குரூரமான சொர்க்கம்

This entry is part 8 of 54 in the series 4 செப்டம்பர் 2011

ஆங்கிலத்தில்:ஜெய் நிம்கர் [மராத்தி மொழி எழுத்தாளர்]
தமிழில்: முனைவர் தி.இரா.மீனா

வேர்வை கூந்தலின் ஊடே கோடாய் வழிய ,சேலையை இடுப்பில் செருகியபடி நீலம் குழந்தையைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்த போது அழைப்பு மணி ஒலித்தது. வசந்த் கதவைத் திறந்து கொண்டு வந்தான்.
“நீலம் எங்கே இருக்கிறாய்”
“ஏன் சஞ்சுவைக் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறேன்.என்னவாம் ”
“முடித்து விட்டாயா? கேட்டவனின் குரலில் அத்தனை பதட்டம் தெரியாவிட்டாலும் ஏதோ சிக்கல் என்று புரிந்தது.
“குழந்தைக்கு டிரஸ் போட்டு விடு ” வேலைக்காரப் பெண்ணிடம் குழந்தையைத் தந்தி விட்டு வந்தாள்.
தன் கையிலிருந்த தந்தியை எதுவும் பேசாமல் அவளிடம் நீட்டினான்.ஈரமான கையில் வாங்கி பிரித்துப் படித்தாள்.வசந்தை பார்த்தாள். அவன் விறைப்பாக நின்றிருந்தான்.அவள் எதுவும் சொல்லவில்லை.
“நீ என்ன நினைக்கிறாய்?”
“சில சமயத்தில் கால ஓட்டத்தில் இது போன்றவைகள் தவிர்க்க முடியாதவையாகி விடுகின்றன. இது இயற்கையின் நியதிதான்”
“இதை நியாயம் என்று சொல்லாதே .அனாதையாக அவளை இறக்க விட்டதன் மூலம் பழி வாங்கி விட்டதாய் நீ நினைக்கலாம். ஆனால் அது சரியா ” அவள் யோசித்தாள்.
“இல்லை. அது கண்டிப்பாக பழியுணர்ச்சி இல்லை. நான் சமாதானமாக அவளிடம் போயிருக்க வேண்டும் என்பதுதான் தந்தியைப் படித்த கணம் எனக்குள் தோன்றியது. ஆனால் அவள் என்னை எதுவும் கேட்டதில்லை. ரொம்பவும் பெருமைக்காரி. ஆனால் இப்போது எல்லாமே முடிந்து போனது”
“அவள் இளமையில் எப்படி இருந்திருப்பாள் என்று பல முறை யோசித்திருக்கிறேன். சில சமயங்களில் பார்க்க முடிவது போல உணரும் போது தோற்றம் நழுவி விடும்


“அந்தக் குடும்பம் ரொம்ப நல்ல குடும்பம். பெண் உனக்கு எல்லாவிதத்திலும் பொருத்தமானவள். நீ போய் பெண்ணைப் பார்த்து விட்டு உன் முடிவைச் சொல். எங்களுக்கு அவளைப் பிடித்து விட்டாலும் நீதான் முடிவு சொல்ல வேண்டும் “என்ற அந்தக் கடிதத்தை சட்டம் படிக்கும் இளைஞன் சப்தமாக அவளிடம் படித்துக் காட்டிச் சிரித்தான்.அந்தப் பெண் சிரிக்கவில்லை. ஒன்றும் சொல்லாமல் தரையைப் பார்த்தபடி இருந்தாள்.
“அருணா! இதை நீ சீரியசாக எடுத்துக் கொள்ளாதே ”
“உங்கள் பெற்றோர் உறுதியாக இருக்கிறார்கள் இந்த மாதத்தில் இது மூன்றாவது கடிதம்.
“மற்ற இரண்டு பெண்களையும் மறந்தது போல இதையும் மறந்து விடுவேன்” “மனோகர்! எவ்வளவு நாளை இப்படிக் கடத்த முடியும் எப்படியாவது உங்களுக்குத் திருமணம் முடித்து விட நீங்கள் சம்மதிக்கிறவரை இது தொடரும்.”
தன் முகம் சூடேறுவதை அவன் உணர்ந்தான்.அருணாவை அவன் பெற்றோர்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்’. ஒரு நல்ல
வேலையைத் தேடிக் கொள்கிற வரை அவனால் பெற்றோர்களை எதிர்த்துக் கொள்ள முடியாது.
“நீ சொல்வது சரிதான் அருணா. நம்மைப் பற்றி நான் அவர்களிடம் விரைவில் பேசியாக வேண்டும்.அருணா புணர் நிர்மானம் செய்யப்பட்ட
தேவதாசியின் மகள் என்று உடனடியாகச் சொல்ல வேண்டிய அவசிய மில்லை. திட்டமிட்டுப் பேச இன்னும் நேரமிருக்கிறது.
“ஏன் வருத்தமாக இருக்கிறாய்?”
“என் எதிர்பார்ப்பு மிக அதிகமோ என்று தோன்றுகிறது.”
“இப்போது நீதான் கோழை”
“இல்லை. நீங்கள் எதற்காகவும் வருத்தப் படுவதை என்னால் விரும்ப முடியாது”
“நாமிருவருமே வருத்தப் படக் கூடாது”
அவள் அவனைப் பார்த்து சிரித்தாள்.
அவள் போனதும் தன் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாய்நடந்தான். சாப்பிடக் கூடத் தோன்றவில்லை. ஒரு முடிவுக்கு வருவது திருப்தியைத் தரும் என்று சில மாதங்களாகவே அவன் காத்திருந்தான். ஆனால் எந்த நிம்மதியும் இல்லை.
அப்போது கதவு லேசாகத் தட்டப் பட்டு திறக்கும் சப்தம் கேட்டது. அவன் இதுவரை பார்த்தே இராத ஒர் அழகான பெண் உள்ளே வந்தாள். நாட்டிய பெண் போல உயரமாகவும் ,நளினமாகவும் இருந்தாள்.
“நீங்கள் தானே மனோகர் ரேஜ் ? குரல் கரகரப்பாக இருந்தது.இந்த மாதிரி ஒரு குரலை அவன் அவளிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. சங்கீதம் போல இருந்திருக்க வேண்டுமே.
“ஆமாம் .நீங்கள் யாரென்று எனக்குத் தெரியவில்லையே.”
“ நீங்கள் என்னைப் பார்த்தது இல்லை.உங்கள் பெற்றோரின் ஆசையை நிறைவேற்ற வேண்டுமென்றால் நீங்கள் என்னைப் பார்த்துதான் ஆக வேண்டும்.”
“ஓ..நீங்கள் சுமித்ரா..
“ஆமாம்” உங்கள் பெற்றோரின் ஆசையை நிறைவேற்ற உங்களுக்கு விருப்பமில்லை. எனக்கு உங்களைப் பற்றியும் அருணாவைப் பற்றியும் தெரியும்”
“அதை நான் ரகசியமாக வைக்கவில்லையே”
“தயவு செய்து தப்பு செய்தது போல நினைக்க வேண்டாம். நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை.”
“நான் உங்களிடம் ஓர் உதவி கேட்டு வந்திருக்கிறேன்.”
அவள் முகத்தில் எவ்வித பயமும் இல்லை. அவனையே கூர்மையாகப் பார்த்தபடி பேசினாள்.
“தயவு செய்து விடுகதை போடுவது போல பேசுவதை நிறுத்தி விட்டு வந்த விசயத்தைச் சொல்லுங்கள்.”
“நீங்கள் என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்.”
“என்ன பேசுகிறீர்கள் என்று தெரிந்துதான் பேசுகிறீர்களா?”
“உம்.” அதை எதிர்பார்த்தவள் போல சிரித்தாள்
“நீங்கள் பேசுவது எனக்கு பொருத்தமாகத் தெரியவில்லை.எங்கள் இருவரைப் பற்றியும் தெரியும் என்கிறீர்கள். நான் அருணாவைத்தான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.”
அவள் திடீரென்று அழத் தொடங்கினாள். அவனுக்கு பரிதாபமாக இருந்தது.
“அழாதீர்கள். விசயத்தைச் சொல்லுங்கள். முடிந்தால் உதவுகிறேன்”
“நீங்கள் உதவி செய்ய ஒரு வழிதான் இருக்கிறது”
“உம்”
“யூகம் செய்து விட்டீர்களா?”
“யார் அது?
“என் தந்தையிடம் பல வருடங்களாக வேலை பார்க்கும் ஒருவர்.”
“அவர்…”
“எல்லாப் பழியையும் அவர் மீது சுமத்தி எனக்கு ஒன்றும் தெரியாது என்று அப்பாவியாக என்னால் சொல்ல முடியாது.”
“உங்கள் பெற்றோருக்கு இது பற்றி தெரியமா?”
“அப்பாவுக்குத் தெரிந்தால் கொன்று விடுவார்.”
“உங்களால் வேறு எதுவும் செய்ய முடியாதா?”
“இந்த நிலைமையில் என்ன செய்ய வேண்டுமென்று தெரிந்தாலும் எப்படிச் செய்வது என்று தெரியவில்லை. மற்றவர்களுக்குத் தெரியமல் எப்படிச் செய்வது என்றும் தெரியவில்லை”
“நீங்கள் ஏன் அவரையே கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது?”
“அவருக்குத் திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளன. என்னால் அவரைத் திருமணம் செய்து கொள்ள முடியாது.” இந்தச் சூழ்நிலையிலும் அவளது அகம்பாவம் வேடிக்கையாக இருந்தது.
“என்னைத் திருமணம் செய்து கொள்ளும்படிக் கேட்கிறீரகள். அதை நான் ஒப்புக் கொள்வேன் என்று எப்படித் தோன்றிற்று ?”
“அருணாவை விட்டு விட வேண்டுமென்று நான் சொல்லவில்லை. நீங்கள் என்னைத் திருமணம் செய்து கொண்டு என் குழந்தைக்கு தந்தை என்ற ஸ்தானம் தந்தால் , நீங்கள் அருணாவைத் தொடர்ந்து பார்ப்பதில் எனக்கு எவ்வித ஆட்சேபமும் இல்லை.”
“அவள் இதற்கு எப்படி ஒப்புக் கொள்வாள் என்று நினைக்கிறீர்கள்?”
“நீங்கள் இதற்கு சம்மதித்து விட்டால் அவளுக்கு வேறு வழியில்லை.தன் நிலை அவளுக்குத் தெரியும். நான் அவளை விட மேலானவள் என்று எந்த சந்தர்ப்பத்திலும் சொல்லப் போவதில்லை. போகட்டும்.ஆனால் அவளை விட உங்கள் மனைவி என்பதற்கு நான் பொருத்தமானவளாக இருப்பேன்”
“எங்களைப் பற்றி எப்படித் தெரியும்?”
“என் கஸின் உங்கள் கல்லூரியில் படித்தவன். நம் குடும்பங்களிடையே பேச்சு வார்த்தை நடந்த போது அவன் இதைப் பற்றிச் சொன்னான்.மிக ரகசியமாக வைத்திருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் எல்லோருக்கும் தெரியும்.உங்களை வேண்டாமென்று சொல்லி விட வேண்டுமென்பதற்காக எதையெல்லாமோ சொன்னான்.”
“ஆனால் அதையெல்லாம் விட்டு என்னை கல்யாணம் செய்து கொள்ளப் பார்க்கிறீர்கள் .என்னுடைய கேள்விக்கு இன்னமும் நீங்கள் பதில் சொல்லவில்லை. நான் சம்மதிக்க வேண்டுமென்பதற்கு ஏதாவது ஒரு காரணம் சொல்லுங்கள்”
“நீங்கள் ஓர் இலட்சியவாதி. இல்லாவிட்டால் உங்கள் குடும்பத்தை எதிர்த்துக் கொண்டு கண்டிப்பாக அவளை எப்போதோ கல்யாணம் செய்து கொண்டிருபீர்கள்
“என்னால் சமாளித்திருக்க முடியாது”
“படிப்பை விட்டுவிட்டு வேலை தேடிக் கொண்டிருக்க வேண்டும். நம் விருப்பத்தை நிறைவேற்றியே ஆக வேண்டுமென்றால் அதற்கான வழியை நாம் தான் கண்டறிய வேண்டும்.அவளுக்காக உங்கள் வாழ்க்கையை நீங்கள் இழக்கத் தயாராக இல்லை.நீங்கள் ஒரு யதார்த்தவாதி என்பதால் உங்களால் அப்படிச் செய்யவும் முடியாது. இவ்வளவு நாட்கள் நீங்கள் அவளைக் கல்யாணம் செய்து கொள்ளாததே நான் சொல்வது சரி என்பதை உறுதி செய்கிறது”
அவனுக்குக் கோபம் வந்தது.” போதும். நான் இவ்வளவு நேரம் உங்களுடன் எப்படிப் பேசிக் கொண்டிருந்தேன் என்று தெரியவில்லை. அப்போதே உங்களை வெளியே பொகச் சொல்லியிருக்க வேண்டும் . இனி மேல் என்னைப் பார்க்க வரவேண்டாம்”
அவள் சிரித்தாள். “உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது தெரியுமா? யாருக்குமே தங்களைப் பற்றிய உண்மையைச் சொல்லும் போது பிடிப்பதில்லை. குறிப்பாக அது ரம்யமாக இல்லாத போது..
“நீங்கள் மட்டும் ஒரு பெண்ணாக இல்லாவிட்டால் நான் உங்களைத் தூக்கி எறிந்திருப்பேன்”
” என் தொலை பேசி எண் இது. நம்முடைய பிரச்னைகளைத் தீர்க்க இது ஒன்றுதான் வழி.உங்களுக்கு இது சரியென்று படும் போது தொடர்பு கொள்ளுங்கள். ரொம்ப நாள் என்னால் காத்திருக்க முடியாது”
சில நாட்கள் கழித்து அவன் அவளைக் கூப்பிட்டான்.” நான் உன்னைத் திருமணம் செய்து கொண்டால் அருணா சம்பந்தமான சத்தியத்தை நீ காப்பாறுவாயா?”
“கண்டிப்பாக ”
இன்னும் ஒரு வேண்டுகோள் . அந்தக் குழந்தைக்கு நான் தந்தையல்ல என்ற உண்மை தெரியவே கூடாது”

“அவள் மிகவும் அழகானவள் என்று எனக்குத் தெரியும்.நான் முதலில் அவளைப் பார்த்த போது நாற்பது வயதிருக்கலாம்.என்றாலும் என்ன அழகு? முன்பின் தெரியாத மனிதனோடு அப்படி ஒரு முட்டாள்தனமான பேரம்
ஏற்படுத்திக் கொண்டு அவனுடன் வாழ்ந்ததை இன்னமும் நம்ப முடியாமல் தானிருக்கிறது.. அவள் உன் தந்தையை விட்டு வெளியேறி இருக்கலாம்”
“உண்மையில் எனக்கு அவளைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது” நீலம் சொன்னாள். சஞ்சுவை அந்த அறைக்குள் கொண்டு கொண்டு வந்து படுக்க வைத்தாள். விளையாடும் குழந்தையைப் பார்த்து “ஒரு காலத்தில் நானும் உன்னை மாதிரி மகிழ்ச்சியாக விளையாடி இருக்க வேண்டும்.நீ லக்கி.
“திருமணம் நிச்சயமான போது எல்லாம் தவறாகிப் போனது. என்னுடைய நிச்சயதார்த்தம் அதற்கு காரணமா என்பது எனக்குப் புரியவில்லை”
“ஏன்”
“அவளுக்கு நான் மகிழ்ச்சியாக இருந்தது பிடிக்கவில்லை. பெண்ணுக்குரிய உபாதைகளால் பாதிக்கப் பட்டிருந்தாள். நான் உங்களுடன் நீண்ட நேரம் இருப்பதையும் ,தாமதமாக வீட்டுக்கு வருவதையும் அவளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.நம்மால் ஒருவரை விட்டு ஒருவரால் இருக்க முடியாதென்றால் ஏன் சீக்கிரமாகக் கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது என்று சண்டை போட்டாள். படிப்பை முடியும் வரை காத்திருக்க வேண்டும் என்று முடிவு செய்ததைச் சொன்ன போது அதை ஏற்றுக் கொள்ள மறுத்தாள். உன்னை சீக்கிரம் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் அல்லது உன்னைப் பார்ப்பதை விட்டு விட வேண்டும் என்று சொல்லும்படி அப்பாவை வற்புறுத்தினாள். எல்லோரும் நம்மைப் பற்றியே பேசுவதாகவும், நாம் திருமணம் செய்து கொள்ள முடியாமல் போய் விட்டால் வேறு மாப்பிள்ளை கிடைப்பது கடினம் என்றாள். நான் சிரித்தேன். இதில் தான் தலையிடப் போவதில்லை எனவும் இந்த மாதிரி பிரச்னைகளை முடிவு செய்ய என்னால் முடியுமென்று அப்பா சொன்னார். அப்பாவிடம் இதுதான் எனக்கு மிகவும் பிடித்தது. ஒரு குழந்தையை எப்படி வளர்ப்பது என்றும், பெற்றோர் கட்டுப்பாட்டிற்குள் எப்போதும் வைத்திருப்பது தவறு என்றும் அவருக்கு தெரிந்திருந்தது.”
“நீ எப்போதும் அவருக்கு தனி மதிப்பு தந்திருக்கிறாய்”
“ஆமாம். அப்பாவிற்கு அம்மாவை விட என்னைத்தான் பிடித்திருக்கிறது என்ற பொறாமை உணர்வை ஒரு நகைச்சுவை போல அம்மா சொல்லி யிருக்கிறாள்”
“அது ஒரு கசப்பான வருத்தம் தான். உன்னை நேசித்த அளவுக்கு அவர் அவளை நேசிக்கவில்லை என்பதுதான் வேதனை.

“நான் உங்களிடம் பேச வேண்டும்”சுமித்ரா சொன்னாள். அவன் பெயரை அவள் எதற்கும் பயன் படுத்தியதில்லை. அவனும் அதை வற்புறுத்திய தில்லை.இந்த இருபது ஆண்டு கால வாழ்க்கையில் மிகக் குறைவாகவே அவள் அவன் அறைக்கு வந்திருக்கிறாள். நீலம்தான் அவர்களுக்கான ஒரே பேச்சாக இருந்திருக்கிறாள். நீலத்தின் மீது அவனுக்கிருந்த பிரியம் ஆரம்பத்தில் சுமித்ராவுக்கு மகிழ்ச்சி தருவதாக இருந்தது. தான் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டதால் குழந்தையை அவன் வெறுப்பான் என்று அவள் நினைத்தாள். ஆனால் அவளுக்கு எதிரான இன்னொரு ஆயுதம் நீலம்தான் என்பது பிறகுதான் தெரிந்தது.
“உள்ளே வந்து உட்கார். என்ன விசயம் ” மனோகர் கேட்டான்.
“அருணாவை நீங்கள் விட்டு விட வேண்டும் ” அவள் நேரடியாகத் தொடங்கினாள்.
“என்ன?”அதிர்ந்து போனான்.
“இருபது நீண்ட் வருடம் நம்மிடையே வேடிக்கையான பேரம் ஆக இருப்பது தெரியவில்லையா?
நான் அறிந்தவரை நம்முடைய பேரத்திற்கு கால எல்லை கிடையாது.”
“இப்போது ஓர் எல்லை வேண்டுமென்கிறேன் நான்”
“என்னைக் கேட்க உனக்கு என்ன அதிகாரமிருக்கிறது?”
“நான் உங்கள் மனைவி”
“பெயரளவில்”
“அதுதான் உண்மை என்றாலும் அதை நான் மறக்க ஒரு போதும் நீங்கள் அனுமதித்ததில்லை” அவள் சிரித்தாள்.நீங்கள் மென்மையானவர் என்று நினைத்தேன். சமூகத்தின் எதிர்ப்பைக் கண்டு பயந்து தான் உங்களிடம் வந்தேன். ஆனால் நீங்கள் நான் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு என்னைப் புறக்கணித்து விட்டீர்கள்.எந்த தவறாக இருந்தாலும் அதற்கான தண்டனை ஆக இருபது வருடங்கள் அதிகம் தான் என்பதை நீங்கள் உணரவில்லைய?”
“நான் தண்டித்தேனா? நான் உன் குழந்தைக்குத் தந்தையாக இருக்கிறேன். வீடு, பாதுகாப்பு, கௌரவம் எல்லாவற்றையும் தந்திருக்கிறேன்.”
“தேவைப் பட்டதைத் தவிர எல்லம் தந்தீர்கள்.அவை உண்மையில் எனக்குத் திருப்தியைத் தந்தது என்று நினைக்கிறீர்களா?”
“நீ கேட்டது அதைத்தானே?”
“அதிகமாக எதையும் கேட்கும் சூழலில் நான் அப்போது இல்லை.இளமை,அனுபவமின்மை, வேகம் எல்லாம் என்னிடம் …. பேரம் செய்ய எதுவும் இல்லை. என்னுடைய சத்தியத்தை இவ்வளவு ஆழ்மாக எடுத்துக் கொள்வீர்கள் என நான் நினைக்கவில்லை. காலப் போக்கில் என்னை விரும்புவீர்கள் என்று நினைத்தேன். தவறாகத் தொடங்கின வாழ்க்கை என்றாலும் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று நம்பினேன். நீங்கள் வாய்ப்பு தந்திருந்தால் கண்டிப்பாக நிம்மதியாக இருந்திருக்க முடியும். ஆனால் மறுத்து விட்டீர்கள் .நீங்கள் தன்னலவாதி” அவளுக்காக இரக்கப் படுவதைத் தவிர அவனுக்கு அப்போது எதுவும் தோன்றவில்லை.” எனக்கு பெயர்கள் தருவதில் பலனில்லை. இது நாமிருவர் மட்டும் சம்பந்தப்பட்ட விவகாரமில்லை. அவள் தனக்கான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கலாம்.ஆனால் எல்லாவற்றையும் எனக்காக விட்டுக் கொடுத்தாள்.”
“நீங்கள் இருவரும் நீண்ட காலம் மகிழ்ச்சியாக இருந்தீர்கள் . போதாதா?”
“நான் என்ன செய்ய வேண்டுமென்கிறாய்?”
“அப்படியே விட்டு விடச் சொல்லவில்லை.பணம் கொடுத்து உதவுங்கள். இங்கிருந்து போகச் சொல்லுங்கள். நாமிருவரும் சில வருட்ங்கள் வாழ்ந்தாக வேண்டும்.”
அவளது நன்றியற்ற தன்மை அவனை அதிர்ச்சிப் படுத்தியது.
“அது முடியாது”
“அது தான் உங்கள் முடிவா?”
“ஆமாம்”
“அப்படியானால் எனக்கு ஒரு வழிதான் இருக்கிறது. நீலத்திடம் அவள் தந்தை யார் என்பதைப் பற்றிச் சொல்வதைத் தவிர வேறு வழியில்லை”
“சொல்லி விடுவாயா?அவ்வளவு தைரியமா?”
“சொல்ல மாட்டேனா? பொறுத்திருந்து பாருங்கள்.நீலத்தை வைத்துதான் நான் உங்களை தண்டிக்க முடியும்’”
அவன் கலங்கிப் போனான்.
“கொஞ்சம் டயம் கொடு. ”
“இருபது ஆண்டுகள் பொறுத்தாயிற்று”
“நீ ஏதோ எனக்கு சலுகை காட்டிய மாதிரி பேசுவது..”
“ஒரு வாரம் டயம் தருகிறேன்”
“இது பிளாக் மெயில்.”
“இதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை.’
சாந்தமாக இருந்த சுமித்ரா இப்படி திடீரென முடிவு செய்தது ஆச்சர்யம் தான்.இரக்கம் .. அவன் இப்போதாவது ஒப்புக் கொண்டுதானாக வேண்டும்

“எனக்கு அருணாவை நினைத்தாலும் ஆச்சரியமாய் இருக்கிறது” நீலம் சொன்னாள்.”அப்பாவோடு நீண்ட காலம் வாழ்ந்தவள்.நான் அறியாத அப்பாவின் இன்னொரு பக்க வாழ்க்கையை அறிந்தவளென்பதால் நான் அவளைப் பார்க்க விரும்பினேன்.அப்பா இறந்த பிறகு ,சுடுகாட்டில் தனியொருத்தியாக கொஞ்சம் தொலைவில் நின்று கொண்டு அடக்க மாட்டாமல் அழுது கொண்டிருந்தாள். அவள் யாராக இருக்க முடியுமென்று ஆச்சரியப் பட்டேன்.
“நீ ஏன் அவர்களைப் பார்த்து பேச முயற்சி செய்யவேயில்லை?”
’”எனக்கு பயமாக இருந்தது”
“நீ உண்மையைப் பார்த்து பயந்தாய்”
“இருக்கலாம். தெரியாதவர்களைப் பார்க்கவும் எனக்கு பயம்.அடையாளம் தெரியாத ஒரு மனிதரை அப்பா என்று அறிய எனக்கு மனமில்லை.என்னிடம் இருப்பதை அப்படியே தக்க வைத்துக் கொள்ளத் தான விரும்பினேன்.”

மனோகர் அன்று மாலைஅருணாவைப் பார்க்கப் போன போது சரித்திரம் திரும்புவதாக நினைத்தான். யார் வாழ்க்கையின் முடிவு கட்டத்தில் இருக்கிறார்கள் என்பது தெரியாதது போல இருந்தது. அருணா கதவைத் திறந்தாள். வீட்டை விட அதிகமாகத் தங்கின அந்த வீட்டிற்குள் நுழைந்தான். அமைதியாகவும், சிரித்த முகத்தோடும் அவள் இருந்தாள். எனினும் எப்போதும் முகத்தில் தெரியும் ஒருவித சோகத் திரையுடன் தவிர்க்க முடியாத நடக்கவிருக்கும் முடிவை அறிந்தவள் போல … அவளிடம் அதைச் சொன்ன போது அதிகமாக வியப்படைந்தவள் போல காட்டிக் கொள்ள வில்லை.
“எது உங்களுக்கு சரியாகப் படுகிறதோ அதைச் செய்யுங்கள்.”
“அது என்னுடைய முடிவாக மட்டும் இருக்க முடியாது.”
“இல்லை. உங்களுடைய முடிவாகத்தான் எப்போதும் இருந்திருக்கிறது. உங்கள் முடிவுகளுக்கு பொறுப்பானவளாக நான் இருக்க விரும்பவில்லை”
“நீ என்ன செய்வாய்? கேட்டான்.சுமித்ராவுக்கு உதவிய மாதிரி காலம் அருணாவிடம் மென்மையாக இருக்கத் தயாராக இல்லை. இளமையை இழந்து பருத்து ,கருத்துப் போயிருந்தாள்.
நீங்கள் முடிவு செய்தாகிவிட்டது மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். “அம்மாவுக்கு வயதாகி விட்டது. பார்த்துக் கொள்ள ஆள் வேண்டும். நான் அங்கே போய் விடுவேன்” பரிகாசம் ஒலிக்கச் சொன்னாள்.
“நிஜமாகவே நீ பெரிதாகப் பொருட்படுத்த மாட்டாயல்லவா?”
“நான் அப்படி ஒரு சூழ்நிலையிலேயே இல்லை.”
“நீ அப்படி நினைத்தால் நாம் இதை மற்ந்து விடலாம்”.
“நீங்கள் என்னை வெறுக்கிறீர்களா? காதலையும் ,நம்பிக்கையுயையும் சார்ந்த நிலையிலான நம் வாழ்க்கையில் இரண்டும் போன பிறகு வெறும் உறவு தொடர்வது சாத்தியமா?”

“அவர் தற்கொலை செது கொண்டார் என்று நீ நினைக்கிறாயா”நீலம் கேட்டாள்.
“அப்படி நான் நினைக்கவில்லை. இதுமாதிரி மரணம் நிகழ்கிற போது அது தற்கொலையாகத்தான் இருக்க முடியும் என்ற எண்ணம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. சாலையைக் கடந்து தன் காரை நோக்கி நடந்து போகிற போது பஸ் மோதியதுதான் நிஜம்.”
“நான் இன்னமும் அது விரும்பிச் செய்ததுதான் என்றே நினைக்கிறேன்”
“உன் அம்மாதான் அவர் தற்கொலைக்குத் தூண்டியிருக்க வேண்டும் என்று அம்மாவைப் பொறுப்பாக்குகிறாய்”


“நீலம்! நீ உன்னை சமாதானப் படுத்திக் கொள்ள வேண்டும் “நாளின் பெரும் பொழுதில் விட்டத்தையே வெறித்துப் படுத்திருக்கும் நீலத்திடம் அம்மா சொன்னாள்.
“வசந்தோடு எங்கேயாவது வெளியே போய் விட்டு வாயேன்”
“நான் எங்கும் போக விரும்பவில்லை”
“வசந்துக்காக உன்னை நீ மாற்றிக் கொள்ள வேண்டும். உன் தந்தையின் மரணத்துக்காக இவ்வளவு நாள் நீ துக்கம் கொண்டாடுவது வித்தியாசமாகத் தெரிகிறது”
“வசந்திடம் எப்படி நட்ந்து கொள்ள வேண்டுமென்று எனக்குத் தெரியும்.நீ பாடம் நடத்தத் தேவையில்லை. நான் உன்னுடைய இடத்தில் இருந்தி ருந்தால் என் கணவன் மறைவிற்கான துக்கம் சொல்ல முடியாததாக இருந்திருக்கும். நான் வித்தியாசமாக நடந்து கொள்ளவில்லை. நீ நடந்து கொள்வதுதான் வேடிக்கையாக இருக்கிறது. அவருக்காக உன்னால் அழக் கூட முடியவில்லையே. நெருக்கமான ஒன்றை இழந்த யாரும் அதற்காக வருத்தப் படாமல் இருக்க மாட்டார்கள்”
“எனக்குக் கிடைக்காத ஒன்றைத் தான் நான் இழந்திருக்கிறேன். காதலைத் தவிர வேறு எல்லாவற்றையும் எனக்குத் தந்தார். கிடைக்க வேண்டியது யாருக்கோ ..”
“அவர் இறந்த பிறகு அவதூறாகப் பேச உனக்கு எந்த உரிமையும் இல்லை”
“அது அவதூறு இல்லை. அதுதான் உண்மை”
“போதும் நிறுத்து. நான் எதையும் கேட்கத் தயாராக இல்லை”
அம்மாவின் அழ்கான நிறமான் முகம்.மூப்பின் காரணமாக பச்சை கலந்த கண்களில் இப்போது மஞ்சள் …நீலம் அம்மாவை பயத்தோடு பார்த்தாள்.
“இப்போதாதாவது என்னை நன்றாகப் பார். இதுவரை என்னை நீ முழுவதுமாகக் கூட பார்த்ததில்லை.அவர் தான் உனக்கு எல்லாமாக இருந்திருக்கிறார். நீ அவர் மகளில்லை. அவர் உன் அப்பாவாக இல்லாத பட்சத்திலும் கூட நீ காட்டும் அன்பு வேடிக்கையாகத் தான் இருக்கிறது. ” சொல்லி விட்டு தனக்குள் மென்மையாகச் சிரித்துக் கொண்டாள்.
“உனக்குப் பைத்தியம் பிடித்து விட்டது.”நீலம் அழுதாள். தப்பிக்க தனக்கு வழியே இல்லை என்று தோன்றியது. அம்மா சொல்வதைக் கேட்டுத்தானாக வேண்டும்.அம்மா சொல்வது உண்மை என்று புரிகிறது

“அவ்வளவு காலமாக மறைத்து வைத்திருந்ததைச் சொல்ல வேண்டுமென்று ஆசை அவளுக்குள் ஏன் வந்தது என்பதைத்தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அப்பா இறந்த பிற்கு அதை என்னிடம் சொல்வதால் அவளுக்கு என்ன பலன் கிடைத்திருக்க முடியும்” நீலம் கேட்டாள்.
“உன் மன அழுத்தத்திலிருந்து விடுவிக்க அவள் உனக்குத் தந்த அதிர்ச்சியாகவும் அது இருக்கலாம்.தான் காயப் படுத்தப் பட்டவள் என்பதால் இப்படித் தன்னை வெளிக் காட்டிக் கொள்ள விரும்பியிருக்கலாம்.”
“என்னை வேதனைபடுத்துவதுதான் அவள் நோக்கம் இல்லையா? என் அம்மாவே என்னைச் சிதைக்க நினைப்பது …நீங்கள் மட்டும் அன்று சரியான நேரத்தில் வந்திருக்கா விட்டால் நான் இன்று உயிருடன் இருந்திருக்க மாட்டேன்.”
“அவளைக் குற்றம் சொல்லாதே. நீதான் முழுக் காரணம். உன்னைப் பற்றிய உண்மையை ஏற்க உனக்கு தைரியமில்லை. மன பலமில்லை என்பதுதான் உண்மை”
“பலத்தைப் பற்றிய கேள்விக்கே இடமில்லை.இந்த நிலையிலான ஒரு பணக்காரப் பெண்ணை சாதாரண நிலையிலுள்ளவர் திருமணம் செய்து கொள்ள முடியும் என்று எதிர்பார்க்க எந்த உரிமையும் இல்லை”
” என்னைப் பற்றி நான் தான் முடிவு செய்ய வேண்டும் என்பதை நீ யோசித்துக் கூடப் பார்க்கவில்லையே”
“என் மீதான தவறு புரிகிறது”
“பலவற்றையும் நீ தவறாகவே புரிந்து கொண்டிருக்கிறாய் நீலம். வலையைப் பின்னியவனுக்கும் வலைக்குமான தொடர்பு போல இது இருவர் சம்பந்தப்பட்டது. அவசரம் அவசரமாக இந்த மாதிரியான ஏற்பாட்டிற்கு உன் அம்மா முன் வந்தது முதல் தவறு. அப்பாவின் மீதும் தவறு இருக்கிறது. பலவீனம் தான் அவரை அவ்வாறு முடிவெடுக்கத் தூண்டியிருக்கிறது.அவர் செய்திருக்க வேண்டியது இந்த யோசனையை விலக்கி விட்டு அருணாவைத் திருமணம் செய்து கொள்வது அல்லது உன் அம்மவைத் திருமணம் செய்து கொண்டு அருணாவை மறப்பது. ஆனால் அவர் தன் மனசாட்சிக்கு விரோத மில்லாமல் இருக்க விரும்பி தன்னையும் , இரு பெண்களையும் ஒரு தவிர்க்க முடியாத இக்கட்டுக்குள் கொண்டு வந்து விட்டார். உண்மையான அன்போடு மட்டும் இருந்திருந்தால் அவர் தன் திருமணத்திற்கு முக்கியத் துவம் கொடுத்திருக்க முடியும். ஆனால் அவர் லட்சியவாதியாக இருக்க விரும்பியதால் எல்லாம் தவறாகிப் போனது. மகிழ்ச்சியான திருமணம் என்பதை விட வீரமான தியாகமாக வாழ்க்கையை நினைத்ததுதான் பிரச்னை. உன் அம்மாவை உன்னிடமிருந்து பிரித்ததால் உனக்கும் அவர் தவறு செய்து விட்டார். அவர் இறந்த போதே நீ உன் பெற்றோரை இழந்தவளானாய்”
நீலம் அவனையே ஆச்சர்யத்துடன் பார்த்தாள்.
” நீ ஏன் இதை என்னிடம் சொல்லவில்லை”
“நீ இதைக் கேட்கத் தயாராகும் மனநிலைக்காகக் காத்திருந்தேன்”
ஆஸ்பத்திரியில் தனக்கு நினைவு திரும்பிய போது அம்மாவைப் பார்க்க மறுத்த அந்தக் கணத்தை நினைத்தாள். அதிர்ச்சியில் இருந்து மீண்ட பிறகு அம்மாவைதான் அவள் முதலில் பார்க்க விரும்புவாள் என்று உறவு எதிர்பார்த்தது. அது நடக்கவே போவதில்லை என்பது அவளுக்கு நன்றாகத் தெரியும்.
அவன் இதையெல்லாம் முன்பே என்னிடம் சொல்லியிருந்தால் நான் அவளைப் பார்க்கப் போயிருந்திருப்பேன். போயிருந்திருப்பேனா? அம்மா இறந்து போனதால் இப்படி நினைக்கத் தோன்றுகிறது. இருந்திருந்தால்
என்பது இப்போது இல்லை. இருந்தால் … ..என்பது முறிந்து போனதே.
——————

Series Navigationஆயுதங்களும், ஊழலும், மனித உரிமை மீறல்களும்அன்னா ஹசாரே -ஒரு பார்வை
author

முனைவர் தி.இரா மீனா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *