வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! அத்யாயம் 12

This entry is part 2 of 11 in the series 14 மே 2017

ஜோதிர்லதா கிரிஜா
(ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்)
12.
கிஷன் தாசின் பங்களாவில் அவர் தம் படுக்கையறைக்குள் நுழைகிறார். முழு அலுவலக உடையில் அவர் இருக்கிறார். மிகுந்த களைப்புடன் இரைச்சலாய்ப் பெருமூச்சுவிடும் அவர் ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டு தம் டை, காலுறைகள் ஆகியவற்றைக் கழற்றுகிறார். அப்போது சமையல்காரர் நகுல் அங்கு வருகிறார்.
அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு, “குடிக்க ஏதேனும் கொண்டுவரட்டுமா, அய்யா?” என்று நகுல் அவரைக் கேட்கிறார்.
அதற்குப் பதில் சொல்லாமல், “பிரகாஷ் வீட்டில் இருக்கிறானா?” என்று அவர் விசாரிக்கிறார்.
“இருக்கிறார், அய்யா. குளியலறையில் இருக்கிறார்.”
“நான் வெளியூர் போயிருந்த போது யாரேனும் வந்தார்களா? முக்கியமான செய்தி ஏதேனும் உண்டா?”
“யாரும் வரவில்லை, அய்யா. ஆனால் மதராசிலிருந்து யாரோ ஒரு பெண் சின்னய்யாவைத் தொலைபேசியில் கூப்பிட்டுப் பேசினாள்.”
“எப்போது?”
“நீங்கள் கிளம்பிப் போன சிறிதே நேரத்தில். அப்போது பிரகாஷ் வீட்டில் இல்லை. அவளுடைய அப்பாவுக்குத் திடீரென்று இதயம் பாதிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளாராம்….பிரகாஷ் வந்ததும் அவரிடம் அதை அவள் சொல்லச் சொன்னாள்.”
“அந்த மனிதரைப் பற்றி வேறு ஏதேனும் செய்தி அதன் பிறகு வந்ததா?”
“வீடு திரும்பிய பின், சின்னய்யா அந்தப் பெண்ணோடு பேசினார். முதலில் நான் தான் அவளுடன் பேசினேன் என்பதால், அவள் அப்பாவின் நிலை பற்றி விசாரித்தேன். அவர் ஆபத்திலிருந்து மீண்டுவிட்டதாய்ச் சொன்னார்.”
“சரி. நான் பிரகாஷிடம் கேட்டுக்கொள்ளுகிறேன். நீ இரண்டு கோப்பைகளில் மட்டும் காப்பி கொண்டு வா. ஜாடியில் வேண்டாம்.”
“சரி, அய்யா!” என்று சொல்லிவிட்டு நகுல் சென்ற சிறிது நேரம் கழித்துப் பிரகாஷ் வருகிறான்.
ஒரு நாற்காலியில் அமர்ந்தவாறு, “உங்கள் பயணம் எப்படி இருந்தது, அப்பா? வழக்கம் போல் வெற்றிகரமான தொழில் பயணம்தானே?” என்று கேட்கிறான்.
“அதில் என்ன சந்தேகம்? அது சரி, சுமதியின் அப்பாவைப் பற்றி நகுல் சொன்னான். இப்போது அவர் எப்படி இருக்கிறாராம்? அதென்ன மிகவும் மோசமான பாதிப்பா?”
“ஆமாம். மோசமானதுதானாம். ஆனால் நேற்றுக்கு முன் தினம் அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்களாம். ..”
“நான் அவரோடு பேச வேண்டும். ஆனால் அவர் பலவீனமாக இருப்பார். எனவே, இப்போது இல்லை. அவர் சரியானதும். முதலில் நான் அந்தப் பெண் சுமதியோடு பேசுகிறேன். அவளைக் கூப்பிடு.”
நகுல் இரண்டு கோப்பைகளில் காப்பி கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் போகிறார். இருவரும் காப்பியைப் பருகுகிறார்கள். பின்னர், பிரகாஷ் மதராஸ் இலக்கத்தோடு தொடர்பு கொள்ளுகிறான்.
மறு முனையில் சுமதி பதிலளிக்கிறாள்.
“ஹல்லோ சுமதி! பிரகாஷ் பேசுகிறேன். ஒரு வாரம் போல் தொழில் விஷயமாய் வெளியூர் போயிருந்த அப்பா இன்றுதான் சற்று முன் திரும்பினார். உன்னோடு அவர் பேச வேண்டுமாம்…”
ஒலிவாங்கியை அவனிடமிருந்து வாங்கிக்கொள்ளும் கிஷன் தாஸ், “ஹல்லோ என் வருங்கால மருமகளே! உன் அப்பா இப்போது எப்படி இருக்கிறார்? … மோசமான இதயத் தாக்குதல் என்று பிரகாஷ் சொன்னான்….ஸ்…ஸ்…ஸ்…சுமதி ஒரு தைரியமான பெண். அவள் அழலாமா? … ஓ! உன் அப்பா என்னோடு பேச விரும்புகிறாரா? அந்த அளவுக்கு அவர் தேறி யுள்ளாரா? அப்படியானல் பேசட்டும்… ஹல்லோ! மிஸ்டர் ஜெயராமன்! சேதியைக் கேட்டு எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது… இப்போது எவ்வளவோ தேவலையா? கடவுளுக்கு நன்றி!… என்ன! ஒரு நல்ல செய்தி சொல்லப் போகிறீர்களா? ஒரு நிமிஷம் இருங்கள். நான் ஒலிப்பானை இயக்குகிறேன். பிரகாஷும் அந்த நல்ல செய்தியைக் கேட்கட்டும்….பிரகாஷ்! மிஸ்டர் ஜெயராமன் ஏதோ நல்ல செய்தி சொல்லப் போகிறாராம். தொலைபேசியின் ஒலிப்பானை இயக்கு! …ம்..இப்போது அந்தச் செய்தியைச் சொல்லுங்கள், மிஸ்டர் ஜெயராமன்!”
“நம் எல்லாருக்குமே மிக்க மகிழ்ச்சியான செய்தி, சர்! சுமார் ஒரு மணி நேரத்துக்கு முன் என் மனைவி மிஸ்டர் பிரகாஷைத் தன் மருமகனாய் ஏற்கச் சம்மதித்துவிட்டாள்!… உண்மையில் நானே உங்களை அழைத்து அதைச் சொல்ல நினைத்திருந்தேன். நீங்கள் வெளியூர் சென்றிருப்பதாய் சுமதி சொன்னாள். இதற்கிடையே நீங்களே கூப்பிட்டுவிட்டீர்கள்…. ரொம்பவும் மகிழ்ச்சி, சர்!…”
“இந்தத் திடீர்த் திருப்பம் உங்களின் உடல்நிலையால் வந்திருக்கும் ஒன்று! உங்களின் சமீபத்திய இதய நோய்தான் உங்கள் மனைவியின் மனமாற்றத்துக்கான காரணம் என்று நான் நினைக்கிறேன், மிஸ்டர் ஜெயராமன்! சரிதானே?”
“மிகவும் சரியாய்ச் சொன்னீர்கள், சர்! என் மனைவி இப்போது வீட்டில் இல்லை. வெளியே ஏதோ சாமான்கள் வாங்க பஜாருக்குப் போயிருக்கிறாள். அதனால் தான் என்னால் தயக்கம் இல்லாமல் பேச முடிகிறது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், நான் சுமதி விஷயத்தில் அவளைச் சரிக்கட்டுவதற்காகக் கொஞ்சம் அதிகப்படியாகவே நாடகம் ஆடினேன் என்றே சொல்லுவேன்! இன்னொரு முறை இப்படி இதயத் தாக்குதலுக்கு நான் ஆளானால் பிழைக்க மாட்டேன் என்று அவளைப் பயமுறுத்தினேன். அதற்கு முன்னால் சுமதியை மணக்கோலத்தில் பார்க்க வேண்டும் என்று அழுதேன். நான் அழுதது உண்மையாகவேதான். நடிப்பு இல்லை, சர்! உடனே அவள் மனம் இளகிவிட்டது. என் மனைவியின் உணர்வுகளைக் காட்டிலும் என் மகளின் மகிழ்ச்சியே எனக்குப் பெரிதல்லவா!”
“சரியாய்ச் சொன்னீர்கள், மிஸ்டர் ஜெயராமன்! பெற்றோர்களாகிய நாம் எப்போதுமே நம் குழந்தைகளுடைய மகிழ்ச்சியே முக்கியம் என்று நினைக்கிறோம். … நீங்கள் இன்னும் முழுவதும் சரியாகவில்லை என்று தோன்றுகிறது. உங்களுக்கு இலேசாக மூச்சு வாங்குகிறது. அதிகம் பேசாதீர்கள்… சுமதிக்கு நேர்ந்த தீங்கைப் பற்றிப் பிரகாஷ் சொன்னான். அவளிடம் தொலைபேசியைக் கொடுங்கள்…… ஹல்லோ, சுமதி! என்ன இதெல்லாம்? யாரோ போக்கிரிகளால் நீ தாக்கப்பட்டாயாமே? இப்போது சரியாகிவிட்டாயா நீ?”
“இப்போது முழுவதும் சரியாகிவிட்டேன், மாமா. நான் அலுவலக வேலைக்குப் போகவும் தொடங்கிவிட்டேன்.”
“என்ன! அலுவலகத்துக்குப் போகிறாயா! நீ எப்படி இப்படி ஒரு முட்டாள்தனமான காரியத்தைச் செய்யலாம்? உன்னைத் தீர்த்துக் கட்டுவதற்கு அந்த எம்.எல்.ஏ. மறுபடியும் முயற்சி செய்வான் அல்லவா?”
“பிரகாஷும் அதையேதான் சொல்லுகிறான்! ஆனால் என்னால் வேலையை விட முடியாது, மாமா. அது எனக்கு மிகவும் பிடித்த வேலை. சமுதாய விரோதிகளை அடித்து நொறுக்கும் வேலை இது, மாமா!”
“அது உன்னையும் அடித்து நொறுக்குகிறதே, சுமதி! நீ உடனே இந்த வேலையை விட்டுவிடவேண்டும், என் அன்பான பெண்ணே! நம்மிடம் ஏராளமான செல்வம் குவிந்து கிடக்கிறது. நீ வேலை செய்து சம்பாதிக்க வேண்டிய தேவையே கிடையாதம்மா!”
“எனக்குத் தெரியும், மாமா. நான் பத்திரிகை நிருபராக வேலை செய்வது பணத்துக்காக இல்லை, மாமா. அதுவே என் வாழ்க்கையின் நோக்கம்! இலட்சியம், மாமா!”
“நீ வேறு எந்த இலட்சியத்தை வேண்டுமானாலும் எடுத்துக்கொள், பெண்ணே! இந்த வேலை வேண்டாம். உயிருக்கே ஆபத்தைத் தேடிக்கொள்ளலாமா நீ?”
“தயவு செய்து என்னை மன்னியுங்கள், மாமா. அது என்னால் முடியாது. என் வருங்கால மாமனாரின் கட்டளையை நான் மீற வேண்டி யிருப்பதற்காக மிகவும் வருந்துகிறேன். இந்தச் சமுதாயத்துக்காக நான் நல்ல தொண்டு செய்ய ஆசைப்படுகிறேன், மாமா!”
”அதற்காக உன்னை நான் பாராட்டுகிறேன், அம்மா. ஆனால் சமுதாயத்துக்குச் சேவை செய்வதற்கு வேறு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. பத்திரிகை நிருபரின் பணி ஒன்று மட்டுமே அதற்கான வழி யன்று. நீ பிரகாஷின் மனைவியாக இங்கே வந்ததன் பின் அதற்கு நான் உனக்கு வழி செய்து தருவேன், சுமதி!”
“மன்னிக்க வேண்டும், மாமா! உங்கள் மருமகளாய்த் தில்லிக்கு வந்ததன் பிறகும் நான் அங்குள்ள விடிவெள்ளி நாளிதழின் தில்லிப் பதிப்பில் நிருபராய்ப் பணி செய்ய நினைத்துள்ளேன், மாமா. நம் நாட்டில் குழந்தைத் தொழிலாளிகளைக் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு அமர்த்தி அவர்களைக் கசக்கிப் பிழிந்துகொண்டிருக்கும் – அவர்களது வருங்காலத்தையே பாழ்பண்ணிக்கொண்டிருக்கும் – பண முதலைகளையும் முதலாளி இனத்தினரையும் கண்டுபிடித்து அவர்களை யெல்லாம் தண்டிப்பதே எனது குறிக்கோள், மாமா! இந்த உலகம் முழுவதிலும் இலட்சக்கணக்கான குழந்தைத் தொழிலாளிகள் இருக்கிறார்கள். அதிலும் நம் நாட்டில்தான் அவர்கள் வேறு எங்கேயும் விட அதிக விழுக்காட்டில் இருக்கிறார்கள் எனும் கசப்பான உண்மை உங்களுக்குத் தெரியும்தானே! அந்த இழிநிலையை ஒழித்துக் கட்டுவதே எனது தலையாய நோக்கம், மாமா! தயவு செய்து என்னைப் புரிந்துகொள்ளுங்கள்!”
“என் அன்பான சுமதி! உன்னை நான் புரிந்து கொள்ளாமல் இல்லை. அதனால் உனக்கு ஏற்படக்கூடிய ஆபத்தை நினைத்தாலே எனக்குக் கவலையாய் இருக்கிறது. உன் உயிரோடு நீ விளையாடக்கூடாது, சுமதி!”
”எது ஒன்றும் ஒருவர் வாழ்க்கையில் கடவுள் விதித்தபடிதான் நடக்கும், மாமா! நாம் போடுகிற திட்டப்படி எதுவுமே நடப்பதில்லை. குறிப்பிட்ட நாளில் நான் சாகவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால், அதிலிருந்து என்னால் தப்பவே முடியாது, மாமா!”
“அமங்கலமான சொற்களைச் சொல்லாதே, அம்மா. உன் ஒருத்தியின் சேவையால் அந்தத் தீமை ஒழிந்துவிடப் போவதில்லை! அது மிகப் பெரிய பிரச்சினை. அதை அரசாங்கம் பார்த்துக் கொள்ளும். அது தனி மனிதர்களால் ஆகாத காரியம்!”
“ஆமாம், மாமா. அது அரசாங்கத்தின் வேலையும் கூடத்தான். ஆனால், படித்த மனிதர்களாகிய நாம் நம் கண் முன்னால் நடக்கும் அக்கிரமங்களைப் பார்த்தும் பாராதவர்கள் போல் இருக்கலாமா? பொறுப்பான குடிமக்களாக நாமும் நடந்துகொள்ள வேண்டுமல்லவா? சொல்லுங்கள்!”
“நான் முழுவதுமாய் ஒப்புக் கொள்ளுகிறேன். ஆனால் அது ஆண்களின் வேலை. பெண்கள் பூப்போன்றவர்கள். மென்மையானவர்கள். இது போன்ற ஆபத்தான வேலைகளில் அவர்கள் ஈடுபடக்கூடாது!”
“நான் கவனமாக இருப்பேன், மாமா. விடிவெள்ளி நிறுவனத்தினர் உண்மையான தேசபக்தர்கள். அதிலும் அதன் ஆசிரியர் ஈஸ்வரன் நாட்டுப்பற்று மிக்க நேர்மையாளர். அவர் என்னைப் பார்த்துக்கொள்ளுவார்!”
“அவர் எப்படி உன்னைப் பார்த்துக்கொள்ளுவார்? உன் மீது அடிகள் விழுந்தனவே! அவற்றை அவரால் தடுக்க முடிந்ததா? எல்லாம் நடந்து முடிந்த பிறகு உன் மருத்துவச் செலவைத்தான் அவரால் செய்ய முடியும். உனக்கு வாயால் வெறும் ஆறுதல்தான் சொல்ல முடியும்… என் மருமகள் தோளில் தொங்கும் கைப்பையுடன் சாப்பாட்டுப் பொட்டலத்தை எடுத்துக்கொண்டு ஓர் அலுவலகத்தில் ஒரு சிறு மாதச் சம்பளத்துக்காக வேலை செய்வது பற்றிய கற்பனையே எனக்குக் கசக்கிறது, சுமதி! வேறு ஏதேனும் சமுதாயத்துக்குப் பயன்படும் சேவையை நீ தாராளமாய்ச் செய்யலாமே! எதற்கு ஆபத்தை விலைக்கு வாங்கும் இந்த வேண்டாத வேலை? தயவு செய்து வேலையை ராஜினாமாச் செய்து விடு”
“மன்னியுங்கள், மாமா. உங்கள் விருப்பத்துக்கு என்னால் செவிசாய்க்க முடியவில்லை. உங்கள் முதல் கட்டளையை மீறுவதற்காக மீண்டும் மன்னிப்புக் கேட்கிறேன்… இப்படி அன்பான ஒரு மாமனாரை எனக்கு அருளியதற்காகக் கடவுளுக்கு நன்றி!”
“சரி, சரி. நீ மிகவும் பிடிவாதக்காரியாக இருக்கிறாய். உன்னோடு பேசிப் பயன் இல்லை. இது உனக்கும் பிரகாஷுக்குமிடையே உள்ள பிரச்சினை. இதில் நான் தலையிடக்கூடாதுதான்!”
“அப்படி இல்லை, மாமா! நீங்கள் என் விஷயம் எதிலும் உரிமையோடு தலையிடலாம். என்னுடைய ஒரே வேண்டுகோள் எல்லாவற்றுக்குக் நான் கீழ்ப்படிவேன் என்று நீங்கள் எதிர்பார்க்கக்கூடாது என்பதுதான்… எனக்கு வேஷம் போடத் தெரியாது, மாமா. என் உண்மையான சுபாவத்தை நான் மறைப்பதே இல்லை. சில பெண்கள் கல்யாணத்துக்கு முன்னால் ஒரு விதமாகவும், கல்யாணம் ஆனபிறகு வேறு விதமாகவும் பேசி ஏமாற்றுவார்கள். நான் அப்படி இல்லை… திருமணம் என்கிற ஒன்று ஆனதன் பிறகு நான் என் புக்ககத்து மனிதர்களுக்கு அதிர்ச்சி யளிக்க மாட்டேன்!”
இரைந்து சிரிக்கும் கிஷன் தாஸ், “அதுதான் பிரகாஷை மணந்து கொள்ளுவதற்கும் முன்பாகவே எனக்கு அதிர்ச்சி யளித்த வண்ணம் இருக்கிறாயே! … சரி, சரி. நானும் கிட்டத்தட்ட உன் மாதிரிதான். உன்னைப் பாராட்டுகிறேன்….சரி. நீ பிரகாஷோடு பேசு….” என்று கூறி, ஒலிவாங்கியைப் பிரகாஷிடம் தருகிறார்.
“ஏய், சுமதி! என்ன இது? உன் வருங்கால மாமனாரின் அறிவுரையை நீ ஏன் கேட்க மறுக்கிறாய்? உன் வருங்காலக் கணவனான என் பேச்சையும்தான்! யார் பேச்சுக்கும் மசியாத எவ்வளவு மோசமான பிடிவாதக்காரி நீதான்! வெளிப்படையாய்ப் பேசும் சாக்கில் இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபரான என் அப்பாவின் எதிரே நின்று எவரும் பேசத் துணியாதவற்றை யெல்லாம் நீ பேசிவிட்டாய்!”
“நான் தான் அவர் முன்னால் இப்போது நிற்கவில்லையே!… இந்த அசட்டு ஜோக்கை மன்னித்துக்கொள், பிரகாஷ்!.. சரி… வேறு ஏதாவது என்னிடம் சொல்ல வேண்டுமா?”
“வேறொன்றுமில்லை…. பை!….”
கிஷன் தாசும் பிரகாஷும் சில கணங்களுக்கு மவுனமாக இருக்கிறார்கள். சுமதியுடனான உரையாடலின் விளைவாய்ப் பிரகாஷைக் காட்டிலும் அதிக ஏமாற்றத்துக்கும் ஆழ்ந்த சிந்தனைக்கும் கிஷன் தாஸ் ஆட்படுகிறார். அந்த அறையில் உள்ள சுவர்க் கடிகாரத்தின் டிக்-டிக் ஒலி கனத்த காலணிகளின் ஓசை போல் கேட்கிறது.
ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை உதிர்க்கும் கிஷன் தாஸ், “உன்னுடைய அந்தப் பெண் மிகவும் முரட்டுப் பிடிவாதக்காரியாய் இருப்பாள் போல் இருக்கிறது. ஒவ்வொரு விஷயத்திலும் அவள் தன் கை ஓங்கும்படி நடப்பவள் என்று அஞ்சுகிறேன். இதனால் உன் மண வாழ்க்கை நிம்மதி இல்லாமல் இருக்கப் போகிறது. பின்னால் வருத்தப்படப் போகிறாய்!” என்று மகனை எச்சரிக்கிறார்.
“அப்பா! தயவு செய்து அமங்கல வார்த்தைகளைச் சாபம் இடுவது போல் சொல்லாதீர்கள். தன் தனிப்பட்ட விவகாரங்களில் அவள் தன் விருப்பம் போல் நடக்கிறவளாக இருக்கிறாள். நானும் என் விவகாரங்களில் என் விருப்பம் போல் நடக்கிறவனாக இருப்பது போல! அவள் எனக்கோ அல்லது உங்களுக்கோ அடிமையாக இருக்க விரும்பாதவள் போல், நானும் அவளுக்கு அடிமையாக இருக்கப் போவதில்லை! அவ்வளவுதான்!”
இரைந்து சிரிக்கும் கிஷன் தாஸ்,”என்ன முட்டாள்தனமான பேச்சு இது! அதன்படி பார்த்தால், எப்போதும் உங்களுக்குள் சச்சரவுதான் ஏற்பட்டவாறே இருக்கப் போகிறது. வாய்ச்சண்டை முற்றி, உங்கள் உறவு சிக்கலில்தான் முடியும். ஒருவனது மண வாழ்க்கை நிம்மதியாய்க் கழிய வேண்டுமானால், அவன் மனைவி அதிகம் படிக்காதவளாய் இருக்க வேண்டும். எழுதப் படிக்கவும் குடும்பத்தை நடத்திச் செல்லுவதற்குத் தேவையான கணக்கு வழக்கும் தெரிந்தவளாக அவள் இருந்தால் போதுமானது. இதுதான் எனது தீர்ந்த முடிவு!”
“அப்பா! எந்த யுகத்தில் நீங்கள் வாழ்கிறீர்கள்? காலம் மிகவும் மாறிப் போய் விட்டது. மேலும் மேலும் மாறிக்கொண்டும் இருக்கிறது. பெண்களை உயர் கல்வி பெறாதவர்களாகவும், சுயமாய்ச் சிந்திக்க முடியாதவர்களாகவும் தெரியாதவர்களாகவும் ஆக்கி, எப்போதும் தங்கள் கைப்பிடியில் வைத்துக்கொண்டு நசுக்குகிறவர்களாக ஆண்கள் இருப்பதுதான் இன்றைய சமுதாய்ச் சீரழிவுகளுக்கெல்லாம் அடிப்படைக் காரணம். இன்றுள்ள சமுதாயப் பிரச்சினைகளைத் தீவிரமாய் அலசி ஆராய்ந்தால் இதுதான் உண்மை என்பது புரியும். படிப்பறிவு இன்மையும், மூளைச் சலவை செய்யப்பட்டதால் மழுங்கிபோன சிந்தனையுமாய் இருக்கும் பெண்களால் வளர்க்கப்படும் குழந்தைகள் பத்தாம் பசலிக்கொள்கைகளும், மந்தித்துப்போன மூளையுமாய்த்தான் அடி முட்டாள்களாக இருப்பார்கள்!”
“ஓ! நீதான் பெண்ணுரிமைக்காக வாதிடுபவன் ஆயிற்றே! அதை நான் மறந்தே போனேன். ஆணாதிக்கம் பற்றிக் கட்டுரையும் எழுதிய நீ வேறு எப்படிப் பேசுவாயாம்! அப்படி நீ பேசினால் சுமதியின் மதிப்பில் நீ தாழ்ந்து போய்விட மாட்டாயா!” என்று கிஷன் தாஸ் கேலியாய்ப் பேசுகிறார்.
எரிச்சல் அடையும் பிரகாஷ், “உங்கள் கிண்டலை நிறுத்துங்கள்!” என்று இடைவெட்டிவிட்டு எழுகிறான்.
அவன் தோள்களைப் பற்றி உட்கார்த்தும் கிஷன் தாஸ், “அடேயப்பா! உனக்குத்தான் சுருக்கென்று எப்படி ஒரு கோபம் வருகிறது! ஓர் அப்பா தன் மகனிடம் வேடிக்கையாய்ப் பேசக்கூடாதா!” என்கிறார்.
எரிச்சல் சற்றும் குறையாத குரலில், “பேசலாம், அப்பா. ஆனால் இது போன்ற முனைப்பான விஷயங்களில் விளையாட்டு என்ன வேண்டிக்கிடக்கிறது? அது என்னைப் புண்படுத்துகிறது,” என்கிறான்.
“உண்மையில் சாரி, பிரகாஷ்! நாம் ஒருவர்க்கொருவர் ‘சாரி’ சொல்லக்கூடாது என்று ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கும் போதிலும்!”
மேற்கொண்டு என்ன பேசுவது என்று தோன்றாத நிலையில், மீண்டும் இருவரும் சற்று நேரம் ஒன்றும் பேசாமல் இருக்கிறார்கள்.
தணிந்த குரலில், “மருமகள் வந்ததன் பிறகு ஒரு குடும்பத்தில் விளையும் வாக்குவாதம் அவள் வருவதற்கும் முன்பே இங்கே தொடங்கிவிட்டது!” என்று பிரகாஷ் பெரும்முச்சுடன் அங்கலாய்க்கிறான்.
“என்ன செய்வது! நீ தேர்ந்தெடுத்திருக்கும் பெண் அப்படி! நான் மறுபடியும் உன்னைப் புண்படுத்துகிறேன்!…தன் மகனின் மண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமே என்னும் ஒரு தகப்பனின் இயல்பான கவலையால் உனக்குப் பிடிக்காதவற்றை நான் பேசவேண்டி வருகிறது, பிரகாஷ்! நீ எனக்கு ஒரே மகன் அல்லவா!”
சிரித்தவாறு, “என் கல்யாணத்துக்குப் பிறகு நீங்களும் மகிழ்ச்சியாக இருக்க நானும் என்னால் இயன்ற வரை முயற்சி செய்வேன், அப்பா! ஏனெனில் நீங்களும் என்னுடைய ஒரே அப்பா அல்லவா!”
கிஷன் தாஸ் இரைந்து சிரிக்கிறார். பிரகாஷ் புன்சிரிப்புடன் எழுகிறான். பிறகு அவ்வறையை விட்டு வெளியேறுகிறான். நடந்து செல்லும் அவனது முதுகை அவர் சிதனையுடன் வெறிக்கிறார்.
jothigirija@live.com

Series Navigationபழிபரப்பிகள்: இனாம் கொடுத்த ஸிஐஏவுக்கு இளித்த இந்திய ஸஞ்சிகைகளும், அவற்றுக்கு உழைத்த உத்தம எழுத்தாளர்களும்வறு ஓடுகள்
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *