டாக்டர் ஜி. ஜான்சன்
168.பறந்து சென்ற பைங்கிளி
அவன் பெயர் புருஷோத்தமன். அவன் அவள் மீது மிகுந்த காதல் கொண்டுள்ளான் என்பது அவனின் பேச்சில் வெளிப்பட்டது. அதனால்தான் அவளை இழந்துவிட விரும்பாமல் உடன் லண்டனிலிருந்து ஓடோடி பறந்து வந்துள்ளான். முறைப்படிப் பார்த்தால் மேரி அவனுக்குதான் சொந்தம். சமுதாய வழக்கப்படி நிச்சயம் செய்துள்ளனர். அப்போது அவனைப் பார்த்து சம்மதம் தெரிவித்திருப்பாள். இப்போதோ அவள் என்னிடம் பழகியதால் அவனை வேண்டாம் என்கிறாள். இது இயல்பானதுதான். இந்த நிலை பல பெண்களுக்கு நிகழ்வதுண்டு. வயதாகிறது என்று பெற்றோரின் வற்புறுத்தலின்பேரில் சில பெண்கள் திருமணத்துக்கு சம்மதிக்கின்றனர். நிச்சயம் செய்யும்போது ஒரு சில நிமிடங்கள்தான் மாப்பிள்ளையைப் பார்க்கின்றனர். என்ன ஏது என்று தெரியாமலேயே சம்மதித்துவிடுகின்றனர். அதன்பிறகு வேறு ஆணின் பழக்கம் ஏற்படும்போது அவன் மீது காதல் தோன்றலாம். ஆனால் நிச்சயம் ஆனதால் தவிப்புக்கு உள்ளாகலாம். மேரியின் நிலையும் இப்படிதான்.
அவனின் நிலையு ம் பரிதாபமானது. முன்பு சம்மதம் தந்தவள் இப்போது வேண்டாம் என்கிறாள். அதோடு நில்லாமல் வாழ்வையே மாய்த்துக்கொள்ள முடிவு செய்து விட்டாள்!. படித்திருந்தும் தற்கொலை செய்துகொள்வது கோழைத்தனம் என்பது குழப்பமான சூழ்நிலையின்போது உணர்ச்சிக்கு அடிமையான சிலருக்குத் தெரியாமல் போகிறது.
அவனும் அவள் வாழ்ந்தால் போதும் என்ற நிலையில் அவளை தியாகம் செய்துவிட்டு என்னிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளான்.இந்த வினோதமான சூழலில் நான் நிதானமாகவே செயல்பட வேண்டியிருந்தது.
” அவளைக் காப்பாற்றவேண்டியதுதான் இப்போது முக்கியமானது. அவள் நிலைமை சீரானபின்பு இதுபற்றி யோசிப்போம். எனக்கு இப்போ பிரசவ அறையில் அவசர வேலை உள்ளது. உங்களை மாலையில் சந்திக்கிறேன். ” என்று சொன்னபடி அவனிடமிருந்து விடைபெற்றேன். நான் சொன்னது உண்மையே. அங்கு ஒருத்திக்கு வலி வந்துவிட்டது. நான் உடன் சென்று பிரசவம் பார்க்கவேண்டும். பிரசவம் என்பது இப்படிதான். வலி எப்போது வரும் என்பதை யாராலும் கூற இயலாது.
இப்போது எண்ணமெல்லாம் மேரி பற்றியதாக இருந்தது. அவளுக்குப் பதிலாக வேறொருத்தி எனக்கு உதவினாள். இனி அவள்தான் உதவுவாள். மாலை வரை எப்படியோ சமாளித்துவிட்டு வார்டு பக்கம் சென்றேன். அங்கெ புருஷோத்தமனுடன் பெரும் மலையாளி கூட்டம் காணப்பட்டது. அவனுடைய பெற்றோரும் அவளுடைய பெற்றோரும் அவர்கள் என்பதை அவன் என்னிடம் கூறினான். அவள் கண் விழித்ததும் கேரளாவுக்கு கொண்டுசெல்ல வந்துள்ளார்களாம் அவன்தான் அவர்களை வரவழைத்தானாம். அதுவும் நல்லாதாகவே எனக்குத் தோன்றியது. இனிமேல் தற்கொலை விசாரணை என்று என்னை கூப்பிடமாட்டார்கள். நான் தப்பித்ததாக உணர்ந்தேன். அவள் இனியும் மனதைப் போட்டுக் குழப்பிக்கொள்வதை விடுத்து பெற்றோருடன் ஊர் செல்வதே நல்லது என்றும் தோன்றியது. நான் இருந்த நிலையில் வேறு என்னதான் செய்வது?
இரவு உணவுக்குப்பிறகு வார்டுக்குச் சென்று அவளைப் பார்த்தேன். அவள் கண் திறந்துவிட்டாள். என்னைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் எந்தவிதமான உணர்ச்சியும் இல்லை. நீண்ட கனவிலிருந்து விழித்து வியப்புடன் உலகைக் காண்பது போலிருந்தது.ஏன் இப்படி செய்தாய் என்று நான் கேட்கவோ கடிந்துகொள்ளவோ விரும்பவில்லை. அங்கு வார்டு தாதியர் அனைவரும் எங்களையே கூர்ந்து கவனிப்பது தெரிந்தது. அவளும் நான் பேசுவதைக் கேட்டு பதில் கூறும் அளவுக்கு இல்லை. இன்னும் மயங்கிய குழப்ப நிலையில்தான் இருந்தாள்.
மறுநாள் காலையில் எனக்கு அறுவைக் கூடத்தில் வேலை. வரிசையாக நோயாளிகள் வந்துகொண்டிருந்ததால் மாலையில்தான் வெளியேறினேன். தேனீர் அருந்திவிட்டு நேராக வார்டுக்குச் சென்றேன்.அங்கு அவள் படுக்கை காலியாக இருந்தது! அங்குள்ள தாதியர் என்னை பரிதாபமாகப் பார்த்தார்கள். மேரி எங்கே என்று கேட்டேன். அவள் வெளியேறிவிட்டதாகவும், பெற்றோருடன் கேரளா சென்றுகொண்டிருப்பதாகவும் சொன்னார்கள்! ஒரு கணம் நான் பிரமித்து நின்றேன்! அதோடு மேரியின் கதையும் ஒரு முடிவுக்கு வந்தது!
அதன்பின்பு அவள் தொடர்பு கொள்ளவில்லை. அப்போதெல்லாம் கைபேசி இல்லை.” ட்ரங்க் கால் ” தான் செய்யவேண்டும்.அல்லது கடிதம் எழுதலாம். இரண்டுமே இல்லை.
கோகிலம் தற்கொலை செய்துகொண்டு மரித்துப்போனாள் . அவளை மறக்க கொஞ்ச நாள் ஆனது., மெரி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாலும் பிழைத்துக்கொண்டாள். அவள் உயிரோடு இருந்தாலே போதும். கொஞ்ச நாட்கள் அவளுக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும். பெற்றோர் உடன் இருப்பதால் அது மாறும். அவர்களின் விருப்பத்திற்கு மீண்டும் அவள் பணிந்து போய்விடுவாள். பல பெண்கள் இப்படி பெற்றோர் விருப்பத்தின்படிதானே தங்களுடைய வாழ்க்கைத் துணியை அமைத்துக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
நான் வார்டில் பிரசவம் பார்க்கும்போதெல்லாம் மேரியின் நினைவு வரும். நான் அவளைத் தேடிக்கொண்டு கேரளா செல்லவில்லை. அவளுடைய வாழக்கையில் மேலும் குழப்பத்தை உண்டுபண்ண விரும்பவில்லை.
நான் வேலையில் கவனம் செலுத்தினேன். பயிற்சி முடியும் தருவாயில் இருந்தது.
எங்கள் பிரிவின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் குண்டர்ஸ் ஊழிய ஓய்வு பெற்றார். அப்போது அவருக்கு பிரியாவிடை விருந்து வைத்தோம்.புகைப்படம் எடுத்துக்கொண்டோம். அதன் பின்பு டாக்டர் பாலசுப்ரமணியம் என்பவர் உதவி மருத்துவரானார். அவர் சிவப்பாக உயரமாக இருந்தாலும் பெண்களைப்போல வளைந்து நெளிந்து நடப்பார். எங்களுக்குள் அது பற்றி பேசிக்கொள்வோம். அவரிடம் மரியாதையாகவே நடந்துகொள்வோம். காரணம் அவர்தான் சான்றிதழ் வழங்கவேண்டும்.
பயிற்சி முடிவில் சான்றிதழ் கிடைத்தது.அதில் அவர் இவ்வாறு எழுதியிருந்தார்.
” This is to certify that Dr.G.Johnson Residential Intern in Obstetrics and Gynaecology Department was working for a period of three months. He was very interested in the subject.He was very hard working. His conduct and character was excellent during that period.
Dr. M. Balasubramaniyam, M.D., D.G.O., Reader
Department of Obstetrics and Gynaecology.
C.M.C.Hospital, Vellore.
டாக்டர் ஜி. ஜான்சன் தங்கும் பயிற்சி மருத்துவர், பிரசவம் மற்றும் மகளிர் நோய் இயல் பிரிவில் மூன்று மாதங்கள் பணி புரிந்தார். அவர் இந்தத் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். மிகவும் கடின உழைப்பாளி. இந்தக் காலக் கட்டத்தில் அவருடைய நடத்தையும் குணமும் மிகுந்த சிறப்புமிக்கவை.
டாக்டர் எம். பாலசுப்ரமணியம் எம்.டி.,டி.ஓ . ஜி.. , துணைப் பேராசிரியர்
பிரசவமும் மகளிர் நோய் இயல் பிரிவு,
சி. எம். சி. மருத்துவமனை , வேலூர்
( தொடுவானம் தொடரும் )
- இந்திய விண்வெளித் தேடல் ஆணையகம் முதன்முதல் வெள்ளிக்கு விண்ணுளவி அனுப்பத் திட்டமிடுகிறது
- தமிழரல்லாத தமிழ்க்கவிஞர் மேமன் கவி ” குத்தியானா, ஜூனாகட் , பாட்வா – ஆகிய பாரத கிராமத்து தத்துவங்களை பத்திரமாய் காத்தவர்களின் மேமன் புத்திரன்”
- திடீர் மழை
- இலக்கண அமைப்பு முறைக் கோட்பாட்டில் தொல்காப்பிய நூன்மரபு
- திருப்பூர் மத்திய அரிமா சங்கம் அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா
- தொடுவானம் 168.பறந்து சென்ற பைங்கிளி
- காணாமல் போனவர்கள்
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள் பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்
- ஈரானியக் கவிதை. வாடகை வீடு.
- Sangam announces an International Drawing and Essay Writing Competition in Tamil
- ஆசி கந்தராஜாவின் படைப்புலகம் – ஓர் இரசனைக் குறிப்பு
- ‘கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும்’ ஒருமாதகாலச் சான்றிதழ்ப் படிப்பு
- யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும்–15
- வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! 11