தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

20 மே 2018

தொடுவானம் 155. பல்லவர் தமிழர் அல்லர்.

டாக்டர் ஜி. ஜான்சன்

டாக்டர் ஜி. ஜான்சன்

155. பல்லவர் தமிழர் அல்லர்.

திருவள்ளுவர் துரித பேருந்தின் மூலமாக எங்கள் வகுப்பு மாணவ மாணவிகள் சென்னை சென்றோம். ஆற்காடு, காஞ்சிபுரம் வழியாக அது சென்றது.
காஞ்சிபுரம் வந்தபோது எனக்கு கல்கியின் ” சிவகாமியின் சபதம் ” நினைவுக்கு வந்தது . அக்காலத்தில் இந்தப் பகுதிகள் பல்லவ நாடு என்று அழைக்கப்பட்டது. அதன் தலைநகரமாக காஞ்சி திகழ்ந்துள்ளது. துறைமுகப் பட்டினம் மகாபலிபுரம். காஞ்சியை சுற்றிலும் மகேந்திர பல்லவர் கட்டியிருந்த மதில் அரண்கள் உள்ளனவா என்பது தெரியவில்லை. அதுபோன்றே மகாபலிபுரத்து துறைமுகமும் காணப்படவில்லை. ஆனால் பல்லவர்களின் அற்புதமான சிற்பக்கலைத் திறனை மகாபலிபுரத்தில் காணமுடிகிறது. அங்கு அந்த அழகிய கடற்கரைக் கோவில், மலைச் சிற்பங்கள், குடைந்த மண்டபங்கள், கோபுரங்கள் , கல் யானைகள் போன்றவை பல்லவர்களின் சிறப்பு கூறி நிற்கின்றன. இவற்றை வைத்துதான் கல்கி அபார கற்பனை செய்து சிவகாமியின் சபதத்தை எழுதியுள்ளார்.
பல்லவ அரசர்கள் தமிழர்களா என்ற கேள்வி என் மனதில் நெடு நாட்கள் இருந்துள்ளது. அவர்கள் தமிழ் பேசவில்லை.சமஸ்கிருதம் பேசியதாக அறிவேன். இவர்கள் தமிழர்களா? இவர்கள் எங்கிருந்து, எப்படி வந்தவர்கள்? இவர்கள் எவ்வாறு தமிழகத்தின் ஒரு பகுதியை பல்லவ நாடு என்று அழைத்து ஆட்சியும் புரிந்தனர்? அதோடு பலம் பொருந்திய சோழர்களையும் பாண்டியர்களையும் வென்று முழு தமிழகத்தையும் ஆண்டுள்ளனரே? அந்தப் பகுதி மக்கள் அனைவரும் தமிழரே. அப்படியிருந்தும் அவர்களை ஆண்டவர்கள் தமிழ் அல்லாத பல்லவர்கள் என்பது எப்படி சாத்தியமானது? இது எனக்குப் புரியாத புதிராகவே இருந்தது.
Pallava2

தமிழ் மன்னர்கள் என்று நாம் கூறும்போது மூவேந்தர்கள் என்று சோழ, சேர, பாண்டிய மன்னர்களைத்தான் கூறுகிறோம். பல்லவர்களை நாம் கூறுவதில்லை. ஆனால் அவர்கள் ஆண்ட பகுதியும் தமிழகத்தைச் சேர்ந்ததுதான். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ,ஆற்காடு, வேலூர், மகாபலிபுரம், சென்னை ஆகிய பகுதிகளை நாம் தொண்டை மண்டலம் என்கிறோம். அதே வேளையில் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மன்னர்களையும் தொண்டைமான்கள் என்றும் அழைக்கிறோம். இது எப்படி சாத்தியமாகும்?
கல்கியின் சிவகாமியின் சபதத்தில் பல்லவ மன்னர்களான மகேந்திர பல்லவரையும், நரசிம்ம பல்லவரையும் தமிழ் மன்னர்களாக மிகவும் அழகாகவே வர்ணித்துள்ளார். அதைப் படிக்கும்போது அவர்களின் மேல் நமக்கு அளவற்ற ஆர்வமும் பாசமும் உண்டாகிறது. அவர்களை மறக்க முடியாத பாத்திரங்களாக கல்கி வடித்துள்ளார்.சரித்திர மாந்தர்களான இராஜ ராஜ சோழருக்கும், இராஜேந்திர சோழருக்கும் அடுத்து நம் நினைவுக்கு வருபவர்கள் மகேந்திர பல்லவரும், நரசிம்ம பல்லவரும் எனலாம். அவர்களுக்கு ஈடான ஒரு பாண்டிய மன்னனையோ அல்லது சேர மன்னனையோ நாம் நினைப்பதில்லை. அவர்களைப் பற்றிய புதினங்களை நாம் வேங்கையின் மைந்தன், பார்த்திபன் கனவு, கங்கை கொண்ட சோழன் , சிவகாமியின் சபதம் போன்று படித்ததில்லை என்பது ஒரு காரணமாகவும் இருக்கலாம். சேரன் செங்குட்டுவன் இமயம் வரை சென்ற வீரன் என்பதையும் கரிகால் சோழன் கல்லணை கட்டினான் என்பதையும் நாம் அறிந்திருந்தாலும் அவை பற்றிய சுவையான புதினங்கள் இல்லாமல் போனது பெரும் குறையே.
Pallava 1 நான் சென்னை வரை பேருந்தில் பிரயாணம் செய்தபோது பல்லவர்களை பற்றிய சிந்தனையில் இவ்வாறு மூழ்கிப்போனேன். அந்தப் பகுதியின் பிரதான வீதிகளில் பல்லவ மன்னர்களும் படைகளும் குதிரைகளிலும் யானைகளிலும் போருக்குச் செல்வதை நான் கற்பனையில் எண்ணிப் பார்த்தேன்.
நரசிம்ம பல்லவர் அதுபோன்ற படைகளுடன் வாதாபி வரைச் சென்று அதைக் கைப்பற்றி அழித்து தீக்கு இரையாக்கிவிட்டுத் திரும்பியதாக நாம் படித்துள்ளோம். இந்த வாதாபி என்பது இன்றைய மகாராஷ்டிரத் தலைநகரான பம்பாய் என்றால் அது பலருக்கு வியப்பாக இருக்கும். ஆம். அதுதான் உண்மை! அப்படியெனில் எத்தனை தூரம் அவர்கள் சென்றிருக்கவேண்டும் என்று நினைத்தால் அது இன்னும் வியப்பையே தரும். நிச்சயமாக அவர்கள் ஆந்திரா, கர்நாடக வழியாகத்தான் மகாராஷ்ட்டிரா சென்றிருக்கவேண்டும். அப்படியெனில் பல்லவர்களின் படைகள் எத்தகைய வீரமமும் வலிமையையும் கொண்டவை என்பதை நம்மால் எண்ணிப்பார்க்க முடிகிறது.
அனால் பல்லவர்கள் தமிழர்கள் இல்லை என்ற உண்மையை அறியும்போது மனதில் சிறு உறுத்தல் உண்டாகிறது.
சோழர்களும் பாண்டியர்களும் போர்த் திறனிலும், சிற்பம் மற்றும் கட்டிடக்கலையிலும் சிறந்தது விளங்கியுள்ளனர் என்பதை அவர்கள் கட்டியுள்ள தஞ்சை பெரிய கோவிலும், கங்கைகொண்ட சோழபுரம் கோவிலும், மதுரை மீனாட்சியம்மன் கோவிலும் சான்று பகர்கின்றன. ஆனால் பல்லவர்களிடம் வேறு விதமான கட்டிடக் கலை இருந்துள்ளது. அவர்கள் குகைக்கோவில்கள் அமைப்பதிலும், பாறைகளைக் குடைந்து சிற்பங்கள் அமைப்பதிலும் சிறந்து விளங்கியுள்ளனர். இவற்றுக்கு மகாபலிபுரத்து கடற்கரைக் கோவிலும் அங்குள்ள ஐந்து குகைக்கோவில்களும், இதர பிரமிக்கவைக்கும் கருங்கல் பாறைகளில் குடைந்த கலை வடிவங்களும் அழியாத சான்றுகள். இதுபோன்றே புதுக்கோட்டை அருகேயுள்ள சித்தன்னவாசலில் அமைந்துள்ள சில குகை ஓவியங்களும் சிற்பங்களும் புதுக்கோட்டை தொண்டைமான்களை பல்லவர்கள் என்று அடையாளம் காட்டுகின்றன.
பல்லவர்கள் எப்படி புதுக்கோட்டைக்கு வந்திருப்பார்கள்? அவர்கள் சோழர்களையும் பாண்டியர்களையும் வென்று முழு தமிழகத்தையும் ஆண்டுள்ளார்கள் என்பது வரலாறு.
தமிழக வரலாற்றைப் பார்த்தால்முற்காலப் பல்லவர்கள் சோழ மன்னர்களிடமிருந்த தொண்டை நாட்டைக் கைப்பற்றி கி.பி. 256 ஆம் ஆண்டில் காஞ்சிபுரத்தைத் தலைநகராக அமைத்துக்கொண்டு ஆண்டனர். இவர்களின் இந்த ஆட்சி கி.பி. 340 வரை நீடித்துள்ளது.அதன்பின்பு களப்பிரர் என்னும் கன்னடர்கள் தமிழகத்தைக் கைப்பற்றி கி.பி. 250 முதல் கி.பி. 550 வரை ஆண்டுவந்தனர். அவர்களை 6 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சிம்மவிஷ்ணு பல்லவனும், பாண்டியன் கடுங்கோனும் ஒன்று சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ விரட்டி அடித்தனர். கி.பி. 6 -ஆம் நூற்றாண்டிலிருந்து கி..பி. 9 – ஆம் நூற்றாண்டுவரை பிற்காலப் பல்லவர்கள் தொண்டை நாட்டுடன் முழு தமிழகத்தையும் மீண்டும் ஆண்டார்கள்.அப்போது அவர்கள் மறுபடியும் காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டிருந்தனர். மகேந்திர பல்லவரும், நரசிம்ம பல்லவரரும் கி.பி. 7 -ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள். கல்கியின் சிவகாமியின் சபதம் அந்த காலக் கட்டத்தை வைத்துத்தான் எழுதப்பட்டுள்ளது. அதில் கல்கி அவர்களின் பூர்வீகம் பற்றி ஏதும் கூறவில்லை.அவர்களை தமிழ் மன்னர்களைப்போலவே சித்தரித்துள்ளார். ஓரிரு இடங்களில் அவர்கள் சமஸ்கிருதம் பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் பல்லவர்கள் பேசிய மொழி பிராகிறிட் ( Prakrit ) என்பது. இது அன்றைய பாரசீக மொழியாகும்.பாரசீகம் என்பது இன்றைய ஈரான். அவர்கள் வடக்கிலிருந்து வந்ததால் சமஸ்கிருதமும் பேசினர். அவர்கள் காஞ்சியை ஆண்டகாலத்தில் அரசு ஆணைகளை தமிழில் எழுதவில்லை. பிராகிறிட் மொழியிலும் சமஸ்கிருதத்திலும் றழுத்தினர். அவர்கள் காலத்தில் தமிழ்ப் பள்ளிகள் இருந்திருக்க நியாயமில்லை. அவர்கள் வடமொழியை ஆதரித்தார்கள். அதனால் சமஸ்கிருதப் பள்ளிகள் இருந்திருக்கலாம். அவர்கள் அணியும் இடுப்பு உடையும பாரசீகர் பாணியில் இருந்துள்ளது. பல்லவ மன்னர்களின் கிரீடங்கள் உருண்டையாக உயரமாக பாரசீக மன்னர்களின் கிரீடத்தை ஒத்துள்ளது. அவர்களின் உடல் அமைப்பு உயரமாகவும், முகம்கூட நீளமாகவும் அமைந்துள்ளது. அது திராவிடர் உடல் அமைப்பு அல்ல. இவை அனைத்தும் மகாபலிபுரம் கோவில் சிற்பங்களில் காணலாம். பல்லவர்கள் ஆந்திர அரசர்களின் அமைச்சர்களாக இருந்துள்ளனர். இதை கல்வெட்டுகள் நிரூபிக்கின்றன. இதுபோன்ற இன்னும் ஏராளமான சான்றுகளை வைத்து ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து பார்த்தத்தில் பல்லவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பாரசீகத்திலிருந்து ( ஈரான் ) தரை வழியாக இந்தியாவுக்குள் பஞ்சாப் வழியாக புகுந்துள்ளனர். வடநாட்டின் சில பகுதிகளில் இருந்துவிட்டு மகாராஷ்டிரம், கன்னடம்,ஆந்திரம் வழியாக வட தமிழகம் வந்து காஞ்சிபுரத்தில் குடியேறியதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு ஆராய்ச்சிப்பூர்வமாக நிறைய சான்றுகள் உள்ளன.
பல்லவர் காலத்தில் முன்பு களப்பிரர் ஆட்சியில் முடங்கிக்கிடந்த சைவமும் வைணவமும் புத்துயிர் பெற்றன. அது சமண பெளத்த சமயங்களை வீழ்ச்சியடையச் செய்தன. மகேந்திர பல்லவர் சமணராக இருந்தவர். திருநாவுக்கரசர் அவரை சைவராக்கினார். சைவ நாயன்மார்கள் இக் காலத்தில் சைவ சமயத்தைப் பரப்பினர். கி.பி. 7 – ஆம் நூற்றாண்டில்தான் விநாயக வழிபாடு தமிழகத்தில் புகுந்தது. சங்க நூல்களில் விநாயக வழிபாடே இல்லை. இக் காலத்தில் 8 -ஆம் நூற்றாண்டில் சமணத் துறவிகளால் நாலடியர் பாக்கள் தோன்றியிருக்கவேண்டும். புதுமனார் என்பவர் சிதறிக்கிடந்த வெண்பாக்களைத் திரட்டி நாலடியார் என்னும் பெயரில் தொகுத்து வைத்தார்.
ஆதலால் வரலாற்றுப்பூர்வமாகவும், ஆராய்ச்சிகளின் வழியாகவும் காணுங்கால் பல்லவர்கள் உண்மையில் ஈரானியர்கள் என்பது நிச்சயமாகிறது. பல்லவ அரசு பிற்காலத்தில் சோழர்களால் வீழ்த்தப்பட்டபின்பு அவர்களில் பெரும்பாலும் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று மதுரை தஞ்சை பகுதி வேளாளர்களும் , தஞ்சைப் பகுதி சோழ வேளாளர்களும், வட ஆற்காட்டு ஷத்தியர்களும் வைசியர்களும், தமிழ் பேசும் வேளாளர்களும் ஆந்திராவின் ரெட்டிகளும் புதுக்கோட்டை அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் பல்லவர்கள். இவர்கள் காலப்போக்கில் தமிழ் கற்று, தமிழ்க் கலாச்சாரத்தோடு கலந்து தமிழர்களாகவே வாழ்கின்றனர்.
இதனால்தான் நாம் பண்டைய தமிழ் மன்னர்களாக சேர சோழ பாண்டியர்களைமட்டும் குறிப்பிட்டு பல்லவர்களை விட்டுவிட்டோம். ( பல்லவர்களைப் பற்றி நிறையவே எழுதலாம். அதை நேரம் வரும்போது பார்த்துக்கொள்வோம் )
பல்லவர்களின் நினைவுடன் அவர்கள் ஆண்ட தொண்டை நாட்டின் கிராமப்புறங்களைப் பார்த்தவண்ணம் சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்தேன். ஆங்காங்கே காணப்பட்ட சில கோவில்களும் மண்டபங்களும் அக் காலத்தை கண்முன் கொண்டுவந்தன..அவர்களின் கைவண்ணத்தில் எழும்பியுள்ள வியப்பையூட்டும் கற்கோயில்களும், குகைக்கோவில்களும், கடற்கரைக் கோவிலும், காஞ்சிபுரம் கோவிலும் நமக்கு வியப்பையும் பெருமையும் தருகின்றன. ஆனால் அதேவேளையில் நம் தமிழ் மக்கள் இவ்வாறு அவர்களின் ஆட்சியின்போது சில நூற்றாண்டுகளாக அடிமைகளாக வாழ்ந்துள்ளனரே என்பதை எண்ணியபோது மனம் கணக்கவே செய்தது!

( தொடுவானம் தொடரும் )

Series Navigationநமன் கொண்ட நாணமும் அச்சமும்உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

6 Comments for “தொடுவானம் 155. பல்லவர் தமிழர் அல்லர்.”

 • கோ.மன்றவாணன் says:

  பல நூற்றாண்டுகளைச் சிறுகுப்பியில் அடக்கிய வரலாறு.
  பல காலமாகப் பலருக்கும் உள்ள ஐயம்தான் இது. ஐயம் தீர்த்த தெளிவான கட்டுரை இது.

  எல்லாருக்கும் வாய்த்த நல்ல அடிமைகள் நாம்.

  இருப்பினும்… தமிழர்கள் தம் தோல்வி வரலாற்றை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். வெற்றி கற்றுத்தரும் பாடத்தைவிட, தோல்வி கற்றுத்தரும் பாடம் மறக்க முடியாதவை. ஆனால் மறந்துவிட்டோமோ?

  யாருடைய வெற்றி என்றாலும் வாழ்த்துச் சொல்லுவோம்.
  நம்முடைய வெற்றிக்கும் நல்வழி காண்போம்.

  கோ. மன்றவாணன்

 • BSV says:

  //அதேவேளையில் நம் தமிழ் மக்கள் இவ்வாறு அவர்களின் ஆட்சியின்போது சில நூற்றாண்டுகளாக அடிமைகளாக வாழ்ந்துள்ளனரே என்பதை எண்ணியபோது மனம் கணக்கவே செய்தது!//

  அடிமைகள் என்ற சொல்லாடல் தவறு. மன்னர்கள் பிற நாடுகளை போரிட்டு வென்று, அந்நாடுகளைத் தம் நாட்டோடு இணைத்து ஒரு பேரரசாக்கிக்கொண்டால், இணைத்த நாட்டுமக்கள் அடிமைகள் என்று அழைக்கப்பட மாட்டார்கள். பேரரசன் அவர்களுக்கும் மாமன்னன் என்றுதான் வருமே தவிர அவன் அடிமைகளாக இணைத்த நாட்டு மக்களை நடாத்தினான் என்று வருமா? எல்லாமே தன் பேரரசு என்றாக்கிவிட்டு வேறுபாடு காட்ட முடியுமா? பல்லவர்கள் தொண்ட நாட்டு மக்களை அடிமைகளாக்கி கொடுமைப்படுத்தினார்கள் என்று வரலாறு இல்லை. மாறாக, மக்களால் போற்றப்பட்டார்கள். இவ்வுண்மை எல்லாவற்றுக்குமே பொருந்தும் வரலாறு மாற்றிக்காட்டினால் மட்டுமே விலக்கு.

  சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியின் தலைநகர் இன்றைய பம்பாய் அன்று. வாதாபி மஹாராட்டியத்துக்கும் கருநாடகத்துக்கும் எல்லைப்பகுதி மாவட்டமாக பகல்பூரி அருகில் உள்ள இன்றழைக்கப்படும் பாடாமியே.

  குடைவரைக்கோயில்கள் கலை சாளுக்கிய மன்னர்கள் பரப்பினார்கள். பல்லவர்கள் அதைப்பின்பற்றினார்கள். திராவிடக்கலை (கோயிலமைப்பில்) இல்லாமல் வடவர் கலை பல்லவர்கள் உருவாக்கினது (எடுத்துக்காட்டாக மாமல்லபுர இரட்டைக்கோயில்கள்) தம் வடவர்கள் அதை மாற்ற நம்க்கில்யலாது என்ற் நோக்கில்தான். பிஜி தீவிலும் மலேசியாவிலும் சிக்காகோவிலும் போய் வாழம் தமிழர்கள் என்ன அவ்வூர் கலையிலா கோயில்களைக்கட்டிக்கொண்டிருக்கிறார்கள்? எங்கு போனாலும் திராவிடக்கலையில்தானே? இது உளவியல். மனம் அந்நியத்தில் ஒட்டாது.

  பல்லவர்கள் வடவர்கள் என்று நிரூபிக்கப்பட்டால் ஒன்றும் கெட்டுப்போகாது. மனதை விரிவுபடுத்திக்கொண்டால் – உலகமே நமதாகுமென்றார் ஒரு சங்கப்புலவர்: யாதும் ஊரே யாவரும் கேளிர்.

 • v.gopal says:

  /// ஆராய்ச்சிகளின் வழியாகவும் காணுங்கால் பல்லவர்கள் உண்மையில் ஈரானியர்கள் என்பது நிச்சயமாகிறது. பல்லவ அரசு பிற்காலத்தில் சோழர்களால் வீழ்த்தப்பட்டபின்பு அவர்களில் பெரும்பாலும் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று மதுரை தஞ்சை பகுதி வேளாளர்களும் , தஞ்சைப் பகுதி சோழ வேளாளர்களும், வட ஆற்காட்டு ஷத்தியர்களும் வைசியர்களும், தமிழ் பேசும் வேளாளர்களும் ஆந்திராவின் ரெட்டிகளும் புதுக்கோட்டை அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் பல்லவர்கள். இவர்கள் காலப்போக்கில் தமிழ் கற்று, தமிழ்க் கலாச்சாரத்தோடு கலந்து தமிழர்களாகவே வாழ்கின்றனர்.//
  வேளாளர்கள் என்றால் இந்த முதலி பிள்ளை ஜாதியையா சொல்கிறீர்கள்.

 • Suvanappiriyan says:

  ஈரானியர்கள் முகமது நபி வருகைக்கு முன்பு நெருப்பை வணங்கி வந்ததாக குர்ஆன் கூறுகிறது. நம் நாட்டில் நெருப்பை வணங்குவதை பலரிடம் பார்க்கலாம். பிராமணர்களின் பல பழக்க வழக்கங்கள் ஈரானியரிடத்தில் இன்றும் உள்ளது. எனது பார்வையில் பல்லவர்கள் பிராமணர்களாக இருக்கவே அதிக சாத்தியங்கள்.

 • கலையரசன் says:

  உங்கள் கேள்விக்கான பதில் இங்கே உள்ளது:
  ஈரான் நாட்டு பல்லவர்கள் தமிழரான வரலாறு
  http://kalaiy.blogspot.nl/2011/11/blog-post_17.html

 • BSV says:

  நன்றாக பதிவெழுதியிருக்கிறீர்கள். வரலாற்றாய்வாளர்கள் நீங்கள் கோடிட்டவைகளை ஆய்வாரகள் என நம்பலாம்.


Leave a Comment

Archives