சூர்யகாந்தனின் ‘ஒரு தொழிலாளியின் டைரி’ –

சூர்யகாந்தனின் ‘ஒரு தொழிலாளியின் டைரி’	 –
This entry is part 12 of 42 in the series 22 மே 2011


‘மண்ணையும், மண்ணின் மக்களையும் நேசிக்கும் ஒருவர் படைப்பாளியாக அமைந்து விட்டால்,அது அவருடைய மண்ணுக்குக் கிடைத்த கொடை! மொழிக்குக் கிடைத்த பரிசு. இலக்கியத்துக்குக் கிடைத்த பேறு’ என்கிறார் கவிஞர் புவியரசு. அப்படித் தமிழ் இலக்கியத்துக்குக் கிடைத்த பேறுகளில் ஒருவர் சூர்யகாந்தன். வாழ்க்கையைக் கூர்ந்து அவதானிக்கும் பார்வையும், வாழ்வின் வலி கண்டு உருகும் மனிதநேய மும் அவருக்கு அமைந்திருப்பதால் அவரது கதைகளில் மனித வாழ்வின் வதைகளும், போராட்டங்களும் உருக்கமாய்ச் சித்தரிக்கப் படுகின்றன. கொங்குநாட்டு மண்ணின் மைந்தரான அவர் தன் பிராந்தியம் மட்டுமின்றி சென்னை போன்ற இடங்களிலும் தான் கண்ட, நெகிழ்ச்சியுற்ற நிகழ்வுகளை, அனுபவம் சார்ந்த வலிகளை, வாசிப்பவர் மனங்கொள்ளுமாறு ‘ஒரு தொழிலாளியின் டைரி’ என்னும் கதைத்தொகுப்பில் உள்ள கதைகளில் பதிவு செய்திருக்கிறார்.
இத்தொகுப்பில் உள்ள 12 கதைகளுமே நெஞ்சைத் தொடுபவை. தலைப்புக் கதையான ‘ஒரு தொழிலாளியின் டைரி’, டைரிகளை உருவாக்கும் தொழிலாளி ஒருவரின் ஆதங்கத்தைச் சொல்கிறது. எந்த உற்பத்தி இடத்திலும் அதைச் செய்கிற தொழிலாளி அந்தப் பொருளுக்கு ஆசைப்பட முடியாது. ஆசை அற்றுப் போவது தான் இயல்பு. இக்கதையைச் சொல்லும் தொழிலாளி, தனக்கு டைரியில் ஆர்வமில்லை என்றும், கிடைத்தாலும் எழுத நேரமில்லை என்றும் ஆனால் அதைச் செய்கிற தொழிலாளிகளுக்கு ஆளுக்கு ஒரு டைரி தர முதலாளிக்கு மனமில்லையே என்று மறுகுவதும், பின்னர், ‘எனக்கெதற்கு டைரி? என்னோட கஷ்டங்களையும், குமுறல்களையும் டைரியில் எழுதி வைத்து அவற்றைத் தன் பிள்ளைகள் படித்து வேதனையடைவானேன்’ என்று சமாதானப்படுத்திக் கொள்வதையும் உருக்கமாய்ச் சித்தரிக்கிறது கதை.
பேருந்து பயணம் ஒன்றில் இரு பயணிகளுக்கிடையே நடைபெறும் ரசமான உரையாடல், இடம் பிடிக்க நடக்கும் நித்ய போராட்டம், நடத்துனரின் வசவு எல்லாவற்றையும் மிகையின்றி அசலாகக் காட்சிப் படுத்துகிறது ‘எதிரெதிர் குணங்கள்’ என்கிற கதை. பயணிகள் முகம் சுளிக்கும்படி விவாதித்துக் கெண்டிருக்கும் ஒரு இளஞனும் முதியவரும் இறங்க வேண்டிய இடம் வந்ததும் மனித இயல்பின்படி சமாதானமாகிப் பிரிவதுமான யதார்த்த குணவியல்பை ரசமாகச் சொல்கிறது கதை.
ஒரு வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் சொந்தப் பிரச்சினையை – வீட்டில் சாகக் கிடக்கும் குழந்தையைக்கூட கவனிக்க முடியாதபடி எஜமானியின் இரக்கமற்ற உத்தரவுகள், மற்றும் வேலை செய்யும் நிர்ப்பந்தம் பற்றிய வாதையை ‘பிழைப்பு’ என்கிற கதை பேசுகிறது..
பிள்ளைகளை சதா ‘படி படி’ என்று அவர்களுக்கு வேறு பொழுதுபோக்குக்கே இடம் தராமல் கண்டித்து, அடிக்கும் அப்பாக்கள், அதனால் அந்தப் பிள்ளைக்கு உடல் நலம் கெடும்போது மனம் மாறும் நடைமுறைத்தவறினை ‘தடம் மாறும் தவறுகள்’ சுட்டிக்காட்டுகிறது.
‘குந்தை பணியாளர்’க்காக அரசும் அதற்கான அமைப்புகளும் பல்வேறு முயற்சிகளில் ஈடு பட்டிருக்கிற இன்றைய நிலையில், அப்படி ஒரு சிறுவன் – தன் தாய் பட்டினி கிடக்கக்கூடாது என்ற கவலையில் சுண்டல் விற்கும் தன் வேலையின் துயரங்களைத் தாங்கிக் கொள்ளும் கொடுமையைப் படம் பிடித்துக்காட்டுகிறது ‘ஆத்தா பட்டினியிருக்கக் கூடாது’ என்கிற கதை.
குடிகாரர்கள் விவஸ்தையே இல்லாமல் இழவு வீடானாலும், கல்யாண வீடானாலும் புகுந்து கலாட்டா செய்கிற சிறுமையை வேதனையோடு வெளிப்படுத்துகிறது ‘பங்காளிகள்’ என்கிற கதை.
‘அவர்களில் இருவர்’ என்ற கதை வேறொரு சமூகப் பிரச்சினையைப் பேசுகிறது. ‘ஒரு பெண் விபசாரம் செய்வதற்கும் விபசாரியாக ஆக்கப்படுவதற்கும் சொல்லில் அடங்காக் காரணங்கள் உண்டு. அந்தப் பிரச்சினை யில் விபசாரத்துக்கு ஆட்படும் பெண்களுக்கு நேரும் கொடுமைகளில் ஒன்றை இக்கதை நெகிழ்ச்சியோடும் மனித நேயத்தொடும் எடுத்துக் காட்டுகிறது.
மனிதர்களின் சிறுமைகளை மட்டுமல்லாமல் பெருமைகளையும் சூர்யகாந்தன் தன் கதைகளில் எடுத்துக்காட்டுகிறார் ‘பெருந்தன்மைகள்’ என்ற கதையில். ஒரே கதையில் அத்தகைய பெருமையையும் சிறுமையையும் இணைத்துக் காட்டி சிலிர்க்க வவைக்கிறார். தான் சேமித்த பணத்தை ஒரு நண்பரிடம் கொடுத்து வைக்கிறார் ஒருவர். அதைத் தன் டைரியில் குறித்தும் வைக்கிறார். திடீரென்று அவர் மாரடைப்பால் ஒருநாள் இறந்து போகிறார். பணத்தை வாங்கிய நண்பருக்கு அப்பணத்தைக் குடும்பத்தருக்குத் தெரியாமல் மறைத்து விட்டால் என்ன என்கிற அற்பத்தனமான ஆசை தோன்றுகிறது. அதே நேரத்தில் இறந்தவரது மனைவி நடந்து கொள்ளும் பெருந்தன்மையான செயல் கதையின் மகுடமாக விளங்குகிரது. கணவரின் டைரியைப் பார்த்து விட்டு, கணவர் அத்தொகையைக் கடன் வாங்கி இருப்பாதாகக் கருதி நண்பரைத் தேடிவந்து அத்தொகையைத் திருப்பிக் கொடுப்பது கதையின் ரசமான திருப்பு முனை. அந்தப் பெருந்தன்மைக்கு முன்னே நண்பர் சின்ன எறுபாகச் சிறுத்துப் போவதைக் கதை சுட்டுகிறது.
பேருந்து, ரயில் பயணங்களில் சூர்யகாந்தனின் எழுத்தாளர் மனம் தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் உரையாடல்களில் லயித்து போகிறது . பிறகு அவை கதையாகி விடுகின்றன. அப்படி உருவான கதை ‘சில நியாயங்கள்’. ரயில் நிலையத்துக்கு அருகில் இருப்பவர்களில் சிலர் வேடிக்கை பார்க்கவோ, தேனீர் அருந்தவோ பிளாட்பாரம் டிக்கட் எடுக்காமல் உள்ளே நுழைந்து திரும்புவதுண்டு. டிக்கட் பரிசோதகர் சிலர் அதைக் கண்டு கொள்வதில்லை. சிலர் பிடித்து அபராதம் வசூலித்து விடுவதுண்டு. அப்படி ஒருவனை இக்கதையில் பரிசோதகர் பிடித்து அபராதம் விதித்து விடுகிறார். அவன் எவ்வளவோ கெஞ்சியும், பக்கத்தில் குடி இருக்கும் தொழிலாளிதான், பயணம் செய்யவில்லை என்று எடுத்துச் சொல்லியும் அவர் கண்டிப்பாக இருந்து விடுகிறார். தொகையைக் கட்டுமுன் அவருக்குப் புரிகிற நியாயம் ஒன்றை தன் சகாக்களுடனான பேச்சுவாக்கில்கவன் உணரவைக்கிறான் அவன். அதைக் கேட்டதும் பரிசோதகர் சரேலென்று நகர்ந்து விடுகிறார். யாரை எப்படி வழிக்குக் கொண்டு வரவேண்டுமென்று பாமரர்கள் புரிந்து வைத்திருக்கும் எதார்த்தத்தை அழகாகக் சொல்கிறது கதை.
கணவனால் பணம் கேட்டு தாய் வீட்டுக்கு அனுப்பப்பட்ட பெண்ணொருத்தி குழந்தையைத் தொட்டிலில் இட்டு ஆட்டியபடி, கணவனின் வீடு திரும்பத் தேவையான பனத்தைத் திரட்ட முடியாத தன் பிறந்த வீட்டு வறுமையையும், திரும்பிப் பார்க்காத கணவனையும் பற்றிய சிந்தனைகளுடன் மறுகிறாள். காலம் என்ன மாறினாலும் இந்த அபலைகளின் துயரம் மாறாத அவலத்தை ‘ஆடும் தொட்டில்கள் ஆடுகின்றன’ என்னும் கதையில் ஆசிரியர் காட்டுகிறார்.
கிளி சோசியன் ஒருவனது விரக்தியின் முடிவைச் சொல்வது ‘விடுதலைக் கிளிகள்’. கிளி சோசியத்தை நம்பும் மக்களின் பலவீனத்தில், கிளியை நம்பி பிழைப்பு நடத்துகிற ஒரு கிளி சோசியன் ஒரு கட்டத்தில் கிளிக்கு ஒரு மணி நெல் கொடுக்கவும் வருமானமற்று, ‘ஒரு சின்னஞ் சிறு பறவையைக் கூண்டில் அடைத்து, அதை நம்பி வாழ்க்கை நடத்துவது எவ்வளவு அசிங்கமான செயல்’ என்று மனசாட்சி உறுத்த அந்தக் கிளிக்கு விடுதலை கொடுப்பதை அனுதாபத்தோடுடு ஆசிரியர் சித்தரிக்கிறார்.
கடைசிக் கதையான ‘கடைசியில் கனல்தான் ஜெயிக்கும்’, மருத்துவ மனையினால் அலைக்கழிக்கப் படுகிற பெண்ணொருத்தி புறக்கணிப்பின் வலிகளின் தீவிரத்தால் போராட்டத்தில் குதிக்கும் எதார்த்தத்ததைச் சித்தரிக்கிறது.
இப்படி இத்தொகுப்பில் உள்ள எல்லாக் கதைகளுமே சூர்யகாந்தனின் சமூகப் பார்வையையும், மனிதநேயத்தையும் காட்டும் கண்ணாடியாக அமைந்துள்ளன. கதையினூடே அநாயசமாக விழும் கொங்கு நாட்டு மற்றும் சென்னை பேச்சு வழக்குகளும், கலாரசனைமிக்க வருணனைகளும் வாசிப்பைச் சுவாரஸ்யமாக்கி சூர்யகாந்தனின் எழுத்து மகுடத்தில் இன்னொரு வண்ணச் சிறகைச் சேர்க்கின்றன. 0

நூல்:      ஒருதொழிலாளியின் டைரிஆசிரியர்:  சூர்யகாந்தன்வெளியீடு:  நியூ சென்சுரி புக் ஹவுஸ், சென்னை.விலை:    45 ரூ.

Series Navigationஉதிரமெழுதும் தீர்ப்பின் பிரதிகள்முள்ளால் தைத்த நினைவுகளுடன்…..

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *