தங்கத்திருவோடு

This entry is part 2 of 11 in the series 12 ஜனவரி 2020

நேற்று அந்த நீளமான பஃபே லைனில் பக்கத்தில் வந்து நின்றவர் தூரத்து நண்பர். மனநல மருத்துவர். ரொம்ப நாள் கழித்து பார்க்கிறோம். சம்பிரதாய விசாரிப்புகள் முடிந்தவுடன் தொழிலில் இருக்கும் சவால்கள் குறித்து பேச்சு வந்தது.

“சமீபத்துல ஒரு பேஷண்ட்.. எது பேசினாலும் பார்ப்பனர் பார்ப்பனர்னே முடிக்கிறாரு, வர வர தொண தொணப்பு ரொம்ப ஜாஸ்தியாகிட்டே போகுது, கொஞ்சம் என்னன்னு பாருங்கன்னு அவர் பிரண்ட்ஸ் கூட்டிட்டு வந்தாங்க… சரின்னு உக்கார வச்சி Rorschach test கொடுத்தேன்”

“அப்படின்னா”

“அதாம்பா.. ஒரு பேப்பரை எடுத்து அதுல ரேண்டமா இங்க் தெளிச்சி அதை ரெண்டா மடிச்சி லேசா கசக்கி விட்டு பிரிச்சி பேப்பர்ல என்ன தெரியிதுன்னு சின்ன வயசுல விளையாடுவோமே… அதான்! ஒருத்தரோட பெர்சனாலிட்டி, எமோஷனஸ் இதெல்லாம் புரிஞ்சிக்க யூஸ் பண்ணுவோம்”

“சரி…”

“கிட்டத்தட்ட 50 படங்கள் காமிக்கிறேன்.. எல்லாத்துக்குமே இது பார்ப்பன சதி, அது பார்ப்பன துரோகம், இதுல பார்ப்பனர் இத பண்றான், அதுல பார்ப்பனர் அத பண்றான்னே சொல்லிகிட்டு வர்றாப்டி… என்னப்பா எல்லாத்துலயும் பார்ப்பனரை பார்க்கிறேன்னா, நீங்க எல்லாத்தையுமே பார்ப்பன சதியா காமிச்சிட்டு என்னை குறை சொல்றீங்களா, நீங்களும் பார்ப்பனரான்னு…”

நான் குறிக்கிட்டு “xxxxx பத்திரிக்கையா?”

“அட, உனக்கெப்டி…” என்று ஆரம்பித்து டக்கென சுதாரித்து பல்லைக் கடித்துக் கொண்டார். அவர் தொழிலில் பேரையும் சொல்லக்கூடாது, ஊரையும் சொல்லக் கூடாது.

“கவலைப்படாத.. இது ஒன்னும் ரகசியம் இல்ல.. ஊர் உலகத்துக்கே தெரிஞ்ச விஷயம்தான், உனக்குதான் கடைசியா தெரிஞ்சிருக்கு.. பத்து வருசமாவே அவன் சோஷியல் மீடியால அப்படித்தான் இருக்கான்.. ஆனா அவன் நீ நினைக்கிற மாதிரி சவாலான பேஷண்ட்லாம் ஒன்னும் கிடையாது.. பக்காவான காரிய கிறுக்கன்.. அவன் இப்ப இருக்கும் இடத்துல செல்லுபடியாவுதுன்னு நடிச்சி நடிச்சி இப்ப அவன் வேஷமே இயல்பா ஆகிடுச்சிச்சே தவிர அவன் ஆரம்ப காலம் மாதிரியே இப்பவும் பார்ப்பனரால ஒரு காரியம் ஆகனும்னா வெக்கமே படாம…” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே சாப்பாடு டேபிளை அடைந்துவிட்டோம்… நீள க்யூவுக்கான காரணம் புரிந்தது. பஃபேவில் லைவ் ஆக சுடச்சுட ஆனியன் ஊத்தப்பம்.

**

தங்கத்திருவோடு மனநிலை என்று ஒன்று உண்டு. அதாவது ஒரு குமாஸ்தாவிடம் சென்று, இப்போ உனக்கு லாட்டரியில் 50 கோடி விழுந்தா என்ன செய்வே என்று கேட்டால், கடனெல்லாம் அடைத்துவிட்டு பங்களா, கார் என்று ஜாலியா இருப்பேன் என்பான். ஜாலி என்றால் எப்படி என்று விரிவாக சொல்லத்தெரியாது. அதே கேள்வியை ஒரு தொழிலதிபரிடம் சென்று கேட்டால் மிச்சம் 32 கோடிக்கு என்ன செய்வேன் என்பான். அவரவர் லெவலுக்கு மேல் சிந்திக்க முடியாதவர்களுக்கு தங்கத்திருவோடு மனநிலை என்று பெயர்.

+++

எல்லோரும் மறந்து போன தலைவர்களுக்கு பிறந்த நாள், நினைவு நாள் என்றால் இன்னமும் மறக்காமல் வாழ்த்து தெரிவிக்கும் ஒரு இயக்கம் என்றால் அது திமுக மட்டுமே. அதுவும் சும்மா ஒரு வார்த்தையில் சொல்லாமல் கூடவே இதுவரை யாருமே கேட்டிராத புத்தம் புது புனைவு ஒன்றையும் புதிதாக சமைத்துத் தருவது அவர்களின் வழக்கம்.

இன்று ராஜாஜியின் பிறந்த நாள் – “தனது தேசப்பணியைப் பாராட்டி சென்னையில் இருக்கும் கவர்னர் மாளிகையை தன் பெயரில் அரசாங்கம் எழுதித்தர வேண்டும் என்று ராஜாஜி கோரிக்கை வைத்தார். ஆனால் அன்றைய காமராஜர் அரசு சுயநலத்தோடு அதை மறுத்துவிட்டது” என்று வாழ்த்தியிருக்கிறார்கள்.

புகுந்து விளையாடவென்றே வருசம் ஒரு தடவை கிடைக்கும் அருமையான வாய்ப்பு எப்படி வீணடிக்கப்பட்டிருக்கிறது.

– ராஜாஜி தாஜ்மஹாலை தன் பெயரில் எழுதித்தரச் சொன்னார், காமராஜர் மறுத்துவிட்டார்

– ராஜாஜி அமெரிக்க வெள்ளை மாளிகையை தன் பெயரில் எழுதித்தரச் சொன்னார், காமராஜர் மறுத்துவிட்டார்.

இப்படியே லண்டன் ப்ரிட்ஜ், எகிப்து பிரமிட், நிலா என்று எவ்வளோ இருக்க, போயும் போயும் கவர்னர் மாளிகையோடு திருப்தி அடைவதற்குப் பெயர்தான் தங்கத்திருவோடு மனநிலை.

++++

ராஜாஜி கேட்டு காமராஜ் மறுத்ததற்கு ஆதாரம் சட்டசபை குறிப்பில் இருக்கிறது என்கிறார்கள்.

சட்டசபை குறிப்பு என்றால் என்ன?

“ஷண்முகி வீட்ல இல்ல”
“அதான் எனக்கு தெரியுமே”
“எப்படி தெரியும்?”
“இப்ப நீங்கதான சொன்னீங்க முதலியார்”

இதே வசனத்தை ஷண்முகியும் முதலியாரும் சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசினால், அதை அப்படியே ஒரு க்ளார்க் டைப்படித்து பதிவு செய்வார். அதுதான் சட்டசபை குறிப்பு. 30 வருஷம் கழித்து ஷண்முகி வீட்டில் இல்லாதது ஷண்முகிக்கு தெரிந்ததே முதலியார் சொல்லித்தான் என்று நிரூபிக்கலாம்.

அப்ப குறிப்பில் என்ன வேணாலும் இருக்குமா?
இருக்கும். மைனாரிட்டி திமுக அரசு என்று 13,549 தடவை இருக்கிறது. திருட்டு ரயில் என்று இருக்கிறது. கவர்னர் கையை பிடித்து இழுத்தார் என்று இருக்கிறது. இன்னும் என்னவெல்லாமோ இருக்கிறது. நம்ம தேர்ந்தெடுத்த பிரகிருதிகளின் எல்லா கேவலமும் அதில் பதிவாகி இருக்கிறது.

எல்லாமே என்றால் எல்லாமேவா?
இல்லை, தரை லோக்கலை விட கேவலமாக என்றால் மட்டும் அது நீக்கப்படும். உதாரணமாக ஒரு பெண் மக்கள் பிரதிநிதியின் கேள்விக்கு சிலேடை என்ற போர்வையில் அவரது பெண்மையை இழிவு செய்யும் வகையில் நாடாவை அவிழ்த்துப் பார்த்தால் தெரியும் என்றெல்லாம் யாராவது பேசினால் அது நீக்கப்படும்.

Series Navigationஆலயம் காப்போம்.என்.ஆர்.ஐகளுக்கு ஏற்படுகிற கலாச்சார அதிர்ச்சி
author

முகமூடி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *