தொடுவானம் 242. கிராம வளர்ச்சியில் கல்வி

This entry is part 3 of 8 in the series 30 செப்டம்பர் 2018

டாக்டர் ஜி. ஜான்சன்

242. கிராம வளர்ச்சியில் கல்வி

திருச்சபை புத்துயிர் பெற்று சிறப்புடன் செயல்பட்டது. அதற்குக் காரணம் சபை மக்களிடம் உண்டான விழிப்புணர்வுதான். இது வரை திருச்சபையை யார் ஆண்டால் நமக்கு என்ன என்று இருந்த கிராம சபையினரும் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான் ஆட்சி புரிகின்றனர் என்பதை உணர்ந்தனர். தங்கள் கிராம ஆலயத்துக்கும் சபை மக்களுக்கும் தேவையானவற்றை இனிமேல் உரிமையுடன் கேட்டு பெறலாம் என்ற நிலை உருவானது.
கிராம சபைகளுக்கு உதவ சமூக பொருளாதார வளர்ச்சிக் கழகம் ( Socio – Economic Development Board ) அமைப்பு இருந்தது. அதன் பொறுப்பாளராக மோசஸ் தம்பிப்பிள்ளை நியமிக்கப்படடார். அவர் உளுந்தூர்பேட்டையில் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். அதை ராஜினாமாச் செய்துவிட்டு முழுநேர பொறுப்பாளராகப் பதவி ஏற்றார். அவர் குமராட்சியை அடுத்த இளங்கமூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். எனக்கு உறவினர். என்னுடைய மாமியார் கிரேஸ் கமலத்தின் அத்தை மகன். எனக்கு அப்போதுதான் கொஞ்சம் பழக்கமானார். என் மனைவி மீது மிகுந்த அன்பு கொண்டவர். அவர் சிதம்பரத்தில் ஒரு வாடகை வீட்டில் தற்காலிகமாகத் தங்கியிருந்தார். நான் மனைவியுடன் அங்கு சென்று அவருடைய வீட்டில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தோம். அவருக்கு இரண்டு பெண்களும் ஒரு மகனும் உள்ளனர். அவர்கள் பள்ளியில் பயின்றனர். அங்கு தங்கியிருந்தபோது என்னைப்பற்றியெல்லாம் விசாரித்து தெரிந்துகொண்டார். என்னைவிட அண்ணன் அவருக்கு அதிக நெருக்கம் என்பது தெரிந்தது. அவர் நல்ல அறிவாளி என்பது அவரின் பேச்சு பிரதிபலித்தது. அவரைப்பற்றி முன்பு ஒரு முறை மறைதிரு பிச்சானாந்தம் சொன்னது என் நினைவுக்கு வந்தது. அவர் பி.ஏ.பி.டி. பட்டதாரி.
சமூக பொருளாதார வளர்ச்சிக் கழகம் திருச்சபையின் முக்கிய அங்கம். அதற்கு சுவீடன் தாய்ச் சபையிலிருந்து நிதி உதவி கிடைத்தது. அதன் முக்கிய நோக்கம் கிராம சபைகளின் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது. வெள்ளம் புயல் போன்ற இயற்கையின் சீற்றத்தினால் பாதிக்கப்படும் கிராம மக்களுக்கு உடனடியாக உதவிகள் செய்யும் பொறுப்பு இதற்கு இருந்தது.
மோசஸ் தம்பிப்பிள்ளை ஒரு ஆசிரியர் என்ற காரணத்தால் அவர் பொறுப்பு ஏற்றதும் கிராமப் பள்ளிகள் திட்டம் என்பதை தயார் செய்தார். அதை சபைச் சங்கம் பரிந்துரை செய்து சுவீடனுக்கு அனுப்பியது. கிராம சபை மக்களின் முன்னேற்றத்துக்கு முதலில் தேவை கல்வி என்பது அவருடைய எண்ணம்.அது உண்மையே. கிராம மக்கள் ஆண்டாண்டு காலமாக முறையாக படிக்காமல் விவசாயத்திலேயே ஈடுபட்டு வருகின்றனர். வயல் வேலைக்கு கல்வி தேவையில்லை என்று அவர்களை நம்ப வைத்திருந்திருந்தனர் நிலச்சுவான்தார்கள். இத்தகைய பிற்போக்கான நம்பிக்கையை முறியடிக்க சிறந்த ஆயுதம் கல்வி ஒன்றே!
திருச்சபையில் முன்பே கிராம துவக்கப் பள்ளிகள் நடந்து வந்தாலும் இன்னும் நிறைய பள்ளிகள் தேவைப்பட்டன. எங்கெங்கே பள்ளிகள் இல்லையோ அங்கெல்லாம் புதுப் பள்ளிகளை உருவாக்குவதே கிராம பள்ளிகள் திட்டம். இந்த திட்டத்துக்கு சுவீடன் சபை உற்சாகமாக நிதி உதவி அளித்தது. அதற்கென ஒரு வாகனமும் வழங்கியது. இதன் தலைமையகத்தை சிதம்பரம் ஆலய வளாகத்திலேயே தம்பிப்பிள்ளை வைத்துக்கொண்டார்.
அந்தத் திட்டம் சிறப்பாக நடைபெற்றது. அதை செயல்படுத்த அவர் தமிழகத்திலுள்ள எல்லா பகுதிகளுக்கும் சென்று சபை மக்களுடன் பழகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. பின்னாட்களில் அது அவருடைய திருச்சபை அரசியல் வாழ்க்கைக்கும் பெருமளவில் உதவியது. அந்தத் திட்டத்தின்கீழ் புதுப் பள்ளிகள் பெற்ற சபை மக்கள் அவருக்கு நன்றிக்கு கடன் பட்டனர்.
தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை துவக்க முதலே மூன்று பணிகளுக்கு முக்கியத்துவம் தந்து செயல்பட்டது. ஆன்மீகம், கல்வி, மருத்துவம் என்பதே அந்த மூன்று பணிகள். துவக்க கால மிஷனரிகள் இந்த மூன்றும் ஒரு சமுதாய வளர்ச்சிக்கு முக்கியமாகக் கருதினர்.
எங்கெல்லாம் அவர்கள் கோவில் கட்டி ஒரு சபையை உருவாக்கினார்களோ அங்கெல்லாம் ஒரு துவக்கப் பள்ளியையும் கட்டினார்கள்.. அந்தப் பள்ளியில் கிராமத்துப் பிள்ளைகள் அனைவரையும் சேர்த்துக்கொண்டனர். அதன் மூலம் கலவியைத் தந்ததோடு கிறிஸ்துவ போதனைகளையும் கூடவே சொல்லித் தந்தனர். ஜெபம், வேதாகமாக் கதைகள், கீர்தனைகள்,பாமாலைகள் முதலியவற்றையும் கல்வியுடன் போதித்தார்கள். அதன் மூலம் இயேசுவைப் பற்றி இந்து மார்க்கத்தின் பிள்ளைகளும் ஓரளவு தெரிந்து கொள்ளும் வாய்ப்பினை ஏற்படுத்தினார்கள்.
அதுபோன்றுதான் எங்கள் கிராமமான தெம்மூரில் அவர்களால் உருவாக்கப்படட ஆரம்பப் [பள்ளி தற்போது 100 ஆண்டுகளைத் தாண்டிய பழமை மிக்கதாக விளங்குகிறது. அப்பாவும் அண்ணனும் நானும் அதில்தான் ஆரம்பிக்க கல்வியைப் பெற்றுள்ளோம். அந்தப் பள்ளி இன்றும் சிறப்புடன் கல்வித் பணியைச் செய்துவருகிறது.
எங்கள் கிராமம் போல் இன்னும் தமிழகத்திலுள்ள ஏராளமான கிராமங்களில் இதுபோன்ற துவக்கப் பள்ளிகளின் வழியாக ஆயிரமாயிரம் சிறுவர் சிறுமியருக்கு கல்விக் கண்களைத் திறந்து விட்ட பெருமை லுத்தரன் திருச்சபைக்கு உள்ளது. அதற்கு வழிகோலிய சுவீடன் மிஷன் திருச்சபை பாராட்டுதற்குரியது.
மோசஸ் தம்பிப்பிள்ளையின் தலைமையின் கீழ் செயல்பட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக் கழகம் கல்விப் பணியிலும் சமூகப் பணியிலும் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டது. அதைக் கண்டு சுவீடன் தாய்ச்சபையினர் அவரை நம்பி நிறைய நிதி உதவி செய்து வந்தனர்.
இத்தகையப் பணிகளின் மூலம் மோசஸ் தம்பிப்பிள்ளை திருச்சபையில் புகழ் பெற்று விளங்கினார். கிராம சபை மக்களிடம் நன்றாகப் பழகியதால், லுத்தரன் முன்னேற்ற இயக்கத்திலும் தலைமைத்துவம் பெற்று விளங்கினார். அவருடைய அருமையான பேச்சாற்றலால் லுத்தரன் முன்னேற்ற இயக்கத்தின் முக்கிய தலைவருமானார். இயக்கத்தினர் அவரைப் போற்றி புகழ்ந்தனர்.
அப்போது இருந்த சூழலில் முக்கியமாக மூவர் கருத்தப்பட்டனர். அவர்கள் அதிஷ்டம் பிச்சைப்பிள்ளை, மோசஸ் தம்பிப்பிள்ளை, ஐ.பி. சத்தியசீலன்.ஆவார்கள். திருச்சபை அவர்களின் கைகளில்தான் இருந்தது. அவர்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்ற பலமும் அவர்களிடம் இருந்தது!

( தொடுவானம் தொடரும் )

Series Navigationஉன்னைக் காண மாட்டேன் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்மருத்துவக் கட்டுரை- தட்டம்மை ( MEASLES )
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *