இன்றைய சொர்கத்தின் நுழைவாயில்!

This entry is part 1 of 33 in the series 11 செப்டம்பர் 2011

“எல்லாம் ரெடியா? வா சீக்கிரம். ஏழு மணி ஆயிடுச்சு”, ஜிதாமித்ரனின் ஜாதகம் இனிமேல் அவனைத் தவிர வேறு எவருக்கும் தேவைப் படாது. அந்த அழைப்பு, அவன் மாமா ஸ்ரீவத்சவாவின் திருவாயிலிருந்து, வெற்றிலை தெளிக்க வெளிவந்தது. ஆம், மித்துவுக்கு திருமணம்!
ஜிதாமித்ரனுக்கு வீட்டில் செல்லப் பெயர், மித்து. ஜிதாமித்திரன், மித்ரனாகி, மித்ரன், மித்துவாகியதற்கான முழு பொறுப்பு அவன் அக்கா அர்ச்சனாவையே சாரும். சிறுவயது முதல் படிப்பையே குறியாக வைத்து வளர்ந்த மித்து, CA முடித்து சில வருடங்கள் ஆகிவிட்டது. அவன் எடுத்த ரேங்க்,
பெயருக்கு ஏற்றார் போல் எதிரிகளை வீழ்துவதாய் தான் அமைந்தது.
கணவனை இழந்த எல்லா மாதரையும் போல மித்துவின் அம்மாவும், பலருக்கு விடுத்த சவாலுக்கு சாந்தி செய்யும் நாளாக அந்த திருமண தினத்தை கருதினாள். தன் மகன், எல்லா எதிர்பார்ப்புகளையும் முழுவதுமாக பூர்த்தி செய்ததை எண்ணி அவள் பூரித்த நாள் அன்று. ஆனால், மித்துவின் முகத்தில் முத்துச் சிதறவில்லை!
“என்ன டா அப்படியே உக்காந்திருக்க? அலங்காரம் முடிச்சாச்சுல்ல? வா போகலாம்”, அவன் இருதளைத் தசையை இறுகப் பிடித்து இழுத்தாள்.

“அவசரப் படுத்தாதே மா. இரு வரேன்”, என்று திரும்பி நின்றான் மித்து.

“என்ன டா? இன்னைக்கு போய் இப்படி வீம்பு புடிக்கிற? வந்தவா எல்லாம் என்ன நெனைப்பா”

“கொஞ்ச நேரம் இரு”

“இன்னும் அதையே நெனச்சிண்டு இருக்கியா? அதான் மாமா முடியாதுன்னுடாரோல்யோ? எதுக்கு வம்பு? அவாள பகச்சிண்டு நம்மளால இருக்க முடியுமா?”

“நான் எதுவுமே சொல்லலையே! நீயா அப்படி நெனச்சிண்டா எப்படி? புத்திய தெளிவு படுத்திக்க கொஞ்சம் நேரம் வேணும்”

“இன்னும் என்ன நேரம்? அங்கே விஜயா காத்துண்டு இருக்கா. நீ இப்படி நேரம் கடத்தினா அவ என்ன நெனைப்பா?”

“அய்யயோ! சரி வரேன் போ”, முந்தானையின் பிடியில் மாட்டத் தயாரானான் மித்து.

“என்ன டா இவ்வளவு நேரம். போய் மேடையில ஏறு. பெரியவாள்ளாம் காத்துண்டு இருக்கா. அவா ஊருக்கு போக நாழியாறது”, மனதில் குழப்பத்துடன் மேடையில் தள்ளப் பட்டான். அவன் மேலேறி வருவதற்காக காத்துக் கொண்டிருந்த விஜயா, அவன் தலை தெரிந்ததும் அருகில் வந்து நின்றாள்.

“என்ன இவ்வளவு நேரம்? பொதுவா பொண்ணுங்க தான் லேட்டா வருவோம். இன்னைக்கு நீங்க லேட்”, வாயில் கை வைத்து நிந்தனை செய்தாள். சில நொடிகள் அமைதிக்குப் பின், ஏதொ தோன்றப் போக,
“அர்ச்சனாவை கால் செஞ்சு மேடைக்கு கூப்பிடு. சீக்கிரம்” என்றான் மித்து.

“ஏன்? உங்க அக்கா இப்போ எதுக்கு?”, அவள் கேள்விக்கு பதில் கூறாமல், மேடையின் ஓரத்தை நோக்கினான். தனக்கு வாழ்த்து சொல்ல காத்திருந்த ‘பெரிய’ மனிதர்கள் மேடை ஏறிவரத் தயாராக இருந்தனர்.

“இனியும் தாமதிக்கக் கூடாது. இந்த மாதிரியான சமயங்களில் முடிவெடுக்க ஒரே வழி தான். யோசிக்காம போட்டு உடச்சிடனும்”, அவன் மனம் சொன்னதற்கு மரியாதை கொடுப்பதே சரி என்று தோன்றியது. தான் நின்றிருந்த இடத்திலிருந்து கொஞ்சம் முன்னேறி, படம் பிடிப்பவர்களை பார்வையை பற்றினான்.

“என்ன வேணும் சார்?” அந்த நேரத்தில் மாப்பிள்ளை தன்னை நோக்கி எதற்காக வருகிறார் என்ற நடுக்கத்தில் புகைப்படம் எடுப்பவர்.
“சீக்கிரம் ஒரு மைக் கொண்டு வாங்க. கொஞ்சம் பேசணும்”, மித்துவின் செய்கையை எல்லோரும் விநோதமாய் பார்க்க, அவன் தன் தேவையை படம் பிடிப்பவரிடம் தெரிவித்தான். ஸ்ரீவத்சன் மாமா,

“என்ன மறுபடியும்? என்னை அசிங்கப் படுத்திப் பார்க்கணும்-னு உன் மகன் கங்கணம் கட்டிண்டு இருக்கானா?” என்று தன் தங்கையிடம் கண்கள் சிவந்தார்.

“நான் என்னன்னு கேக்கறேன். கோவப் படாதே”, சமாளித்துவிட்டு சபை ஏறினாள் மித்துவின் அம்மா.

“என்ன டா? எதுக்கு மைக்?”
“இரு மா. அவசரப் படாதே. என் மனசுல இருக்கறதை எல்லாம் எறக்கி வெச்சிட்டு நிம்மதியா கல்யாணம் செஞ்சிக்க நினைக்கறேன். என்ன தப்பு?”

“இதுக்கு நேரம் இது இல்லடா கோந்தே”, அதட்டலில் அடங்கவில்லை என்பதால் கொஞ்சலை கையில் எடுத்தாள்.

“உன் விருப்பத்தை மட்டும் நான் பூர்த்தி செய்யணும். ஆனா, எனக்கு எந்த ஆசையும் வரக் கூடாது-ன்னு நீ நினைக்கிறது நல்லா இருக்கா?” அவன் கேள்வி அன்னையை திடுக்கிடச் செய்தது. அமைதியாக ஒதுங்கி நின்றாள். ஒலிப்பெருக்கியில் மித்துவின் குரல் ஒலித்தது.

“தடங்கலுக்கு மன்னிக்கணும். என் கல்யாணத்தை சிறப்பிக்க உங்க நேரத்தை செலவிட்டதுக்கு நன்றி. ஆனா, எல்லா வரவேற்பு நிகழ்ச்சியையும் போல இல்லாம, கூடுதலா எனக்காக கொஞ்ச நேரத்தை ஒதுக்க உங்களை எல்லாம் கேட்டுக்கறேன்”, அவன் பேச ஆரம்பித்ததும் எரிச்சலடைந்த மாமாவின் கண்களில் கொப்பளம் வெடித்து குருதி கொட்டுவதைப் போல் இருந்தது.
மேலும் ஒரு வார்த்தை கூட கேட்கக் கூடாதென மாடிக்கு ஓடினார். மித்து,அவர் செல்வதை பார்த்தபடி தொடர்ந்தான்.
“இந்த நேரத்தில் மாப்பிள்ளை மைக் கேட்கறான்-னா உங்க எல்லாருடைய மனசிலும் என்ன தோணும்-னு எனக்கு தெரியும். ஆனா, நான் எனக்கு காதலி இருக்கா-ன்னு சொல்ல மைக் வாங்கல”
“அடடே!வடை போச்சே”, ஒரு இளவட்டம்.

“என் அம்மா ஆசை தான் என் ஆசை-ன்னு வாழ்ந்தவன் நான். ஓரளவுக்கு அவங்க ஆசையெல்லாம் தீர்த்தும் வெச்சிருக்கேன். ஆனா, எனக்கு இருக்கும் ஆசைகள் குறைச்சலானாலும், அதோட அளவு ரொம்ப பெருசு. அதை கொஞ்ச நாள் முன்னாடி அம்மா கிட்டயும், மாமா கிட்டயும் சொன்னேன். அவங்க அதுக்கு ஒத்துக்கல. நான் தப்பு சொல்லலை. அது ஒண்ணும் கேட்ட உடனே கொடுக்குறதுக்கு பொம்மை இல்லை. ஒரு தலைமுறையவே பாதிக்கிற ஆசை; நம்ம சடங்குகளை எல்லாம் சிந்திக்க வைக்கிற சோதனை”, அவன் பீடிகை எல்லோரையும் யோசிக்க வைத்தது. என்னவாக இருக்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

அவன் வார்த்தைகளை தவிற்க நினைத்தாலும், ஒலிப்பெருக்கியின் திரணுக்கு முன்னால் மாமாவின் மன திடம் பலிக்கவில்லை.அவன் அவரைப் பற்றிக் கூறியவுடன், அந்த சம்பவத்தின் பக்கங்களை தன் கொள்ளடக்கத்திலிருந்து குடைந்து எடுத்தார்.
அன்று..
“அண்ணா. இவன் ஏதோ சொல்றான் பாருங்கோ. எனக்கு ஒண்ணுமே புரியல”, விவாதத்தை கை மாற்றி விட்டார் மித்துவின் அம்மா.

“என்ன டா? சொல்லு”,பந்தலுக்கு பணம் கொடுத்துவிட்டு கணக்கெழுதிக் கொண்டிருந்தார் மாமா.

“எனக்கு ஒரு ஆசை இருக்கு”
“என்ன?”

“இந்த கல்யாணத்துக்கு எவ்வளவு செலவு செய்றோம்?”
“நம்ம செலவு ஒன்றரை லட்சம். அவா செலவு நாலுலேந்து அஞ்சுக்குள்ள இருக்கும்”
“ம்ம். நம்ம சடங்கு முறைக்கு ஒரு காரணம் இருக்கு இல்லையா மாமா?”

“நிச்சயமா டா. இல்லாமையா?உனக்கு தெரியாததா?”

“தெரியும். நம்ம குடும்பதவா, அவா குடும்பத்தவா எல்லாரும் வேலை பளுவுக்கு நடுவுல, கவலையெல்லாம் மறந்து ஒண்ணா, சந்தோஷமா இருக்கத் தானே இந்த விலை?”

“ஆமா டா. அது மட்டுமில்ல. நாம செலவு செய்யுற பணத்துல முக்கால் வாசி சாப்பாடுக்கும், வந்தவாள சந்தோஷமா வெச்சுக்கவும் தான் உபயோகமாறது”

“சரி தான். ஆனா, இந்த கல்யாணத்தை சந்தோஷத்தோட சேர்த்து, மனநிறைவோட முடிக்க ஒரு யோசனை என் கிட்ட இருக்கு மாமா”

“அது என்ன டா யோசனை?”
“நான் ஒரு வாக்குறுதியில கையெழுத்து போடப் போறேன்”, அவன் கூறிய சொற்கள், அவர் சிந்தனையை சீண்டியது. கணக்கு புத்தகத்தை மூடிவிட்டு, இவன் பக்கம் திரும்பினார்.

“என்ன கையெழுத்து? யார் கிட்ட?”
“என் உடலை தானம் செய்ய!”, அவன் தன் விருப்பத்தை சொன்னதும் சினங்கொண்டு எழுந்தார் அவன் மாமா.

“அவர் அன்னிக்கு என் விருப்பத்துக்கு தடை விதிச்சதுக்கு முதல் காரணம், சாங்கியம். அவருக்கு பதில் சொல்லி அசிங்கப் படுத்த நான் பேச நினைக்கல. அவருடைய நினைப்போடு பலர் இங்க உட்கார்ந்திருக்க வாய்ப்பிருக்கு. அவங்க சந்தேகத்தை தீர்க்க தான் மைக் எடுத்தேன்”, மித்துவுக்கு பதிலாக தன் கோபத்தை கொடுத்ததைப் பற்றி அவர் நினைத்துக் கொண்டிருக்க, அவன் குரல் மறுபடியும் இடை மறித்தது.

“எல்லாரும் உடல் தானம் செஞ்சா தெவசம் செய்ய முடியாது; சாங்கியங்கள் தடை படும்-னு நெனச்சிட்டு இருக்காங்க. ஆனா, அது ஒரு தவறான எண்ணம். எல்லா இடத்துலையும், தெவசம் முடிஞ்ச பிறகே உடலை எடுத்துட்டு போக அனுமதி இருக்கு. அதே சமயம், பால் ஊத்தி சாம்பலை கடலில் கரைக்கிறதே, நம்ம ஆன்மா நல்ல முறையில சாந்தி அடைய எண்ணித் தான். என் ஆன்மா, ஆராய்ச்சிக்கு என் உடல் உதவினா தான் சாந்தி அடையும்-னு நான் நினைச்சா, அதை நிறைவேற்றி வைக்கிறதுல என்ன தப்பு இருக்கு?அடுத்த கேள்வி..”
அவன் அடுத்த காரணத்தை கூறும்போது மாமாவிடமிருந்து விஜயாவின் மனதிற்கு கலக்கம் கரை சேர்ந்திருந்தது. அவள், தன் எதிர்கால கணவரிடம் சில நாட்கள் முன்பு கூறியது கண் முன் இமைத்து நின்றது.

அன்று.. “அது இருக்கட்டும். உன் வருங்கால ஆம்படையாளை பத்தி நினைச்சுப் பாத்தியா? அவ கிட்டயே கேட்குறேன். அவ என்ன சொல்றான்னு பாரு”, மாமா விஜயாவிற்கு அழைப்பு விடுத்து, மித்துவின் எண்ணத்தை தெரிவித்தார்.

“நீயே உன் ஆம்படையானிண்ட சொல்லு”, செல் கை மாறியது.
“சொல்லு விஜயா”

“உங்க நல்ல மனசு எனக்கு புடிச்சிருக்கு. ஆனா, ஒரு விஷயம் சொல்லணும். வெக்கமா இருக்கு” என்று சிணுங்கினாள்.
“சொல்லு பரவாயில்ல”

“உங்கள என்னை தவிர யாரும் ‘அப்படி’ பாக்கக் கூடாது”, என்று கூறிவிட்டு சிரிப்பில் நாணத்தை ஊரவைத்தாள்.

தான் சொன்னதை சபைக்கு நடுவில் அவர் கூறமாட்டார் என்று எண்ணிய விஜயாவிற்கு ஒரு அதிர்ச்சி. முகத்தை திரை பக்கம் திருப்பிக் கொண்டு, தோள் குலுங்கச் சிரித்துக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்து எல்லோரும் கிண்டலடித்தனர்.

“என்ன? எல்லாரும், இந்த பூனையும் பால் குடிக்குமா-ன்னு அவளை பாக்குறீங்களா? அவள் நினைக்கிறது சரி தான். எந்த பெண்ணுக்கு தான் தன் கணவன் ஆடை இல்லாம வேறொரு இடத்துல படுத்துட்டு இருக்குறது புடிக்கும்?ஆனா ஒரு விஷயத்தை நாம எல்லாரும் மறந்திடுறோம்”, கவனம் மறுபடியும் மித்துவின் பக்கம் திரும்பியது.
“வாழ்க்கை பூரா சமரசங்கள்ள சிக்கி கடைசி காலத்துல படுக்கையில படுக்கும் போது, எல்லா கிழவர்களோட கண்ணுலயும் ஒரு முறையாவது கண்ணீர் வரும். அதுக்கு காரணம், நரகத்தை கற்பனை-ன்னு கிண்டல் செஞ்சவங்க எல்லாருக்கும், அதை பத்தின பயம் வர்றது அந்த வயசுல தான்.
புண்ணியத்த சேத்து வைக்க தவரிட்டோமோ-ன்னு யோசிக்கிறதால வர்ற பயம் தான் அது. ஆனா, எனக்கு அப்படி ஒரு பயம் துளியும் இனி வரப் போறதில்ல. வாழ்க்கை பூரா ஒழச்ச பணத்தை ஆயிரம் பேருக்கு தானம் செஞ்சு சிலர் புண்ணியத்தை தேடிப்பாங்க; சில பேரை படிக்க வெச்சு பலர் சந்தோஷப் பட்டுப்பாங்க. இப்படி கஷ்டப்பட்டு புண்ணியத்தை செகரிக்கிறதுக்கு பதிலா,நான் ஒரே ஒரு கைஎழுத்து போடப் போறேன்; அவ்ளோ தான்! இது ஒரு சலுகை இல்லையா?
செத்ததுக்கு அப்புறம் நமக்கே தெரியாம எங்கயோ ஒரு இடத்துல அம்மணமா படுக்கப் போறதை நெனச்சு இந்த சலுகைய வேண்டாம்-னு சொல்லணுமா?”
இரண்டு கேள்விகளுக்கு ஒப்புக்கொள்ளும்படி பதில் கூறிவிட்ட மித்து, அடுத்த கேள்வியை மறுபடியும் மாமாவின் மூலமாகவே சபைக்குச் சொன்னான். ஆனால், அதற்கு பின் அவன் பேசியவையும், நடந்தவையும், விளம்பரப் படுத்தக் கூடியவையாக இல்லை.

காரணம், மூன்றாவது கேள்விக்கான பதிலை சபையோரை வசப்படுத்தும் விதமாக அவனால் விளக்க முடியவில்லை. அவன் பேச்சுக்கு அந்த சபையில் பெரிதாக வரவேற்பு ஒன்றும் கிடைத்துவிடவில்லை. எல்லோரும்,

“ஆரம்பம் அற்புதமாக இருந்தாலும், முடிவுக்கு மவுசில்லை”, என்று சந்தத்துடன் சாடிவிட்டு, மித்துவின் பேச்சை விதண்டாவாதம் என்றனர்.

ஆனால்,அதோடு கதை முடிந்து விடவில்லை. விடுபட்ட விடுகதைக்கு, 30 வருடங்கள் கழித்து பதில் கிடைத்தது.

அன்று வரை மித்துவை மண்டியிட வைத்த தனது ‘வெற்றி’ வினாவை எண்ணி பெருமிதப்பட்டுக் கொண்ட மாமா, அவன் வீட்டின் முன் தலை குனிந்து தெருவில் நின்று கொண்டிருந்தார்.

“உன் அப்பன் செத்து, என் தங்கை அனாதையா நின்னதையும் பாத்தேன். இன்னிக்கு, நீ சாகுறதையும் பாக்குறேன். எனக்கு என்னிக்கு சாவு வருமுன்னு தெரியலையே ஆண்டவா!” என்று புலபிவிட்டு, அப்போது தான் வெளியே வந்திருந்தார் அவர்.

“சின்ன வயசு பாவம். இப்போ எல்லாம் மாரடைப்பு எந்த வயசுல வருதுன்னே தெரியல”, என்று நொந்த படி நடந்து சென்றவர்களை பார்த்ததும், அன்று வரை மறதிக்காட்பட்டிருந்த தன் மூன்றாவது கேள்வியை நினைவுக் கேணியிலிருந்து தூண்டிலிட்டுப் பிடித்தார்.

“எங்கள தான் நீ மதிக்கல சரி; உனக்கும், உன் ஆம்படயாளுக்கும் கர்மக் கடனை முழுசா செஞ்சு நிம்மதி அடைய உன்னோட புள்ளயாண்டான் நினைக்க மாட்டானா? அவனுக்கு அந்த உரிமைய மறுத்து குற்ற உணர்சிக்கு அவனை அடிமையாக்க தயாராயிட்டியா?”

அவர் நினைவுகள் முழுவதுமாக முடிவதற்குள், மித்துவின் மார்பில் விழுந்தது ஒரு மிதி!

“அடப் பாவி! பெத்த அப்பன் செத்த அப்புறமும் இப்படி மிதிக்கறியே, நீ உருப்படுவியா?”, வெதும்பிக் கதறினாள் விஜயா.

“அப்பனாம் அப்பன். ரெண்டு வருஷமா படுக்கையில கிடந்த இவன் பீயை அள்ளினது போதாதா? இப்போ காரியம் வேற செய்யனுமா? யாரும் பேசக் கூடாது. நான் செய்யிறது தான் காரியம். சொல்லிட்டேன்” என்று கூறிவிட்டு வெளியே புறப்பட்டான்.

அவன் குரல் கேட்டதும் உள்ளே ஓடிச் சென்று விசாரித்த மாமாவிடம்,
“அண்ணே! இவன் கொள்ளி போட்டா இவர் கட்டை வேகாது. தயவு செஞ்சு நீங்களே இவரை வழி அனுப்பி வெச்சிடுங்க ” என்று கூறி காலில் விழுந்து புரண்டாள். அவர் விழிகளில் யாரோ வெந்நீர் ஊற்றியதைப் போல உணர்ந்தார்.

சற்றும் தாமதியாமல், ஓர் அறையினுள் சென்று மேல் தளத்திலிருந்த மித்துவின் பெட்டியை எடுத்தார். அதில் இருந்த ஆவணங்களை ஆராய்ந்து தனக்கு வேண்டிய படிவத்தை தேடி எடுத்தார். தன் செல்லில் அந்த படிவத்தில் இருந்த எண்னை அடித்து, பதிலுக்காக காத்திருந்தார். சில நொடிகளில் ஒரு குரல் கூறியது.

“மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ். சொல்லுங்க”

“என் மருமகன் உடல் தானம் செஞ்சிருந்தான். இன்னிக்கு அவன் இறந்து போயிட்டான். வந்து எடுத்துட்டு போக முடியுமா?”

” இறந்து நாலு மணி நேரம் ஆயிடுச்சா?”

“இல்ல. ஒரு மணி நேரம் தான் ஆச்சு”

“சரி விலாசம் சொல்லுங்க. ஆம்புலன்ஸ் அனுப்பறோம்”
அடுத்த அரை மணி நேரத்தில் அமரர் ஊர்தி அவ்விடத்தை அடைந்தது. வெளியில் காத்துக் கொண்டிருந்த மாமா,
“வாங்க. உள்ளே தான் வெச்சிருக்கோம்” என்று அழைத்துச் சென்றார். தன்னிடம் இருந்த ஆவணத்தை வந்தவரிடம் கொடுத்தார்.

“சார் நாங்க பாடியை எடுத்துட்டு போகணும்-னா வாரிசுகள் யாரும் தடுக்கக் கூடாது. எழுத்துப் பூர்வமா இதுல கையெழுத்து போடமுடியுமா?”

அவர் கேட்ட கேள்வி மாமாவை குழம்ப வைத்தது. வெளியே சென்றிருக்கும் மித்துவின் புத்திரன் என்ன செய்வானோ என்ற பதட்டம், கைகளை பிசைய வைத்தது. விஜயாவிடமும், மித்துவின் புதல்வி கீதாவிடமும் கையெழுத்து வாங்கி விட்டு, அடாவடிக் காரனின் வருகைக்காக காத்திருந்தார் மாமா. சில நிமிடங்களில் அவனும் வந்தான்.

“என்ன இங்க கூட்டம்? எதுக்கு ஆம்புலன்ஸ்?” என்று மிரட்டினான். தயங்கிய படி, “உங்க அப்பா உடல் தானம் செஞ்சிருக்கார். அவர் உடலை எடுத்துட்டு போக தான்” என்றாள் விஜயா. எல்லோரும் அவன் கூறப் போகும் பதிலை எதிர்நோக்கி காத்திருக்க,

“நிம்மதியா போச்சு. சனியன் ஒழுஞ்சிது. எனக்கு காசு மிச்சம். சார்! ஏதாவது பணம் குடுப்பீங்களா?” என்றான் திருமகன்.

“அதெல்லாம் கிடையாது சார். உங்க கையெழுத்து வேணும்” என்று காகிதத்தை நீட்டினார் வந்தவர்.

“கையெழுத்து தானே? பேஷா போட்டுடுறேன்”, பேனாவை வாங்கி,பல கனவுகளுடன் சூட்டப் பட்ட தன் பெயரை, சகட்டுமேனிக்கு சுழற்றினான். திரும்பத் தரும் முன்,

“இவருக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. இன்டர்நெட்-ல இவரு உடலுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும்-னு பாத்தேன். 3415 டாலர்-னு வந்துது. ஒரு டாலர் கூட குடுக்க மாட்டேன்-ன்னு சொன்னா எப்படி?இவருக்காக எவ்வளவு செலவு செஞ்சிருக்கேன் தெரியுமா ” என்றான்.

“இவரு தானம் செஞ்சிட்டாரு சார். அதெல்லாம் கிடையாது”, என்று குரலை உயர்த்திவிட்டு உடலை எடுத்துச் சென்றார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மாமாவிற்கு, தான் கேட்ட கேள்வி, மறுபடியும் மனதிற்குள் விரிந்தது. அதற்கான விடையையும் தானே கூறினார்.
“முதியோர்களுடன் மல்லுகட்ட முடியாததால், காப்பகங்களை தேடிக் கொண்டிருக்கும் சுயநல ஜடங்கள் திரியும் உலகில், குற்றவுணர்ச்சியாவது, கடனாவது! இவனுக்கு இன்னைக்கு ஏற்பட்ட நிலைமை, நாளைக்கு எனக்கு ஏற்படாது-ன்னு என்ன நிச்சயம்?”

அந்த பதில், அவரை நேராக தன் கணினியை நோக்கி நடக்கச் செய்தது. கூகிள்-ஐ திறந்து, “உடல் தானம் செய்வதற்கான படிவம்” என்று ஆங்கிலத்தில் எழுதித் ‘நுழை’ பொத்தானை தட்டினார். அவருக்காக திறக்கப் பட்டது,

உடல் தானப் படிவமும்!
சான்றோர்கள் வாழும் சொர்கமும்!

Series Navigation“மச்சி ஓப்பன் த பாட்டில்”
author

கண்ணன் ராமசாமி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *