காலச்சுவடு வெளியீட்டில், தமிழ் வாசகர்வெளியில் பரவலாக அறியப்பட்ட பேராசிரியர் சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகரின் மொழிபெயர்ப்பில் வந்துள இரு குறுநாவல்களின் தொகுப்பு சூறாவளி. மொழிபெயர்ப்பாளர் மட்டுமல்ல நூலின் மூல ஆசிரியர் லெ கிளேஸியோவும் தமிழுக்குப் புதியவரல்ல. பிரெஞ்சுமொழியின் முதன்மை எழுத்தாளர், நோபெல் பரிசினை அண்மைக்காலத்தில் வென்றவர் என்பதால் உலகின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரென்ற அடையாளத்தையும் பெற்றிருக்கிறார். இச்சூழலில், இலக்கிய உலகின் எதிர்பார்ப்பென்ன ? தம்முடைய வாசகர்கள் யார் ? போன்ற கேள்விகளுக்கும் முன்னுரிமைக் கொடுக்கவேண்டிய பொறுப்பு அவருக்கு உண்டு. லெ கிளேஸியோ போன்ற எழுத்தாளர்களின் நோக்கம் கதை சொல்வதல்ல, இலக்கியத்தை படைப்பது. எனவேதான் லெ கிளேஸியோவின் இக்குறுநாவல்கள் இரண்டுமே சொல்லப்படும் கதையின் சுவைக்காக அன்றி, இலக்கியசுவை கருதி வாசிக்கப்படவேண்டியவை. நூலாசிரியர் வார்த்தைகளைக்கொண்டு நடத்திக்காட்டும் அணிவகுப்பு(பசுமை நிறத்தில் பிளாஸ்டிக் திரைசீலையுடன் ஒரு மஞ்சள் நிற வீடு ; ஒரு வேலி ; வெள்ளை நிறத்தில் கதவு ; அங்கே ஒரு நிழற்சாலை. வேலியில் ஒரு ஓட்டை, தெருப்பூனைகள் திரியும் இடமாகத்தான் இருக்கவேண்டும். அந்த வழியாகத்தான் நான் நுழைவேன்.(பக்கம் 178) ») நம்மைப் பிரம்மிக்க வைக்கிறது. மனித மனங்களின் சலசலப்புகள் அவ்வளவையும் சொற்களில் வடிப்பதற்கு, அசாத்திய மொழித்திறன் வேண்டும். மனிதர்களைக் கடலின் துணையுடன் இயக்குவதும், குறுநாவல் வடிவங்களில் நூலாசிரிரியருக்குள்ள ஈடுபாடும், ஹெமிங்வேயிடம் இவருக்குள்ள இலக்கிய பந்தத்தை உறுதிப்படுத்துகின்றன.
லெ கிளேஸியோ பிரான்சுநாட்டைச் சேர்ந்த குடிமகன் மட்டுமல்ல, மொரீஷியஸ் குடிமகனுங்கூட, இதற்கும்மேலாக ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற தமிழ்க் கூற்றின் வழிநிற்கும் தேசாந்திரி, கடலோடி, கடல் மனிதன். சூறாவளி என்ற சொல்லை உச்சரிக்கிறபோது, கடல் என்ற சொல்லும் இணைந்து ஒலிப்பது இயற்கை. கடலின் பரிமாணம், ஆர்ப்பரிப்பு, அமைதி, ஆழ்கடல், நீரின் மேற்பரப்பு, கடற்காற்று, மீன் பிடிக்கும் பெண்கள், அவர்கள் மூழ்கும் விதம், மூழ்கியவர்கள் நீரின் மேற்பரப்பிற்கு வருகிறபோது எழுப்பும் ஓசை, கடற்பாசிகள், கிளிஞ்சல்கள், நத்தைகள், பவழங்கள் ஆகிய வார்த்தைகள் கதைமாந்தர்களாக நீந்துவதையும் கரையொதுங்குவதையும் நூலெங்கும் காணமுடிகிறது. « கடல், உலகத்திலுள்ள எல்லாவற்றையும் விட நான் அதிகம் விரும்புவது இதைத்தான். இளம் வயதிலிருந்தே பெரும்பானமையான நேரத்தை கடலோடுதான் கழித்திருக்கிறேன்(பக்கம் -26) » « கடல் என்பது முழுக்க முழுக்க புதிர்களால் நிறைந்தது. ஆனால் அதெனக்கு அச்சத்தை உண்டாக்கவில்லை. அவ்வப்பொழுது யாராவது ஒருவரைக் கடல் விழுங்கிவிடும். ஒரு மீனவப்பெண்ணையோ, மீன் பிடிப்பவரையோ, அல்லது தட்டைப்பாறையில் கவனக் குறைவாக நின்றிருக்கும் சுற்றுலா பயணியையோ பேரலை இழுத்துக்கொள்ளும். பெரும்பாலான நேரத்தில் உடலைக் கடல் திருப்பிக்கொடுப்பதில்லை(பக்கம் 32) », தொடர்ந்து « அவர்கள் பேசுவது கடவுள் மொழி அது நம் மொழிபோல இருக்காது. அதில் கடலுக்கு அடியில் கேட்கும் சப்தங்கள் நீர்க்குமிழிகளின் முணுமுணுப்புகள்(பக்கம்32) » என ஜூன் கூறும் வார்த்தைகள், கடல் மீது ஆசிரியருக்குள்ள தீராக் காதலை வெளிப்படுத்தும் சொற்கள்.
இரண்டு குறுநாவல்கள் : ஒன்று நூலின் பெயராகவுள்ள « சூறாவளி », மற்றது « அடையாளத்தைத் தேடி அலையும்பெண் ». இரண்டு குறுநாவல்களும் கடல்தான் அடித்தளம். இருவேறு கண்டங்களை, இருவேறு தேசங்களைக் கதைக்களனாகப் பயன்படுத்திக்கொண்டு நூலாசிரியரை பிரபஞ்ச படைப்பாளரென்று முன்நிறுத்துபவை. முறையாகப் பிறந்திராத பெண்களின் கதைகள். ‘சூறாவளி’க் கதை தென் கொரியாவைச்சேர்ந்த தீவிலும், ‘அடையாளத்தைத் தேடி அலையும் பெண்’ ஆப்ரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த கானா நாட்டில் ஆரம்பித்து ஐரோப்பிய கண்டத்திலிருக்கும் பிரான்சு நாட்டிற்குத் தாவும் கதை. இரண்டிலுமே கடந்த கால நினைவுகளைக் கிளறி அத்தணலில் வேகின்ற மனிதர்கள், வாழ்க்கைத் தந்த மன உளைச்சலை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறவர்கள்.
அ. சூறாவளி
ஏற்கனவே கூறியதுபோல நூலின் முதல் குறு நாவல். கதையில் இரண்டு கதை சொல்லிகள். முதல் கதைசொல்லி போர்முனைகளில் பணியாற்றிய பத்திரிகையாளர், பின்னர் எழுத்தாளர் ஆனபின் கடந்த காலத்தில் பணியாற்றிய தீவுக்கு 30 ஆண்டுகளுக்குப் பின் திரும்பிவருகிறார், பெயர் பிலிப் கியோ. ஏன் திரும்பிவருகிறார் ? « எதற்காக நான் திரும்பிவந்தேன் ? எழுத வேண்டும் எனும் வேட்கையிலுள்ள எழுத்தாளர் ஒருவர்க்கு வேறு இடங்கள் இல்லையா ? மனிதச் சந்தடிக்கப்பால், அதிகச் சப்தமில்லாமல் , ஆரவாரம் குறைந்த இடமாக, சுவருக்கு அருகில், அலுவல் மேசையின் முன் உட்கார்ந்து, தன் எழுத்துக்களைத் தட்டச்சு செய்ய வேறு புகலிடம் இல்லையா ? (பக்கம் 13)» எனத் தனக்குத்தானே சிலகேள்விகளையும் கேட்டு அவற்றிர்க்குப் பதிலிறுப்பதுபோல « இத்தகைய தீவை, உலகின் ஒரு பகுதியை, எவ்வித வரலாறும், நினைவுமில்லாத இந்த இடத்தை, கடலால் தாக்கப்பட்டு, சுற்றுலாபயணிகளின் அலைகழிப்புக்குள்ளான இப்பாறையை மீண்டும் கானவேண்டுமென்று விரும்பினேன்.(பக்கம்13) » என நமக்கெழும் சந்தேகத்தை ஆசிரியர் நீக்கியபோதிலும் அவர் திரும்பவருவதற்கென்றிருந்த உண்மையான காரணம் வேறென்பதை அடுத்துவரும் பக்கங்களில் அவர் மனத்துடன் பயணிக்கும் நமக்குத் தெரிய வருகிறது அவற்றிலொன்று கடலில் திடுமென்று விரும்பியே இறங்கி உயிர்விட்ட அவருடைய முன்னாள் காதலிபற்றிய வாட்டும் நினைவுகள்.
ஒவ்வொரு மனிதர் வாழ்க்கையிலும்ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டு இடங்களும் மனிதர்களும் குறுக்கிடுகிறார்கள். எல்லா இடங்களையும், மனிதர் அனைவரையும் நாம் நினைவிற்கொள்வதில்லை. ஆனாலும் சில இடங்களைப்போலவே சில மனிதர்களும் நம்மில் பதிந்துவிடுகிறார்கள், நம்மோடு கலந்து விடுகிறார்கள், அதுபோலத்தான் அவர்களோடு இணைந்த சம்பவங்களும் : நமது நிலை மாறும்போதும் வடிய மறுத்து, நம்மோடு தேங்கிவிடுபவை, கொசுமொய்ப்பவை; அவற்றின் ஆழ்பரப்புக் கசடுகள், நமது வாழ்க்கை இழை அறுபடும்போதெல்லாம், கலைக்கப்பட்டு, மேற்பரப்பிற்கு வருகின்றன. ஆனால் இக்கடந்த தருணங்களின் மறுபிறப்பிற்குக் காரணம் வேண்டும். குப்பையை எறிந்த இடத்தைத் நாம் தேடிவருவதில்லை, ஆனால் குன்றிமணி அளவுடயதென்கிறபோதும், தொலைத்தது தங்கமெனில் திரும்பவருவோம், தேடிப்பார்ப்போம். குற்ற உணர்வும் தொலைத்த தங்கத்திற்குச் சமம். உயிர் வாழ்க்கைக் கோட்பாடு நியாயத்தின் பேரால் கட்டமைக்கபட்டதல்ல. ‘என்னுடைய வயிறு’ , ‘என்னுடைய உடமை’, ‘எனது மகிழ்ச்சி’யென்று அனைத்தும் ‘எனது’ மீது கட்டமைக்கபட்டவை. இந்த ‘எனதை’ மறக்கிறபோது,(அந்த ‘எனது’வின் நலனுக்காகவேகூட அதிருக்கலாம்) தவறைத் திருத்திக்கொள்ளும் முயற்சியில் ஆரம்பக் கட்டமாக குற்ற உணர்வு, உறுத்துகிறது. அது ஊழ்வினையாகாது. நமது முதல் கதைசொல்லியான எழுத்தாளரும் அப்படியொரு குற்ற உணர்வில் தவிப்பவர் : « கதவருகே அசையாமல் எதுவும் நேராமல் அதைப் பார்த்துக்கொண்டிருந்த நான் ; என் கொலைகார கண்கள் ; இந்த பிம்பங்களின் காரணமாகத்தான் நான் இருக்கிறேன்…….இவற்றை எது வைத்துள்ளது என்பதைத் தேட ; அதாவது நிரந்தரமாக உள்ளே போட்டுப் பூட்டி வைத்துள்ள கறுப்புப் பெட்டியை கண்டுபிடிப்பதற்காகத்தான் நான் இங்குவந்திருக்கிறேன். பிம்பங்களை அழிப்பதற்காக அல்ல..(பக்கம் 52)
சூறாவளி குறுநாவலின் இரண்டாவது கதை சொல்லி ஒரு பதின்வயதுப்பெண். தனக்காக மீனவர் வாழ்க்கையை எற்றுக்கொண்ட தாயுடன் தீவில் வசிப்பவள். அவள் கடந்தகால வாழ்க்கையின் அவலங்களை மறந்து, அவ்வாழ்க்கையை அறிந்த மனிதர்களிடமிருந்து விலகி, வெகுதூரத்தில் இருக்கவேண்டி, மகளுடன் வயிற்றுப்பாட்டுக்கு நத்தைகளையும் கிளிஞ்சல்களையும் கடலில் மூழ்கி சேகரிக்கும் ஆபத்தான தொழில் செய்பவள். பெண்ணின் வயது 13 என்றாலும், கேட்பவர்களிடத்தில் தனது வயதைக் கூட்டிச்சொல்லி தன்னைச் சிறுமியாக ஒருவரும் கருதிவிடக்கூடாதென்பதில் கவனாமக இருப்பவள், பெயர் ஜூன். இந்த இருவருக்குமிடையே விளையாட்டைப்போல உருவான நட்பு அதன் போக்கு, அதனூடாக எழும் சிக்கல்கள், இப்புதிய உறவில் இருவேறு வயதுகளில் எழும் குழப்பங்கள், தடுமாற்றங்கள் ஆகியவற்றை கதைமாந்தரின் வயது, அறிவு, அனுபவம் கொண்டு உளவியல் பார்வையில் கதையை நகர்த்துகிறார். பிலிப் கியோ தனது பத்திரிகையாளர் தொழிலின்போது ராணுவ வீரர்களின் வன்புணர்ச்சிக்குச் சாட்சியாக இருந்தவர். « அவன் சாட்சி மட்டுமல்ல, அதில் பங்குவகித்தவர்களில் ஒருவன் (பக்கம் 65) » என்ற எழுத்தாளரின் குற்ற உனர்வுதான் இக்கதைக்கான அடித்தளம்.
ஆ. அடையாளத்தை த் தேடி அலையும் பெண்.
இங்கே கதை சொல்லியாக நாம் சந்திப்பது ரஷேல் என்ற இளம் பெண். தக்கோரதி கடற்கரையில்வைத்து தன் கதையைச் சொல்லத் தொடங்குகிறாள். « எட்டுவயதாகியபோது எனக்கு அம்மா இல்லையென தெரிந்துகொண்டேன். » என்கிறாள். ‘சூறாவளியில்’ஜூன் அப்பா இல்லாத பெண். இக்கதையில் ரஷேல் தாயில்லாப் பெண். சிறுமியிலிருந்து அவள் வளர்ந்து பெரியவளாவதுவரை கதை நீள்கிறது. அவள் வயதுடன் சக பயணியாகக் கதையுடன் பயணிக்கிறோம். அவள் ஆப்ரிக்காவில் பது குடும்பத்தில் பிறக்கிறாள். தந்தை பதுவுடனும் சிற்றன்னை மதாம் பதுவுடனும் வசிக்கிறாள், மூன்றாவதாக அந்த வீட்டில் அவளுடைய மிகப்பெரிய பந்தமாக இருப்பது, அவளுடைய சிற்றன்னை மகளும் தங்கையுமான பிபி. இக்கதையிலும் வன்புணர்ச்சி இடம்பெறுகிறது. பொதுவாக கிளேஸியோ கதைகளில் தாயையோ, தந்தையையோ அல்லது இருவரையுமே அறியாத அநாதை சிறுவர் சிறுமியர் கதைமாந்தர்களாக இடம்பெறுவதைக் காணலாம். இக்கதைகளும் அவற்றிர்க்கு விதிவிலக்கல்ல. அவளைப் பெற்றவுடனேயே தாய், தான் விருப்பிப் பெற்றவளல்ல என்பதால் குழந்தையை அநாதையாக்கிவிட்டு, சொந்த நாட்டிற்குத் திரும்பி, புதிதாய் ஒரு குடும்பம் பிள்ளைகள் எனவாழ்கின்றவள். திருவாளர் பதுவின் குடும்பம் சண்டைச் சச்சரவுகளில் காலம் தள்ளும் குடும்பம். சிற்றன்னைகள் அனைவருமே மூத்த தாரத்தின் அல்லது கணவனின் வேற்றுப்பெண்ணுடனான உறவில் பிறந்த பிள்ளைகளை வெறுப்பவர்கள் என்ற இலக்கணத்திற்குரிய மதாம் பது, ஒரு நாள் கணவனுடன் போடும் சண்டையில்போது, தன்னைப்பற்றிய உண்மையைக் கதைநாயகி ரஷேல் அறியவருகிறாள். ரஷேலுக்கு உண்மையில் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள பெயரோ, உரிய அத்தாட்சி பத்திரங்களோ இல்லை. ஆனால் பிரச்சினை, பது குடும்பம் பணக்கார அந்தஸ்தில் இருக்கும் வரை எழுவதில்லை. ஆனால் எல்லாவற்றையும் இழந்து தெருவில் நிற்கும் போது, நாட்டில் யுத்த மேகமும் சூழ்கிறபோது எழுகிறது. பெரும்பாலான ஆப்ரிக்கர்களைப்போலவே அவர்கள் மேற்குலக நாடுகளை நோக்கி பயணிக்கிறார்கள்.
குறுநாவலின் இரண்டாவது பகுதி பாரீஸில் தொடருகிறது. பெரு நகரங்களின் வாழ்க்கைக் கவனத்தை வேண்டுவது, தவறினால் படுபாதாளத்தில் விழவேண்டியிருக்கும். மது, போதை மருந்துகள் ஆகியவை எளிதில் கிடைக்க அதற்குரிய வாழ்க்கையில் சகோதரிகள் தள்ளப்படுகிறார்கள். கணவர் ‘பது’வை விட்டுப்பிரிந்து வேறொருவடன் வாழ்ந்தாலும் தனது மகளை அரவணைக்க மதாம் பது இருக்கிறாள். ஆனால் அநாதையான ரஷேலுக்கு அத்தகைய அரவணைப்புக் கிடைப்பதில்லை. சகோதரி பிபியின் தயவினால் அந்த அரவணைப்பு திரும்ப அவளைத் தேடிவருகிற போது, விலகிப்போகிறாள். உண்மையில், அவளுடைய அடையாளத் தேடலில் கைவசமிருந்த அடையாளங்களையும் இழக்கிறாள். அவளுடைய இழப்புப் பட்டியல் சகோதரி பிபி, தந்தை, சிற்றன்னை எனத் தொடருகிறது. புகலிட அரசாங்கமும் ஏற்றுக்கொள்ள மறுக்கவே, திரும்ப பிறந்த மண்ணிற்கு நூலசிரியர் அவளை அனுப்பி வைக்கிறார்.
இந்நெடிய பயணத்தில்,கதைசொல்லியான பெண்ணின் ஊடாக பலமனிதர்களைச் சந்திக்கிறோம். அடையாளம் தேடும் பெண் என்பதால் காவல்துறை மனிதர்களும் அவள் வாழ்க்கையில் குறுக்கிடுகிறார்கள். புகலிடம் தேடும்அந்நிய மக்கள், அண்மைக்காலங்களில் மேற்குநாடுகளில் எவ்வாறெல்லாம் நடத்தப்படுகிறார்கள் என்பதற்குச் சின்ன உதாரணம் : « அப்புறம் நான் எங்கு சென்றாலும் எடுத்துச் செல்லும் ஒரே புத்தகம் ‘ப்ராபெட்’ எனும் கலீல் ஜிப்ரான் எழுதிய புத்தகம். …..ஒரு முறை போலீஸ் என்னைச் சோதனையிட்து ; என்னிடம் அந்தப் புத்தகத்தைப் பார்த்துவிட்டு காவல்துறை பெண்மணி , ‘நீ என்ன முஸ்லீமா’ எனக்கேட்டாள்(பக்கம் 182) » எனும் வரிகள்.
« நான் பிறந்த போது இங்கும் சரி , கடற்கரையிலும் சரி எதையும் பார்த்த தில்லை. கைவிடப்படப்பட்ட ஒரு சிறிய மிருகம்போல வாழ்ந்திருக்கிறேன். »என்ற ரஷேலுடையது வரிகள், பிறந்த மண்ணுக்குத் திரும்பியபின்னரும் அவளைத் துரத்துகின்றன, அவளை மட்டுமல்ல புலம்பெயர்ந்த மனிதர் அனைவரையும் துரத்தும் வரிகள்.
———————-
சூறாவளி மொழிபெயர்ப்பு குறு நாவல்கள்
பிரெஞ்சுமொழியிலிருந்து தமிழ்
சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்
காலச்சுவடு பதிப்பகம் வெளியீடு
நாகர்கோவில், தமிழ்நாடு
—————————————————————————————-
- உமர் கயாம் ஈரடிப் பாக்கள்
- கவிதை
- ஆல்டஸ் ஹக்ஸ்லியும் அருவக் கைக் கூர் ஊசியும்
- வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! 20 (முற்றும் )
- உறவின் திரிபு !
- குறிவைக்கப்படும் தலித் செயல்பாட்டாளர்கள்..
- தொடுவானம் 178. காதலே தெய்வீகக் காதலே
- காதல் நாற்பது கவிதைகள் நூல் வடிவில்
- உலகிலே மிகப்பெரும் 100 மெகாவாட் ஆற்றல் மின்கல சேமிப்பணி [Battery Bank] ஆஸ்திரேலியாவில் நிறுவகமாகப் போகிறது.
- நவீனத் தமிழ்க்கவிதைப் புலத்தில் ஈழத்துப்பெண் கவிஞர்கள்
- சங்க இலக்கியத்தில் மறவர்
- கடல் கொண்ட மனிதர்கள் : சூறாவளி(குறுநாவல்) [ஆசிரியர் லெ கிளேஸியோ, பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு சு. ஆ வெங்கட சுப்புராய நாயகர்]