தொடுவானம் 149. கோர விபத்து

This entry is part 5 of 13 in the series 18 டிசம்பர் 2016
         
          தெம்மூரிலிருந்து நிறைவான மனதுடன் தரங்கம்பாடி புறப்பட்டேன்.
          சீர்காழி, திருநகரி, பூம்புகார் வழியாக குறுக்குப்பாதையில் பேருந்து கடற்கரை ஓரமாகச் சென்று தரங்கம்பாடி அடைந்தது. வழக்கம்போல் அந்த ஊர் பரபரப்பு இன்றி அமைதியாக காட்சி தந்தது. கடற்கரையில் பெரும் இரைச்சலுடன் அலைகள் ஓய்வில்லாமல் தொடர்ந்து கரையை நோக்கி பாய்ந்து உடைந்து மறைந்து போயின. அலை அலையாய் அப்படி வந்தாலும் அவற்றின் முடிவு  அப்படிதான்.
         நேராக அண்ணி வேலைசெய்யும் புளுச்சாவ் ஆரம்பப் பள்ளிக்குச் சென்றேன். அவர் என்னுடன் வீடு வந்து காப்பி கலக்கிக் கொடுத்துவிட்டுச் சென்றார். தெம்மூர் பற்றி விசாரித்தார். பள்ளி முடிந்து மதியம் வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றார்.
          நான் கிணற்று நீரில் குளித்து முடித்து உடைகள் மாற்றிக்கொண்டேன். பின்பக்க தோட்டத்தில் தென்னங் காற்று சிலுசிலுவென்று வீசியது. அங்கேயே ஒரு நாற்காலி போட்டு நாவல் படிப்பதைத் தொடர்ந்தேன்.
          மதியம் அண்ணியும் அண்ணனும் வந்துவிட்டனர். மீன் குழம்பு தயாராக இருந்தது. காலையிலேயே அதை செய்து வைத்துவிட்டுதான் அண்ணி பள்ளி சென்றுள்ளார். மிகவும் ருசியாக இருந்தது. தரங்கம்பாடியில் காலையிலேயே மீன் படகுகள் கரை வந்து சேர்வதால், மீன்களும் இறால்களும் புதிதாகவே கிடைக்கும். அதை பெண்கள் கூடையில் சுமந்து வருவார்கள்.
          மதியம் அண்ணனும் அண்ணியும் மீண்டும் பணிக்குச் சென்றுவிட்டனர். நான் படுத்து உறங்கினேன். மாலையில் கடற்கரை சென்று மணலில் அமர்ந்து இடைவிடாமல் இரைச்சலுடன் கரை வந்து சேர்ந்து சிதறும் அலைகளை இரசித்துக்கொண்டிருந்தேன். கடற்கரையோரத்தில் இருந்த கிணற்றில் பெண்கள் நீர் இறைத்துக்கொண்டிருந்தனர். கடல் மணலின் ஆழத்தில் உள்ள அந்தக் கிணற்றில் நல்ல குடிநீர் கிடைப்பது ஆச்சரியம்!
           இருட்டும் வரை கடற் காற்று வாங்கிவிட்டு வீடு திரும்புவேன். இங்கு பேச்சுத் துணைக்கு ஆட்கள் இல்லை. அண்ணியிடம்தான் பேசிக்கொண்டிருப்பேன். அவர் பள்ளிக்குச் சென்றதும் நாவல் படிப்பேன்.
          சில இரவுகளில் அண்ணியும் நானும் பொறையாருக்கு நடந்து சென்று தமிழ்ப் படம் பார்த்து வருவோம்.வழி நெடுக அண்ணி தொடர்ந்து கதை சொல்லிக்கொண்டு வருவார்.
          சில நாட்கள் நான காரைக்கால் சென்று வருவேன். அங்கு மதுவிலக்கு கிடையாது. ஏராளமான ” பார் ” களும் உணவகங்களும் உள்ளன.அது பாண்டிச்சேரியைச் சேர்ந்தது. இந்திய சுதந்திரத்துக்கு முன்பு அங்கு பிரெஞ்சுக்காரர்களின் ஆட்சி இருந்ததால் மதுவிலக்கு கிடையாது. அது இப்போதும் தொடர்ந்தது. மதுவுக்கு குறைந்த வரி என்பதால் அவற்றின் விலை . மிகவும் குறைவு.அங்கு சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் பயின்ற ஜாபர் என்பவர் எவர்சில்வர் பாத்திரக்கடை வைத்துள்ளார். கடைவீதியில் நடந்து சென்றபோது சற்றும் எதிர்ப்பாராத விதத்தில் அவரைச் சந்தித்தேன். நாங்கள் இருவரும் ஒரே விடுதியில் தங்கியவர்கள். என்னைக் கண்டத்தில் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி.
          தரங்கம்பாடியில் தங்கியிருந்த இரண்டு வாரங்களும் இனிமையாகக் கழிந்தது. விடுமுறையும் முடிந்து வேலூர் புறப்பட்டேன்.
          தரங்கையிலிருந்து இரயில் மூலம் மாயவரம் புறப்பட்டேன். அங்கிருந்து திருப்பதி துரித பயணிகள் தொடர்வண்டியைப் பிடித்தேன். இரவெல்லாம் பிரயாணம்.
          நான் ஏறிய ” கம்பார்ட்மெண்ட்டில் ”  ஒரு குடும்பத்தினரும் ஏறினார். அவர்கள் திருமணத்துக்குப் போவது தெரிந்தது. மணப்பெண் பட்டு சேலையில் கழுத்து நிறைய நகைகள் அணிந்திருந்தாள். . கொண்டை போட்டு மல்லிகைச் சரம் சுற்றியிருந்தாள். எந்தப் பெண்ணும் திருமண அலங்காரத்தின்போது மிகுந்த அழகுடன் காணப்படுகிறார்கள்! அதற்கு அந்தப் பெண்ணும் விதிவிலக்கல்ல. அவளுடைய அசாதாரண அழகை இரசித்தவண்ணம் எதிர் வரிசையில் அமர்ந்திருந்தேன்.
          அவளுடைய தாய் நடு வயதுடையவர். நல்ல நிறத்தில் அவரும் பட்டுதான் அணிந்திருந்தார். நெற்றியில் பெரிய பொட்டு வைத்திருந்தார். அவருடைய கழுத்திலும் தங்க சங்கிலிகள்தான். திருமணத்தின்போது பெண்கள் வீட்டில் உள்ள நகைகள் அனைத்தையும் அணிந்துகொள்கின்றனர்.
         பெண்ணின் தந்தை சாதாரணமாகவே காணப்பட்டார். அவருடைய அருகில் ஒரு வாலிபன். வயது இருபது இருக்கலாம்.
        அவர்களுடைய பேச்சில் இருந்து பெண்ணை மாப்பிள்ளை வீட்டுக்கு கூட்டிச் செல்கின்றனர். விடிந்தால் திருமணம். அதற்கான சாமான்கள் நிறைய கொண்டு சென்றனர். அவற்றில் சில பித்தளை அண்டாக்களும் அடங்கும். அநேகமாக அவற்றில் பலகாரங்கள் இருக்கலாம்.
          நாளை நடக்கவிருக்கும் திருமணம் பற்றி அவர்கள் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தனர்.மணப்பெண் குனிந்த தலை நிமிராமல் சோகமாகவே காணப்பட்டாள்..பெற்றோரைப் பிரிந்து செல்ல வேண்டியுள்ளதே என்ற சோகமாகவும் இருக்கலாம். திருமணத்தின்போது அநேகமாக எல்லா பெண்களுக்கும் இத்தகைய பிரிவின் சோகம் இருக்கவே செய்யும். மணமானபின் இந்த சோகம் நீடிப்பத்தில்லை. எல்லா பெண்களுக்கும் இது இயல்பானதுதான்.
          வண்டி செல்லும் ஆட்டத்தில் நான் சற்று கண்ணயர்ந்தேன். எதோ சத்தம் கேட்டு விழித்துக்கொண்டேன்.வண்டி நின்றுகொண்டிருந்தது. அது ஒரு சிறிய தொடர்வண்டி நிலையம் என்பதை யூகித்துக் கொண்டேன். என் எதிரே அமர்ந்திருந்த மணப்பெண்ணைக் காணவில்லை. அவர்கள் இறங்கிக்கொண்டிருந்தனர்.
          நான் எழுந்து கதவருகே நின்று கவனித்தேன். மணப்பெண் பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருந்தாள். அந்த இளைஞன் சாமான்களை இறக்கிக்கொண்டிருந்தான். அவற்றை அவனுடைய தந்தை வாங்கி அந்தப் பெண் அருகே வைத்துக்கொண்டிருந்தார். அந்த அம்மாவோ இன்னும் இருக்கை அடியில் உள்ள சாமான்களை எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது விசில் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து வண்டியின் ஒலியும் ஒலித்தது. சில நிமிடத்தில் வண்டியும் நகர்ந்தது!
          அந்த அம்மா எதையோ எடுத்துக்கொண்டு கதவருகே வந்தார். வண்டி நகர்ந்துகொண்டிருந்தது. அந்த இளைஞன், ” இறங்குங்க அம்மா ‘ என்று அவரைத் துரிதப்படுத்தினான். அவர் தடுமாறியவண்ணம் கதவருகே வந்தார். அங்கே நான் நின்றுகொண்டிருந்தேன்.
          வண்டியின் வேகம் அதிகமானது. அவர் இறங்குவது ஆபத்தானது. நான் அவருடைய கையைப் பிடித்து தடுத்தவண்ணம், ” இங்கே இறங்க வேண்டாம். அடுத்த ஸ்டேஷனில் இறங்கலாம். ” என்றேன்.
          ஓடி வந்த அந்த இளைஞன், ” அம்மாவை விடுங்கள்.” என்றவாறு அவரை விடுவித்து ” சீக்கிரம் இறங்குங்கள் அம்மா ” என்று உறக்கக் கூவினான்.
          நிலை தடுமாறிய அந்த அம்மா படிக்கட்டில் கால் வைத்தார்கள். அடுத்த நிமிடம் வண்டிக்கும் பிளாட்பாரத்துக்கும் இடையில் இழுக்கப்பட்டு மறைந்தார். அப்போது அந்த பயங்கரமான ஓலம் கேட்டது! அது அவரின் அலறல் ஒலி.
          நான் ஓடிச் சென்று அபாயச்  சங்கிலியைப் பிடித்து இழுத்தேன். வண்டி கிரீச்சிட்டு நின்றது. என் பையில் வைத்திருந்த டார்ச் லைட்டை எடுத்துக்கொண்டு  வெளியே இறங்கினேன்.  வழியில் நின்ற அந்த இளைஞன் கன்னத்தில்  ஓர் அறை விட்டேன்.
          நான் டார்ச் அடித்துக்கொண்டு பின்னோக்கி ஓடினேன். என்னைப் பின்தொடர்ந்து வேறு சில பிரயாணிகளும் சேர்ந்துகொண்டனர். சற்று தூரம் சென்றபின் ஒரு கால் தொடையுடன் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது! அதிலிருந்து இரத்தம் வழிந்தோடியது! அந்த கோரத்தை என்னால் சகிக்க முடியவில்லை.
          உடலைத் தேடி முன்னோக்கி ஓடினேன். அங்கே  அவரின் நெஞ்சுப் பகுதியின்மேல் ஒரு சக்கரம் நின்றது! நெஞ்சு இரண்டாகப் பிளந்திருந்தது. தலை சப்பையாக நசுங்கி அதிலிருந்து இரத்தமும் மூளையும் வழிந்துகொண்டிருந்தது!
          இரயில்வே அதிகாரிகள் சிலரும், வண்டி ஓட்டுனரும், பிரயாணிகள் சிலரும் அங்கு குழுமினர். நான்தான் செயினை இழுத்து வண்டியை நிறுத்தியதாகக் கூறினேன். அந்த அம்மாள் தவறி இறங்கிவிட்டதாகவும்  கூறினேன். அதிகாரிகள் அதை  குறித்துக்கொண்டனர். பின்பு  தொடர் வண்டியை பின்னோக்கி செலுத்தி  சின்னாபின்னமான அந்த உடலின் பாகங்களை வெளியே  எடுத்து கருப்பு பிளாஸ்டிக் பைகளில் கொண்டுசென்றனர்.

          தொடர்வண்டி சற்று தாமதித்து பிரயாணத்தைத் தொடர்ந்தது.

          ( தொடுவானம் தொடரும் )
Series Navigationநித்ய சைதன்யா கவிதைகள்யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 13
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *