை சமஸ்தானத்தை இந்தியாவோடு இணைத்ததால் அங்குள்ள மக்களின் கருத்தைக் கேட்பதுதான் ஜனநாயகமுறை. வாக்கெடுப்பு நடத்தப்படும் என்ற வாக்குறுதியின் அடிப்படையில்தான் மக்கள் தலைவரான ஷேக் அப்துல்லா இந்தியா பக்கம் வந்தார்.

    “நமக்கு எவ்வளவு வலிமிக்கதாக இருப்பினும் அவர்களது விருப்பத்திற்கு எதிராக நாம் அவர்களை (நம்மோடு) வைத்திருக்க மாட்டோம். காஷ்மீர் மக்களே காஷ்மீரின் எதிர் காலத்தைத் தீர்மானிக்க முடியும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். இதை ஐ.நா.வுக்கும் காஷ்மீர் மக்களுக்கும் வெறுமனே சொல்லியிருக்கிறோம் என்பதல்ல, இது நமது உறுதியான நம்பிக்கை. காஷ்மீர் மட்டுமல்ல, எந்த இடத்திலும் இது நாம் பின்பற்றும் கொள்கையால் உறுதி செய்யப்பட்டது.

    இந்த ஐந்து ஆண்டுகள் தொல்லைகளும், செலவும் மிகுந்ததாயினும், நாம் செய்தவைகள் பல இருந்தும், காஷ்மீர் மக்கள் நாம் விருப்பபூர்வமாக வெளியேறுவோம். வெளியேறுவது குறித்து நாம் எவ்வளவு துயரமாக உணர்ந்தாலும் மக்களின் விருப்பத்திற்கு எதிராக நாம் அங்குத் தங்கப் போவதில்லை. துப்பாக்கி முனையில் அவர்களிடம் நம்மை நாம் திணித்துக் கொள்ளப் போவதில்லை” என்று 1952 ஆகஸ்ட் 7ஆம் நாள் இந்திய நாடாளுமன்றத்தில் பண்டித நேரு தனது அறிக்கையில் கூறினார்.

    1955 ஏப்ரல் 1 ஆம் நாள் புதுடெல்லி இந்துஸ்தான் டைம்ஸ் நாளேட்டில் வெளியிடப்பட்டவாறு, 1955மார்ச் 31 அன்று மக்களவையில் பண்டித நேரு தனது அறிக்கையில் கூறியது, “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள பிரச்சினைகளில் காஷ்மீர் தான் மிகவும் கடினமானது. காஷ்மீர் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் உள்ள விளையாட்டுப் பொருளல்ல, அது தனக்கேயுரிய ஆன்மாவையும், தனித்துவத்தையும் கொண்டது. காஷ்மீர் மக்களின் நல்லெண்ணமும் இசைவுமில்லாமல் எதுவும் செய்ய முடியாது” என்பதாகும்.

    1957 ஜனவரி 24ஆம் நாள் (ஐ.நா) பாதுகாப்பு அவையின் 765 வது கூட்டத்தில் காஷ்மீர் குறித்த விவாதத்தில் பங்கேற்று இந்தியப் பிரதிநிதி திரு. கிருஷ்ணமேனன் தனது அறிக்கையில் கூறியது:

    “எங்களைப் பொருத்தவரை இதுவரை இந்த அவையில் எனது அறிக்கையில் சர்வதேசக் கடமைகளை நாங்கள் மதிக்கமாட்டோம் என்று விளக்கப்படத்தக்க பொருளுள்ள ஒரு சொல்கூட இல்லை. இந்திய அரசோ, இந்திய ஒன்றியமோ தான் பொறுப்பேற்றுள்ள சர்வதேசக் கடமைகளை மதிக்க மாட்டோம் என்று சிறிய அளவில் கூடக் குறிப்பிடத்தக்க எதுவும் இந்திய அரசின் சார்பில் இங்குச் சொல்லப்படவில்லை என்பதை இங்குப் பதிவு செய்யும் நோக்கத்திற்காகக் குறிப்பிட விரும்புகிறேன்.”

    இந்த உறுதி மொழிகள் எல்லாம் இப்ப காற்றில் பறந்து விட்டது.

  2. Avatar
    ஜோதிர்லதா கிரிஜா says:

    மிக்க நன்றி ஷாலி அவர்களே. எனக்குக் கன்புரைச் சிகிச்சை நடந்துள்ளது. அப்படி இருந்தும் பதில் எழுதுகிறேன். அச்சுப் பிழைகளை மன்னிக்கவும். ஜுனாகத் பற்றிய ஆவணங்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன். அது பற்றிப் பிறகு சொல்லுவேன். நிற்க். ஜவாஹர்லால் நேருவின் வாக்குறுதி நிறைவேறாது போனமைக்குக் காரணம் பாகிஸ்தானே. ஐநா வின் தீர்மானப்படி தன் படையை வாபஸ் பெறும் முதல் படியை அது நிறைவேற்ற மறுத்ததால்தான் காஷ்மீரில் வாக்கெடுப்பை நடத்த முடியாது போயிற்று. இதையே என் கட்டுரை வலியுறுத்துகிறது.
    ஜோதிர்லதா கிரிஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *