ஜோதிர்லதா கிரிஜா
(கிருஹ ஷோபா இதழில் சில ஆண்டுகளுக்கு முன் வந்தது.)
சுந்தரம் நம்ப முடியாதவராய் அப்படியே நின்று போனார். அவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாய் மைதிலிக்கு வரன் பார்த்துக்கொண்டுதான் இருந்தார். ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை. ளுக்காக வரன் பார்த்துக்கொண்டிருந்த விஷயத்தை அவர் அவளிடம் சொல்லவில்லைதான். ஆனால், அதற்காக….. இப்படி…. கடற்கரையில் ஒருவனோடு உட்கார்ந்து அவள் பேசிக்கொண்டிருந்தது அவரை என்னவோ செய்தது. தினமும் இப்படித்தான் கடற்கரையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்களோ! பையனைப் பார்த்தால் கண்னியமானவனாய்த்தான் தெரிந்தான்! நிறையவே இடைவெளி விட்டுத் தள்ளித்தான் உட்கார்ந்துகொண்டிருந்தான். ஒருகால், அவள் நம்பிக்கையைப் பெறும் தொடக்ககாலச் சாகசமாய்க்கூட இருக்கலாம். யார் கண்டது ? இந்தக் காலத்தில் யாரை நம்புவது? மங்கிய மாலை ஒளியில் முகம் முற்றும் சரியாய்த் தெரியவில்லை. அவர்கள் பார்வையில் படாத தொலைவில் அவர் கும்பலோடு கும்பலாக உட்கார்ந்து அவர்களைக் கவனித்தார். கவனித்தார் என்பதை விடவும் கண்காணித்தார் என்று சொல்லுவதே சரியாக இருக்கும். இப்படியெல்லாம் இளைஞர்களைக் கண்காணித்துவிட முடியுமா என்ன? தாம் கூட இல்லாத எவ்வளவோ நேரங்களும் வாய்ப்புகளும் அவர்களுக்கு உள்ளனவே என்றும் அவர் அங்கலாய்த்தார். அவருள் சன்னமாய் ஒரு பெருமூச்சு எழுந்து அடங்கிற்று. தினமும் ஏழு மணிக்கு வீடு திரும்புவது அலுவலகத்தில் வேலை மிகுதியால் அன்று என்பது அவருக்கு விளங்கியது. அவர் திகிலடித்துப் போனார். அவர்களது பழக்கம் வெறும் பேச்சுகளோடும், பார்வைப் பரிமாற்றங்களோடும் நின்றிருக்குமா…. இல்லா விட்டால்…. மேலே நினைத்தும் பார்க்க முடியாமலும், விரும்பாமலும் அவர் தலையைக் குலுக்கிக்கொண்டார்.
சரியாக ஆறரை மணிக்கு இருவரும் எழுந்தார்கள். நடந்தார்கள். அவர் நல்ல இடைவெளிவிட்டு அவர்களைத் தொடர்ந்தார். திருவல்லிக்கேணி பேருந்துக் கடை நிறுத்தம் அருகே இருவரும் கையசைத்துப் பிரிந்தார்கள். அவள் வீடு நோக்கி நடந்தாள். இருவரிடமும் வீட்டுச் சாவி இருந்ததால், அவர் அந்த இளைஞனைப் பின்தொடரலானார். கால்கள் அவனது முதுகுப் புறத்தைப் பார்த்தபடியே நடந்து கொண்டிருக்க, அவரது மனக்கண் முன் ஒரு காட்சி விரிந்தது. அவர் என்ன முயன்றும் அது மறைய மறுத்துச் சண்டித்தனம் செய்தபடி திரும்பத்திரும்ப அவரை அலைக்¸ ழித்தவாறே இருந்தது.
…அவர் வீடு திரும்பியபோது மைதிலி ஏதோ வார இதழை வாசித்தவாறு வெறுந்தரையில் சுவரில் சாய்ந்துகொண்டும், கால்களை நீட்டிக்கொண்டும் உட்கார்ந்து கொண்டிருந்ததை ஜன்னல் வழியே அவர் பார்த்துவிட்டுக் கதவை மெல்ல மூன்று முறை தட்டினார். அவள் உடனே எழுந்து, விரைந்து வந்து கதவைத் திறந்தாள். அவளைக் கண்டு பிடித்துவிட்டதைச் சொல்லி நறுக்கென்று நாலு கேள்விகள் கேட்டு அவளை அயர்த்தத் துடித்த நாவை அவர் மிகுந்த முயற்சியுடன் கட்டுப்படுத்திக்கொண்டார். அம்மா இல்லாமல் வளர்ந்த பெண். ….கடுமை காட்ட அவரால் முடியவில்லை. அடக்கிக்கொண்டார். ஆனாலும் சும்மாவும் இருந்துவிடக்கூடாது.
“காப்பி குடிச்சியாம்மா?“ என்று கேட்டுவிட்டு அவர் காலணிகளைக் கழற்றிய பின் கூடத்துக்கு அவள் பின் தொடர வந்து நாற்காலியில் அமர்ந்துகொண்டார். என்றுமே செய்திராதபடி அவள் தரையில் குப்புறப் போட்டிருந்த வாரைடிதழைக் கையில் எடுத்து அந்தப் பக்கத்தைப் பார்த்தார். ‘காதலிலே தோலிவியுற்றாள்’ என்பது கதையின் தலைப்பு. ‘பத்திரிகை, டி.வி., சினிமா இதனால யெல்லாந்தான் இந்தக் காலத்துப் பசங்க கெட்டுக் குட்டிச்சுவரய்ப் போறதுகள்!’ இப்படி யோசித்த கணத்தில் சற்று முன் அவ்விளைஞனைப் பின்பற்றிச் சென்றபோது தமது மனத்தில் விரிந்த காட்சி அவருக்கு நினைப்பு வந்து அவரது எண்ணத்தைப் பொய்யாக்கியது.
“மைதிலி! உனக்கு சீக்கிரமே கல்யாணம் பண்ணிடலாம்னு! உங்கிட்ட அதுபத்தி நான் பேசல்லையே ஒழிய, கொஞ்ச நாளாவே உனக்கு நான் வரன் பாத்துண்டுதாம்மா இருக்கேன். ஒரு நல்ல வரனாத் திகையணுமோல்லியோ? அதான் தாமசம் ஆயிண்டிருக்கு!”
ஏதோ விளக்கம் தருவது போல் அவர் பேசிய தோரணையால் சற்றே திடுக்கிட்டும் முகம் சிவந்தும் அவள் தலை உயர்த்திக் கணம் போல் அவரை நோக்கிய பின் குனிந்துகொண்டாள்.
“நான் ஏற்கெனவே ஜாதகப் பொருத்த மெல்லாம் பாத்துத் தேர்ந்தெடுத்த ஒரு பையனோட அப்பாவைத் தற்செயலா பீச்லேர்ந்து கொஞ்சம் முன்னாடி திரும்பி வந்திண்டிருந்தப்போ சந்திச்சேன். பொண்ணு பாக்க நாளைக்கு வரோம்னு சொன்னார். அவர், அந்தப் பையன், அம்மாக்காரி, ஒரு அக்கா ஆக நாலு பேர் நாளைக்கு மத்தியானம் மூணு-மூணரை மணி வாக்கில உன்னைப் பாக்க வருவா. அதனால நீ நாளைக்கு ஆஃபீசுக்கு லீவ் போட்டுடு. என்ன?”
அந்தக் கடைசி ‘என்ன’ ஓர் அதிகாரத்துடன் ஒலித்ததாய்த் தோன்றியதில் மைதிலி சட்டென்று தலை நிமிர்ந்து அவரைப் பார்த்தாள். அது மட்டுமின்றி, அவர் கடற்கரைக்குச் சென்று வந்த உண்மை அவளைக் கொஞ்சம் திடுக்குறச் செய்தது.ம் அதற்கு ஒரு காரணமாகும். ஓரத்து விழிகளால் அவளது முகமற்றத்தைக் கவனித்தவாறே, “என்ன, பதிலையே காணோம்?” என்றார் சற்றே அதட்டலாக.
“கல்யாணத்துக்கு இப்ப என்னப்பா அவசரம்? இன்னும் கொஞ்ச நாள் போட்டுமே?”
“என்னது, இன்னும் கொஞ்ச நாள் போட்டுமேவா! உன் வயசு இருபத்து நாலும்மா. உங்கம்மாவுக்கு இருபது வயசிலே மூத்த கொழந்தை பொறந்து செத்துப் போயிடுத்து. நீ பொறந்தப்ப அவளுக்கு இருபத்து ரெண்டும்மா! காலம் கிடக்கிற கிடப்புல ஏமாந்த பொண்ணு எவ அகப்படுவான்னு ஒரு ஓநாய்க் கூட்டமே அலை மோதிண்டு இருக்கு. எனக்கும் வயசு ஆயிண்டிருக்கோல்லியோ? என் கடமையை முடிச்சுட்டேன்னா நிம்மதியா மிச்ச சொச்ச நாளைக் கழிச்சுடுவேன். அதான்! புரிஞ்சுக்கோ!” – அதற்கு மேல் பேச்சே இல்லை என்பது போல் கண்டிப்பாக ஒலித்த அந்தக் குரலும் தோரணையும் அவளுக்கு முற்றும் புதியவை. ஒரு நம்பமுடியாமையுடன் அவள் அவரை விழிகள் மலரப் பார்த்தாள்.
பின்னர், சுதாரித்துக்கொண்டு, “அப்பா! உங்களையும் என்னோட கூட்டிண்டு போய் வெச்சுக்கிறதுக்கு எவன் சம்மதிக்கிறானோ, அவனைத் தாம்ப்பா என்னால கல்யாணம் பண்ணிக்க முடியும்!” என்றாள்.
சுந்தரம் வாய்விட்டுச் சிரித்தார். “நடக்கிற விஷயமாப் பேசும்மா! நிபந்தனை போட்ற எந்தப் பொண்ணையும் ஆம்பளைகளுக்குப் பிடிக்காதும்மா! அது கூடவா படிச்ச பொண்ணான உனக்குத் தெரியாது?”
“தெரியும்ப்பா, நன்னாவே தெரியும்! எல்லா ஆம்பளைகÙ மேவாப்பா அப்படிப் பட்டவா? இப்பல்லாம் மாமனார்-மாமியாரைக் காப்பாத்துறவா நிறையப் பேரு இருக்காப்பா. அப்படி ஒரு ஆளு கிடைக்கிறவரை காத்துண்டு இருக்கலாமேப்பா?”
“பொண்டாட்டியும் சம்பாதிக்கிற குடும்பங்கள்லே மட்டுந்தானேம்மா அது நடக்கிறது? நாளைக்கே நீ வேலையை விடும்படி ஏதோ காரணத்துனால ஆச்சுன்னு ஒரு பேச்சுக்கு வெச்சுக்கோ! அடுத்த நாளே நான் ஒரு சுமையாத் தெரிய ஆரம்பிச்சுடுவேன். எனக்கும் அங்கே ஒட்டாது. இல்லியா? நாம நாலையும் யோசிக்கணும்மா, மைதிலி!”
“நான் சொன்னாக் கேளுங்கோப்பா!”
“என்னது! நீ சொல்லி, நான் கேக்கறதா! நாளைக்கு நீ லீவு போட்டுட்டு ஆத்துல இருக்கே. ஆம்…மா! தாயில்லாப் பொண்ணு, தாயில்லாப் பொண்ணுன்னு செல்லம் குடுக்கிறதுக்கும் ஒரு அளவு இருக்கு. இந்த மாதிரிப் பெரிய விஷயத்துல எல்லாம் முரண்டு பிடிக்காதே! என்ன, தெரிஞ்சுதா?”
மைதிலிக்குக் கண்களில் நீர் சுரந்துவிட்டது. அவள் முகம் தாழ்த்திக்கொண்டு அப்பால் போனாள். அடுப்படியில் நின்று இரவுக்கான வாழைக்காய்க் கறியை வதக்கிக்கொண்டிருந்த அவளால் நம்பவேமுடியவில்லை. ‘ பீச்சுக்குப் போன அப்பவின் பார்வையில் நானும் ரகுவும் பட்டுவிட்டோமோ? அதனால்தான் இவ்வளவு கெடுபிடியோ? ஆனால் இப்படியெல்லாம் திடீரென்று மறு நாளே பெண் பார்க்க ஒரு குடும்பத்தை ஒருமணிப் பொழுதுக்குள் வரச் செய்ய முடியுமா! அப்பா ஏற்கெனவே பார்த்துவைத்துள்ள குடும்பம்தான் அது! …’
ரகுவுக்கும் அம்மா கிடையாது. அப்பா மட்டுந்தான். அவளுடைய அப்பாவை நிரந்தரமாய் உடன் வைத்துக்கொள்ளுவது பற்றித் தன் அப்பாவிடன் அன்றிரவு சொல்லிவிடப் போவதாக அவளிடம் அன்று மாலைதான் அவன் கூறி இருந்தான். அதற்குள் இப்படி ஒரு திருப்பமா! அவர்கள் வந்து விட்டுப் போகட்டும். பையனைப் பிடிக்க வில்லை என்று சொல்லிவிட்டுப் பிறகு ஒரு தோதான நேரத்தில் ரகுவைப் பற்றிச் சொல்லிவிட வேண்டியதுதான். ஜாதி வேறுபாட்டைப் பற்றி நினைத்தால்தான் சொரேர் என்றது அவளுக்கு. அப்பா அதிர்ந்துதான் போவார்! ஆனாலும், காதல் பெரிசு! வாழ்வதற்கு இன்னும் நிறைய ஆண்டுகள் இருப்பவர்கள் பற்றி வாழ்ந்து முடிததவர்கள் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டியதுதான் நியாயம்! அதற்கு மாறுபட்ட தலைகீழான முறையில் ஆட்சேபிப்பது அன்று!
அவர்கள் வீட்டில் தொலைபேசி கிடையாது. எனவே அலுவலகத்துடன் தொடர்புகொண்டு மறு நாளுக்கு விடுப்புத் தெரிவிக்க அவள் வெளியே போக வேண்டியது இருக்கும். அந்த வாய்ப்பைப் பயன் படுத்திக்கொண்டு அவள் ரகுவுடன் பேசி விஷயத்தைச் சொல்லிவிட வேண்டும். இப்படி நினைத்துக்கொண்ட அவள் அதை அப்போதைக்கு அவனிடம் சொல்லாவிட்டாலும் வானம் இடிந்து தங்கள் தலைகளில் விழுந்துவிடப் போவதில்லை என்றும் தன்னுள் கூறிக்கொண்டாள். பையனைப் பிடிக்கவில்லை என்றுதானே சொல்லப் போகிறாள்!
…மறு நாள் அவள் பத்துமணிக்குத் தன் அலுவலகத்துடன் பேச வெளியே புறப்பட்ட போது, சுந்தரம் தாம் வெற்றிலை, பாக்கு, பழங்கள் ஆகியவற்றை வாங்குவதற்கு வெளியே செல்லவிருப்பதால், தாமே அவளுக்கு உடம்பு சரியில்லை என்று விடுப்புக்குச் சொல்லிவிடுவதாய்க் கூறித் தடுத்து விட்டார். மேலும், பெண்பார்க்க வுரும் நாள், நிச்சயம் செய்யும் நாள், திருமண நாள் போன்ற நாள்களில் பெண்ணும் சரி, பையனும் சரி வெளியே போய்ச் சுற்றக் கூடாது என்றும் அவளுக்குத் தெரிவித்தார். கண்டிப்பான அவரது கட்டளையைக் கேட்டு அவளுக்கு வாய் அடைத்துப் போயிற்று. மிகப் புதிய அப்பாவாய்த் தெரிந்த அவரை அவள் அளவு கடந்த திகைப்புடன் நோக்கினாள்.
. .. . .வேண்டா வெறுப்புடன் கூடத்துக்கு வந்து காப்பித் தம்ப்ளர்களுடன் நின்ற மைதிலிக்கு அங்கே புன்சிரிப்பும் குறும்புமாய் ஒரு பெரியவருடன் உட்கார்ந்து கொண்டிருந்த ரகுவரனைப் பார்த்ததும் அவளுக்கு அதிர்ச்சியும் வியப்பும் தாங்கவில்லை. ஒன்றுமே அறியாதவர் போல் – ஆனால் முகமலர்ந்த சிரிப்புடன் – அவர்களுக்கு எதிரே நின்றுகொண்டிருந்த அப்பாவைப் பார்த்ததும் அவள் நெகிழ்ந்து போனாள். கண்களில் கணத்துக்கும் குறைவான பொழுதுள் கண்னீர் மல்கிவிட்டது.
காப்பிக்கோப்பைகள் அடங்கிய அகன்ற தட்டை அப்படியே அவர்களுக்கு எதிரில் இருந்த குட்டைமேசை மீது வைத்துவிட்டு – அவர்களிடம் காப்பித் தம்ப்ளர்களைக் கூட நீட்டாமல் – அப்பாவின் கால்களில் விழுந்தாள்.
“அடச்சே! என்னம்மா இது! எழுந்திரு, எழுந்திரு. எழுந்திரு, சொல்றேன்!” – இவ்வாறு சொல்லியபடி அவளது உச்சந்தலையில் கைபதித்த சுந்தரத்தின் குரல் முந்திய நாள் இரவு போன்றே அதிகாரமாகவும் கண்டிப்பாகவும் ஒலித்த போதிலும், அதில் ததும்பிய கடுமை அவளைக் காயப்படுத்தவில்லை. மாறாக தண்ணிலவில் குளித்தாற்போன்று குளுமையாக இருந்தது. கண்களைத் துடைத்துக்கொண்டபின் மைதிலி எல்லாருக்கும் காப்பி கொடுத்தாள்.
பெரியவர் பேசினார்: “தம்பி சொல்லிக்கிட்டே இருந்திச்சு. ஆனா நான் தான் ‘அவங்க ப்ராமின்ஸ் ஆச்சே! லேசில சம்மதிக்க மாட்டாங்களே! மத்தப்படி அந்த அய்யா இங்க வந்து இருக்கிறதுல எனக்கு எந்த ஆட்சேபணையும் கிடையாது’ ன்னு சொல்லுவேன்.’…. நேத்து நீங்களே நேர்ல வந்து பேசினது நல்லதாப் போச்சு!” என்று புன்னகை செய்துவிட்டுக் காப்பியை எடுத்து உறிஞ்சினார்.
“மைதிலி! அவருக்கும் நமஸ்காரம் பண்ணும்மா! ரெண்டு பெரியவங்க எதிர்ல இருக்கிறப்ப ஒருத்தருக்கு மட்டும் செய்யிறது சரி இல்லே!” என்று சுந்தரம் கூற, மைதிலி அவர் காலிலும் விழுந்து எழுந்தாள். ரகுவரனுக்கும் செய்யச் சொன்ன போது, அவன் வலுவாக மறுத்து அவளைத் தடுத்துவிட்டான்.
அடுத்த முகூர்த்தத்திலேயே திருமணத்தை நடத்திவிடலாம் என்று பெரியவர்கள் இருவரும் சேர்ந்து முடிவு எடுத்தனர். ….
அவர்கள் போனதன் பிறகு, கதவைச் சாத்திக்கொண்டு உள்ளே வந்த சுந்தரத்தை அவளால் நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை. சுந்தரம் எதுவுமே பேசாமலும், புன்சிரிப்புடனும் நாற்காலியில் அமர்ந்தார். எதிரே வந்து நின்ற மைதிலி, “அப்பா! ஜாதி வித்தியாசத்தைப் போருள்படுத்தாம இருக்கிற அளவுக்கு உங்களுக்குப் பெரிய மனசு இருக்கும்னு நான் கனவில கூட நினைச்சதில்லேப்பா!”
“உங்களுக்கு என் விஷயம் எப்படித் தெரியும்னு நீ கேக்கவே இல்லியே! நேத்து பீச்ல உங்க ரெண்டு பேரையும் பாத்தேன். அந்தப் பையனுக்குப் பின்னாலேயே நடந்து அவா வீட்டுக்குப்போனேன். பேசினேன். அவ்வளவுதான்!”
இவ்வாறு தாமாகவே சொல்லிவிட்டு, அவர் புன்னகைசெய்தபடியே இருந்தார். ரகுவரனைப் பின்தொடர்ந்து சென்ற போது அவர் மனக்கண்ணில் விரிந்த காட்சியை மறுபடியும் ஒரு முறை அவர் கண்டார்:
இருபது வயது கூட நிறையாத இளைஞனாக இருந்த பருவத்தில் தன் வீட்டுப் பணிப்பெண்ணின் மகள் ராஜம்மா மீது தான் ஆசைப்பட்டதும், நெருக்கமாக அவளுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த கணத்தில் பிடிபட்டு, அப்பாவால் பயங்கரமாய் அடிக்கப்பட்டதும், அந்தப் பெண் அரளிவிதையை அரைத்துத் தின்று உயிரை விட்டதும் அடங்கிய காட்சிதான் அது.
- ஆதலால் காதல்செய்வோம்…
- மோதிடும் விரல்கள்
- சோளக்கொல்லை பொம்மை
- புத்தாண்டு பிறந்தது !
- Hypocrite -பசுனூரு ஸ்ரீதர்பாபு
- எமிலி டிக்கின்ஸன் கவிதைகள்
- எஸ். பொன்னுத்துரையின் எழுத்துகள்
- அமெரிக்க விமானத்தில் ரஸ்யாவின் சிகப்பு நட்சத்திர சின்னமா?
- குரு வந்தனம்
- வெற்றியின் ஓய்வில் யோசனை தவறேல்
- பிரபஞ்சம் சீராகத் திட்டமிட்ட படைப்பா ? தாறுமாறாக வடிவான சுயத் தோற்றமா?
- 2021 ஒரு பார்வை
- ஆதியோகி கவிதைகள்
- கவிதையும் ரசனையும் – 24 க.நா.சு
- வலி
- இரண்டு நாவல்கள் வெளியீடு
- விளக்கு விருதுகள். 2020