(ஜீவா முழக்கம் இதழின் சுதந்திரப் பொன் விழா மலரில் – 1997 இல் – வெளிவந்த சிறுகதை. ‘வாழ்வே தவமாக’ எனும் தலைப்பில் கவிதா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)
சென்னைப் பட்டினம் மாரப்பனுக்கு அறவே அந்நியம். மல்லணம்பட்டிக்கு அப்பால் அவன் கால் பதித்ததே இல்லை. மிஞ்சி மிஞ்சிப் போனால், மிகச் சில கல் தொலைவில் உள்ள வத்தலக்குண்டு, பழைய வத்தலக்குண்டு ஆகிய ஊர்களுக்குப் போயிருந்தான். அவனுடைய தம்பி பெண் எடுத்திருந்த திண்டுக்கல்லுக்குப் போனதுண்டு. மற்றப்படி, பெரிய ஊர்களுக்கெல்லாம் அவன் போனதே இல்லை.
மறு நாள் சென்னைக்குப் புறப்பட்டுப் போகவேண்டிய கட்டாயத்தில் இருந்தான். மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் வேலை தேடிச் சென்னைக்குப் போய் அங்கு ஒரு மைய அரசு அலுவலகத்தில் பியூனாக அமர்ந்திருந்த வேலப்பனின் முகவரிக்கு அவன் மகன் வஜ்ஜிரவேலு எழுதிப்போட்ட கடிதத்துக்கு அவன் மறு தபாலில் – பழைய அன்பான நட்புறவை மறக்காமல் – பதில் அனுப்பியிருந்தான். பத்தாம் வகுப்பை முடித்திருந்த போதிலும், அவனுக்கு, அந்த ஊரே நினைத்துக்கொண்டிருந்தது போல், எழுத்தர் வேலை கிடைக்கவில்லை. அரசு அலுவலகம் ஒன்றில் பியூன் வேலைதான் கிடைத்தது. எனினும் சில தேர்வுகளை எழுதிக் கூடிய விரைவில் அவன் எழுத்தனாகிவிடுவான் என்று கேள்விப்பட்டிருந்த மாரப்பனுக்குத் தன் மகனுக்கும் ஒரு பியூன் வேலை தற்சமயத்துக்குக் கிடைத்தாலே போதும் எனும் எண்ணம் இருந்தது. விருப்பமும் விடா முயற்சியும் இருப்பின், வஜ்ஜிரவேலுவும் – பத்தாம் வகுப்பே முடிதிருந்தாலும் – வாழ்க்கையில் முன்னுக்கு வந்துவிடுவான் என்று மாரப்பன் எண்ணினான்.
தான் அதிகம் படிக்கவில்லையே என்கிற குறை மாரப்பனுக்கு நெஞ்சு நிறைய இருந்தது. ஏழாம் வகுப்பு வரையில் எப்படியோ படித்து முடித்திருந்த அவன் தட்டித் தடுமாறித் தமிழ்ப் பத்திரிகைகளைப் படித்துப் பழகியதில் கடிதம் எழுதுகிற அளவுக்குத் தேர்ச்சி பெற்றிருந்தான். கூலிவேலை செய்பவனாயினும் வஜ்ஜிரவேலுவைக் கல்லூரிப்படிப்பை முடிக்கவைக்க அவாவி யிருந்தான். ஆனால், மதிபெண்கள் மிகக் குறைவாக இருந்ததால், அதைப்பற்றிய கனவு நனவாகவில்லை. எனினும் அவன் அதற்காக இடிந்து போகவோ ஏமாற்றமுறவோ இல்லை. தன் மூதாதையரில் எவருமே ஏழு வகுப்புகள் கூடப் படித்திராத நிலையில் தன் மகன் பத்தாம் வகுப்பில் தேறியதை அவன் பெரிய சாதனையாகத்தான் எண்ணி மகிழ்ந்துகொண்டிருந்தான்.
வாசகசாலைக்குப் போய் அங்கு வரும் தமிழ்ப்பத்திரிகைகள் எல்லாவற்றையும் படித்துவிடும் பழக்கம் மாரப்பனுக்கு எப்போதும் உண்டு. அதனால், அதிகம் படிக்காவிட்டாலும் விவரம் அறிந்தவன் எனும் பெயரும் அதைத் தொடரும் மரியாதையும் அந்தச் சிற்றூரில் அவனுக்கு உண்டு.
தன் மகன் நிறைய மதிப்பெண்கள் பெறாததால் ஒரு பியூன் வேலையில்தான் அவனால் சேரமுடியும் என்கிற நிலையில் கொஞ்ச நாள்களுக்கு முன்னால் தான் படித்த ஒரு தகவல் அவனுக்கு ஞாபகம் வந்தது. வழிவழியாய்ப் படிப்பவர்களாக இருந்தால், அவர்களின் வழித்தோன்றல்கள் படிப்பில் கெட்டிக்காரர்களாக இருப்பார்களாம்! படிப்பு என்பதற்கு மட்டுமல்லாமல் வேறு எந்தத் துறைக்கும் விஞ்ஞானத்தனமான அந்த விதி பொருந்தக்கூடியதாம். தொழில் புரிபவர்களுக்கும் அது பொருந்துமாம். உதாரணமாக வழிவழியாக வணிகம் செய்பவர்களின் வழித்தோன்றல்களை வணிகம் எனும் துறையில் யாராலும் அடிக்க முடியாதாம். உடல் உழைப்பில் ஈடுபட்டுவந்துள்ளோரின் வழித்தோன்றல்களும் அப்படித்தானாம். அரை வயிற்றுக்குச் சாப்பிடுபவர்களே யானாலும் கடின உழைப்பில் அயராது ஈடுபடும் வன்மை உடையவர்களாக இருப்பார்களாம்.
இதைப்பற்றிய சிந்தனையில் ஈடுபடுவதற்கு மாரப்பனுக்கு வலுவான காரணம் இருந்தது. தன் மகனால் – அவன் விழுந்து விழுந்து படித்தும் – கல்லூரியில் சேருகிற அளவுக்கு இடஒதுக்கீட்டாளர்களுக்குரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டும் கூட நிறைய மதிப்பெண்களைப் பெற முடியவில்லை என்கிறகாரணமே அது. இது தொடர்ந்தால் பின் தங்கியவர்கள் முன்னேற வழியில்லை என்பதால்தான் அவர்களுக்கு அரசுப்பணிகளில் இடஒதுக்கீடு எனும் நியாயமான ஏற்பாடு அமலுக்கு வந்தது.
இடஒதுக்கீடு என்பது அரசுப்பணிகளில் மட்டுந்தானா? உயர்ச் சாதியினர் நடத்தும் ஓட்டல்களிலும் கூடத்தான்! இந்த நாளிலும் அவர்களுக்கென்று தனியாக இடத்தை ஒதுக்கிவைக்கிறார்களே! ஆனால் கேட்க முடியுமா? கேட்டுத்தான் பார்ப்பது என்று சில நாள்களுக்கு முன்னால் முடிவுசெய்து அவனது தூண்டுதலின்பேரில் நடந்த ஓட்டல் மறியலின் பின்விளைவுகள்தான் எவ்வளவு மோசமானவையாக இருந்தன! ஓட்டலை நடத்திக்கொண்டிருந்த காமராஜன் ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தது மாரப்பனையும் அவனுடைய முக்கியக் கூட்டாளிகளையும் அடியாள்கள் மூலம் அடித்துப்போடத்தான் வகை செய்தது. ‘பெருந்தலைவர் காமராஜரின் பெயரை வைத்துக்கொண்டு இப்படிச் செய்துவிட்டானே’ என்று பொருமுவதைத் தவிர மாரப்பனும் அவன் ஆள்களும் வேறேதும் செய்ய முடியவில்லையே! ஓட்டலில் இட ஒதுக்கீட்டுக் கெடுபிடிகள் மேலும் அதிகரிக்கவே அவர்களது போராட்டம் வகை செய்தது.
சில நேரங்களில், தீண்டாமை தலைவிரித்து ஆடும் அந்தக் கிராமத்தை விட்டுப் பட்டணத்துப் பக்கம் சென்றுவிடலாமா என்று அவன் யோசிப்பதுண்டு. படித்த மனிதர்கள் ஆயிரக்கணக்கில் வசிக்கும் பட்டணங்கள் இது போன்ற அருவருப்பான ஒதுக்கல்கள் இல்லாத ஊர்களாக இருக்கும் என்று அவன் உறுதியாக நம்பினான்.
‘யாரையும் குற்றம் சொல்லிப் பயனில்லை. எல்லா மக்களும் கல்வியறிவு பெற்றதும் இது போன்ற அசிங்கங்கள் சிறுகச் சிறுக மறைந்துவிடும்! எப்போதோ கொஞ்சமும் யோசனை இல்லாமல் – உயர்ந்த இனத்தினர் என்று முத்திரை குத்தப்பட்ட மனிதர்கள் மீது கொண்ட நம்பிக்கையால் – செய்த ஏற்பாடு குரங்கின் கைப்பூமாலையாகி, மக்களில் பெரும்பான்மையினரை ஏமாற்றும் வேலையாகிவிட்டது. தங்களைமட்டும் அறிவுக்கூர்மை மிக்கவர்களாக ஆக்கிக்கொண்டதோடு, அதனால் தங்கள் சந்ததியினரையும் அறிவுக்கூர்மை மிக்கவர்களாய்ப் பிறக்க வழி செய்துகொண்ட ஒரு சாரார் பரம்பரை பரம்பரையாக ஒடுக்கப்பட்டு வந்துள்ள அரிசனங்களுக்குச் சட்டம் வகை செய்துள்ள இட ஒதுக்கீட்டை இன்று எதிர்க்கும் அநீதியை என்னென்பது! ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்த் தங்கள் அறிவைத் தீட்டிக்கொண்டதன் மூலம் தங்கள் வழித் தோன்றல்களையும் அறிவுக்கூர்மையை உடற்கூறாகக்கொண்டு பிறக்கத் தந்திரமாக வகைசெய்துகொண்ட ஒரு சிறு கூட்டம் இந்த நியா யமான இட ஒதுகீட்டுச் சலுகை ஐம்பது ஆண்டுக் காலத்துக்குக்கூட நீடிப்பதைத் தாங்க முடியாத அக்கிரமத்தை என்ன சொல்ல! அதை நிறுத்துவதன் வாயிலாகத் தங்களை என்றென்றும் மற்ற இனத்தினரை விட அதிக அறிவாளிகளகவும், அந்த மற்றவர் மீது அறிவாதிக்கம் செய்கிற சிறந்தோர்களாகவும் நிலைப்படுத்திக்கொள்ளப் பார்க்கும் அநீதியை யாருமே புரிந்துகொண்டதாய்த் தெரியவில்லையே! அதிகத் திறமையும் தகுதியும் உள்ளவர்களைப் பின்னுக்குத் தள்ளி, திறமை குறைந்தவர்களை இட ஒதுக்கீட்டால் அரசுப்பணிகளில் அமர்த்துவதால் நிர்வாகத்தில் மெத்தனமும் மந்தமும் புகுந்துவிட்டதாய்த் தேசபக்திகொண்டவர்கள் போல் கண் கலங்கும் இந்தக் கும்பல், இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களே பெரும்பான்மையில் பணி புரியும் அரசுடைமை யாக்கப்பட்ட வங்கிகள் இன்று நாட்டையே திவாலாக்குகிற அளவுக்கு மோசமான நிலையில் இருப்பதற்கு என்ன பதிலைச் சொல்லப் போகிறார்கள்? … ஆக மொத்தம் இந்த நாட்டில் உண்மையான நாட்டுப்பற்றுக் கொண்டவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய விழுக்காட்டினர்தான்!’ – பத்திரிகைகள் வாசிப்பதன் மூலமும் இடைவிடாத சிந்தனைகள் மூலமும் மாரப்பனால் இப்படியெல்லாம் எண்ணிப்பார்க்க முடிந்தது.
ஆனால் யாரும் அவனுடைய எண்ணங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்போவதில்லை!
‘முப்பாwட்டனுக்கு முப்பாட்டன் செய்த தவற்றுக்கு இன்றைய வழித்தோன்றல்கள் தண்டிக்கப்படுவது நியாயமா?’ என்றே இப்போது பாதிக்கப்பட்டுள்ள இனத்தினர் திரும்பத் திரும்பக் கேட்கிறார்கள். மேலோட்டமாகப் பார்க்கும் போது மிகவும் சரியான கேள்வி போல ஒலிக்கும் இது அவர்களது வாதத்துக்கே வந்தால் அடிபட்டுத்தான் போகும்.
‘பெற்றோர் பாவம் பிள்ளைகள் தலையில்’ என்று இவர்கள்தானே
எழுதிவைத்தார்கள்! இவர்களின் கணக்குப்படியே ஒவ்வொரு தலைமுறையாய்க் கீழிறங்கிக் கணக்குப் போட்டுக்கொண்டே வந்தாலும் – ஆறாம் தலைமுறையினரின் பாவம் ஐந்தாம் தலைமுறையினர் மீதும், ஐந்தாவதின் பாவம் நான்காவதின் மீதும், நான்காவதின் பாவம் மூன்றாவதின் மீதும், மூன்றாவதின் பாவம் சென்ற தலை முறையினர் மீதும், சென்ற தலைமுறையினரின் பாவம் தற்போதைய தலைமுறையினர் மீதும் வந்து விடியும் என்பதுதானே விடையாக வருகிறது! எனினும் இந்த வாதம் தங்களுக்குச் சாதகமாக இல்லாமையால், இந்தப் பாவக்கணக்கெல்லாம் மூடத்தனம் என்று அவர்கள் சொல்லக்கூடும் …’ – இப்படி யெல்லாம் யோசித்த மாரப்பனுக்குச் சிரிப்புவந்தது.
“என்னங்க, நீங்களே சிரிச்சுக்குறீங்க?”
பூவாயியின் கேள்வியால் அவனது சிந்தனைக் குளத்தில் கல் விழுந்தது. அவன் ஒர் அசட்டுச் சிரிப்புடன் பதில் சொல்லாதிருந்தான். மகனைப் பட்டணத்துக்குக் கூட்டிச் சென்று விடுவதற்கிருந்த மகிழ்ச்சிதான் காரணம் என்பதாய் நினைத்த அவள் அதற்கு மேல் கேள்விகள் கேட்டு அவனைத் தொந்தரவு செய்யவில்லை. அப்படித்தான் மாரப்பனுக்குத் தோன்றியது. அப்படியே அவள் தூண்டிக்கேட்டு அவன் காரணத்தைச் சொன்னாலும் அவளுக்குப் புரியப்போகிறதா என்ன? ‘படிக்காத களுத.’
அவளைப் பொறுத்த வரையில், ‘ஒசந்த சாதிக்காரவுகளைப் பகைச்சுக்கிறக் கூடாது’ என்பதுதானே அவளது நியதியாக இருந்து வந்கிருக்கிறது! ‘பாவப்பட்டவர்கள்தான் கீழ்ச்சாதியில் பிறக்கிறார்கள்’ என்பது அவளது சமாதானத் தத்துவம்! அதனால், கொடுமைகள் எவ்வளவு மனிதத்தனம் அற்றவை யானாலும், அவற்றைச் சகித்துக் குரல் எழுப்பாதிருத்தலே மறுபிறவி நன்கு அமைய வழி செய்யும் என்பது அவளது நம்பிக்கை! அவளைப் போன்ற– சிந்திக்கத் தெரியாத – படிக்காத மூடங்களுடன் மோதுவதில் பொருளே இல்லை என்றெண்ணி அவன் அவளோடு வாதிடுவதே இல்லை.
“போய்ப் பதிஞ்சு கொஞ்ச நாள்ல வேலை கெடைச்சிறுமாங்க?”
மாரப்பன் சிரித்தான்: “நீ வேற! போகணும், பதியணும், காத்துக்கிட்டுக் கெடக்கணும். அந்த வேலப்பனுக்குச் சொந்த சாதிசனம் பட்டணத்துல இருந்தாக. வேலை போட்டுக் குடுத்தாக. நம்ம வெசயம் அப்பிடி இல்லியே, புள்ள?”
“இப்ப வேலப்பன் கூப்பிட்டுதானே அங்கிட்டுப் போறீங்க? அவன் வாங்கிக் குடுக்க மாட்டானா, வெரசா?”
அது அவ்வளவு எளிதன்று என்பதை அவளுக்குப் புரியவைக்கிற நேரத்தில் வேறு ஏதேனும் உருப்படியாகச் செய்யலாம் என்று தொன்றியதில் மாரப்பன் மவுனமாக இருந்தான். இருந்தாலும், அவளுக்கு அவநம்பிக்கை ஏற்படுத்தலாகாது எனும் எண்ணத்தில், “பாக்கலாம், புள்ள!” என்றான் பெருமூச்சுடன்.
… மாரப்பனையும் வஜ்ஜிரவேலுவையும் கூட்டிப் போக எழும்பூர் நிலையத்துக்கு வேலப்பன் வந்திருந்தான். தனது அறையை அடைவதற்கு முன் வழியில் ஓர் ஒட்டலுக்கு வேலப்பன் இருவரையும் அழைத்துப் போனான். தெருவில் இடைவிடாது ஓடிக்கொண்டிருந்த பல்வேறு வண்டிகளும், மக்காளின் நெரிசலும், அவர்களின் பரபரப்பும் அவசரமும், ஆண்-பெண் பால் பேதமின்றி ஒருவர் மீதொருவர் உரசிக்கொண்டு உணர்ச்சி மரத்தவர் போல் அவர்கள் விரைந்ததும் இருவரையும் வாய் பிளக்கவைத்தன. ‘ பட்டிக்காட்டான் பட்டணத்தைப் பார்த்தார்ப்போல’ எனும் பழமொழி இருவருக்கும் மெய்யாகவே பொருந்தியது.
ஒரு பெரிய ஓட்டலுக்குள் நுழைந்து ஓரந்தேடி உட்கார்ந்த மூவரும் சம்பிரதாயமாகப் பேசியவாறு மசால் தோசை சாப்பிட்டார்கள்.
”வஜ்ஜிரவேலு! நம்மூர் சோணாசலம் ஞாபகம் இருக்குதா உனக்கு?”
“மொதமொதக்கா அந்தாளுதான் நம்முர்ல பட்டப்படிப்புப்
படிச்சுப் பட்டணத்துக்குப் போனா ஆளுன்னு சொல்லுவாகளே, அவரைத்தானே சொல்றே, வடிவேலு?
“ஆமா. அவரேதான்”
“அவருக்கென்ன, தம்பி?”
“இதே படணத்துல ஒரு ஸ்டேட் கவர்ன்மெண்ட் ஆஃபீஸ்ல
க்ளாஸ் வொன் ஆஃபீசரா யிருக்காரு.”
“அட! இருவது வருசத்துக்கு முந்தி அவன் பட்டணத்துக்குப் போயி வேலையில சேந்தது தெரியும். அப்பால மருதைக்கு மாத்தலாயி வந்தப்ப நம்மூருக்கு ஒரு வாட்டி வந்திருந்தான். அது ஒரு பத்து வருசத்துக்கு முந்தி. எனாகுப் பழக்கந்தான். நீ அவனைப் பாக்குறதுண்டா?”
“இல்லீங்க. கேள்விப்பட்டிருக்கேன். அம்புட்டுத்தேன். அவரோட வீட்டு வெலாசத்தைக் கண்டுபிடிக்கிறேன், மொதக்கா. அப்பால வெரசா அவரைப் போய்ப் பாக்கலாம். பாத்தா பாதிக் காரியம் செயமாயிறும்.”
“என்னப்பா இது? ஆஃபீசர யிருக்குறவரைப் போயி அவன் இவன்குறீங்க?”
“அடேய் வச்சிரவேலு! ஒனக்குத் தெரியாதுடா. அவங்கப்பன் குமாரசாமி என்னோட செநேகிதன். கோவணங்கட்டத் தொடங்குறதுக்கு முந்தி இருந்தே தெருப்புளுதியில கட்டிப் பொரண்டு வெளையாண்டவங்க நாங்க. இந்தப்பய – இப்ப ஆபீச்ராயிட்ட – சோணாசலத்தை நான் அஞ்சாறு வயசு வரைக்கும் தோள்ல தூக்கிச் சொமந்தவண்டா. பத்து வருசத்துக்கு முந்தி நம்மூருக்கு வந்தப்ப பளைய விசுவாசம் மறக்காம சித்தப்பான்னு என்னயக் கூப்பிட்டவண்டா!”
“அப்ப வஜ்ஜிரவேலு பத்தின கவலைய விடுங்கய்யா. இப்ப சத்தியா நான் தங்கி யிருக்குற லாட்ஜ்லயே ஒரு சைக்கிள் பியூன் தேவைப்படுது. அந்த வேலையை டெம்பொரவரியா இவன் பாக்கட்டும். எங்கூடவே தங்கியிருக்கட்டும். … அந்த தகிரியத்துலதான்யா வரச்சொன்னேன்.”
“எம்புட்டுச் சம்பளம் குடுப்பாக?”
“முன்னூறு குடுப்பாக. இவனோட சாப்பாட்டுச் செலவுக்கு அது பத்தும். மத்ததை நான் பாத்துக்குறேன். ஒரு அஞ்சாறு மாசத்துக்குள்ள இதைவிட அதிகச் சம்பளத்துல எப்படியாச்சும் ஒரு வேலைய வாங்கிட்டா, கவர்ன்மெண்ட் ஆஃபீஸ்ல அப்பால வாங்கிறலாம்…”
காபி சாப்பிட்டு வெளியே வந்தார்கள். வேலப்பன் இருவரையும் ஓர் ஆட்டோவில் அழைத்துப் போனான்.
வழியில், “இந்த ஊரு நெலவரம் எப்படிப்பா? … அதான் நம்மாளுங்களுக்கெல்லாம் ஓட்டல்கள்ள சில ஊருங்கள்ள ஒதுக்கமாத் தனி எடம், தனிக் கொவளைன்னெல்லாம் வெச்சிருக்காங்களே, அதைப் பத்திக் கேக்குறேன் …” என்று மாரப்பன் விசாரித்தான்.
“நாம சாப்பிடப் போன ஓட்டல்லதான் இப்ப பாத்தீங்களேய்யா? அது மாதிரி யெல்லாம் இங்கிட்டுக் கெடையாது. அது மாதிரி எதாச்சும் பண்ணினாங்கன்னா, இங்கிட்டு கொலையே விழும்!”
“அதான் பட்டணம்குறது! படிச்சவுக நெறைய இருக்குற எடங்கள்ள இது மாதிரி அக்குறும்பெல்லாம் இருக்காது,” என்றான் மாரப்பன் நம்பிக்கையான புன்சிரிப்புடன்.
“நாளைக்கு ஞாயித்துக் கிழமை. உங்க ரெண்டு பேத்தையும் ஊரு சுத்திப்பாக்க இட்டுட்டுப் போறேன். இன்னைக்கும் லீவுதான். ஆனா ஒவர்டைம் வேலைக்காக ஆஃபீசுக்குப் போகவேண்டியிருக்குது. அப்படியே அந்த ஆஃபீசர் சோணாசலத்தோட வெலாசத்தையும் கண்டு பிடிச்சுக்கிட்டு வாறேன்.”
“ஆங்! அந்தப் பொண்ணு கூட நமக்கு ஏதோ தூரத்துச் சொந்தந்தேன்.”
“எந்தப் பொண்ணைப்பா சொல்றீங்க?”
“ஆபீசராயிட்ட சோணாசலம் கட்டி இருக்குற பொண்ணு. மயிலம்மான்னு பேரு. சேடப்பட்டிப் பொண்ணுடா. அதும் பாட்டியும் எங்காத்தாளும் அத்தை மவ, மாமன் மவளுங்க. என்னய நெனப்பு இருக்குதோ என்னமோ.”
“நெனப்பு மூட்டித்தான் பாக்குறது,” என்றான் வேலப்பன்.
அலுவலக வேலை முடிந்து பிற்பகல் மூன்று மணியளவில் வேலப்பன் விடுதிக்குத் திரும்பினான். அலுவலர் சோணாசலத்தின் வீட்டு முகவரியைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்புத் தற்செயலாய்த் தனக்குக் கிடைத்ததாய்த் தெரிவித்த அவன் மறு நாள் விடுமுறையாக இருந்ததால் ஒரு நடை போய்ப் பார்த்துவிடலாம் என்று யோசனை சொன்னான். ஊர் சுற்றிப் பார்ப்பதைப் பிரிதொரு நாளுக்கு ஒத்திப்போடலாம் என்றான்.
அந்த யோசனையின்படி, காலைச் சிற்றுண்டிக்குப் பின்னர், மூவரும் அண்ணாநகரில் இருந்த சோணாசலத்தின் வீடு நோக்கிப் புறப்பட்டார்கள்.
உள்ளடங்கி இருந்த அந்தப் பெரிய பங்களாவின் சுற்றுச் சுவர் நுழைவாயிலருகே ஒரு காவலாள் அமர்ந்திருந்தார்.
“யாரு வேணும்?”
“மிஸ்டர் சோணாசலத்தைப் பாக்கணும்.”
“நீங்கல்லாம் யாரு?”
“அவரு ஊர்க்க்காரங்க. சின்ன வயசுலேர்ந்து பழகின பெரியவரு இவர்.”
“என்ன பேரு?”
“ஊர்க்காரங்கன்னு மட்டும் சொன்னாப் பத்தும். பேரெல்லாம் அவரே நேர்ல பாத்துத் தெரிஞ்சுக்கிடட்டும். அது வரையில சஸ்பென்ஸா யிருக்கட்டும்,” என்றான் வேலப்பன்.
காவலாள் உள்ளே போய்ப் பேசிவிட்டு இரண்டே நிமிடங்களில் திரும்பினார்.
“அதோ வெராந்தாவில சோஃபா போட்டிருக்கு பாருங்க. அதுல போய்க் குந்துங்க. அஞ்சு நிமிசத்துல வருவாரு.”
மூவரும் போய்த் திண்ணை போன்ற அமைப்பில் இருந்த மிகப் பெரிய வராந்தாவில் போடப்பட்டிருந்த சோஃபாவில் உட்கார்ந்தார்கள்.
“நீங்க ரெண்டு பேரும் இங்ஙனவே இருங்க, நான் மட்டும் அதோ அந்தப் பட்டாசாலையில போட்டு வெச்சிருக்குற நாக்காலியில் போய்க் குந்துறேன்.”
“யப்பா! அதெல்லாம் வெறுப்போத்துற வேலைப்பா. வேணாம். பெரிய எடம். எதாச்சும் எக்குத்தப்பா ஆயிறப்போகுது.”
“என்னடா எக்குத்தப்பா ஆயிறப் போகுது? நீ தமாசு பாரு. அவன் என்னயக் கண்டுபிடிக்கிறானா இல்லியான்னு வேடிக்கை பாப்பம் மொதக்கா. நீங்க இங்ஙனவே இருங்க.”
வேலப்பனும், “அட, வேணாங்கய்யா. சொன்னாக் கேளுங்க,” என்றான்.
“அட, சொம்மா இருங்கப்பா ரெண்டு பேரும். நாங்க எம்புட்டு செநேகிதம்னு உங்க ரெண்டு பேத்துக்கும் தெரியவே இல்லே…. வெவரங்கெட்டவனில்லேப்பா நானு. அவனை அஞ்சு வயசு வரையில என் தோள்ள தூக்கிச் சொமந்திருக்கேம்ப்பா! அப்படியே என்னயக் கட்டிப் பிடிச்சுக்கப் போறாம் பாரு பய!”
மாரப்பன் விடுவிடுவென்று உள்ளே போய்த் தேக்கு நாற்காலியில் சட்டமாக உட்கார்ந்துகொண்டான். வராந்தாவில் இருந்தபடி மாரப்பனை வஜ்ஜிரவேலுவாலும் வேலப்பனாலும் பார்க்க முடியவில்லை. ஏனெனில் கூடத்து நாற்காலிகள் அதன் ஓரத்தில் இருந்தன.
மாரப்பன் உட்கார்ந்துகொண்டிருந்த நாற்காலி அந்தக் கூடத்தின் ஓர் அறையை ஒட்டி இருந்தது. எனவே அங்கிருந்து கிளம்பிய பேச்சுச் சத்கம் அவன் செவிகளை வந்தடைந்தது.
“யாருங்க அது காலங்கார்த்தால உங்களைப் பாக்க வந்திருக்குறது?”
“தெரியலியே! எங்க ஊர்க்காரங்கன்னானே வாட்ச்மேன்? ஒரு பெரியவரும் ரெண்டு அறியாத பசங்களும்னானே? பேரு சொல்ல மாட்டேன்னுட்டாங்களாம்.”
“கலியாணம் காட்சின்னு சொல்லிக்கிட்டு காசு கறக்க வந்திருப்பாங்க. நம்ம பக்கத்து ஆளுங்கல்லாம் சுத்தப் பன்னாடைங்க. சரியான பட்டிக்காட்டுச் சவங்க. அளுக்கு மூட்டைங்க. ரெண்டு மாசத்துக்கு முந்தி உங்கம்மாவுக்கு ஒண்ணுவிட்ட தங்கச்சி மொறைன்னு சொல்லிக்கிட்டு ஒரு பொம்பளை வந்திச்சே, நெனப்பு இருக்குதா? அதுந்தலைப் பேனு எறங்கி நெத்தியில ஊருது…!”
“ஏன்? உங்கம்மாவுக்குத் தூரத்து ஒறவுன்னு சொல்லிக்கிட்டு ஒரு ஆளு வந்திச்சே? அது மட்டும் என்ன வாள்ந்திச்சு? வேட்டி சட்டை முளுக்கத் திட்டுத் திட்டாக் கறை. தொவைக்கவே மாட்டாங்க போல! ராமேசுவரம் போயும் சனீசுவரன் விடாத கதையா பொளுது விடிஞ்சா பொளுது போனா எவனாச்சும் வந்துர்றான். பிச்சைக்காரப் பயலுக. … டேய், முரளி! மெதுவாப் போய் வராந்தாவிலெ எட்டிப் பாத்து ’எங்கப்பா பேரு கேக்குறாரு’ன்னு சொல்லிக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு வா.”
அந்தப் பையன் வெளியே வந்தான். பதிநான்கு பதினைந்து வயது இருக்கும். விலை உயர்ந்த ஆடை அணிந்திருந்தான். மாநிறமாக இருந்தாலும், முகத்தில் படிப்புக்கும் பணத்துக்கும் உரிய களை தெரிந்தது.
வெளியே வந்த பையன் கூடத்து நாற்காலியில் உட்கார்ந்திருந்த மாரப்பனைக் கண்டதும், “யோவ்! எந்திரிய்யா! வெளி வெராண்டாவிலதானே உன்னை உக்காரச் சொன்னது? எப்படி நீ ஹாலுக்கு வந்து உக்காரலாம்? எந்திரிய்யா, எந்திரி. மரியாதை தெரியாத ஆளு!” என்று கூச்சலிட்டான்.
பையனின் மரியாதைகெட்ட பேச்சுக்குப் பக்கத்து அறையிலிருந்து ஆட்சேபணையோ கண்டனமோ வரலாம் என்கிற எதிர்பார்த்தலுடன் தயங்கியபடியே மெல்ல எழுந்து நின்ற மாரப்பன் அப்படி ஏதும் வராதது கண்டு தனக்குள் அதிர்ச்சியும் வியப்பும் அடைந்தான்.
மாறாக, வேறு மாதிரியான உரையாடல் வந்தது!
“எம்புட்டுத் திண்ணக்கம் பாரேன் அந்தாளுக்கு! ஊர்க்காரனா இருந்தா என்ன? அதுக்காகத் தொறந்த வீட்டில நாய் நொளையற மாதிரியா நொளைவாங்க? பன்னாடைங்கதான், நீ சொல்றாப்ல!” என்ற சோணாசலத்தின் சொற்கள் சாராசமாய் மாரப்பனின் செவிகளுள் நுழைந்தன. அவன் விடுவிடுவென்று எழுந்து வாசலுக்குப் போனான்.
“எந்திரிங்க. போயிறலாம்!”
இளைஞர்கள் இருவரும் வாய் திறவாமல் அவன் பின்னால் நடந்தார்கள்.
மாரப்பன் பெருமூச்சுடன் சொன்னான்: “இப்படி நடக்கும்னு நான் நெனச்சும் பாக்கலே.”
“சொல்லச் சொல்லக் கேக்காம பட்டாசாலைக்குப் போய்க் குந்திக் காரியத்தைக் கெடுத்துட்டீங்கப்பா!”
”அடப்போடா! இந்த மடம் இல்லாட்டி இன்னொரு சந்தை மடம்!”
மூவரும் மௌனமாக நடந்தனர்.
…….
- மிஸ்டர் மாதவன்
- வரிக்குதிரையான புத்தகம்
- கவிதையும் ரசனையும் – 4
- குருகுலத்தில் பூத்த இலக்கிய மலர் ஒன்று – பத்மா சோமகாந்தன்
- நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்
- தக்கயாகப்பரணி [தொடர்ச்சி] 191–200
- கலந்த கேண்மையும் கடவுள் நம்பிக்கையும்
- திருவாலி, வயலாளி மணவாளன்
- அவசியம்
- ஒதுக்கீடு
- மதுராந்தகன் கவிதைகள்
- நல்ல தமிழும் இல்லை ஆங்கிலமும் இல்லை
- சாம் என்ற சாமிநாதன் – ஐம்பதாண்டு கால நட்புறவு