சபரிமலை – நவீனத்துவம் விழுங்கும் இந்திய பாரம்பரியங்கள்

This entry is part 7 of 7 in the series 21 அக்டோபர் 2018

இந்து மதம் என்ற பெயரில் அழைக்கப்படும் இந்திய பாரம்பரியங்களை ஒற்றை பார்வையில் அடைக்க ஆர்.எஸ்.எஸ் முயல்வதாக ராஜன் குறை போன்றவர்கள் எழுதுகிறார்கள்.

ஆனால், அதே வீச்சில், சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று, பெண்கள் சமத்துவத்தை நிலைநாட்டியதற்கு கேரள முதல்வர் விஜயன் அவர்களுக்கும் நீதிபதிகளுக்கும் பாராட்டு கடிதம் எழுதுகிறார்கள்.

இதில் இருக்கும் முரண்பாடு அவர்களுக்கு வழக்கம்போல புரியவில்லை என்று நான் கருதுகிறேன்.

தமிழ்நாட்டிலேயே ஒவ்வொரு சாதியினரும் திருமணமும் ஒரே விதமாக நடப்பதில்லை. ஒவ்வொரு குலத்தவரின் திருமணம், இறுதி சடங்குகள், பிறப்பு சடங்குகள், திருவிழாக்கள், கிராமத்திருவிழாக்கள், குலதெய்வ விழாக்கள், ஊர் திருவிழாக்கள், அந்தந்த ஊர்திருவிழாக்களில் செய்யப்படும் சடங்குகள் என்பவை ஆயிரக்கணக்கானவை தனித்துவமானவை. ஒரு குறிப்பிட்ட அய்யனார் கோவிலை இன்னொரு ஊரில் நிர்ணயிக்க வேண்டுமென்றால், அந்த அய்யனாரின் சொந்த ஊரிலிருந்து கோவில் மண் எடுத்து வந்துதான் இன்னொரு கோவிலை நிர்ணயிக்க முடியும் என்றெல்லாம் விதிமுறைகள் இருக்கின்றன. இவற்றினை பல நூற்றாண்டுகளாக பின்பற்றி வருகிறார்கள் தமிழர்கள். ஏன் இந்தியாவெங்கும் இது போன்ற பல்வேறுவிதமான விதிமுறைகள் ஒவ்வொரு ஊரிலும் இருக்கின்றன. தமிழ்நாட்டில் பெரும்பாலானவை ஆகமங்கள் என்று கோர்க்கப்பட்டன. ஒவ்வொரு சிவன்கோவிலுக்கும் ஒரு ஆகம முறை உண்டு. பெருமாள் கோவில்களுக்கு தனி ஆகமங்கள் இருக்கின்றன. ஏன் இந்த ஆகம முறைப்படி அந்த கோவில் இல்லை என்று கேட்பது அறியாமையை பறைசாற்றுவதுதானே அன்றி பகுத்தறிவு அல்ல.

இதனாலேயே இந்திய அரசியலமைப்பு சட்டம் தெளிவாக இவ்வாறு கூறுகிறது.
(Article 25 of Indian Constitution grants freedom to every citizen of India to profess, practice and propagate his own religion. The constitution, in the preamble professes to secure to all its citizen’s liberty of belief, faith and worship).

மக்கள் தங்களுடைய மதத்தை நம்பிக்கையை profess and practice க்கான உரிமையை வழங்குகிறது. சபரிமலை ஆகம விதிகளில் உச்சநீதிமன்றம் தலையிட்டு அங்கு உள்ள பழக்க வழக்கங்களை மாற்றுவது என்பது ஆர்ட்டிகிள் 25க்கு முரணானது என்றே நான் கருதுகிறேன்.

ஆனால், நீதிபதிகள், கம்யூனிஸ்டுகள் இடதுசாரிகள், நீர்த்துபோன இடதுசாரிகள் ஆகியவர்களின் பார்வையில் ஆகம விதிகளை விட மேற்கத்திய கலாச்சாரம் சொல்லும் நவீனத்துவமும் அதன் மொழியும் அதன் சமத்துவ கோரிக்கைகளுமே முக்கியத்துவம் பெற்றுவிடுகின்றன.

ஆகம விதிகள் ஒரு கோவில் இப்படி கட்டப்படவேண்டும், இந்த திசை நோக்கி இருக்கவேண்டும் என்று கூறினால், அந்த பிரிவை சார்ந்த கோவிலை கட்டுபவர்கள் அப்படித்தான் கட்டுவார்கள். அதற்கான உரிமையை இந்த அரசியலமைப்புச் சட்டம் தருகிறது.

அதே நேரத்தில் கோவிலில் எத்தகைய வழிபாடுகள் நிகழ்த்தப்படவேண்டும் என்பதையும் ஆகமங்களும் பாரம்பரிய விதிகளுமே நிர்ணயிக்கின்றன. மாரியம்மன் கோவிலில் ஆடு, கோழி பலியிடுவது பாரம்பரியம் தொட்டு நடந்துவருகிற ஒரு விஷயம். ஆனால், ஜெயலலிதா அதனை தடை செய்து சட்டமியற்றியபோது அதனை பல (சைவ உணவு உண்ணும் இந்துக்கள் உட்பட ) பலர் எதிர்த்தனர். காரணம் தன் கடவுளுக்கு என்ன பலி கொடுத்து வழிபட வேண்டும் என்பதை அந்தந்த சாதிகளும் குலத்தினரும் அந்தந்த கோவிலின் வழிபாட்டு முறைகளுமே நிர்ணயம் செய்கின்றன. அதற்கான உரிமையை இந்திய அரசியல்சட்டம் மக்களுக்கு தருகிறது.

இதில் மிருகவதை தடுப்பு சட்டமோ எதுவுமோ உள்ளே வர முடியாது. அப்படி வரும் என்றால், அது மனித உரிமைமீறலாகத்தான் இருக்கும். இந்தியா முழுவதும் உள்ள மக்களை எப்படி கட்டாயமாக சைவ உணவு தான் உண்ணவேண்டும் என்று இந்திய அரசாங்கத்தின் நீதிபதிகளால் சொல்லமுடியாதோ அதே போல, அந்த அசைவ உணவை எந்த கடவுளுக்கு எப்படி பலிகொடுத்து உண்ணவேண்டும் என்றும் அரசாங்கத்தின் நீதிபதிகளால் கூற இயலாது. அப்படி கூறினாலோ, அது போல சட்டமியற்றினாலோ அது ஆர்ட்டிகிள் 25க்கு முரணானது.

அதே போல ஆண்கள் மட்டுமே செல்லக்கூடிய கோவில்களோ, ஆண்கள் மட்டுமே செல்லக்கூடிய நாட்களோ அந்தந்த கோவில்களின் உள்ள விதிமுறைகளை பொறுத்தவையாக இருக்குமே அல்லாமல், அரசாங்கமோ நீதிமன்றமோ, அனைத்து மக்களும் அங்கே போகலாம் என்று சட்டப்பூர்வமாகவோ அல்லது கட்டாயமாகவோ கூற முடியாது.

இந்த விஷயத்தோடு தீண்டாமை, சதி போன்றவற்றை இழுத்து பேசும் ஒரு விகாரமான விவாதம் தற்போதுபலராலும் செய்யப்படுகிறது. சதி என்பது இந்துக்கள் செய்தே ஆகவேண்டிய விதியாக எந்த கோவிலிலும் ஆகமத்திலும் சொல்லப்படவில்லை. அது ஒரு சமூக நிகழ்வு தானே அன்றி அது மத சடங்கு அல்ல.

தீண்டாமையை வலியுறுத்தும் ஆகமங்களும் எங்கும் இல்லை. குறிப்பிட்ட சாதிகள் இந்த கோவிலுக்குள் வரக்கூடாது என்று எந்த ஆகமமும் இல்லை. முன்பு ஆண்டவர்கள் தங்களுக்கு எதிராக கிளர்ந்து எழுந்த குடிகளை தண்டிக்க அவர்களை கீழ்சாதியாகவோ குற்றபரம்பரையினராகவோ அறிவித்தி அவர்களை ஒடுக்கியிருக்கிறார்கள். மிகச்சமீபத்தில் குறிப்பிட்ட சாதியினரை குற்றப்பரம்பரையினர் என்று தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்கள் அறிவித்து ஒடுக்கியதை அறிந்திருக்கலாம். இதேபோல வடக்கிலும் ஆங்கிலேயர்கள் தங்களுக்கு எதிராக போர்தொடுத்த குடிகளை குற்றப்பரம்பரையினராகவும், கூட்டு தண்டனையிலும் கொடுமை படுத்தியது சமீபத்திய வரலாறு. ஆனால், இந்து ஆகமங்களில் எங்கேயும் ஒரு குறிப்பிட்ட சாதியினர் கோவிலுக்குள் வரக்கூடாது என்று இல்லை. இருந்தால் தெரிவியுங்கள். நான் திருத்திகொள்கிறேன்.

ஆனால், இன்றும் இந்துக்கள் தவிர மற்றவர்கள் கோவிலுக்குள் வரக்கூடாது என்று அறிவிப்பு பலகைகளை பல கோவில்களில் பார்க்கலாம். கோவில்கள் ஆன்மீக இடங்கள். அவை இந்துக்களுக்குத்தான். அது சுற்றுலாத்தலங்கள் அல்ல. இந்துக்களுக்கு இருக்கும் ஆன்மீக உணர்வு மற்றவர்களுக்கு இருக்கும் என்று எதிர்பார்ப்பது சாத்தியமில்லாத ஒன்று. அங்கே சானிடரி நாப்கினை கொண்டு வந்து முகத்தில் வீசிவிட்டு அது என் உரிமை என்று உளறுபவர்களுக்கு இடம் இல்லை. ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு விதிமுறைகள் இருக்கின்றன. வேட்டி கட்டவேண்டும், லுங்கி அணியக்கூடாது என்று சொல்ல எல்லா கோவில்களுக்கும் அதன் நிர்வாகிகளுக்கும் அதன் அணுக்கர்களும் உரிமை உண்டு.

இவ்வாறு இந்துக்கள் அல்லாதவர்களை கோவிலுக்கு வரக்கூடாது என்று சொல்ல ஆகமத்தில் இடமும் இல்லை. இருந்தாலும் அது இன்று தமிழ்நாட்டு அரசாங்கத்தின் அறநிலையத்துறையாலேயே அங்கு போர்டாக மாட்டப்பட்டுள்ளது.

இதனை ஒருவர் சட்டத்தின் முன் கொண்டு சென்றால், அனைவரும் கோவில்களுக்கு செல்லலாம் என்றும், அங்கு சானிடரி நாப்கின்களை வீசலாம், அல்லது அதன் பிரகாரங்களில் மலம் கழிக்கலாம் என்றும் நீதி கொடுக்கப்பட்டால் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஏனெனில் மனித உரிமைகள் என்று இன்று சொல்லப்படுபவை நவீனத்துவத்தின் பிரதிநிதிகளாக இந்து சமுதாயத்தின் பல நூற்றாண்டு பழக்க வழக்கங்களின் மீது தாக்குதல் தொடுத்து வருகின்றன

இந்த மனித உரிமைகள் அல்லது மிருகங்கள் மீதான பரிவு என்ற போர்வையில் வரும் தாக்குதல்கள் பட்டாசு வெடிப்பதால் நாய்கள் பயந்துவிடுகின்றன என்று கூக்குரல் இடுகின்றன, ஹோலி விளையாடுவதால் ஏழைகள் தண்ணீர் இன்றி தவிக்கிறார்கள் என்கின்றன. மாட்டுக்கறி சாப்பிடுவது மனித உரிமை என்கின்றன. ஆனால், கோவில்களில் விலங்குகளை பலியிடக்கூடாது என்கின்றன. யானைகளை கோவில்களில் வைக்கக்கூடாது என்கின்றன. அதன் நீட்சியாகவே இன்று சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நாப்கின்களை இருமுடியில் வைத்துகொண்டு சென்றால் என்ன குற்றம் என்று கேட்கின்றன. பகவதி அம்மன் கோவிலுக்கு ஏன் பெண்கள் மட்டுமே செல்லவேண்டும்? ஆண்கள் லுங்கி கட்டிகொண்டு அங்கு சென்று பெண்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கக்கூடாதா என்று கேட்கும்.

இந்துக்கள் என்ன முறைகளை பின்பற்றுகிறார்கள் என்பதோ அதன் ஆகமங்கள் மீது நம்பிக்கை கொண்டவர்கள் என்ன நடைமுறைப்படுத்துகிறார்கள் என்பதோ இந்த மனித உரிமைக்காவலர்களுக்கு இரண்டாம் பட்சம். பெண்ணுரிமை என்ற போர்வையில் இரண்டு நியூயார்க் டைம்ஸ் இதழாளர்களும் அதன் இந்திய சிப்பாய்களும் பெண்ணுரிமையை நிலைநாட்டுவதுதான் இங்கே செய்தி. அதுவே இன்றைய புரட்சி.

பிரைவசி என்பதோ ஆண்களின் இடம் என்பதோ பெண்களிடம் இடம் என்பதோ ஐரோப்பிய மைய வாதத்தின் அடிப்படையில் என்ன ஒற்றைப்படையாக அறியப்படுகிறதோ அதுவே நிரந்தரமான உண்மை என்ற இந்த போலி நிறுவுதல் எவ்வாறு பன்மையாக அறியப்படுவதற்கு எதிரானது என்பதை அவர்களே உணர்வதில்லை என்பது மட்டுமல்ல, தங்களது போலித்தனத்தை உண்மை புரட்சி என்றே இவர்கள் நம்புகிறார்கள் என்பதும் ஆச்சரியமானது.

மேலும் சொல்ல விஷயம் உண்டு. ஆனால் கேட்கும் காதுகள் இல்லை

Series Navigationமருத்துவக் கட்டுரை – ஹெர்ப்பீஸ் வைரஸ் ( Herpes Virus )
author

சின்னக்கருப்பன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *