எனது இலக்கிய அனுபவங்கள் – 14 எழுத்தாளர்கள் சந்திப்பு – 1 (அகிலன்)

This entry is part 22 of 54 in the series 4 செப்டம்பர் 2011

சென்னை செல்லும்போதெல்லாம் இலக்கியப் பத்திரிகை அலுவலகங்களுக்குப் போய் பத்திரிகை ஆசிரியர்களைச் சந்திப்பது போல, பிரபல எழுத்தாளர்களைச சந்திப்பதும் ஆரம்ப காலத்தில் எனக்கு விருப்பமான ஒன்றாக இருந்தது. அத்தகைய சந்திப்புகள் பிறகு நட்பாகவும் நெருக்கமாகவும் வளர்ந்து இன்று வரை தொடர்கிறது.

முதன்முதல் எனக்கு அமரர் – தமிழின் முதல் ஞானபீட விருதாளர் – திரு.அகிலனுடன் ஏற்பட்ட சந்திப்பு தற்செயலானது. 1957 வாக்கில், என் உறவினர் ஒருவரின் திருமணம் நடந்த ஒரு சிறு கிராமத்தில் வைத்து நிகழ்ந்தது அந்த சந்திப்பு.

அதற்கு முன்பே, 1951ல் நான் கல்லூரியில் சேர்ந்த காலத்திலிருந்தே, கலைமகளில் வந்த அவரது கதைகளில் மனம் பறிகொடுத்து அவரது தீவிர ரசிகனாகி இருந்தேன். நானும் கதை எழுத வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது அவரது எழுத்துக்களைப் படித்த பிறகுதான். பின்னாளில் என் மகனுக்கு ‘அகிலநாயகம்’ என்றும், நான் கட்டிய என் வீட்டுக்கு ‘அகிலம்’ என்றும் பெயரிடும் அளவுக்கு நான் அவரது அதீத ரசிகனாக இருந்தேன்.

1950 களில், அவர் இளைஞர்களின் நெஞ்சைக் கவரும் இதமான, விரசம் சிறிதுமற்ற காதல் கதைகளும் நாவலும் எழுதியவர். அவற்றில் ‘காதல் பிறந்தது’ என்ற சிறுகதையும், ‘நெஞ்சின் அலைகள்’ என்ற கலைமகளில வந்த தொடர் நாவலும் இன்னும் என் நெஞ்சில் நான் அசை போடும் படைப்புகள். அது போலவே பத்திரிகையில் தொடராக வராமல் நேரடியாக நூலாக வந்து பல பதிப்புகள் கண்ட ‘சினேகிதி’ என்ற அற்புதமான காதல் நவீனத்தைப் பத்து தடவைக்கு மேல் கல்லூரிக் காலத்தில் படித்ததும், பார்ப்பவரிடம் எல்லாம் அதைப் படிக்கப் பரிந்துரைத்ததும் இப்போது நினைவுக்கு வருகிறது. பின்னாளில் அந்த நாவலைப் பகடி செய்து, ‘அமுதசுரபி’யில் அமரர் விந்தன் அவர்கள் ‘அன்பு அலறுகிறது’ என்ற தலைப்பில் நாவல் எழுதிப் பரபரப்பு ஊட்டினார்.

‘கலைமகள்’ அவருக்குத் தாய் வீடு போல. கி.வா.ஐ பெரிதும் ஊக்கமளித்தார். மறக்க முடியாத அற்புதமான சிறுகதைகளையும், நாவல்களையும் அவர் கலைமகளில எழுதி புகழின் உச்சியில் அக்காலகட்டத்தில் இருந்தார். கலைமகள் நடத்திய முதல் நாவல் போட்டியில் அவரது ‘பெண்’ எனும் நாவல் 1000ரூ. பரிசு பெற்றது. 50களில் அது பெரிய தொகை. தொடர்ந்து பல பரிசுகளை – ராஜா அண்ணாமலை செட்டியார் 10000ரூ. பரிசு, சாகித்யஅகாதமி விருது, ஞானபீடப் பரிசு என அவர் வாங்காத பரிசே இல்லை என்ற நிலைக்கு உயர்ந்தார். அப்போது டாக்டர் மு.வ. அவர்களுக்கும், அகிலன் அவர்களுக்கும் தான் ரசிகர்கள அதிகம். திருமணங்களில் அவர்களது நூல்களதான் அதிமும் பரிசாக வழங்கப்பட்டன. ஐம்பதுகளின் மத்தியில் ஜெயகாந்தன் பிரபலமாகும் வரை அவரது கவர்ச்சி இளைஞர் மத்தியில் மங்கவே இல்லை.

ஆரம்பத்தில் குறிப்பிட்ட நண்பரின் திருமணத்தில் கலந்து கொண்டது தான், அவர் பத்தாண்டுகளுக்கு மேலாக வெளி உலகுடன் தொடர்பு கொள்ளாமலும், தோனறாமலும் இருந்ததை மாற்றி மக்கள் மத்தியில் தோன்றிப் பங்கேற்ற நிகழ்ச்சி எனலாம். அதுவரை அவர் மிகப் பிரபலமாகி இருந்தாலும், அவரது போட்டோ கூட எந்தப் பத்திரிகையிலும் வெளி வந்திருக்கவில்லை. எந்தப் பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டதில்லை. தன்னை வெளிக் காட்டிக் கொளவதில்லை என்பதில் அவர் பிடிவாதமாக இருந்ததால் அவரை யாரும் எங்கேயாவது பார்த்தாலும் அவர் தான் ‘அகிலன்’ என்று தெரியாமல் இருந்தது. ஆனால் அந்த அஞ்ஞாதவாசத்தை உடைத்து அவர் வெளியே வரவேண்டிய நிர்ப்பந்தம் ஒன்று பின்னர் ஏற்பட்டதால் தான், அவர் வெளிப்பட்டார். நண்பரின் திருமணம் தான் அந்த முதல் நிகழ்ச்சி.

அவர் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாதிருந்ததை ஒரு எத்தன் பயன் படுத்திக்கொண்டான். அவரது தீவிர ரசிகர்களைத் தேடிச் சென்று, “நான் அகிலன். பயணத்தின் போது பர்ஸ் தொலைந்து விட்டது. பஸ்ஸுகுப் பணம் வேண்டும். போய் அனுப்பி வைக்கிறேன்” என்ற சொல்லிப் பலரிடம் கணிசமான தொகையை வாங்கி விட்டான். கண்மூடித்தனமான ரசிகர்களில் பலர் பதறிப்போய், போலி அகிலனுக்குப் பண உதவி செய்துள்ளனர். பிறகு யாரோ ஒரு சித்திக்கப் பொறுமை இருந்த ரசிகர் சந்தேகப்பட்டு அகிலனுக்குப் போன் செய்ய குட்டு வெளிப்பட்டது. பல நாள் திருடன் ஒருநாள் பிடிபட்டு சிறைக்குப் போனான். அதன் பிறகு அகிலன் விழித்துக் கொண்டார். பொது மேடைகளில் தோன்ற ஆரம்பித்தார். பத்திரிகைகளில் அவரது படத்துடன் அவரது படைப்புகள் வெளி வரத் தொடங்கின.

இந்த நிலையில்தான் அவர் என் நண்பரின் திருமணத்தில் பேச வந்திருந்தார். அந்தநாட்களில் பெருந் தனவந்தர்களின் வீட்டுத் திருமணங்களில் இசைக்கச்சேரிக்கு ஏற்பாடு செய்வது வழக்கம். இலக்கிய ஆர்வலர்கள் பிரபல பேச்சாளர்களை, திருமணத்தில் வாழ்த்திப்பேச அழைப்பதும் வழக்கமாய் இருந்தது. அகிலன் அவர்கள் பேசும் நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்கும்படி நண்பர் என்னைக் கேட்டுக் கொண்டார். அப்போது நான் அதிகம் பிரபலமாகி இருக்கவில்லை என்றாலும் அந்தக் குக்கிராமத்தின் அந்தக் கூட்டத்தில் அகிலனைப் பற்றி அதிகமும் அறிந்து வைத்திருந்ததும் அவரது ரசிகனாகவும் நான் மட்டுமே கிடைத்தேன். அகிலன் சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல சிறந்த பேச்சாளரும் கூட என்று அப்போது அறிந்தேன். அது முதல் அகிலன் அவர்களுடன் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது.

அவரது கதைகளையும், நாவல்களையும் அவை வெளியானதும பாராட்டி எழுதுவேன். அவரும் தவறாமல் பதில் எழுதுவார். பிறகு ஒரு நாள் அவரது திரையுலகப் பிரவேசம் நிகழ்ந்தது. கல்கியில் வெளியாகிப் பிரபலமாகி இருந்த ‘பாவை விளக்கு’ என்ற அவரது நாவல் சிவாஜி கணேசன் நடித்துப் பிரபலமாகப் பேசப்பட்ட பின், அவரது இன்னொரு நாவலான ‘வாழ்வு எங்கே’ ‘குலமகள் ராதை’ என்ற பெயரில் படமான போது தான் அவர் தான் பார்த்து வந்த இரயில்வே சார்ட்டர் பணியை ராஜிநாமா செயது விட்டு, திரைப்படத் துறையில் முழு நேரப் பணியாளராக நுழைந்தார் . அப்போது நான் அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன்.

முன்பு கலைமகளில் ‘மின்னுவதெல்லாம்’ என்றொரு கதை எழுதி இருந்தார். திரை உலகம் மின்னுகிற உலகம், அதில் சேர ஆசைப்பட்டு வாழ்வைப் பாழ்படுத்திக் கொள்ளக் கூடாது என்று அப்படி வாழ்வை நாசமாக்கிக் கொண்ட ஒரு நடிகையைப் பாத்திரமாக்கி அவர் எச்சரிக்கை விடுத்த கதை அது. அதை நினைவூட்டித்தான் நான் கடிதம் எழுதினேன். ‘திரை உலகத்தை மின்னுகிற உலகம் என்று எச்சரிக்கை விடுத்த நீங்களே அந்த மின்னுகிற உலகத்தில் நுழையலாமா?’ என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர், ‘நம்மைப் போன்ற படைப்பாளிகள் உள்ளே நுழைந்துதான் திருத்த வேண்டும். துணிந்து தான் இறங்குகிறேன். என்னால் முடியும் என நம்புகிறேன்’ என்று பதில் எழுதினார்.

ஆனால் ‘நாய் வாலை நிமிர்த்த அதைப் படைத்தவனே முயன்றாலும் முடியாது’ என்பதை அவர் விரைவிலேயே கண்டு கொண்டார். படைப்பாளிகளுக்கு மரியாதையோ, அவர்களது படைப்புக்குரிய அங்கீகாரமோ அங்கு கிடைக்காது என்பதை உணர்ந்து அதை விட்டு வெளியேறினார். வெளியே வந்த பிறகுதான் தான் பார்த்துக் கொண்டிருந்த நல்ல வேலை விட்டதன் கஷ்டம் பரிந்தது. கொஞ்ச நாட்கள் சிரமப் பட்ட பிறகு, நண்பர்களின் உதவியால் சென்னை வானொலியில் நிகழ்ச்சி அமைப்பாளராகப் பணி ஏற்று கடைசி வரை அதில் இருந்து ஓய்வு பெற்றார்.

அவர் சென்னை வானொலியில் பணியாற்றியபோது, நான் ஒரு விஷயமாயக அவரது யோசனையைக் கேட்க, சென்னை சென்று அவரது வீட்டில் சந்தித்தேன். அது 1966. நான் உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியராக அப்போது பணியாற்றிக் கொண்டிருந்தேன். ஆசிரியத் தொழிலை விரும்பித்தான் ஏற்றிருந்தேன் என்றாலும் எழுத்துத் துறையில் சேர வேண்டும் என்னும் எனது வேட்கை – பத்து ஆண்டுகளுக்கு முன் ஆனந்தவிகடன் மாணவ திட்டத்தில் ஆசிரியர் குழுவில் சேர விரும்பி அது கிடைக்காமல் போன பிறகும் – தீராமல், அகில இந்திய வானொலி புதிதாக அபப்போது கோவையில் தொடங்க இருந்த கிளை நிலையத்துக்கு ‘Script writer’ பதவிக்கு மனுச்செய்து, ஒராயிரம் பேர்களில் தேர்வு செய்யப்பட்ட 12 பேரில் ஒருவனாக, எழுத்துத் தெர்வுக்கு அழைககப் பட்டேன். என்னுடன் தேர்வு செய்யப் பட்டவர்களில் திரு.அசோகமித்திரனும், கவிஞர் தெசிணி என்கிற திரு.தெய்வசிகாமணியும் இருந்தனர். அந்தப் பணியில் சேர்வது விஷயமாகத்தான், அகிலன் அவர்களை அவர் வானொலியில் இருந்ததால் யோசனை கேட்கச் சென்றிருந்தேன்.

அவர் கேட்டார், “ஏன் இப்போது இருக்கிற பணியை விட்டு இதில் சேர விரும்புகறீர்கள்?” என்று.

“வானொலியில் சேர்ந்தால் எழுத்துத் துறையில் வளர்ச்சி பெறலாம் என எண்ணுகிறேன்” என்றேன்.

“அதுதான் இல்லை. வெளியே இருந்தால் பத்திரிகைகளில் சுதந்திரமாய் எழுதலாம். இங்கே அந்த சுதந்திரம் உங்களுக்குக் கிடைக்காது. பண்ணைச் செயதிகளிலும் உழவர் நிகழ்ச்சிகளிலும் ‘அவரை, துவரை’ என்று பேசிக் கொண்டிருக்கத்தான் முடியும். மேலும் இதில் பதவி உயர்வுக்கு ஆசைப்பட முடியாது. இப்பொது நீங்கள் பார்க்கும் தலைமை ஆசிரியர் பணி சமூகத்தில் கௌரமான பதவி. அந்த கௌரவம், சமூக அங்கீகாரம் இங்கே உங்களுக்குக் கிடைக்காது. என்னைப் பார்த்தீர்கள் அல்லவா? இதற்கு முயற்சிக்க வேண்டாம். பேசாமல் கௌரவமான தற்போதைய பணியிலேயே தொடருங்கள்” என்று சொன்னார்.

ஆனால் எனக்கு எழுத்தாளர் பதவி ஆசை கண்ணை மறைத்தது. அவரிடம் அப்போது ஏதும் மறுத்துச் சொல்லாமல் திருச்சிக்கு எழுத்துத் தேர்வுக்குச் சென்றேன். ஆனல் முன்பே அவர்கள் தீர்மானித்து வைத்திருந்த அத்துறையின் மூத்த ஊழியருக்கு அப்பதவி கிடைத்தது. எனது ஏமாற்றத்தை திரு.அகிலன் அவர்களுக்குச் சொல்லவில்லை. அதன் பிறகு அவருடன் இருந்த தொடர்பும் விட்டுப் போயிற்றறு. 0

வே.சபாநாயகம்.

Series Navigationஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 6அடுத்த பாடல்
author

வே.சபாநாயகம்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *