0
பாரதி மணி கையில் கொடுத்த நூலைப் பார்த்தவுடன் எனக்கு தோன்றியது இதுதான். ஒரு நூலுக்கு ஈர்க்கக் கூடிய அட்டை அவசியம். புத்தகத்தைக் கூட அச்சிட்டு விடலாம்.. ஆனால் அட்டை! பெயர் போலவே நம் நேரத்தையும், சக்தியையும், மிகுதியான பணத்தையையும் உறிஞ்சி விடும் என்று திருப்பூர் கிருஷ்ணன் சொன்னது நினைவுக்கு வந்தது. அட்டை நேர்த்தியாக இருக்கிறது. ஆனால் அட்டையில் பைப் பிடித்துக் கொண்டிருக்கும் பாரதி மணி உண்மையிலேயே லயித்து புகை பிடிக்கிறாரா?
பாரதி மணியை நான் இரண்டு முறை அவரது வீட்டிலும், நான்கைந்து முறை வெளியிடங்களிலும் ( இலக்கிய சிந்தனைக் கூட்டம், இலக்கிய வீதியின் க.ந.சு. படைப்பரங்கம், தமிழ் ஸ்டூடியோவின் குறும்பட திரையிடல், வம்சியின் நூல் வெளியீடு ) பார்த்திருக்கிறேன். இப்போதெல்லாம் பைப்பை ஒரு ஐடென்டிட்டி அல்லது அடையாளமாக மட்டுமே மணி சார் உபயோகிக்கிறாரோ என்கிற சந்தேகம் எனக்கு எழுகிறது.
அரை மணி நேரப் பேச்சில் இரண்டொரு தடவை பைப்பை எடுத்து புகையிலைத் துகளை உள் தள்ளி, லைட்டரால் கொளுத்தி ஒரே இழுப்பு.. பின் ஓரம் வைத்து விடுகிறார். பில்டர் வரை உறிஞ்சும் அடிமைகளைப் போல இல்லை இவர் என்கிற எண்ணம் எனக்கு வந்தது. பைப் தன்னுடைய அடையாளம் என்கிற வகையிலேயே, அதை அவர் இன்னமும் ‘பிடித்து’ கொண்டிருக்கிறாரோ என்றும் தோன்றியது.
எழுத்துலக ஆளுமைகள் சில பிம்பங்களைத் தனதாக்கிக் கொள்கிறார்கள். ஜெயகாந்தன் நீள கிருதாவும், பட்டை மீசையுமாக இருக்க இன்னமும் மெனக்கெடுகிறார்க். திருப்பூர் கிருஷ்ணன் தாடியற்று காணக் கிடைக்கும் சந்தர்ப்பங்கள் சொற்பம். தாய் தொண்ணூறுகளைக் கடந்த ஒரு பொழுதில் இறந்த போது, தாடியற்ற கிருஷ்ணனைக் கண்டேன். ‘ திருப்பூர் ராமன் மாதிரி இருக்கோ? ‘ என்று அவர் ஜோக்கடித்தது நினைவுக்கு வந்தது. கலைந்த தலைதான் க.ந.சு. மேல் வாரிய கரிய முடிதான் நா.பா.
இப்போதிருக்கும் ஜெயமோகனும், எஸ்.ரா.வும் இப்படி அடையாளங்களைக் கொள்ளவில்லை. அதை ஆரம்பக்காலத்திலிருந்தே உடைத்தவர் சுஜாதா.
பாரதி மணி பழைய காலத்தவர். அதனால் தனக்கு ஒரு அடையாளமாக பைப்பை வைத்திருக்கிறாரோ என்று தோன்றுகிறது. அதிலும் சாக்லேட் வாசனையுடன் புகை வரும் துகளைப் போட்டு பிடித்தால், ஏதோ தசாங்கம் ஏற்றியது போல் இருக்கிறது. தசாவதானிக்கு தசாங்கப் புகை நல்லது தான்.
மோனலிசா புன்னகைக்கு அர்த்தம் கண்டுபிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பவர்கள், நூல் அட்டையில் இருக்கும் மணி சாரின் புகைப்படத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். இவர் சிரிக்கிறாரா? இல்லை வெறும் ஸ்மிர்க்கா? இது கோடி ரூபாய்க்கான கேள்வி. இடது ஓர கன்னத்தூக்கலும், வலது ஓரப் பார்வையும், அவர் ஒரு சிறந்த நடிகர் என்பதற்கான அடையாளம்.
இனிமேல் முதல்வர் வேடத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்கிறவர், இனி பைப் போட்டோவை போட விட மாட்டேன் என்றும் ஒரு உறுதி எடுத்துக் கொள்ளலாம். அதைத் தவிர மணி சாரிடம் கொள்ளை பாவங்கள் இருக்கின்றன. அதில் சிலது வெளிச்சப்படட்டும்!
0
பகுதி 2
முதல் இரண்டு முன்னுரைகளை படித்து முடித்து விட்டேன். வண்ணதாசனும், வெங்கட் சுவாமிநாதனும் எழுதியவைகளைப் படித்த போது எழுந்த எண்ணங்கள்.
வண்ணதாசன் மணி சாரின் ஸ்காட்ச் மினி பாரைப் பற்றி எழுதுகிறார். குடித்தால் வெள்ளைக்காரனைப் போல் குடிக்க வேண்டும். மெதுவாக, ரசித்து, ருசித்து.. அதுவும் ஐஸ் கட்டிகளின் ஜலதரங்கத்தில்.. அப்படித்தான் கொண்டாடியிருக்கிறார் மணி சார். என்னிடம் சொன்னார்: “ எப்பவும் கார்ல ஐஸ் பக்கெட்டும், சோடா மேக்கரும், ஸ்ட்ரர்ரும் செட்டா இருக்கும். அது இல்லாம போறதில்லை. கூடவே ஸ்காட்ச். அதற்காகவே டெல்லி வருவார் இந்திரா பார்த்தசாரதி”
குடிப்பதற்கு முன், முன்மேசையில் வரிசைக்கிரமமாக பொருட்களை ( கண்ணாடி லோட்டாக்கள், நொறுக்குத் தீனி, பைப், புகையிலை, சிகரெட் பாக்கெட்டுகள், ஐஸ் கட்டிகள், சோடா, ஸ்ட்ரர்ரர் ) அடுக்குவார் என்று சொல்கிறார் வண்ணதாசன். ரெண்டாவது ரவுண்டில் காஷன் கழண்டு விடும். உண்மைகள் வெளிவரும். இது எனக்கே தெரிந்த உண்மை. “ மணி இல்லேன்னா நான் நாடகமே எழுதியிருக்க மாட்டேன் “ என்பது இரண்டாவது ரவுண்டில் இ.பா. சொன்ன உண்மை. அதை மறந்தும் கூட மேடையில் சொல்ல மாட்டாராம்.
வண்ணதாசனுக்கு ஒரே வருத்தம். மணி சார் மினி பாருடன் இருந்த வேளைகளில் தான் கூட இல்லையே என்று. அதோடு கல்யாணத்தில் நாதஸ்வர கோஷ்டியின் இசையை மணி சார் ரசித்த சம்பவத்தை நினைவு கூறுகிறார். எல்லோரும் சாப்பிடப் போன பின்பு சீர்காழி நாதஸ்வர கோஷ்டியை பாடாய் படுத்தி, ‘நலந்தானா’ வாசிக்கச் சொன்ன வைஷ்ணவ கோஷ்டி ஒன்றை சமீபத் திருமணம் ஒன்றில் பார்த்தேன். பசி ஏப்பத்தில் வாசித்தால் தெலுங்கானா தான் வரும்.
வெங்கட் சுவாமிநாதன் கொஞ்சம் பரவாயில்லை. பாரதி மணியின் நாடக வாழ்வைப் பற்றி சொல்லியிருக்கிறார். “ எனக்கு எப்பவும் நாடகம் தான் “ என்று நான்கு நாட்களுக்கு முன்கூட மணி சார் என்னிடம் சொன்னார். அதோடு அவரது சங்கீத ஈடுபாடு, சாப்பாட்டு ரசனை என்று சில விசயங்களைக் கோடிட்டு காட்டியிருக்கிறார். வெங்கட் சுவாமிநாதன் அதிகமாக யாரையும் பாராட்டி நான் அறிவேன். அவர் பாரதி மணியை பாராட்டி இருக்கிறாரென்றால், ஆசாமியிடம் நிறைய விஷயம் இருக்க வேண்டும் என்பது என் கணிப்பு.
மாதம் முப்பது நாட்கள் ஒரே நாடகத்தைப் போட்ட வி. கோபாலகிருஷ்ணன், ஒரு நாள் ஒரே ஒரு ரசிகருக்காக மொத்த நாடகத்தையும் போட்டார். பாரதி மணியும் அப்படித்தான். மணிசாரும் அவரது குழுவினரும் ரசிக்கவே அவர்கள் நாடகம் போடுகிறார்கள். பார்வையாளர்கள் இருந்தால் போனஸ். இல்லையென்றாலும் அவருக்கு ஒன்றும் நட்டமில்லை.
மினி பார் கொண்டாட்டங்களில் உருது கவிதைகளில் ஜமாய்ப்பார் மணி சார் என்று எழுதியிருக்கிறார் வெ.சு. உருது கவிதைகளின் ஒவ்வொரு வரியிலும் ஒரு பக்க விளக்கம் உண்டு என்று சொல்லி, ஒருவர் போரடித்தது நினைவுக்கு வந்தது. மணி சார் அப்படியில்லை போலிருக்கிறது. மொழி தெரியாமலே வெங்கட் சுவாமிநாதன் உருதுக் கவிதை கற்றுக் கொண்டு அதை பதிவும் இட்டிருக்கிறார்.
அடுத்து நாஞ்சில் நாடன் என்ன சொல்லப் போகிறார்? என்று படித்து விட்டு எழுதுகிறேன்.
0
பகுதி 3
நாஞ்சில் நாடன், இப்பொழுதும் மணி சாரின் தொடர்பில் இருப்பவர். க.நா.சு.வைப் பார்க்கப் போகும்போதுதான் முதன்முறையாக மணி சாரை பார்த்திருக்கிறார் அவர். பிறகு நட்பு இறுகியபோது, தனக்கு சென்னை வீட்டின் மாற்று சாவியைத் தந்த அன்பை சிலாகிக்கிறார் நாடன்.
எல்லோரும் சொல்வதற்கு பாரதி மணியிடம் இரண்டு விஷயங்கள் பிரதானமாக இருக்கின்றன. அவை, அவர் காபி போடும் அழகு. அவர் ஸ்காட்ச் குடிக்கும் நேர்த்தி. சிலருக்கு ஈர்க்கும் விஷயங்கள் பலருக்கு ஒவ்வாமை ஆவதுண்டு.
சமையலிலும் அவர் கெட்டிக்காரர் என்று போகிற போக்கில் சொல்லிப் போகிறார். “ நல்லா சமைக்கறவங்க எல்லாம் நல்லவங்களா இருப்பாங்க “ என்று சொன்ன லெனின், அதை பாரதி மணிக்காகவே சொன்னதாக எடுத்துக் கொள்ளலாம். பல நளபாகர்கள் நீசர்களாக இருந்ததை நான் அறிவேன்.
“ எங்கம்மா ஸ்டாண்டர்டுக்கு என்னிக்காவது வாச்சதுன்னா, அப்ப அம்மாவே கூட ஒக்காந்து சாப்டறா மாதிரி இருக்கும் “ என்கிற மணி சாரின் வார்த்தைகள், சட்டென்று அவரது அம்மாவையும் நமக்கு பிடிக்க வைத்து விடுகின்றன.
கடைசியாக நாடன், இப்போது மணி சாரின் முகம் க.நா.சு. போல மாறி வருகிறதாக குறிப்பிடுகிறார். அதனாலே அவரது சென்னை விஜயங்களிலெல்லாம் பாரதி மணியை சந்தித்து க.நா.சு. வைப் பார்த்த திருப்தி அடைகிறாரோ என்னவோ!
க.நா.சு. வேறு கோடு! மணி சார் வேறு கோலம்! ஆனால் இரண்டு பேரும் இலக்கிய உலகப் புள்ளிகள் என்பதில் சந்தேகமில்லை!
ஜெயமோகன் வேறு மாதிரியாக உணர்ந்திருக்கிறார். மணி சாரின் சாமர்த்தியம் இதில் விவரிக்கப்பட்டிருக்கிறது. சுப்புடுவைப் பற்றி உள்ளும் புறமும் தெரிந்தவர் மணி சார். ஆனால் ஜெ.மோ. சொல்வது போல “ மனுஷங்களைப் பத்தி ரொம்பத் தெரிஞ்சு வச்சிருந்தா ஒண்ணைப் பத்தியும் எழுத முடியாதே!”
பாரதி மணி பாண்டோரா பாக்ஸை எப்போதும் திறக்க மாட்டார்!
இந்திரா பார்த்தசாரதி தன் நாடக பிரவேசம் பற்றி எழுதியிருக்கிறார். ‘மழை’ நாடகத்தை மேடையேற்றிய பாரதி மணியைப் பற்றி உயர்வாக குறிப்பிடும் அவர், தான் எழுதிய நாடகத்தை அவர் போட்டதாக ஒரு பொய்த் தகவலையும் பதிவிடுகிறார். கதைகள் எழுதிக் கொண்டிருந்த இ.பா.வை நாடகம் எழுதத் தூண்டியதே பா.ம. தான் என்பதை ஒரு ‘குதிரை வாய் மொழியாக’ நான் கேட்டிருக்கிறேன்.
மறந்தும் கூட தன்னால் அடுத்தவர் பிரபலம் ஆகக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள் சில பிரபலங்கள். இ.பா. அதில் ஒரு பா!
ஒரு பதிப்பாளராக வம்சி ஷைலஜா சொல்வது மணி சாரின் எழுத்தாளுமை பற்றியல்ல.. அவர் தன் மீது வைத்திருக்கும் பாசத்தைப் பற்றி.. ஆனால் நூல் வெளியிட்டது அந்த பாசத்தின் அடிப்படையில் அல்ல என்பது உள் புகும்போது தெரிந்தது. தொகுப்பாளரான இளம்பரிதி, ஒரு பிரம்மிப்புடன் மணி சாரை அணுகியிருக்கிறார். அது அவரது தொகுப்புரை நெடுக பிரதிபலிக்கிறது.
இவ்வளவு கட்டியங்களுக்குப் பிறகு நூல் பாவைக் கூத்து எப்படி இருக்கும்..
வரும் பகுதிகளில்..
0
பகுதி 4 ( முத்தாய்ப்பு)
0
ஒரு நூல் மதிப்புரையை, இவ்வளவு நூல் விட்டு பறக்க விட்டவன் நானாகத்தான் இருக்க முடியும்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று சொல்வார்கள். இதையே புது மொழியாக ‘ஒரு புத்தகத்திற்கு பத்து பக்கங்கள் பதம்’ என்று நான் சொல்வேன்.
முதல் பத்து பக்கங்கள் உங்களை ஈர்க்கா விட்டால் அதனுள் போகவே மாட்டீர்கள். ஐயன் ராண்ட் அப்படி என்னை ஆக்கியவர். நூறு பக்கங்கள் வரை சமாளித்தேன். அதற்கு மேலும் ஒருவன் வெறித்து பார்த்து நடந்து கொண்டே இருக்கிறான். நான் புத்தகத்தை வெறித்துப் பார்த்து விட்டு, விட்டெறிந்தேன்.
நம்மூர் பக்கம் சாரு நிவேதிதா என்னை அப்படி ஆக்கியவர். அவரது ஜீரோ டிகிரியை வெறும் பத்து ரூபாய்க்கு ஒரு புத்தக கண்காட்சியில் தள்ளி விட்ட போது, தெரியாத்தனமாக வாங்கி, பத்து பக்கங்கள் கூட தாண்ட முடியாமல், அறுவெறுப்புடன் தூக்கி போட்டேன். அவ்வளவு அசிங்கம்!
முன்னுரைகளை, அணிந்துரைகளைத் தாண்டி, 45ம் பக்கத்திலிருந்து தான் பாரதி மணி பிரசன்னம் ஆகிறார். எல்லாம் தில்லி வாழ்க்கை தான்! ஏதோ நான் கொஞ்ச நாட்கள் (வெறும் 20 நாட்கள் தான்) தில்லியில் இருந்ததால், என்னால் தொடர்பு படுத்திக் கொள்ள முடிகிறது.
மூன்றாவது கட்டுரையாக வந்திருக்கும் நாதஸ்வரம் பற்றிய கட்டுரை என்னை ஈர்த்தது. அதுவே பதச்சோறு.
பாரதிமணி எழுதுகிறார் “ நாதஸ்வரத்திற்கு சில பிடிகள், சங்கதிகள் உண்டு” எனக்கு தெரிந்த ஒரு அம்மணி நாதஸ்வரம் வாசிப்பார். அதில் சில சங்கதிகள் வரும். அம்மாள் தான் கொஞ்ச ‘பிடி’ போல இருப்பார். எனக்குத் தெரிந்த நாதஸ்வர வித்வான்கள் மாம்பலம் சிவ விஷ்ணு கோவிலில் வாசிப்பவர்கள். மாலையில் வித்வான். காலையில் நாவிதர். இதைப் பற்றி மணி சார் ஏதும் எழுதவில்லை.
க.நா.சு. வைப் பற்றி எழுதிய கட்டுரை சிலாகிக்க வல்லது. இலக்கியத்தை சிறு வயதிலேயே பாரதி மணிக்கு அறிமுகம் செய்து, கொஞ்சம் தேறியவுடன் மாப்பிள்ளை ஆக்கிக் கொண்டாரோ என்றும் எனக்குத் தோன்றுகிறது. “ க.நா.சு. திட்டி நான் கேட்டதில்லை” என்பது இன்னொரு அபூர்வத் தகவல்.
முந்நூறு ரூபாய் கொடுத்தால் அதை ஐ என் ஏ கேண்டீனில் மொத்தமாக செலவழித்து விட்டு வரும் மாமனார் பற்றி வேறு அத்தியாயத்தில் எழுதி இருப்பாரோ? என் கண்ணில் படவில்லை. க.நா.சு. பற்றிய பிம்பம், கலைந்த தலை, கறுப்பு பிரேம் கண்ணாடி என்பதைத் தாண்டி, கொஞ்சம் அழகாக ஆக்கியதில் இந்தப் புத்தகத்திற்கு பெரும் பங்குண்டு.
போத்தி ஓட்டல் ரச வடையைப் பற்றி பாரதி மணி எழுதியிருக்கும் பக்கங்களுக்கு நான் வரவேயில்லை. அதை தத்ரூபமாக நேரில் சந்தித்தபோது அவர் விவரித்து விட்டார். அதனால் எனக்கு படித்த உவகை.
எனக்கு எப்போதும் ஒரு ஆச்சர்யம் உண்டு. தேர்ந்த எழுத்தாளர்கள் பேசும்போது டான்சில்ஸ் வந்த பூனைகள் போல பேசுவார்கள். சுஜாதா எழுதி வைத்து படிப்பவர். பிரபஞ்சன் பாதியை முழுங்கி விடுவார். குரல் வெளியவே கேட்காது. அசோகமித்திரன் வயதுக்கு நம் காதுகளுக்கு ஒலி பெருக்கி போட வேண்டும். ஜெயகாந்தன் சகஜ மொழியிலேயே பேச மாட்டார். எல்லாம் தோரணை தான்.
பாரதி மணி பேசும்போது சவுகர்யமாக உணருகிறேன். புத்தகத்தை சத்தம் போட்டு படித்தால் அது ஒரு ஆடியோ ஃபைல். பேச்சு மொழி அப்படியே புத்தகத்தில் மையாக மெய்யாக வந்திருக்கிறது.
பொன்னியின் செல்வனை ஆடியோ சிடியாக போடும் காலத்தில் யாராவது புள்ளிகள், கோலங்கள், கோடுகள் நூலை, பாரதி மணி குரலில் ஆடியோ சிடியாக வெளியிட்டால் அது இன்னமும் வீச்சு பெறும்.
வாழ்த்துக்கள்!
0
- எனக்குப் பிடித்த சிறுகதைகள்
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
- பூமியின் சுற்றுப் பாதைப் பெயர்ச்சி, சுழலச்சுக் கோணத் திரிபு ஐந்தறிவு வானரத்தை ஆறறிவு மானிடமாய் வளர்ச்சி பெற வசதி அளிக்கிறது.
- புத்தக விமர்சனம் – புள்ளிகள் கோடுகள் கோலங்கள் பாரதி மணியும் பைப்பும் – பகுதி 1
- ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்
- தொடுவானம் 172. புது இல்லம்
- கவிதைகள்
- நினைவில் உதிர்தல்
- வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 15
- திருகுவளையில் உதித்த சூரியன்
- மாட்டிறைச்சி அரசியல் ஒரு தேசிய அவமானம்