மத்ர தேசத்து மன்னன் சல்யனின் தங்கையை ஸ்ரீதனம் கொடுத்து விலைக்கு வாங்கி வந்தார் பீஷ்மர். மாத்ரிக்கு பாண்டுவைப் பற்றி பயம் இல்லை மூத்தவள் குந்தி எப்படி தன்னை நடத்துவாளோ என்று கவலைப்பட்டாள். சீர்வரிசைப் பொருட்களுடன் அஸ்தினாபுரம் அரண்மணையை அடைந்த மாத்ரியை வாயிலில் குந்திதான் ஆரத்தி எடுத்து வரவேற்றாள். மிகவும் சின்னப் பெண்ணாக இருக்கியே என்பது தான் குந்தி மாத்ரியிடம் முதலில் பேசியது. பாண்டு சிந்தனைவயப்பட்டவனாக இருந்தான். மாத்ரி மத்ர தேசத்தில் எப்படி இருந்தாளோ அப்படித்தான் இங்கும் இருக்க வேண்டியிருந்தது. அந்திப் பொழுதில் மாத்ரி பாண்டுவுக்காக அந்தப்புரத்தில் காத்திருந்தாலும் அவன் குந்தியின் மாளிகைக்கே சென்றான். இளையராணி என்னும் பட்டத்துடன் அரண்மடனையை வலம்வர முடிந்ததே தவிர பாண்டுவின் அன்பைப் பெற முடியவில்லை மாத்ரியால். இதற்கு காரணம் மூத்தவள் குந்தி என்று மாத்ரியின் மனதில் நெருப்பு கனன்று கொண்டிருந்தது.
பெண் உடலால் வாழ்கிறாள். தனது இருப்பு அலட்சியப்படுத்தப்படும் போது உள்ளுக்குள் ஆவேசம் எழுகிறது அவளுக்கு. சேடிப் பெண்களும் மகாராணி மகாராணி என்று குந்தியையே சுற்றிச் சுற்றி வந்தார்கள். மத்ர தேசத்து தோழிகளுடன் பேச்சிலும், விளையாட்டிலும் பொழுதைக் கழிப்பதைத் தவிர மாத்ரிக்கு அரண்மனையில் வேறு வேலை இல்லை. இது அலுப்பு தட்டுவதாக இருந்தது அவளுக்கு. கரம் பற்றியவன் விநோதமாக நடக்க என்ன காரணம் என்ற கேள்வி அவள் மனதைக் குடைந்து கொண்டிருந்தது. குந்திக்கு தெரியும் தன்னைவிட மாத்ரி அழகியென்று. அதனால் தேனொழுகும் வார்த்தைகளால் வலைவீசி பாண்டுவை தனது முந்தானைக்குள் முடிந்து வைத்திருந்தாள்.
பாண்டுவின் மனதில் வண்டாக குடைந்து கொண்டிருந்த ஒரு விஷயம் இருந்தது. பாண்டு தேன்நிலவுக்காக இரு மனைவியரோடு இமயமலைச் சாரலில் அமைந்துள்ள அழகிய தபோவனத்துக்கு சென்றிருந்தான். அப்போது வேட்கையால் உந்தப்பட்டவனாய் மனைவியர் இருவரையும் தபோவனத்தில் விட்டுவிட்டு கானகத்திற்கு வேட்டைக்கு புறப்பட்டுச் சென்றான். விதியின் போக்கே பாண்டுவை கானகத்துக்கு அழைத்து வந்தது. தொலைவில் ஆண்மானும் பெண்மானும் தம்முட்கூடி ஆலிங்கனம் செய்து கொண்டிருப்பதைக் கண்டான். பாண்டு அதை அலட்சியப்படுத்திவிட்டு நகர்ந்து சென்றிருக்கலாம். கண்ணுக்கு தெரியாத விதிதானே அனைத்தையும் இங்கே நிர்ணயிக்கிறது. அங்கு விதி பாண்டுவின் புத்தியிலிருந்து விளையாடியது. குறிபார்த்து அம்பு தொடுக்க ஆண்மான் வீழ்ந்தது. சற்று நேரத்தில் மான்கள் மறைந்து ரிஷியும், ரிஷிபத்தினியும் தோன்றினார்கள். மானாக உருமாறி நாங்கள் கூடிய போது என்னை அம்பெய்தி கொன்றாயல்லவா காமத்துடன் எந்த ஸ்த்ரியை தொடுகின்றாயோ அப்போதே உன் விதி முடியும் என சாபமிட்டு உயிர்விட்டார். பிரிவுத்துயர் தாங்காது ரிஷிபத்தினியும் நெருப்பினில் விழுந்து தன்னை மாய்த்துக் கொண்டாள்.
வினைக்கு நாம் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என எவரும் எண்ணுவதில்லை. உதிரத்தைக் குடித்து மயங்கியபடி அசையாது அமர்ந்து இருக்கும் கொசுவுக்கு மரணம்தான் பரிசாக கிடைக்கிறது. செய்த கர்மத்தின் பலனை யாரும் அனுபவிக்காமல் தப்பிவிட முடியாது. நெறி தவறி நீ கல்மனத்தனாக செயல்படும்போது பாதிக்கப்பட்டவர்கள் இடும் சாபம் உன் ஆயுள் முழுவதும் உன்னை நிம்மதியாக விடாமல் துரத்தி துரத்தி அடிக்கும். பாண்டு மிரண்டு போனான். பிராயச்சித்தம தேடினான். இந்தச் சம்பவம் பாண்டுவுக்கு மெய்த்தேடலை ஆரம்பித்து வைத்தது. இரு மனைவியரை அவன் பெற்றிருந்தும் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பிரம்மச்சரிய விரதம் பூண்டான். பொறிவழியே பாயும் ஐம்புலன்களையும் தன் கட்டுக்குள் கொண்டு வந்தான்.
காந்தாரி வியாசர் அருளால் கருவுற்று இருந்தாள். பாண்டுவுக்கு அந்தச் செய்தி வேப்பங்காயாக கசந்தது. வெளியே சாந்தமாக நிம்மதியாக காணப்பட்டாலும் பாண்டுவின் உள்ளுக்குள் புயல் அடித்துக் கொண்டிருந்தது. இனி மேல் தாங்காது என்கிற நிலை வந்தபோது குந்தியிடம் தனது அபிலாஷைகளை கொட்டிவிட முனைந்தான். சமயம் பார்த்து தான் சாபம் பெற்றதையும், தன் வம்சம் இத்தோடு முடிந்துவிடக் கூடாதென்ற தனது உள்ளக்கிடக்கையையும் குந்தியிடம் தெரிவித்த போது, ஒரு உபாயத்தை குந்தி முன்வைத்தாள். துர்வாசர் தனக்களித்த வரத்தை பற்றியும் மந்திரத்தை ஜெபித்து கந்தவர்களை வரவழைத்து அவர்கள் மூலம் குழந்தை பாக்கியம் பெற முடியும் என்று தெரிவித்தாள். குந்தியின் சொற்கள் கரும்பென இனித்தது பாண்டுவுக்கு. அப்படி பிறந்தவர்கள் தான் தருமனும், பீமனும், அர்ச்சுனனும். பாண்டு தர்ம நெறிப்படி மாத்ரிக்கும் மந்திரத்தை உபதேசிக்க முடியுமா என குந்தியிடம் கேட்டான்.
குந்தியால் மறுக்கவும் முடியவில்லை, ஒத்துக் கொள்ளவும் முடியவில்லை. பாண்டு கேட்டுக் கொண்டதால் சரியென்று இருமனத்துடன் சம்மதம் தெரிவித்தாள். மாத்ரி மந்திரத்தை இரண்டு முறை உபயோகித்து நகுலனையும், சகாதேவனையும் பெற்றாள். வனத்திற்கு வந்ததிலிருந்து குந்தி பாண்டுவை நிழலாக இருந்து கவனித்து வந்தாள். அன்று விதியின் கைப்பாவையாக பாண்டுவும், அவன் புத்திரர்களும், மாத்ரியும், குந்தியும் மாறுவார்கள் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அன்று பிராமண போஜனம் நடக்கவிருந்ததால் அதில் கவனம் செலுத்தினாள் குந்தி. பாண்டுவோ மாத்ரியை அழைத்துக் கொண்டு வனம் சென்றான். இயற்கையின் பொன் எழிலை ரசித்தபடி வந்தவனுக்கு மாத்ரியைப் பார்த்ததும் காமம் வேரிலிருந்து நாலா பக்கமும் கிளை பரப்பியது. மாத்ரி ரிஷிகிந்தமனின் சாபத்தை நினைவூட்டிய போதும் மோக விருட்சத்தின் நிழலில் இருவரும் இளைப்பாற செத்து வீழ்ந்தான் பாண்டு.
மாத்ரியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த குந்தி நிலைமையை புரிந்து கொண்டாள். தங்கமென அவரைப் பத்திரப்படுத்தி வைத்திருந்தேனே போட்டு உடைத்துவிட்டாயே. உன் உடல் இச்சைக்காக என் கணவரின் உயிரைப் பறித்துவிட்டாயே, இப்போது திருப்தி தானே எரிந்து விழுந்தாள். குந்தியின் ஆவேசத்தை எதிர்கொள்ள முடியாத மாத்ரி மனஅளவில் இறந்தது போளானாள். நகுலனையும், சகாதேவனையும் குந்தியிடம் ஒப்படைத்து நீ என்னைப் போலல்ல இவ்விருவரையும் உன் குழந்தைகள் போல பாவித்து வளர்ப்பாய் என எனக்குத் தெரியும் என்றாள். நான் என் முடிவைத் தேடிக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு பாண்டுவின் சிதையில் வீழ்ந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டாள்.
- தேர்வு
- கணக்கு
- இந்தியா இருமுறை எரிசக்தி இணைப்பில் [Hybrid Energy Integrated System] மின்சக்தி பெருக்கத் திட்டங்கள்
- குருட்ஷேத்திரம் 17 (அதர்மத்தின் மொத்த உருவமாக அவதரித்த துரியோதனன்)
- குருட்ஷேத்திரம் 18 (மாத்ரிக்கு தீராப்பழி வந்து சேர்ந்தது)
- ஆதங்கம்
- குமட்டல்
- குற்றம்….
- குரல்
- ஒரு கதை ஒரு கருத்து – சிட்டியின் அந்திமந்தாரை