தொடுவானம் 210. இன்ப அதிர்ச்சி

This entry is part 8 of 20 in the series 25 பெப்ருவரி 2018

டாக்டர் ஜி.ஜான்சன்

210. இன்ப அதிர்ச்சி

மருத்துவப்பணி வழக்கம்போல் சிறப்பாக நடந்தது. மனைவி இன்னும் மலேசியாவில்தான் இருந்தாள். கலைமகள்தான் என்னுடன் திருப்பத்தூரில் இருந்தாள். கlலைசுந்தரி தஞ்சாவூர் போர்டிங்கில் தங்கி பயின்று வந்தாள். அந்த போர்டிங்குக்கு அண்ணன் பொறுப்பாளராக இருந்தார். அண்ணன் அப்போது தரங்கம்பாடியில் டி.இ.எல்.சி. உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தார். அவருடைய பால்ய நண்பரான தெம்மூர் மதியழகனை விடுதி காவலராக அமர்த்தியிருந்தார். அண்ணனும் மதியழகனும் ஒரே வயதுடையவர்கள். மதியழகன் தெம்மூர் பள்ளியில் ஆறாம் வகுப்புடன் நின்றுவிட்டவர்.அதன் பின்பு எங்கள் வீட்டில் பண்ணையாளாகப் பணிபுரிந்தார். மாடுகளை மேய்ப்பது, வயல் வேலையின்போது நீர்ப் பாய்ச்சுவது, விதை விதைப்பது, நாற்று அடிப்பது, நாற்று நடுவது, பின்பு அறுவடையின்போது நெல் அறுவடை செய்வது, ,கட்டு தூக்குவது, நெல் அடிப்பது, மூடடை தூக்குவது, வண்டி ஓட்டுவது என்று பலதரப்பட்ட வேலைகள் செய்வார். . எங்கள் வீட்டிலேயே மூன்று வேளையும் சாப்பிட்டுவிட்டு இரவில் வீடு திரும்புவார்.அதிகாலையிலிருந்து இரவு வரை எங்கள் வீட்டில்தான் ஏதாவது வேலையில் இருப்பார். அண்ணன் தாம்பரத்தில் அத்தை வீட்டில் தங்கி சிறுவயது முதல் பள்ளி சென்றவர். விடுமுறையில் தெம்மூர் வரும்போது மதியழகனுடன் பொழுதைக் கழித்தார்.
அவர் ஆசிரியர் ஆகி பின்பு தரங்கம்பாடியில் தலைமை ஆசிரியர் ஆனபின்பு தஞ்சாவூர் போர்டிங்கின் பொறுப்பாளரானார். அப்போது மதியழகனுக்கு உதவ எண்ணினார்.அதை இத்தனை வருடங்களுக்குப்பின்பு நிறைவேற்றிவிட்டார். மதியழகனுக்கும் வயதாகி முன்புபோல் வயல் வேலைகள் செய்ய முடியவில்லை.
மதியழகனைப் போல் எனக்கு பால்பிள்ளைதான் பால்ய நண்பன்.அவன் இன்னும் வயல்வெளியில் வேலை செய்துவந்தான். அம்மாவுக்கு உதவியாக இருந்தான்.அப்பா ஊரில் இருந்தாலும் அம்மாதான் நிலங்களைப் பராமரித்து வந்தார். அப்பாவால் வெயிலில் வயல்வெளிக்குச் செல்ல முடியவில்லை. பால்பிள்ளைதான் எடுபிடி வேலைகள் செய்துவந்தான். என்னால் அவனுக்கு வேலை வாங்கித் தர முடியவில்லை.அவன் கிராமத்திலேயே இருப்பது அம்மாவுக்கு நல்லதாக இருந்தது. பால்பிள்ளைக்கு திருமணம் நடக்கப்போவதாக தெரிவித்தான். பெண் கடலூர் செல்லும் வழியில் முட்டலூர் என்னும் கிராமத்தில் இருந்தாள் .பெயர் லைலா. திருமணம் அந்த ஊரில் நடைபெறுவதால் என்னால் அங்கு செல்ல முடியவில்லை. தெம்மூரில் வரவேற்பு நடக்கவில்லை. விடுமுறையில் ஊர் சென்றபோது லைலாவைப் பார்த்தேன். மாநிறத்தில் ஒல்லியான உடலுடன் கிராமத்து அழகியாக காட்சி தந்தாள். அம்மாவுக்கு அவள் பெரும் உதவியானாள்.
ஒரு நாள் மாலையில் நான் வீட்டிலிருந்தபோது கதவு தட்டப்பட்டது.. நான் திறந்து பார்த்தேன். என் கண்களை என்னால் நம்பமுடியவில்லை! அங்கே புன்னகையடன் கோவிந்தசாமி நின்றான்! அப்படியே கட்டி அணைத்துக்கொண்டோம். சிங்கப்பூரில் இரண்டு வருடங்களுக்கு முன்பு பார்த்துபோலவே இருந்தான். அதே ஒல்லியான உடல்தான்.
” ஆச்சரியமாக உள்ளது! இப்படி சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று வந்து நிற்கிறாயே! ” நான் வியந்தேன்.
” உனக்கு ஓர் இன்ப அதிர்ச்சி தர எண்ணினேன்.” அவன் சிரித்துக்கொண்டே கூறினான்.
” ஆமாம். எப்போது வந்தாய்? ”
” ஒரு வாரம் ஆகிறது. கோடம்பாக்கத்தில் அக்காள் வீட்டில் தங்கினேன். இப்போது நேராக திருப்பத்தூர் வந்துவிட்டேன்… உன்னைப் பார்க்க. ” என்றவாறு ஹாலில் இருக்கையில் அமர்ந்தான்.
” பன்னீர் எப்படி உள்ளான்? ”
” படித்து முடித்துவிட்டான்.வேளையில் உள்ளான். ”
” எங்கே? ”
” டெலிவிஷன் சிங்கப்பூரில் அவன்தான் ஃப்ளோர் மேனேஜர். ”
” பரவாயில்லையே. ஜெயப்பிரகாசம்? ”
” அதே வேலைதான். நன்றாக உள்ளான். பார்த்து நாளாச்சு.”
கொஞ்சம் இரு என்று சொல்லிவிட்டு சமையல் கட்டுக்குச் சென்று கலைமகளைக் கூட்டி வந்தேன்.
அவன் வியந்து நோக்கினான்.
” இந்த பெண் யார் என்று உனக்குத் தெரியுதா? ” அவனிடம் கேட்டேன்.
அவன் விழித்தான்!
கலைமகளும் அவனைப் பார்த்து திருதிருவென்று முழித்தாள்.
” இது யார்? ” அவன் கேட்டான்.
” இதுதான் கலைமகள். என் தங்கை. மூத்தவள். ” என்றேன்.
” சிங்கப்பூரில் ஒரு வயதில் பார்த்தது! ” அவன் வியந்தான்.
கலைமகள் பிறந்தது சிங்கப்பூரில்தான். அவளுக்கு ஒரு வயதில் அம்மாவுடன் தமிழகம் வந்துவிட்டாள் .
” இவன் என் பால்ய நண்பன் கோவிந்தசாமி. சிங்கப்பூரிலிருந்து வந்துள்ளான்.நீ ஒரு வயது சிறுமியாக இருந்தபோது உன்னைப் பார்த்துள்ளான். காப்பி கொண்டு வா. ” என்றேன்.
அவள் அவனுக்கு வணக்கம் சொல்லிவிட்டு சமையல் அறைக்குச் சென்றுவிட்டாள். நாங்கள் தொடர்ந்து சிங்கப்பூர் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.
அவனை மாடியில் தங்க வைத்தேன். இரவு உணவுக்குப் பின் அவனை அழைத்துக்கொண்டு மருத்துவமனையைச் சுற்றிக் காட்டினேன். பெரிதாக உள்ளதாகக் கூறினான். இங்கு வேலை செய்வது பிடித்துள்ளதா என்று கேட்டான். நான் ஆம் என்றேன். சிங்கப்பூரில் வேலை கிடைத்தால் வந்துவிடுவாயா என்றும் கேட்டான். நான் பதில் சொல்லவில்லை.
” உனக்குத் தெரியுமா? இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. நீ மனசு வைத்தால் சிங்கப்பூர் வந்துவிடலாம். ”
” எப்படி? ”
” தற்போது வெளி நாட்டில் படித்து வந்துள்ள மருத்துவப் பட்டதாரிகளுக்கு ஒரு தேர்வு வைக்கிறார்கள். அதில் நீ தேர்வு எழுதி பாஸ் பண்ணிவிட்டால் அங்கு உடன் டாக்டர் ஆகலாம். இந்த அறிய வாய்ப்பை நீ விடக் கூடாது. ”
” இது பற்றி யாரும் எனக்குத் தெரிவிக்கவில்லையே? எனக்கு இது புது செய்தியாக உள்ளதே! ” வியப்புடன் கூறினேன்.
” ஒரு வேளை அதைச் சொல்லவே நான் வந்துள்ளேனோ? ”
” இருக்கலாம். அந்த தேர்வு எப்போது நடக்கும்? நான் கேட்டேன்.
” கூடிய விரைவில். இன்னும் அதை அவர்கள் வெளியிடவில்லை. அது வெளியானதும் நீ கட்டாயம் வந்து தேர்வில் பங்குகொள். எப்படியும் முதல் தேர்வு இந்த வருடத்தில் நடக்கும். அந்த முதல் தேர்விலேயே நீ கலந்துகொள்வது நல்லது. ”
” சரி. அது பற்றி பின்பு பார்ப்போம். அது சரி… நீ இங்கு வந்த நோக்கம் பற்றி சொல்லவில்லையே? ”
” நானும் ஒரு முக்கிய விஷயமாகத்தான் இங்கே வந்துள்ளேன். அது என் திருமணம் பற்றியது. இங்கு பெண் பார்க்க வந்துள்ளேன். ”
” அப்படியா? மிக்க மகிழ்ச்சி! ஆமாம். பெண் யார்? ”
” பெண் புதுக்கோட்டையில்தான் உள்ளாள். என் அத்தை மக்கள். ”
” நீ பெண்ணைப் பார்த்துவிட்டாயா? ”
” நான் சின்ன வயதில் பார்த்ததுதான். இப்போது எப்படி இருப்பாள் என்பது தெரியாது. அவளைப் பார்க்கதான் உன்னையும் கூட்டிகொண்டுப் போக வந்துள்ளேன். ”
” ஓ தாராளமாக போவோமே! இதில் ஒரு ஒற்றுமை என்னவென்றால் எனக்கு பெண் பார்க்க நீ வந்தாய். இப்போது உனக்கு பெண் பார்க்க நான் வருகிறேன்! சரி. எப்போது போகலாம்? ”
” உனக்கு எப்போது முடியுமோ அப்போது போவோம். ”
” எனக்கு சனி ஞாயிறு முடியும். சனிக்கிழமை போகலாமா? ”
” சரி. ”
” உன்னிடம் முகவரி உள்ளதுதானே? நான் வேன் எடுத்து வருகிறேன். அது செளகரியமாக இருக்கும். ”
நாங்கள் வெளியூர் பயணத்துக்கு மருத்துவமனை வோக்ஸ் வேகன் ஊர்தியை குறைந்த வாடகைக்குப் பயன்படுத்துவோம். அந்த சலுகை எங்களுக்கு இருந்தது.
இரவு உணவு முடிந்தபின்பு வெகு நேரம் நாங்கள் இருவரும் மாடியில் படுத்துக்கொண்டு பழைய கதைகளையெல்லாம் பேசிக்கொண்டிருந்தோம்!

( தொடுவானம் தொடரும் )

Series Navigationசுனில் கில்நானியின் ‘இந்தியா என்கிற கருத்தாக்கம்'(The idea of India) தமிழில் தந்தவர் அக்களூர் இரவிநீரிழிவு நோயும் இருதய பாதிப்பும்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *