நீ இரங்காயெனில் ….

This entry is part 1 of 13 in the series 10 ஜனவரி 2021

திர்லதா கிரிஜா

(அமரர் மணியனின் “சிறு கதைக் களஞ்சியம்” முதல் இதழில் 1985ல் வெளிவந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன் “அம்மாவின் சொத்து” எனும் சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்றுள்ளது.)

  1. – காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டதன் பின்னர் நூறு ஆண்டுகள்

ஓடிவிட்டன. நாடெங்கிலும் நூற்றாண்டு விழா ஆங்காங்கு கொண்டாடப்பட்டு வருகிறது.

அடேயப்பா!  நூறு ஆண்டுகள்!

ஆஞ்சநேயலு தம் வாழ்க்கைப் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டினார். அவர் பிறந்து வளர்ந்த தெல்லாம் மதுரை ஜில்லாவின் ஒரு சிறு கிராமத்தில். தாய் மொழி தெலுங்கானாலும், எழுதப் படிக்கக் கற்றது தமிழில்தான். ஐந்து தலைமுறைகளாய்த் தமிழ் நாட்டில் வாழ்ந்து  தெலுங்கைப் பெருமளவுக்கு மறந்தே போய்விட்ட குடும்பத்தில் பிறந்தவர் என்றே ஆஞ்சநேயலுவைப் பற்றிச் சொல்லலாம்.

               இப்போது தமக்கு என்ன வயது என்று அவர் எண்ணிப் பார்த்தார். 1920 இல் பிறந்தவர். அப்படியானால், 30, 40, 50 என்று பத்துப் பத்தாக எண்ணிக்கொண்டே வந்து, இறுதியில் தமக்கு 64 வயது ஆகிவிட்டது என்று கண்டு பெருமூச்செறிந்தார். இந்தச் சின்னக் கணக்குக்குப் பத்துப் பத்தாக எண்ணுவானேன்? இப்போது நடக்கும் ஆண்டின் எண்ணிக்கையிலிருந்து 20-ஐக் கழிக்க வேண்டியதுதானே என்று தொடர்ந்து தம்மை எண்ணிச் சிரித்துக்கொண்டார்.

      1942 !

    ‘வெள்ளையனை வெளியேறச் சொன்ன’ ஆண்டு! நாடெங்கிலும் கலவரங்களும் கொந்தளிப்புகளும் நிலவிய ஆண்டு. ஆயிரக் கணக்கில் தேசத் தொண்டர்கள் நாடெங்கிலும் கைது செய்யப்பட்டு அவரவர் ‘குற்றங்களுக்கு ஏற்ப’ சிறைத்தண்டனை அடைந்தனர். அவர்களில் ஆஞ்சநேயலுவும் ஒருவர். …

      அன்று காந்திஜியின் தலைமையில் தன்னை யொத்தவர்கள் இந்தியாவைப் பற்றிக் கண்ட கனவுகளுக்கும் இன்றைய நாட்டு நடப்புக்குமிடையே தென்பட்ட அதலபாதாள வித்தியாசம் அவரைப் பெருமூச்செறியச் செய்தது. இப்படியாகும் என்பது முன்பே தெரிந்திருந்தால் சுதந்திரப் போராட்ட இயக்கத்தில்  பங்கேற்றிருக்கவே வேண்டாம் என்று எண்ணிக் கசப்புடன் மனத்துள் சிரித்துக் கொண்டார்.

      சாரதா எங்கே இருக்கிறாளோ. திடீரென்று இளமை திரும்பினார்ப்போல் உணர்ந்தார். அவளுக்கும் அறுபது வயது ஆகியிருக்கும். நிறையப் பேரன் பேத்திகள் எடுத்திருப்பாள். தம்மை மறந்து போயிருப்பாளா? பக்கத்து வீட்டில் குடியிருந்த – உதவாக்கரை என்று அவன் பெற்றோராலேயே முத்திரை குத்திப் பழிக்கப்பட்ட – இளைஞனை அவள் எதற்காக ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்? அவசியமே இல்லைதான்!

      1940 – ஆம் ஆண்டில் கல்லூரியில் சேர்ந்து மேற்படிப்புப் படிப்பதற்காக அவன் சென்னையில் இருந்த தன் மாமா வீட்டுக்குச் சென்று தங்கினான். அங்கேதான் பக்கத்து வீட்டில் சாரதாவின் பெற்றோர்கள் குடியிருந்தனர். கண்டதும் காதல் ஒன்றும் அவனுக்கு வந்துவிடவில்லை. சாரதா என்கிற அந்தப் பதினாறு வயதுப் பெண்ணை முதன் முதலாய்ப் பார்த்த போது, சாதாரணமாக, லட்சணமான பெண் என்று மதிப்பிட்டதோடு சரி. ஒரு நாள் மாமா வீட்டில் கொலு வைத்திருந்த போது அவள் மஞ்சள், குங்குமம் பெற்றுக்கொள்ள அந்த வீட்டுக்கு வந்து ஒரு பாட்டுப் பாடினாள்.  அன்றுதான் ஆஞ்சநேயலு அவளிடம் தன் உள்ளத்தைப் பறிகொடுத்தான்.  ஆஞ்சநேயலுவுக்குப் பாட்டென்றால் உயிர். அவனும் நன்றாகப் பாடுவான். ‘நீ இரங்காயெனில் புகல் ஏது?’ என்கிற பாட்டு அப்போது மிகவும் பிரபலமாக இருந்தது. நல்ல குரல் வளத்துடன் சாரதா பாடியது அவனைப் பரவசப்படுத்தியது.        

      படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை மூடி அப்பால் வைத்துவிட்டு, அவன் அவள் பாட்டில் அப்படியே ஒன்றிப் போனான்.     

       ‘அப்ப நான் வறேன், மாமா! வறேன், மாமி!’

       ஆஞ்சநேயலு தன் அறைக்குள் இருந்தபடியே தன் வெட்கத்தை விட்டு, ‘இன்னொரு பாட்டுப் பாடச் சொல்லுங்கோ, மாமி!’ என்று குரல் கொடுத்தான்.

      ஆண்-பெண்கள் கலந்து பழகாத அந்த நாளில் ஓர் இளம் பெண்ணை இன்னொரு பாட்டுப் பாடச் சொல்லி மறைமுகமாய்க் கூடக் கேட்க முடியாதுதான். ஆனால், ஆஞ்சநேயலுவின் பாட்டு ஆசை அந்தக் கூச்சத்தை விரட்டிவிட்டது.

       ‘இவரோட மருமான். பாட்டுன்னா உசிரு அவனுக்கு. சோறு வேண்டாம், தண்ணி வேண்டாம். யாராவது உன்னாட்டம் நன்னாப் பாடினா கேட்டுண்டே இருப்பான். சரி. இன்னொரு பாட்டுப் பாடும்மா.’

      மாமாவின் வீட்டுக்கு அவன் வந்து சில மாதங்கள் ஆய்விட்டிருந்த நிலையில், தன்னைக் ‘கணவனின் மருமான்’ என்று மாமி அவளுக்குச் சொல்ல வேண்டிய தேவையே இல்லைதான்.  அவளே அறிந்திருக்கக்கூடும்.                                                                                                                                      

      பிகு பண்ணாமல், சாரதா, ‘மாரமணன்’ என்கிற பாட்டைப் பாடினாள். ஆஞ்சநேயலு கதவிடுக்கின் வழியாக அவளைப் பார்த்தான். தலையைக் கொஞ்சங்கூட ஆட்டாமல் கழுத்து நரம்புகள் மட்டும் புடைக்க அவள் பாடியது அவனைப் பெரிதும் கவர்ந்தது. அந்தக் கணத்தில்தான் அவன் தான் அவளை விரும்புவதைப் புரிந்துகொண்டான். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது காதலா என்று திடுக்கிட்டான். ‘அதனால் என்ன? படித்து முடித்த பிறகுதானே கல்யாணம் செய்துகொள்ளப் போகிறோம்?’ என்று சமாதானப்படுத்திக்கொண்டான். அவளும் பள்ளி இறுதி ஆண்டில் இருந்தாள். அவளை மேலே படிக்க வைக்க மாட்டார்கள் என்பதை ஒரு நாள் பேச்சுவாக்கில் மாமி சொல்ல அவன் கேட்டிருந்தான். ஆனால் அவன் படித்து முடிக்க இன்னும் நான்கு ஆண்டுகள் இருந்தன. அது வரையில் அவளுக்குக் கல்யாணம் செய்விக்காமல் இருப்பார்களா என்று நினைத்துப் பார்த்து, அப்படி ஏதேனும் நடத்த முயற்சிகள் செய்யப்படின் அவற்றைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தனக்குள் முடிவு செய்துகொண்டான்.

      கொலுவில் அவள் பாடிய மறு நாள் கொல்லைப்புறத்தில் அவன் அவளைத் தற்செயலாய்ச் சந்தித்தான். இரண்டு வீடுகளுக்கும் கொல்லைப்புறம் மட்டும் பொதுவானது போன்ற தோற்றம் குறுக்குச் சுவர் இடிந்து போயிருந்ததால் விளைந்திருந்தது.  கிணற்றில் தண்ணீர் இழுத்துக் கொண்டிருந்தவளைப் பார்த்து, “நீங்க பிரமாதமாப் பாடறீங்க! பாட்டுச் சொல்லிக்கிறீங்களா?” என்றான்.

       அவள் வெட்கத்துடன் சிரித்து, ‘இல்லீங்க. ரெகார்ட் வச்சுக் கேட்டுக் கத்துண்டதுதான். சொல்லிக்கலை. அதுக்கெல்லாம் வசதி இல்லே. பத்தாவது வரைக்கும் படிக்க வைக்கிறதே எங்க வசதிக்கு அதிகப்படி. அப்பாதான் பொம்பளைக் குழந்தைகளுக்குப் படிப்பு அவசியம்னு படிக்க வைக்கிறார். அம்மாவுக்குப் பிடிக்கவே இல்லை,’ என்றாள்.

      இதற்குள் யாரோ நெருங்கும் காலடியோசை கேட்க, ஆஞ்சநேயலு தலையசைத்து விடை பெற்றான். அந்த முதல் பேச்சு வார்த்தையிலேயே அவள் தன் எண்ணத்தைப் புரிந்துகொண்டுவிட்டதை அவன் ஊகித்துச் சொல்லுக்கு அடங்காத மகிழ்ச்சியை அடைந்தான். அதன் பிறகு இருவரும் கொல்லைப்புறத்தில் வீட்டுப் பெரியவர்கள் அறியாவண்ணம் பார்ப்பதும் ஓரிரு சொற்களைப் பரிமாறிக் கொள்ளுவதும் அடிக்கடி நடந்தன. இருந்த போதிலும் அவனோ அவளோ தங்கள் காதலைப் பற்றி மூச்சுக்கூட விடவில்லை. உள்ளுணர்வாய்ப் புரிந்துபோன ஒன்றுக்குச் சொல் வடிவம் தேவை இல்லை என்று இருவருமே கருதியதாய் இப்போது ஆஞ்சநேயலுவுக்குத் தோன்றியது.

      ஆஞ்சநேயலுவின் காது கேட்க அவள் அடிக்கடி பாடுவதும், ஆஞ்சநேயலுவும் தன் அறையில் இருந்தபடி அவள் கேட்கப் பாடுவதும் கூட அவ்வப்போது  நடந்தன. அதில் வேடிக்கை என்னவென்றால், அவ்வாறு பாட்டுப் பரிமாற்றம் செய்து கொள்ளுவது பற்றி அவர்கள் அடுத்த நாளில் பேச்சுப் பரிமாற்றம் செய்து கொண்டதே இல்லை என்பதுகான்! மனமொத்துப் போய்விட்டவர்கள் அதிகம் பேசிக்கொள்ளத் தேவையே இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்தது தங்கள் காதல் என்று இப்போது ஆஞ்சநேயலு நினைத்து மகிழ்ச்சி கலந்த ஏக்கத்துடன் சிரித்துக்கொண்டார்..

      1940 ஆம் ஆண்டின் இறுதியில் அவனுக்குச் சில இளைஞர்களோடு பழக்கம் ஏற்பட்டது. அந்தப் பழக்கம் அவனது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாகவும், காதலை ஒத்திவைக்கச் செய்யுமளவுக்கு முக்கியத்துவம் படைத்ததாகவும் அமைந்தது. 1911 ஆம் ஆண்டில் மணியாச்சியில் ஆஷ் துரையைச் சுட்டுவிட்டுத் தானும் தன்  வாய்க்குள் சுட்டுக்கொண்டு மாண்ட வாஞ்சிநாதனைப்பற்றிய முழு வரலாற்றையும் அந்த இளைஞர்கள்தான் அவனுக்குச் சொன்னார்கள். காந்தி வழியில் போய்ச் சுதந்திரத்தைப் பெறவே முடியாது என்று அடித்துப் பேசினார்கள். ஆஞ்சநேயலுவுக்கு அவர்கள் காந்தியைப் பழித்தது பிடிக்கவில்லை. ஆனாலும் அவர்களது தேசபக்தியை மதித்தான்.

குறிப்பாக, வடிவேலு என்கிற இளைஞன் பொறி பறக்கப் பேசியபோதெல்லாம் ஆஞ்சநேயலுவின் மயிர்க்கால்கள் குத்திட்டன. ஒரு நாள் பேச்சுவாக்கில் அவன் தான் சொன்னான்:  ‘டேய், ஆஞ்சநேயலு! நம்மள மாதிரி ஆளுங்கல்லாம் கல்யாணமே செய்துக்கக் கூடாதுடா.  இப்ப பாரு. அந்த ஆஷ் துரையைச் சுட்டுட்டுத் தானும் சுட்டுக்கிட்டுச் செத்தானே  வாஞ்சி, அவன் பொஞ்சாதியுடைய நிலையை எண்ணிப் பார்க்கணும் நாம. எண்ணிப் பார்த்தோம்னா, நம்மள்ள யாருக்குமே – நாம மனுஷத்தனம் உள்ளவங்களா இருந்தா – கல்யாணம் கட்டிக்கிட்டு ஒரு அப்பாவிப் பொண்ணோட வாழ்க்கையைப் பாழாக்கணும்கிற எண்ணமே வராதுடா. வாழ்க்கையிலே பெரிய லட்சியங்களை அடையறதுக்கு எப்பவுமே மணவாழ்க்கைங்கிறது ஒரு தடைதான். மணவாழ்க்கை தடையா இல்லாம இருக்கிறதுங்கிறது ரொம்ப அபூர்வம்டா. குறிப்பா நம்மள மாதிரி லட்சியம் வச்சிருக்குறவங்க தாலியே கட்டக்கூடாது …’ என்று.

வடிவேலுவின் உணர்ச்சி மிக்க பேச்சு அருகில் இருக்கும் யாரையுமே பாதித்துவிட வல்லது. அதிலும் அவனிடம் நட்புக் கொண்டிருந்தவர்களைப்பற்றிக் கேட்கவே வேடியதில்லை என்கிற நிலையில் ஆஞ்சநேயலு பெரிதும் பாதிக்கப்பட்டுப் போனான்.

சாரதாவின் மீது அவன் கொண்டிருந்த காதல் பொசுக்கென்று அவியாவிட்டாலும், இனி அவளுக்குத் தன் மனத்தை வெளிப்படுத்தலாகாது என்கிற உடனடியான முடிவுக்கு வடிவேலுவின் பேச்சு அவனைத் துரத்தியது. அவளைத் தவிர்க்க வேண்டும் என்கிற கசப்பான முடிவுக்கு உடனே வந்துவிட்டான்.

மறு நாளிலிருந்து கொல்லைப்பக்கம் தேவையற்றுப் போவதைத் தவிர்த்தான். அவள் இல்லாத நேரத்துக்குக் காத்துக் கொண்டிருந்து கொல்லைப்பக்கம் போனான். அவனது திடீர் மாறுதல் அவளைப் பாதித்திருக்க வேண்டும், ஒரு வாரம் போல் கழிந்த பிறகு அவளே அவன் மாமியைப் பார்க்கும் சாக்கில் வந்தாள். அவன் தன்னறையை விட்டு வெளியே வரவே இல்லை. அவனது அறைக்குள் வர அவள் துணியவில்லை. ஆயினும் ‘நீ இரங்காயெனில் புகல் ஏது?’ என்று இரண்டு அர்த்தம் வைத்து முனகியபடி அவனது அறையைக் கடந்து போனாள்!

அந்தப் பாட்டு இன்ன பொருளில் பாடப்பட்டது என்பது புரிந்ததில் ஆஞ்சநேயலுவின் இதயம் தடதடத்தது. வடிவேலுவின் கருத்துப்படி தான் செய்துள்ள முடிவை அவளுக்குச் சொல்ல அவனது நா பரபரத்தது.  ஆனால் பேசாதிருந்தான். அவன் தான் தன்  காதலைப்பற்றி அவளிடம் மூச்சுக்கூட விடவில்லையே! ஏதோ நட்போடு சும்மா பழகியதாய் இருக்கட்டும். ஆணும் பெண்ணும் பேசிப் பழகும் போது காதலித்துத்தான் ஆகவேண்டும்  என்று ஏதேனும் அடிபிடி கட்டாயமா என்ன! அது அவள் கொண்ட கற்பனையாக இருக்கட்டும். அவள் முடிவுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை! – இப்படி யெல்லாம் தனக்குள் வாதம் செய்த நேரத்தில்  ஆஞ்சநேயலுவுக்குக் கண் கலங்கிற்று. உண்மையான காதலைத் துறப்பது கடினம் என்று தோன்றிற்று. இருப்பினும் படித்திருந்த புத்தகங்களின் பாதிப்பாலும், பழகிய நண்பர்களின் சேர்க்கையாலும் அவன் உள்ளத்தில் எரிந்துகொண்டிருந்த சுதந்திர விளக்குக்கு முன்னால் அவனது காதல் ஒளி குன்றிப் போயிற்று.

மறு நாள் அவன் காது கேட்க, ‘பராமுகம் ஏனையா?’ என்று அவள் பாடிய போது, ஆஞ்சநேயலு பல்லைக் கடித்துக் கொண்டு தன்னறையில் அடைந்து கிடந்தான்.

      மூன்றாம் நாள் அவன் வீட்டுக்கு வந்த சாரதா, அவன் அறைக்குள் ஒரு கடிதத்தை வீசிப் போட்டுவிட்டுப் போனாள். ’நான் என்ன தப்பு செய்தேன்? ஏன் இந்தப் பராமுகம்? என்னைப் பிடிக்கவில்லையா?’ என்று அதில் எழுதப்பட்டிருந்தது. ‘சாரதா! உன்னை ரொம்பவும் பிடிக்கிறதுனாலதான் உன்னைத் தவிர்க்கிறேன். என் தேசபக்தி உனக்குக் கெடுதலையே தேடித்தரும். அதையெல்லாம் நான் சொல்லி உன் மனசை உடைக்க முடியாது. அதனால நீ என்னைத் தப்பாப் புரிஞ்சுக்கிட்டதாவே இருக்கட்டும். உனக்குப் பதில் எழுதப் போறதில்லை’ என்று கூறிக்கொண்டான்.

      பதில் எழுதவில்லை. அவளை அடியோடு தவிர்த்தும் விட்டான். ஆயினும் உள்ளூற அவன் மனம் அவளை மறக்க மாட்டாமல் தவித்துக்கொண்டிருந்தது. மகாத்மா காந்தியின் மீது பக்தி இருந்த போதிலும், வடிவேலுவின் ஆவேசப் பேச்சுகள் நாளடைவில் அவனைப் பாதிக்கலாயின. 1941 இல் அவர்களோடு சேர்ந்துகொண்டு வெடிகுண்டுகள் தயாரிப்பில் ஈடுபட்டமைக்குக் கைது செய்யப்பட்டுக் கடுங்காவலிலும் வைக்கப்பட்டான்.

      இந்தியா சுதந்திரம் அடைந்த அன்று அவனுக்கும் சுதந்திரம் வந்தது. வேலூர்ச் சிறையிலிருந்து வெளிவந்ததும் முதல் வேலையாகச் சென்னைக்குப் போனான். மாமா இறந்துவிட்டிருந்தார். அதனால் மாமாவின் பெற்றோர் இருந்த மாயவரத்துக்கு மாமி சென்றுவிட்டிருந்தாள். சாரதாவின் வீட்டில் வேறு யாரோ குடியிருந்தார்கள். அவளைப் பற்றித் தகவல் சொல்லுவாரே இல்லை.

      ஊரூராய் அலைந்து அவளைத் தேடினான். பயன் இல்லை.  சாரதாவின் இடத்தில் வேறு எந்தப் பெண்ணையும் அமர்த்திப் பார்க்க மனமற்ற நிலையில் திருமணத்துக்குப் பெற்றோர் செய்த வற்புறுத்தல்களை யெல்லாம் நிராகரித்தான். ஓர் அரசினர் அலுவலகத்தில் அவன் படிப்புக்கு ஏற்றதாய் ஒரு சின்ன வேலை கிடைத்தது.

      பெற்றோர் கொஞ்ச நாள்களில் மரித்த பிறகு திருமணம் செய்துகொள்ளக் கேட்டு அவனை வற்புறுத்த யாருமே அற்றுப்போன நிலையில் மிகவும் நிம்மதி கொண்டு சாரதாவின் நினைவிலேயே நாள்களைக் கழிக்கலானான்.

      … தியாகிகளுக்கு நிலம் வழங்கப்பட்ட அறிவிப்பு வந்தும் அவன் தனக்கு நிலம் கேட்டு விண்ணப்பிக்கவில்லை.  தாய்க்குச் சோறு போட அவளிடமிருந்து பணம் பெறுவது போல என்று சொல்லிக்கொண்டான்.

      … வருடங்கள் பல கழிந்து ஆஞ்சநேயலு இன்று  வேலையிலிருந்து ஓய்வு பெற்று ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன.

      … நேரு பார்க்கில் ஒரு நாள் ஆஞ்சநேயலு டி.வி. பார்த்தபோது அதில் வீணை வாசித்த வயதான பெண்மணி சாரதாவின் சாயலில் இருந்ததைப் பார்த்தார். அவளாயிருக்குமோ என்று கணம் போல் தோன்றியது.  ஆரம்ப அறிவிப்பைப் பார்க்காததால் அருகில் இருந்தவரை, “வீணை வாசிக்கிறது யாருங்க?” என்று கேட்டார்.

       “யாரோ சாரதாவாம்,” என்று அவர் தெரிவித்ததும் ஆஞ்சநேயலுவின் வயோதிக மார்பு இரையலாயிற்று. பாட்டைக் கேட்டு முடித்துத் தம் அறைக்குச் சென்றதும், டி.வி. நிலையத்துக்குச் சாரதா, வீணை வித்வாம்சினி, என்று முகவரி எழுதி உடனே கடிதம் எழுதினார்,

       “அன்புடையீர்!

       வணக்கம். உங்கள் வீணை வாசிப்பை இன்று தொலைக்காட்சியில் கேட்டு மகிழ்ந்தேன். சென்னை ஷெனாய் நகரின், இரண்டாம் குறுக்குத் தெருவில் பத்தாம் இலக்கமிட்ட வீட்டில் குடியிருந்த சாரதா நீங்களா என்பதை அறிய அவாவுகிறேன். அப்படியானால் உங்களைச் சந்திக்க விரும்புகிறேன். நான் பக்கத்து வீட்டில் மாமா வீட்டில் தங்கிப் படித்துக்கொண்டிருந்தேன்.

இங்ஙனம்;

ஆஞ்சநேயலு

      மறு அஞ்சலில் பதில் வந்துவிட்டது.

      ’அன்புமிக்க ஆஞ்சநேயலு அவர்களுக்கு.

      வணக்கம். உங்கள் கடிதம். உங்களையே பார்த்தது போல் மகிழ்ச்சியடைந்தேன். கண்டிப்பாக உடனே வரவும். மற்றவை நேரில்.

                                                  இங்ஙனம்

                                                       உங்கள் சாரதா      உங்கள் சாரதா!

      உங்கள் சாரதாவா? அதற்கு என்ன அர்த்தம்?

      ஆஞ்சநேயலு படபடத்த உள்ளத்துடன் அவள் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முகவரி நோக்கி உடனே புறப்பட்டார்.

      … அந்தச் சின்ன வீட்டில் அவள் மட்டுமே இருந்தாள். அவர் வந்ததும் மனம் விட்டுப் பேச எண்ணி வெலைக்காரியை அவள் வெளியே அனுப்பிவிட்டாள்.

      தலை நன்றாக நரைத்துப் போயிருந்தது. சாரதா என்பதற்கான அடையாளங்களாக அவள் பெரிய விழிகளும் – இப்போது சுற்றளவு குறைந்திருந்தன – அந்த முகவாய்க் குழியும், கூரிய மூக்கும் அப்படியே இருந்தன.

       “எத்தனை நாளா வீணை வாசிக்கிறீங்க? எப்படி எனக்குத் தெரியாம போச்சு?”

       “அதெப்படித் தெரியும்? அம்பத்தஞ்சு வயசுக்கு மேலதானே கத்துக்கவே ஆரம்பிச்சேன்? ரேடியோவில கூட வாசிக்கல்லே. அன்னிக்கு நீங்க டி.வி.யில பார்த்ததுதான் என்னோட முதல் சான்ஸ்!”

       “அவங்கல்லாம் எங்கே?”

       “எவங்கல்லாம்? … என்ன கேக்கறீங்க? … ‘அவங்க’ ன்னு நீங்க குறிப்பிட்ற உறவுக்காரங்கல்லாம் எனக்கு ஏற்பட்டிருந்தா ‘உங்கள் சாரதா’ ன்னு லெட்டர்ல தைரியமா ஒரு கிழவி எழுதுவாளா?”

       ஆஞ்சநேயலுவின் கண்கள் கணப் பொழுதில் நிறைந்துவிட்டன. அவள் பார்வையும் கண்ணீரால் மங்கியது.

       “இத்தனை நாளும் டீச்சர் வேலை பார்த்தேன் – அம்பத்தூர்ல.. இப்ப ரிடைர் ஆயிட்டேன், வயசாயிட்டதால குரல் போயிடுத்து. அதனால                                                                                                                                                                                                    தான் வீணை கத்துண்டேன்.”

       “எனக்கு வீணை வாசிபீங்களா?”

       “ஓ! உங்களுக்கு இல்லாமயா?” என்ற சாரதா வீணையை எடுத்து வைத்துக்கொண்டு, ‘நீ இரங்காயெனில, புகல் ஏது?’ என்கிற பாட்டை வாசிக்கத் தொடங்கினாள்.

…….

Series Navigationஇன்னொரு புகைப்படம்
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *