மொழிவது சுகம் நவம்பர் 1 2019

மொழிவது சுகம் நவம்பர் 1  2019
This entry is part 2 of 7 in the series 3 நவம்பர் 2019

அ. கேள்வியும் பதிலும்

அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தின் தொடக்கத்தில் நண்பர் நான்சில்நாடனும், இறுதியில் இரண்டு நாட்கள் காலசுசுவடு பதிப்பாளர்நண்பர் கண்ணனும் அவர் துணைவியாரும் எங்கள் இல்ல விருந்தினர்களாக வந்திருந்தனர். நாஞ்சிலாருடன் நிறைய உரையாடினேன். அதிகார அரசியல், எழுத்து அரசியல், கட்சி அரசியல் என இடைச்செருகல்களாகச் சிலவற்றை அவ்வப்போது விவாதித்தபோதும்,  அகத்தியரின் கமண்டலக் கங்கை நதி வற்றினாலும் நாஞ்சிலார் மனக்குடத்தில்அடைத்துவைத்திருந்த சொல் நதி   வற்றாத து என்பதைப் புரிந்துகொள்ள அனேகச் சந்தர்ப்பங்கள். போதாதென்று கம்பநாட்டானின் கவித்தேனை அள்ளி அளித் தருவார்.  இனிமையான தருணங்கள் அவை. அதுபோலவே சு.ராவின் எழுத்துக்களில் எனக்கு மோகம் உண்டு. பதிப்பாளர் கண்ணனை, சுராவாகவே பார்க்கிறேன், நேசிக்கிறேன்.

எழுத்துலகம் என்னை ஏமாற்றவில்லை. பிற உலகினும் பார்க்க மேன்மக்களை கொண்ட உலகம், சிற்சில குறைகள் இருப்பினும் சராசரி மனிதர்கள் அல்லர்.  

         அக்டோபர் பத்தொன்பது அன்று நண்பர் அலன் ஆனந்தன் சிறிய இலக்கிய நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தார். சிறப்பு விருந்தினர் நாஞ்சில் நாடன்.  அப்போது நண்பர் ஒருவர்  « கிருஷ்ணா » என்று எழுதுவது சரியா ? எனக்கேட்டார். கேட்டவர் மீது தவறில்லை. எந்த அதிமேதாவியோ எழுப்பிய கேள்வியின் எதிரொலி அது என்று எனக்குத் தெரியும்.அன்றாட உணவு, உடுத்தும் உடை,  சமயம் சடங்கு இவற்றில் தமிழ் மரபை மீறலாம்.  கிருஷ்ணா என்ற பெயரை தமிழில் நான் எழுதமறுப்பதால்தான்  தமிழின் வளர்ச்சியே  தடைபட்டிருப்பதுபோல குய்யோ முறையோ என கூச்சல். கள்ளை ஒதுக்கி விஸ்கி எடுக்கலாம், வேட்டியைத் தவிர்த்து பேண்ட்டைப் போடலாம், கறிச்சோறு பிரியாணி ஆகலாம். யாப்பிலக்கணத்தை உடைத்து புதுக்கவிதை எழுதலாம், யார்பெயரிலோ வடமொழிகலந்திருப்பது இவர்கள் தூக்கத்தைக் கெடுக்கிறது. எதிர் வீட்டுகாரன் நிலைப்படியை எப்படிவைத்திருந்தாலென்ன. அதுபற்றிய அக்கறை அவனைஅறிந்தவர்க்கும், அவன் தேடும் விருந்தினர்க்குரியதே அன்றி வீதியில் போகின்றவர்களுக்கு அல்லவே.  தொல்காப்பியத்தையும் நவீன இலக்கியத்தையும் நன்கறிந்த பேராசிரியர்களுக்கு எனது பெயர் விமர்சனத்திற்குரியதல்ல.  முப்பது ஆண்டுகால பிரான்சு வாழ்க்கையில் எனக்கு உயிர் தந்த மொழிக்கும்,  நலம் சேர்த்த மொழிக்கும் அணில்போல ஏதோ செய்திருக்கிறேன். பிரெஞ்சு மொழி சிந்தனையாளர் Marcel Proust  «  je pense donc je suis » (நான் சிந்திக்கிறேன் எனவே உயிர் வாழ்கிறேன்) என்பார்.   நண்பர்களிடத்தில் (அண்மையில் நாஞ்சில் நாடனிடமும்)அப்புகழ்பெற்றவரியை ‘நான் எழுதுகிறேன் அதனால் உயிர் வாழ்கிறேன்’ எனச் சொல்வதுண்டு.

தாய்மொழியும் வாழ்க்கை மொழியும் என்ற இக்கட்டுரை ஆப்பிளுக்கும், அல்வாவுக்கும் தமிழ்ச்சொற்களைத் தேடி வியர்வைசிந்தும்  மேற்படி பேராசிரிய வகையறாக்களுக்காகச் சமர்ப்பிக்கப்படுகிறது.

ஆ. தாய்மொழியும் வாழ்க்கை மொழியும்

அமெரிக்க அதிபரோ, சீன அதிபரோ இந்தியாவிற்கு  வருகை புரிந்தால், மகாபலிபுரத்தை உத்தியோக பூர்வ சந்திப்பு தளமாக அமைத்துக்கொண்டால்கூட இந்திய உடைக்கு முன்னுரிமை தருவதில்லை. மாறாக  இந்தியத் தலைவர்கள்  இத்தலைவர்களின் எல்லைக்குள் இந்திய பாரம்பர்ய உடையில் கால்பதிப்பதில்லை. காமராஜரும் காந்தியும், இந்தியப் பெண் பிரமுகர்களும் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. மேற்கத்திய தலைவர்களோ பிறரோ உங்கள் தலைவர்கள் « கோட்டு சூட்டின்றி வரவில்லையெனில் கைகுலுக்கமாட்டோம் ஒப்பந்தங்களில் கையொப்பமிடமாட்டோம் » என்று உடைகுறித்த நெறியை இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் வற்புறுத்துவதாக செய்திகள் இல்லை. இருந்தும் இந்திய எல்லைக்குள் வேட்டி சட்டை அணிபவர்கள்,  அதன் எல்லைக்கு அப்பால் கால் பதிக்கிறபோது, வேறு உடையில் காணவைப்பது எது ? என்ற கேள்வியின்  அடிப்படையிலேதான் தாய்மொழியையும் வாழ்க்கைமொழியையும் புரிந்துகொள்ளவேண்டும்.

தாய்மொழி : தாயின் மொழி, தாலாட்டு மொழி, அம்மாவும் அப்பா விளையாட்டில் மண் புட்டுடன் உதிர்ந்த மொழி, தம்பியுடன் சண்டையிட்ட மொழி, உணவு படைத்த தமக்கை , புரையேறுகிறபோது நம்முடைய தலையை வாஞ்சையுடன் தடவி  «மெதுவாய் சாப்பிடேன், ரயிலா பிடிக்கப்போற ! »  எனக் கண்டிப்புச் சூட்டில் கரிசனத்தை விளாவும் மொழி, உறவுகளுடனும்   நெருங்கிய   நண்பர்களுடனும் இயல்பாக உரையாட உதவும் மொழி.

வாழ்க்கை மொழி : வீட்டைவிட்டு வெளியில் வந்தால் கையாளும் மொழி. கடையில், பேருந்தில், அலுவலகத்தில், பொதுவெளியில், கல்விக் கூடங்களில், ஆய்வகங்களில், நமது குடிமரபுக்கு அந்நியப்பட்ட மனிதர்களிடத்தில் விருப்பமின்றி நிர்ப்பந்தத்தின் பேரில் உபயோகிக்கும் மொழி.

         ஆக தாய்மொழி  இயல்பாகவும், விரும்பியும்  உபயோகிக்கும் மொழி. வாழ்க்கைமொழி பிழைத்தெழவேண்டிய இடர்ப்பாடு காரணமாகவும், வேறுசில காரணங்களை முன்னிட்டும்  ஏற்றுக்கொண்ட மொழி.  

உலகில் ஒரு சில நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கே தாய்மொழியும் வாழ்க்கைமொழியும் ஒன்றாக அமைந்திருக்கிறது.  அவர்களில் முன்நிற்பவர்கள் ஆங்கிலேயரும், பிரெஞ்சுகாரரும், ஸ்பானியர்களும்.

பிரான்சுநாட்டின் இன்றைய மக்கள்தொகை 7 கோடி. இவர்களில்  49 இலட்சம் மக்கள் அந்நியர்கள் என்கிறார்கள்.  பிரெஞ்சுக் குடியுரிமைபெற்றிராத அந்நிய மக்களின் தொகை இது. எஞ்சியுள்ள  69.5 கோடிமக்களில் பிரெஞ்சுக்குடியுரிமைபெற்ற அந்நியர்களும் அடக்கம். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற பாடலை உண்மையில் பின்பற்றுகிறவர்கள் இவர்கள்தான். உலகத்தில் இனத்தால் சமயத்தால், நிறத்தால் வேறுபட்ட  நூற்றுக்கு மேற்பட்ட தாய்மொழிகொண்ட மக்கள் பிரான்சு நாட்டில் வசிக்கிறார்கள். இம்மக்கள் வீட்டில் தமிழ், அரபு, சீனம் என்று ஏதோ ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும்  வெளியில்வந்தால் அவர்களுக்கு வாழ்க்கைமொழியாக இருப்பது பிரெஞ்சு மொழி. விரும்பியோ விரும்பாமலோ வீட்டில் எந்த மொழி பேசினாலும் இந்த அந்நியர்கள் வாழ்க்கைமொழியான பிரெஞ்சு மொழியில் நாட்களைச் சுமப்பது கட்டாயம்.  பிரான்சுநாட்டில் வாழும் இந்த அந்நிய மக்களின்  தாய்மொழியின் இடத்தையும், அவர்களின் முதல் தலைமுறைக்குப்பின்னர் வாழ்க்கைமொழி ஆக்ரமித்துக்கொள்ளும். மொரீஷியஸ் தொடங்கி பல காலனி நாடுகளில் அரங்கேறிய உண்மை.

தமிழ் நாட்டின் வரலாறு  சுதந்திர வரலாறல்ல. களப்பிரர் தொடங்கி இன்றுவரை இதுதான் உண்மை. நம்முடைய உடலில்  நூறு விழுக்காடு  கீழடி மரபணு இருக்கக்கூடும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தெலுங்கர்களும், மராத்தியர்களும், கன்னடர்களும், பிறரும் வீட்டில் எந்த மொழி பேசினாலும் வாழ்க்கைமொழியாக தமிழை ஏற்றுக் கொண்டார்கள், பேசினார்கள், எழுதினார்கள்.  காரணம் தமிழே அன்றி தமிழர்களல்ல.

இன்றும்  தமிழ் நாட்டில் தமிழ்தான் தாய்மொழி ஆனால் நேற்றுபோல வாழ்க்கைமொழியாக இருக்கிறதா ?  இன்று தமிழ்நாட்டில் குடியேறும் அந்நியர் நேற்றைய தெலுங்கரைப்போல, மராத்தியரைப்போல தமிழை வாழ்க்கைமொழியாக கொள்ளவேண்டிய நெருக்கடி உண்டா ? தமிழ் நாட்டில் தமிழரே தமிழை வாழ்க்கைமொழியாக ஏற்பதில்லை.  புலம்பெயரும் மக்கள் வேறுவழியின்றி  உய்யும்பொருட்டு  பிறமொழியை வாழ்க்கை மொழியாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்களெனில்  தாய்த் தமிழகமக்கள் விரும்பியே அந்நியமொழியை வாழ்க்கைமொழியாக தெரிவு செய்கிறார்கள் என்பது ஒப்புகொள்ளபட்ட உண்மை.  தமிழ்நாட்டின் கல்விக் கூடங்களும் பெதுவெளிகளும் தெள்ளத் தெளிவானச் சாட்சியங்கள்.   

ஒரு மொழியின் வளர்ச்சி வாழ்க்கைமொழியாக அதை வளர்த்தெடுப்பதில் உள்ளது. ஆங்கிலமும் பிரெஞ்சும்  இலக்கியமொழி மட்டுமல்ல இன்று பலகோடி மக்களின் கல்விமொழி, அறிவியல் மொழி, வணிகமொழி, நவீன மொழி. மானுட வாழ்க்கையின் மாறுதல்களுக்கு இணையாக நித்தம் நித்தம்  தம்மைப் புதுப்பித்துக்கொள்ளும் மொழி.  தவிர, நவீன உலகின் நகர்வுகள் அனைத்தும் இம்மொழிபேசும் மக்களை முன்நிறுத்தி பின்செல்வதாக இருப்பதால் இம்மொழிசார்ந்த உடமைகளுக்கும் நாகரிகத்திற்கும் உபரிமதிப்பு கிடைத்துவிடுகிறது. ——————————————————-

Series Navigationமுடிவை நோக்கிய பயணத்தில் ….நாசாவின் வாயேஜர் – 2 விண்கப்பல் நாற்பத்தி இரண்டு ஆண்டுகள் தொடர்ப் பயணம் செய்து அண்டைப் பரிதி மண்டலத்திலிருந்து தகவல் அனுப்புகிறது

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *