தொடுவானம் 169. சமூக மருத்துவப் பயிற்சி

This entry is part 9 of 11 in the series 14 மே 2017

டாக்டர் ஜி. ஜான்சன்

169. சமூக மருத்துவப் பயிற்சி

சமூக மருத்துவப் பயிற்சி மூன்று மாதங்கள் தரப்பட்டது. இதை டாக்டர் வீ. பெஞ்சமின் தலைமையில் இயங்கிய சமூக மருத்துவப் பிரிவில் பெற்றேன்.
இந்த மூன்று மாதங்களும் மூன்று வெவ்வேறு இடங்களில் கழித்தோம். முதலாவதாக ஒரு மாதம் ஆந்திரா எல்லையில் உள்ள நகரி புத்தூர் சென்றேன். அங்கு தென்னிந்திய திருச்சபையின் கிராம மருத்துமனையில் பணி புரிந்தேன். அதன் தலைமை மருத்துவர் டாக்டர் புருஷோத்தமன்.அவர் அறுவை மருத்துவ நிபுணர். அவருடைய மனைவி டாக்டர் லலிதா பிரசவமும் மகளிர் நோய் இயல் நிபுணர். இவர்கள் இருவருமே அந்த மருத்துவமனையை திறம்பட நடத்தி வந்தனர். அவர்களுக்கு உதவியாக பயிற்சி மருத்துவனாக நான் அமர்த்தப்பட்டேன்.
அது சுமார் ஐம்பது படுக்கைகள் கொண்ட கிராம மருத்துவமனை அங்கு எக்ஸ்-ரே வசதியுடன்,இரத்தப் பரிசோதனை செய்யும் வசதியும் இருந்தன. நவீன வசதிகளுடன் கூடிய அறுவை மருத்துவக் கூடமும் இருந்தது.
அந்த மருத்துவமனை வளாகத்திலேயே எனக்கு ஒரு மாடி வீடு தரப்பட்டது. மருத்துவமனை உணவுக் கூடத்திலிருந்து உணவு வழங்கப்பட்டது. மருத்துவமனையின் ஊழியர்கள் சிலர் வளாகத்தினுள் குடியிருந்தனர்.
கிராம மக்களில் நோய்களுக்கு இங்கு மருத்துவம் வழங்கப்பட்டது. குறைந்த விலையில் சிகிச்சையும் மருந்துகளும் தரப்பட்டன. அறுவைச் சிகிச்சைகளும் பிரசவமும்கூட குறைந்த விலையில்தான் தரப்பட்டன. ஏழைகளுக்கு இலவச மருத்துவம் வழங்கினர். யாருக்கு இலவசம் என்பதை மருத்துவரே நிர்ணயம் செய்வார்.
இந்தியாவில் செயல்படும் நூற்றுக்கணக்கான மிஷன் மருத்துவமனைகளின் மாதிரி இந்த மருத்துவமனை. ஒருவேளை நான்கூட விரைவில் இதுபோன்ற ஒரு மருத்துவமனையில் பணிபுரிய நேரலாம். எனக்கு தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபையில் இரண்டு வருட ஒப்பந்தம் இருந்தது. திருச்சபைகள் இதுபோன்ற மிஷன் மருத்துவமனைகளின் மூலமாக இயேசு காட்டிய இரக்கமும் அன்பும் கூடிய மருத்துவச் சேவையை ஏழை எளியோருக்குச் செய்துவருகின்றன. இதற்கு வெளி நாடுகளில் இருந்த தாய்ச் சபைகளிலிருந்து வருடந்தோறும் பொருளாதார ஆதரவு கிட்டியது. நான் இங்கிருந்தபோது இவர்களின் பாணியில் நோயாளிகளை பார்த்து யாருக்கெல்லாம் இலவச மருத்துவம் தேவை என்பதை கற்றுக்கொண்டேன். ஏழைகளுக்கு இலவச சேவை செய்யவேண்டும் என்ற வாஞ்சை என் நெஞ்சில் எப்போதோ நிலைத்துவிட்டது.
நகரி புத்தூரிலிருந்து திருத்தணிக்கும் திருப்பதிக்கும் பேருந்து மூலம் செல்லலாம். இது ஆந்திராவின் எல்லைப்பகுதி என்பதால் தெலுங்கு பேசுபவர்கள் ஏராளமானவர்கள் மருத்துவமனைக்கு வந்தனர்.
பணிபுரிந்த பல தாதியர்களும் இதர ஊழியர்களும் தெலுங்கு மொழி பேசினர். என்னுடைய பயிற்சி காலத்தில் எனக்கு உதவிய தாதியர் கஸ்தூரி என்னும் தெலுங்கு பெண். தமிழ்ப் பெண் போன்றே இருந்தாள். தமிழும், தெலுங்கும் ஆங்கிலமும் பேசுவாள். தெலுங்கு பேசும் நோயாளிகளிடம் நான் பேச அவள் மொழிபெயர்த்து உதவினாள். அந்த ஒரு மாதத்தில் அவள் எனக்கு மிகவும் நெருக்கமானாள். எனக்குத் தேவையான அனைத்தையும் அவள் நிறைவேற்றினாள்.
இந்த மருத்துவமனையில் பயிற்சியின்போது அறுவை மருத்துவத்தில் நிறைய தனியே செய்ய கற்றுக்கொண்டேன். எப்போதுமே அறுவை செய்யும்போது எங்கே இரத்தக் குழாய்கள் வெட்டுப்பட்டு இரத்தம் பீறிட்டு அடிக்குமோ என்ற பயம் எனக்கு உண்டு. அந்த பயம் ஓரளவு இங்கே தெளிந்தது. எத்தகைய வகையில் இரத்தக்குழாய் அறுபட்டாலும்,அதைப் பிடித்து கட்டிவிட்டால் போதுமானது. இரத்தம் வெளியேறுவது நின்றுவிடும். டாக்டர் புருஷோத்தமன் எனக்கு நிறைய சுதந்திரம் தந்தார். நோயாளிகள் அனைவரும் சுற்றுவட்டார கிராம தெலுங்கு மக்கள் என்பதால் அவர்களுக்கு நான் ஒரு பயிற்சி மருத்தவன்தான் என்பது தெரியாது. நானும் அவர்களைப் பரிசோதித்து சிகிச்சை அளித்தபோது தடுமாற்றம் ஏதுமின்றி நிதானத்துடன் செயல்பட்டேன். எனக்கு ஊக்கம் தர அருகில் கஸ்தூரி இருந்தாள். அந்த ஒரு மாதப் பயிற்சி இன்பமாகக் கழிந்தது.
ஒரு ஞாயிறு காலையில் நான் பேருந்து மூலம் திருத்தணி முருகன் கோவில் சென்று பார்த்தேன். அது ஒரு மலை உச்சியில் இருந்தது. நிறைய படிகள் ஏறி கோயில் செல்லவேண்டும். இந்தக் கோவிலில்தான் முருகனுக்கும் வள்ளிக்கும் திருமணம் நடந்ததாகக் கூறினார்கள்.. அதனால் முருகன் கோவில்களில் இது மிகவும் முக்கியம் வாய்ந்தது என்றார்கள்.
நான் அங்கு சென்றுவந்ததை கஸ்தூரியிடம் சொன்னேன்.
” ஏன் தனியாகச் சென்றீர்கள்? என்னையும் கூட்டிச் சென்றிருக்கலாமே? நான் அங்கு முருகனை உங்களுடன் சேர்ந்து தரிசித்திருப்பேனே? ” ஒருவித சிணுங்கலுடன் கூறினாள் .
” நான் முருகனை தரிசிக்கச் செல்லவில்லை. அந்தக் கோவிலைப் பார்க்கத்தான் சென்றேன். நீ என்னுடன் வருவாய் என்பதும் எனக்குத் தெரியாது. ” நான் சமாதானம் கூறினேன்.
” சரி பரவாயில்லை. அடுத்த வாரம் நாம் திருப்பதிக்குச் சென்றுவருவோம். அந்தக் கோவிலையும் நீங்கள் இங்கிருக்கும்போதே பார்த்துவிடலாமே? ” என்றாள்.
எனக்கு அது ஏற்றதாகத் தெரிந்தது. இன்னொரு முறை திருப்பதிக்குச் செல்வது இயலாத காரியம்தான்.அது ஆந்திராவில் உள்ளது. அவள் நல்ல துணையாக இருப்பாள்.
” சரி. எனக்கும் அந்த ஆசை இருந்தது.நாம் அங்கு சென்று வருவோம். ” நான் சம்மதம் அறிவித்தேன். அது கேட்டு அவள் முகம் மலர்ந்தாள்
அந்த ஞாயிறுக்கிழமை அதிகாலையில் நகரி பேருந்து நிலையம் சென்றோம். சுமார் ஒரு மணி நேரப் பிரயாணம். திருப்பதியை அடைந்துவிட்டோம். அங்கு மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. அங்கிருந்து திருப்பதி திருமலை செல்லும் பேருந்து ஏறி ஏழுமலையான் கோவில் சென்றோம். அந்தக் கோவில் மலைமீது இருந்தது. நெடுந்தூரம் கால்கடுக்க படிகளில் ஏறிச் சென்றோம். இறுதியில் தேவஸ்தானம் சென்றடைந்தோம். அங்கும் ஏராளமான பக்தர்கள் கூட்டம். ஒரே இரைச்சல். பக்திப் பாடல்கள் விண்ணப் பிளந்து ஒலித்தன. ஒருவிதமான குழப்பமான ஒழுகுகற்ற நிலைதான் அங்கு காணப்பட்டது. கூட்டம் அப்படி அலைமோத்தியது!
அங்கு சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் நின்று சீட்டு வாங்க வேண்டும். அது ஆமை வேகத்தில் நகர்ந்தது. சாமி தரிசனம் நினைத்த நேரத்தில் கிடைக்காது. அதற்கென குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படும். அப்போதுதான் கதவுகள் திறக்கப்படும். அதன்பின்பு அவை மூடப்படும். நல்ல வேலையாக நாங்கள் நல்ல நேரத்தில் வந்துவிட்டோம்.
அது ஒரு பிரம்மாண்டமான கருவறை. உள்ளே மங்கிய ஒளிதான். அங்கே ஒரு கட்டிலில் பெரிய உருவத்தில் நீல நிற வெங்கடேஸ்வரர் ஒருக்களித்துப் படுத்திருந்தார்! எனக்கு அதை பார்க்க பிரமிப்பாகவும் பயமாகவும் இருந்தது! சற்று நேரம்தான் அந்த அபூர்வ தரிசனம் கிடைத்தது. வரிசை நீளமானதால் நாங்கள் நகர்ந்து சென்று வெளியேறினோம்.
மதிய உணவை உணவகத்தில் முடித்துக்கொண்டு பேருந்து ஏறி நகரி திரும்பும்வரை நான் அந்தக் கருவறையில் கண்ட பிரமாண்டமான உருவம் என் மனதை விட்டு அகலவில்லை,
பக்தர்கள் அந்தக் காட்சியைக் கண்டால் நிச்சயமாக பரவசம் அடைவார்கள். அதனால்தான் திருப்பதி செல்ல மக்கள் அலைமோதுகின்றனர். அதுபோல திருப்பதி உண்டியல் மிகவும் பிரசித்தமானது. பக்தர்கள் வேண்டிக்கொண்டு அதில் இடும் காணிக்கைகளைப்பற்றி நாடறியும்.
புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலை தெலுங்குப் பெண் கஸ்தூரியுடன் சென்று பார்த்த மன நிறைவுடன் அன்று மாலை அறைக்குத் திரும்பினேன். என்னுடன் வந்தது கஸ்தூரிக்கும் மிகுந்த மகிழ்ச்சியாகும்!
நகரியில் பயிற்சி பெறுவது ஒரு முடிவுக்கு வந்தது. கஸ்தூரி கதறி அழுதான் எனக்கு விடை தந்தாள். அந்த அன்பான தெலுங்கு பெண்ணைப் பிரிவது மனதுக்கு கவலையை உண்டுபண்ணியது. கடிதம் எழுதச் சொன்னாள். சரியென்றேன். வந்து போகச் சொன்னாள். சம்மதம் தெரிவித்தேன். மனத்துக்குப் பிடித்தமானவர்களைப் பிரிந்து செல்வது எனக்கு பழக்கமாகிவிட்டதால் அதையும் நான் தாங்கிக்கொண்டேன். இனிமேல்யார்மீதும் இதுபோன்ற ஆசையோ, அன்போ அல்லது காதலோ வரக்கூடாது என்ற முடிவுடன்தான் அவளிடமிருந்து விடை பெற்றேன்! அது முடியுமா? ” அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ” என்ற வள்ளுவரின் குறள் அப்போது நினைவிற்கு வந்தது!
அவளின் நினைவோடுதான் வேலூர் சென்றடைந்தேன். அடுத்து நான் காவனூர் என்னும் சிற்றூரில் உள்ள சுகாதார நிலையத்தில் இரண்டு வாரங்கள் தங்கி பயிற்சி பெறவேண்டும். அங்கு செல்ல ஏற்பாடுகளில் உடன் இறங்கினேன்.
அது ஒரு சிறிய சுகாதார நிலையம்தான். அங்கு மருத்துவச் சேவையுடன் சமூகச் சேவையிலும் ஈடுபட்டிருந்தனர். வார்டுகள் இல்லை. வெளிநோயாளிப் பிரிவு மட்டுமே இயங்கியது. அதோடு சுற்று வடடார கிராமங்களின் நலன்கள் பராமரிக்கப்பட்டது. கிராமத்து மக்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தனர். அவர்களுக்குத் தேவையான சமூக முன்னேற்ற செயல்களில் அதிக அக்கறை கொண்டிருந்தனர். அவர்களுக்கு கிடைக்கவேண்டிய அரசாங்க உதவிகளைப் பெற்றுத் தந்தனர். கிராம மக்களுடன் பொதுக் கூட்டங்கள் நடத்தினர். சுகாதார விளக்கப் படங்கள் காட்டினர். அங்கு நடந்த இதுபோன்ற நிகழ்ச்சிகளில் நான் பங்குகொண்டேன். இவற்றையெல்லாம் செயல் படுத்தியவர் டாக்டர் சாக்கோ கோறுளா என்ற என்னுடைய சீனியர். இப்போதெல்லாம் இதுபோன்று மருத்துவத்துடன் சமூகச் சீர்திருத்தப் பணிகளை மிஷன் மருத்துவமனைகள் மேற்கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் பணிகளுக்கு மேல்நாட்டு மிஷன் நிறுவனங்கள் ஏராளமான நிதி உதவியும் செய்கின்றன.
காவனூரில் நான் தங்கியிருந்த இரண்டு வாரங்களும் உண்மையில் உல்லாசமாகவே கழிந்தது. அதற்குக் காரணம் பெஞ்சமின். அவனும் என்னுடன் பயிற்சி பெற வந்திருந்தான்.அவன் என்னுடைய உற்ற தோழன். சம்ருதி போன்று என்னுடன் நெருங்கிப் பழகுபவன். விடுதியிலும் வெளியிலும் அவன் என்னுடன் எப்போதும் இருந்ததால் எங்களை நிழல்கள் என்றுகூட மாணவர்கள் அழைத்தனர். அவ்வளவு நெருக்கம் நாங்கள் இருவரும்.அவன் என்னுடன் இருந்தது நல்ல துணையாக இருந்தது. காவனூரில் எங்கள் இருவருக்கும் ஒரே வீடுதான் தரப்பட்டிருந்தது. அங்கு இருந்த சிறு கிராம உணவகத்தில் நாங்கள் உணவு உட்கொள்வோம்.
காவனூரில் மறக்கமுடியாதது அங்கிருந்த கூடார திரைப்பட அரங்கம்.அது தென்னங் கீற்றுகளால் நெய்யப்பட்ட கொட்டகைதான். இரவுகளில் நாங்கள் இருவரும் அங்கு சென்றுவிடுவோம். எப்போதுமே அங்கு பழைய தமிழ்த் திரைப்படங்கள்தான் திரையிடப்படும். நள்ளிரவுபோல் முடியும் படம் பார்த்துவிட்டு வீடு திரும்பி உறங்குவது வழக்கமானது.
மீண்டும் வேலூர் சென்று பாகாயத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் வீ.பெஞ்சமின் தலைமையில் பயிற்சி பெற்றோம். அங்கு அடிப்படை மருத்துவ வசதிகள் தரப்பட்டன. தேவைப்பட்டால் ஒருசிலரை வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு அனுப்பி வைப்போம்.
அவ்வப்போது அருகில் இருந்த நவ ஜீவ நிலையம் சென்று வருவோம். அது தொழுநோயாளிகளின் மறுவாழ்வு இல்லம். அவர்கள் அங்கேயே தங்கி சிகிச்சைப் பெறுவதோடு சிறு தொழில்களும் கற்றுக்கொண்டனர். சுமார் ஐம்பது குடிசைகள் கொண்ட சிறு கிராமம்போன்றே அது இயங்கியது.
இவ்வாறு பல இடங்களில் நான் கிராமப்புற சுகாதார நிலையங்ககளில் பயிற்சி பெற்றது ஏழை எளிய மக்களின் சுகாதாரச் சேவையின் முக்கியத்துவத்தை என்னால் உணர முடிந்தது.
ஒருவேளை நான் ஒரு மிஷன் மருத்துவமனையில் சேர நேர்ந்தால் அங்கு சிறப்பாகச் செயல்படலாம் என்ற நம்பிக்கையும் பிறந்தது.

( தொடுவானம் தொடரும் )

Series Navigationபூமிபோல் கண்டுபிடித்த புதிய செங்குள்ளி விண்மீன் குடும்பத்தின் ஏழு கோள்கள் சீரொழுக்க முறையில் சுற்றி வருகின்றனஅம்மா
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *