தொடுவானம் 137. சட்டஞ்சார் மருத்துவமும் நஞ்சியலும்

This entry is part 2 of 15 in the series 25 செப்டம்பர் 2016

டாக்டர் ஜி. ஜான்சன்

136. சட்டஞ்சார் மருத்துவமும் நஞ்சியலும்
forensic-science
மருத்துவக் கல்வியில் அதிகமாக நாட்டஞ் செலுத்தச் ( Interesting ) செய்யும் ஒரு பாடம் உள்ளது. அது துப்பறியும் நாவல் படிக்குபோது உண்டாகும் ஆர்வத்தைக்கூட உண்டுபண்ண வல்லது. அதை நான்காம் ஆண்டில் ஒரு வருடம் பயிலவேண்டும். அதுதான் சட்டஞ்சார் மருத்துவமும் நஞ்சியல் இயலும் ( Forensic Medicine and Toxicology ).
நோய்கள், அறிகுறிகள், பரிசோதனைகள். கிருமிகள், மருந்துகள் என தொடர்ந்து பயின்றுகொண்டிருந்த எங்களுக்கு சிறிது இடைவெளி விடுவதுபோல் ( breather ) இந்த பாடம் அமைந்திருந்தது.இதுவும் சற்று சிக்கலான பாடமாக இருந்தாலும் இதைக் கற்பது மிகவும் சுவையானது. காரணம் இது குற்றவியல், கொலை, கற்பழிப்பு, தற்கொலை, நஞ்சு வைத்துக் கொல்வது, வெட்டு குத்து, துப்பாக்கிச் சூடு, தூக்கில் ,தொங்குவது, நீரில் மூழ்குவது, தீயில் எரிவது போன்றவற்றின் தொடர்புடைய மருத்துவம். இவை அனைத்துமே சட்டம் தொடர்புடையதால் இது சட்டஞ்சார் மருத்துவம் என்று அழைக்கப்படுகிறது.
சட்டஞ்சார் மருத்துவம் படிப்பது ஒரு துப்பறியும் நாவலைப் படிப்பது போன்றது – அறிவியல் பூர்வமாக.
ஆனால் ஒரு மருத்துவர் எதனால் இதுபோன்று குற்றவியல் பயிலவேண்டும்? குற்றவியலில் பல சமயங்களில் மருத்துவ ரீதியான ஆராய்ச்சியின் மூலமாகவே உண்மைகள் கண்டறியப்படும். இதைத்தான் சட்டஞ்சார் மருத்துவம் என்கிறோம்.
Forensic என்பது லத்தீன் வார்த்தை. சந்தை என்பது இதன் பொருள். அதை Forum என்று அழைப்பார்கள். அங்குதான் குற்றம் புரிந்தவர்கள் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படுவதுண்டு. இதனால் என்பது வழக்கு விசாரணையில் அறிவியலைப் பயன்படுத்தி விசாரிப்பதையே சட்டஞ்சார் மருத்துவம் என்றனர்.
உதாரணமாக ஒரு கற்பழிப்பு நடந்துவிடுகிறது. கற்பழிக்கப்பட்ட பெண் அவனை அடையாளம் காட்டுகிறாள். அவனோ மறுக்கிறான். இந்தச் சூழலில் மருத்துவரின் பங்கு மிகவும் முக்கியமானது. மருத்துவர் அந்தப் பெண்ணைச் சோதனை செய்துவிட்டு அவளுடைய பெண் உறுப்பில் கன்னித்திரை கிழிந்துள்ளதா, அங்கு வேறு காயங்கள் உள்ளதா என்று சோதித்துவிட்டு, அங்கு இந்திரியம் உள்ளதை வெளியில் எடுத்து குற்றவாளியின் இந்திரியத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பார். இதை பரிசோதனைக்கூடத்தில் செய்யலாம்.இரண்டும் ஒரே தன்மையுடன் இருக்க நேர்ந்தால் குற்றம் நிரூப்பிக்கப்பட்டுவிடும். இதில் டீ.என்.ஏ. பரிசோதனை முக்கிய பங்கு வகிக்கும்.
ஒரு கொலை நடந்த இடத்தில் கிடைக்கும் இரத்தக் கறைகளை பரிசோதனைக்கு உட்படுத்தி சில முக்கிய தடயங்களை அறிந்துகொள்ளலாம். இறந்துபோன ஒருவரின் இரைப்பையை ஆராய்வதின்மூலம் அவர் விஷம் வைத்துக் கொல்லப்பட்டாரா என்பதை அறியலாம். வன்முறையில் உண்டான காயங்களை ஆராய்வதின்மூலம் அதன் ஆழத்தையும் பயன்படுத்தியுள்ள ஆயுதத்தையும் கூறலாம்.
நீரில் மூழ்கியவரின் உடலைப் பரிசோதனை செய்து அவர் உயிருடன் மூழ்கினாரா அல்லது கொல்லப்பட்டு நீரில் வீசப்பட்டாரா என்பதையும் கண்டறியலாம்.
அதுபோலவே ஒருவன் தானாக தூக்கில் தொங்குவதற்கும், முன்பே கொல்லப்பட்டு தூக்கில் தொங்கவிடப்படுவதற்கும் வித்தியாசம் உள்ளது. இதை பிரேத பரிசோதனையின்மூலம் கண்டறியலாம்.
மனநிலை சரியில்லாத ஒருவன் கொலை செய்துவிட்டால், அவன் கொலை செய்தபோது மனநிலை சரியில்லாமல் இருந்தான் என்பது மருத்துவரால் நிரூபிக்கப்பட்டால் அவன் குற்றவாளியென தண்டிக்கப்படமாட்டான். குற்றம் புரிந்தபோது தான் செய்வது இன்னதென்று அவன் அறியாமல் இருக்கவேண்டும். இங்கு மருத்துவரின் பங்கு அதிகமாகும். குற்றவாளி மனநிலை குன்றியதாக நடிக்கிறானா என்பதையும் மருத்துவர்தான் முடிவாகச் சொல்லவேண்டும்.இதுபோன்றவற்றை மனோவியல் மருத்துவர்தான் கூறவேண்டும்.
சட்டஞ்சார் மருத்துவத்தில் பிரேத பரிசோதனை மிகவும் முக்கியமானது. சட்டஞ்சார் மருத்துவத்தில் படிப்பதெல்லாம் இறுதியில் பிரேத பரிசோதனையில்தான் கொண்டுபோய் விடும். பிரேத பரிசோதனை அறிக்கைதான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அதில் உள்ளது நீதிபதியால் ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் . இதிலும் மருத்துவரின் பங்கு முக்கியமானது.
சரித்திரத்தில் முதல் முறையான பிரேத பரிசோதனை பண்டைய ரோமாபுரியில் கி.மு.44 ஆம் வருடத்தில் நடந்துள்ளது. அதைச் செய்தவர் ஆட்டிட்டியூஸ் என்னும் பண்டைய ரோம மருத்துவர். ரோம சாம்ராஜ்யத்தை ஆண்டுகொண்டிருந்த ஜூலியஸ் சீசர் அவருடைய செனட் சபையினர் அனைவராலும் பகிரங்கமாக பிச்சுவாட்களால் குத்திக் கொல்லப்படடார். அவருடைய உடலில் மொத்தம் 23 குத்துக் காயங்கள் காணப்பட்டன.அவற்றில் இடது பக்க நெஞ்சில் விழுந்த ஒரு குத்துதான் அவரின் உயிரைப் பறித்தது என்பதை பிரேத பரிசோதனையின்போது தெரிய வந்துள்ளது.
19 – ஆம், 20- ஆம் நூற்றாண்டுகளில் சட்டஞ்சார் மருத்துவம் வேகமான முன்னேற்றம் கண்டது. டீ.என்.ஏ. பயன்படுத்தியது குற்றவியலை எளிமையாக்கியது.இதன்மூலமாக ஒரு மில்லியன் பேர்களில் ஒருவரை அடையாளம் கண்டுகொள்ளலாம் என்பது வியக்கத்தக்க உண்மையாகும்!
கிறிஸ்துவக் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைகள் செய்வதில்லை. அதில் நாங்கள் பயிற்சிபெற வேலூர் அரசு பொது மருத்துவமனைக்குதான் செல்லவேண்டும்.அங்கு பிரேத பரிசோதனை நடக்கும்போது எங்களுக்குத் தெரிவிப்பார்கள். நாங்கள் சென்று வருவோம். அங்குள்ள மருத்துவ அதிகாரியின் மேற்பார்வையில் ஓர் ஊழியர் ஒரு பிரேதத்தின் வயிற்றை கத்தியால் கிழித்து உள்ளேயிருந்து பெருங்குடலை வெளியில் எடுத்துப் போடுவார்.அதன்பின்பு சிறுநீரகங்கள், கல்லீரல் போன்ற உறுப்புகளை வெளியில் எடுப்பார்.நெஞ்சுப் பகுதியைப் பிளந்து இருதயத்தை வெளியில் கொண்டுவருவார். அதைக் காண மிகவும் கோரமாக இருக்கும். கசாப்புக் கடையில் இருப்பது போன்றியிருக்கும். பிண வாடை மூக்கைத் துளைக்கும். குமட்டல் கூட வரும்.
இவ்வாறு ஒரு வருடம் சட்டஞ்சார் மருத்துவத்தை வகுப்பறையிலும் பிரேதப் பரிசோதனை அறையிலும் உற்சாகத்துடன் பயின்றோம்.

( தொடுவானம் தொடரும் )

Series Navigationஒளிப்பந்தாக இருந்த முகம்இலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்த்தும் காந்தியடிகள் பிறந்தநாள் விழா
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *