தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

13 ஜனவரி 2019

மரத்துப்போன விசும்பல்கள்

சின்னப்பயல்

காட்டிலிருந்து
வெட்டிக்கொண்டுவரப்பட்ட
மரம் காத்துக்கொண்டிருந்தது
தன் கதை தன் மேலேயே
அவனால் எழுதப்படும் என்று.

வெட்டுப்படுதலும் ,பின் துளிர்த்தலும்,
மழை வேண்டிக்காத்திருப்பதும்
வேண்டாத இலைகளைக்களைவதும்
அழையா விருந்தாளிகளைத்தாங்கி நிற்பதும்,
அண்டி வரும் எவருக்கும்,
யாரெனத்தெரியாமல் நிழல் தருவதுமான
மரத்தின் நினைவுகள்
மறக்கடிக்கப்பட்டு
எழுதுபவனின் அவமானங்களும்
மகிழ்வும்,சோகமும்
அப்பிக்கொண்டன
எழுத்தாக அதன் மேல்.

மரமும் அதைக்கொஞ்சம்
வாசிக்க முயன்று
பின் தன்னைத்தானே
தேற்றிக்கொண்டது
ஏதோ ஒரு வகையில்
அவை தன் கதையை
ஒத்திருப்பதாக.

Series Navigationநேரம்பஞ்சதந்திரம் தொடர் 6 – தந்திலன் என்ற வியாபாரி

Leave a Comment

Archives