இன்னும் பிறக்காத தலைமுறைக்காக : திரு.தியடோர் பாஸ்கரன்

This entry is part 5 of 46 in the series 28 ஆகஸ்ட் 2011

அழிந்து வரும் இயற்கையின் மீதான தன்னுடைய வருத்தத்தை “இன்னும் பிறக்காத தலைமுறைக்காக” என்னும் நூலில் கனத்த இதயத்துடன் பதிவு செய்திருக்கிறார் திரு.தியடோர் பாஸ்கரன் அவர்கள். தமிழ் நாட்டில் காட்டுயிர் பற்றிய ஆர்வம் குறைவாக இருப்பது பற்றியும், காட்டுயிர் தொடர்பான பல சொற்கள் தமிழில் வழக்கொழிந்து வருவது பற்றியும் வேதனை தெரிவிக்கிறார்.

புலிகள் ஏன் பாதுகாக்கப் பட வேண்டும் என்ற இவருடைய விளக்கம் தமிழ் நாடு அரசின் பாட புத்தகங்களில் இருக்க வேண்டும். ஆசிய சிங்கங்கள் குஜராத்தின் ஒரு குறுகிய மூளைக்குள் அடங்கி இருப்பதும் அதை மோடி மற்ற மாநிலங்களுக்கு தர மறுப்பது பற்றியும் பதிவு செய்திருக்கிறார். தமிழ் நாட்டில் வாழ்ந்த கான மயிலும், சிவிங்கப் புலியும் இன்று முற்றிலும் அழிந்து விட்ட செய்தி எத்தனை பேருக்கு தெரியும்?

அமராவதி ஆற்றில் வாழ்ந்த மயில் கெண்டை என்ற மீன் இனம் முற்றிலும் அழிந்து விட்ட செய்தி மிகவும் துயரப்படுத்தியது. எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருந்த நதி இன்று வறண்டு போய்க் கிடக்கிறது. திரு.தியடோர் அவர்களின் சிறு வயதில் அமராவதி எப்படி இருந்தது என்பதை வாசிக்கும் போது, நாம் எப்படிப்பட்ட ஒரு ஆற்றை இழந்திருக்கிறோம் என்பது வேதனை அளிக்கிறது. குளங்களையும் ஏரிகளையும் ஆழப்படுத்தி வேளாண் உற்பத்தியை பெருக்காமல், நாடு முழுவதும் அணைகள் கட்டி, இன்று ஆறுகளும் வீணாகி, ஏரிகளும் குளங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு சீரழிந்து வருவதை பதிவு செய்திருக்கிறார்.

பழனி மலை தொடர்ச்சியில் இருந்த குறிஞ்சி செடிகளின் வாழ்விடங்கள் சிதைக்கப்ட்டு இன்று அவை ஒரு குறுகிய இடத்துக்குள் இருப்பதை பற்ற்யும் கவலை தெரிவிக்கிறார். நம் வீடுகளை சுற்றி இருக்கும் விலங்குகளையும் பறவைகளையும் பற்றிய புரிதல் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார். ஆறுகள் இணைக்கப்படுவதால் ஏற்படும் அபாயங்களையும் சுட்டிக் காட்டுகிறார். கங்கை எப்படி உருவாகிறது (இமயமலையின் பனிச் சிகரங்களில்), காவிரியும் வைகையும் (மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை மற்றும் நீரை தன்னுள் தக்கவைத்து ஆண்டு முழுவதும் நீரை வெளிவிடும் அடர்ந்த காடு) எப்படி உருவாகிறது என்ற புரிதல் இருந்தாலே நம்மால் அதன் விளைவுகளை புரிந்து கொள்ள முடியும்.

இயற்கைக்காக இது வரை பாடுபட்டவர்களை பற்றியும் இந்த நூலில் பதிவு செய்திருப்பது கூடுதல் சிறப்பு. திரு.ஜே.சி.குமரப்பா, மா.கிருஷ்ணன், ஆலன் ஆக்டேவியன் ஹியூம் (இந்திய காங்கிரசை தோற்றுவித்தவர் என்ற செய்தி மட்டுமே பல வரலாற்று நூல்களில் இடம் பெற்றுள்ளன. ஆனால் இவர் பறவைகளை ஆராய்ச்சி செய்து அவற்றின் பெயர்களை பதிவு செய்தவர் என்ற செய்தியை இந்த நூலில் தன் முதல் முறையாக படித்தேன்), பி.கே.மேத்யூ, ழான் ழியோனோ போன்றவர்களின் பணிகளையும் சிறப்பாக எழுதியுள்ளார்.

இன்னும் பிறக்காத தலைமுறைக்காக மட்டும் இல்லை இந்த நூல். இன்றைய தலைமுறையும் கூட இயற்கையில் இழந்தவரையும், இழந்து வருவது பற்றியும் அறிந்து கொள்ள உதவுகிறது.


அன்புடன்,
பா.சதீஸ் முத்து கோபால்

Series Navigationவரிகள் லிஸ்ட்மரணத்தை ஏந்திச் செல்லும் கால்கள்.
author

பா.சதீஸ் முத்து கோபால்

Similar Posts

Comments

  1. Avatar
    பத்மநாபபுரம் அரவிந்தன் says:

    ஒரு சிறந்த புத்தகத்தை அறிமுகம் செய்ததற்கு என் நன்றி. அனைவரும் இப்புத்தகத்தை வாங்கிப் படிக்க வேண்டும்.. நாம் நம்மைச் சுற்றி இயற்கை சார்ந்த பல விஷயங்களை இழந்து கொண்டிருக்கிறோம் … நம்மால் முடிந்த அளவு , வனவிலங்குகள், பறவைகள் மற்றும் நீர்நிலைகளைப் பற்றிய புரிதலையும், பாது காக்க வேண்டியதன் அவசியத்தையும் சகலருக்கும் விளக்க வேண்டும். -பத்மநாபபுரம் அரவிந்தன் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *