தமிழ்நாட்டில் வெகுகாலத்துக்கு முன்னால், திமுக ஒரு அணியிலும் காங்கிரஸ் மற்றொரு அணியிலும் இருந்தன. கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்கட்சியிலிருந்து நீக்கிவிட்டு, நீதிகட்சியின் புது அவதாரமான திமுக அந்த இடத்தை பிடித்தது.
பக்தவத்சலம் தலைமை தாங்கிய காங்கிரஸ் 41.10 சதவீத வாக்குக்களையும், திமுக 40.69 சத வாக்குக்களையும் பெற்றாலும் ஸ்வதந்திரா கட்சி (ராஜாஜியின் கட்சி) 5.30 சதவீத வாக்குக்களாலும் சிபிஎம்மின் 4.07 சதவீத வாக்குகளாலும் திமுக வெற்றி பெற்று 137 இடங்களை பெற்றது. காங்கிரஸ் 51 இடங்களை பெற்றது.
அடுத்த 1971 தேர்தலில் ராஜாஜியின் ஸ்வதந்திரா கட்சி, காமராஜரின் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் சேர்ந்தாலும் திமுக தன் தொகுதிகளை தக்க வைத்துகொண்டு கருணாநிதி தலைமையில் ஆட்சியை அமைத்தது.
அடுத்த 1977 தேர்தலில் எம்ஜியாரின் அதிமுக 33 சதவீதங்களையும், திமுக 25 சதவீதத்தையும், காங்கிரஸ் 17 சதவீதத்தையும் பிடித்ததில் எம்ஜியாரின் அதிமுக ஆட்சி அமைத்தது.
அடுத்த 1980 தேர்தலில் அதிமுக 48 சதவீதத்தையும், திமுக- காங்கிரஸ் கூட்டணியில் 44 சதவீதத்தையும் பெற்றதில் (காங்கிரஸ் 21 சதவீதம் வாக்குக்கள் திமுக 22 சதவீதம் வாக்குக்கள்) மீண்டும் அதிமுக எம்ஜியார் தலைமையில் ஆட்சி பொறுப்பேற்றார்.
அடுத்த 1984 தேர்தலில் அதிமுக -காங்கிரஸ் கூட்டணி அமைந்தது. அதில் அதிமுக 37 சதவீத வாக்குக்களையும் காங்கிரஸ் 16 சதவீத வாக்குக்களையும் பெற்று மொத்தம் 53 சதவீத வாக்குக்களை பெற்று ஆட்சி அமைத்தது. அப்போது திமுக 30 சதவீத வாக்குக்களை பெற்று தோல்வி அடைந்தது.
எம்ஜியார் 1987இல் மறைந்தார்.
அடுத்த 1989 தேர்தலில் திமுக 37 சதவீத வாக்குக்களை பெற்று ஆட்சி அமைத்தது. அதிமுக வாக்குக்கள் ஜெயலலிதா, ஜானகி என்று இரண்டாக பிரிந்தது. ஜெயலலிதா 22 சதவீத வாக்குக்களையும் ஜானகி 9 சதவீத வாக்குக்களையும் பெற்றார்கள். அப்போது ஜிகே மூப்பனாரின் தலைமையில் காங்கிரஸ் தனியாக களம் கண்டு 20 சதவீத வாக்குக்களை பெற்றது.
இதுதான் முக்கியமான தேர்தல். இந்த தேர்தலிலிருந்து காங்கிரஸ் தனியாக களம் கண்டிருக்குமேயானால் இன்று அது ஆட்சி புரியும் கட்சியாக இருந்திருக்கும். துரதிர்ஷ்ட வசமாக, அடுத்த தேர்தலில் காங்கிரஸ்- ஜெயலலிதா கூட்டணி உருவானது. 1991 இல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. காங்கிரஸ் அதில் 15 சதவீத வாக்குக்களையும், அதிமுக ஜெயலலிதா 44 சதவீத வாக்குக்களையும் பெற்று ஜெயலலிதா முதல்வரானார். திமுக 30 சதவீத வாக்குக்களை பெற்று தோல்வி அடைந்தது.
அதன் பின்னால், ஜெயலலிதாவின் ஆட்டத்தால் மனம் நொந்து பலரும் திமுகவே பரவாயில்லை என்று கருதி, 1996இல் மூப்பனார் தலைமையில் காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி அமைத்து, ரஜினி ஆதரவு தெரிவித்த அந்த கூட்டணி 60.77 சதவீத வாக்குக்களை பெற்றது. ஜெயலலிதா அதிமுக 27 சதவீத வாக்குக்களை பெற்று தோல்வி அடைந்தது.
அவற்றுக்கு பின்னால் நடந்தவை அனைவருக்கும் தெரிந்திருக்கலாம். ஆகையால் அதனுள் செல்வது தேவையற்றது.
மூப்பனாரின் தலைமையில் காங்கிரஸ் தனியாக நின்று 20 சதவீத வாக்குக்களை பெற்றது சமீபத்திய சாதனை. தமிழக காங்கிரசுக்கும் தமிழக பாஜகவுக்கும் ஒரே மாதிரியான துரதிர்ஷ்டம். மத்தியில் இந்த கட்சிகள் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக மாநில கட்சி அமைப்பை பலி கொடுத்து வந்திருக்கின்றன.
பாஜக இன்று அதிமுகவின் தயவில் இரண்டு சீட் ஜெயித்துவிடலாம் என்று அண்ணாமலை தலைமையில் கனவு கண்டுகொண்டிருக்கிறது.
அதே போல காங்கிரஸும், அழகிரி தலைமையில் திமுக தயவில் 2 சீட் ஜெயித்துவிடலாம் என்று கனவு கண்டுகொண்டிருக்கிறது.
இரண்டுமே பரிதாபத்துக்குரியவை.
பாஜகவாவது ஓரளவுக்கு கொஞ்சம் தனித்துவத்தை அண்ணாமலை தலைமையில் காட்டிகொண்டிருக்கிறது. ஆனால் அழகிரி தலைமையிலான காங்கிரஸ் திமுகவின் ஏவலாளி போல, செந்தில்பாலாஜிக்காக குரல் கொடுத்து அசிங்கப்பட்டுகொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் இன்னமும் பாஜகவை விட காங்கிரஸுக்கு ஆதரவு இருக்கிறதா இல்லையா என்பது ஆய்வுக்குரியது. ஆனால் ஒரு விஷயம் நிச்சயம்.
பாராளுமன்ற தேர்தலை பொறுத்த மட்டில், திமுகவுக்குத்தான் காங்கிரஸ் வேண்டுமே ஒழிய, காங்கிரசுக்கு திமுக வேண்டியதில்லை. ஏனெனில் திமுக ஒரு பிரதமர் வேட்பாளர் இல்லாமல் தேர்தலை சந்தித்தால் டெப்பாசிட் கூட கிடைக்காது. பாராளுமன்ற தேர்தல் ராகுல்காந்தியா அல்லது நரேந்திர மோடியா என்பதுதானே ஒழிய, ஸ்டாலினா, மோடியா என்பதல்ல. அப்படி ஒரு சொல்லாடலை திமுக இதுவரை முனையவில்லை. இதுவரை ராகுலா அல்லது மோடியா என்பதையே திமுக முன்னிருத்தி வந்திருக்கிறது. காங்கிரஸ் நாளை ஏதோ ஒரு காரணத்துக்காக, அதிமுக கூட்டணி சென்றால், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளருக்கு ஆதரிக்கும் வாக்குக்கள் நிச்சயமாக அதிமுகவுக்குத்தான் செல்லும். திமுகவுக்கு அல்ல.
தமிழ்நாட்டில் திமுகவும் வேண்டாம், அதிமுகவும் வேண்டாம், பாஜகவும் வேண்டாம் என்று கருதும் வாக்காளர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு காங்கிரஸ்தான்.
இன்னும் காங்கிரசுக்கான வாக்குக்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன என்பதற்கு பல புள்ளிவிவரங்களை நான் சொல்லமுடியும்.
2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக -காங்கிரஸ் கூட்டணி தமிழ்நாட்டில் பெற்ற வாக்குக்கள் 53.53 சதவீதம்.
ஆனால், 2021இல் சட்டமன்ற தேர்தலில் திமுக அணிக்கான வாக்குக்கள் 45.38 சதவீதம்தான். இதில் திமுக பெற்றது 37.7 சதவீதம் காங்கிரஸ் பெற்றது 4.27 சதவீதம். இந்த கூட்டணியிலிருந்து ஒருவர்கூட வெளியேறவில்லை, சேரவும் இல்லை. இருப்பினும் சுமார் 8இலிருந்து 9 சதவீதம் பேர் திமுக தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்புக்கு வர வாக்களிக்க விரும்பவில்லை. காரணம் என்ன?
நாடாளுமன்றத்திற்காக ராகுல்காந்திக்கும் காங்கிரசுக்கும் வாக்களிக்க தயாராக உள்ள மக்கள் தமிழ்நாட்டில் திமுகவுக்கு தயாராக இல்லை. அது சுமார் 8-9 சதவீத வாக்குக்கள் சட்டமன்றத்தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க விரும்பவில்லை.
இதே போல பல உதாரணங்களை தரலாம்.
இந்த தேர்தலில் நிச்சயம் காங்கிரஸ் டெல்லியில் அரசு பொறுப்பேற்க போவதில்லை. அதிக பட்சம் அது செய்யக்கூடியது ஓரிரண்டு தொகுதிகளை பாஜக பெறாமல் தடுத்து நிறுத்தலாம் அவ்வளவுதான்.
ஆனால், காங்கிரஸ் இந்த நாடாளுமன்ற தேர்தலில் தனியாகவோ, தன் தலைமையிலோ தனியாக ஒரு கூட்டணி வைத்து ராகுல்காந்தி பிரதமராக மக்களின் ஆதரவு கேட்டு களம் கண்டால், நிச்சயம் கணிசமான வாக்குக்களை பெறும். அது அடுத்த 2026 தேர்தலில் தனியாக களம் கண்டு ஆட்சி பொறுப்புக்கு வரக்கூட முடியலாம்.
எங்கேயிருந்தாவது காங்கிரஸ் தன் ஆட்சி பொறுப்புக்கான அச்சாணியை துவக்க வேண்டும். அது 2024 தேர்தல் ஒரு வரப்பிரசாதம்.
பயன்படுத்திக்கொள்வார்களா அல்லது திமுகவின் ஏவலாளியாக இருப்பார்களா என்பது அவர்களுக்கு அவர்களே விடக்கூடிய கேள்வி.
தமிழகத்தில் காங்கிரஸ் தன்னை உறுதிப்படுத்திகொள்ள அதற்கு பாராளுமன்ற தேர்தல் அவசியம். பாராளுமன்ற தேர்தலின் போது ராகுல் காந்தியை பிரதமராக ஆக்க கணிசமான வாக்குக்களை காங்கிரஸ் பெறும். என்னுடைய கணிப்பின்படி, காங்கிரஸ் தனியாக நின்றாலோ, திமுக துணையில்லாமல், இதர கம்யூனிஸ்டு, விசிக போன்ற கட்சிகளை துணைக்கு எடுத்துகொண்டு காங்கிரஸ் தலைமையில் அணியை அமைத்து தேர்தலில் நின்றால், நிச்சயம் கணிசமான வாக்குக்களை பெறும்.
இன்றிருக்கும் சூழ்நிலையில் அதிமுக அணியில் ஓரிரண்டு தொகுதிகளை பெற பாஜக சேர்ந்து கொண்டு அதிமுக அணி அமைக்கும். இது நரேந்திர மோடி அவர்களை பிரதமராக பிரச்சாரம் செய்து களம் காணும்.
வழக்கம்போல நாம் தமிழர் தனியாக நிற்கும். அது பாராளுமன்ற தேர்தலில் 6 சதவீத வாக்குக்களை கூட பெற வாய்ப்பில்லை. ஏனெனில் பிரதமர் வேட்பாளர் இல்லாத கட்சிகள், அடையாளத்துக்காக நின்றாலும், அதன் ஆதரவாளர்களே வேறு கட்சிகளுக்கு பாராளுமன்ற தேர்தல்களில் வாக்களிப்பார்கள்.
நடிகர் விஜய் அவர்கள் நிற்கலாம். ஆனால், பாராளுமன்ற தேர்தலில விஜய் நிற்பது அவருக்கு பின்னடைவு. அதில் மிகக்குறைந்த வாக்குக்களையே பெறமுடியும். ஏனெனில் விஜய் அவர்களுக்கு பிரதமர் வேட்பாளர் இல்லை. அவர் பிரதமராகவும் போவதில்லை. ஆகவே அவரால் கணிசமான வக்குக்களை பெற இயலாது. அப்படி கணிசமான வாக்குக்களை நாடாளுமன்ற தேர்தலில் பெறாமல் போனால், அவரது இமேஜ் பாதிக்கப்படும். அது அவர் சட்டமன்ற தேர்தலில் நிற்பதற்கு தடையாகும். ஆகவே அவர் பாராளுமன்ற தேர்தலில் நிற்கமாட்டார் என்றே கருதுகிறேன்.
தற்போது திமுக, காங்கிரஸ் வலுவான கூட்டணியை அமைத்திருக்கிறது. இதில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்றவை இருக்கின்றன. இது நிச்சயம் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து களம் காணும்.
இந்த தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணியின் பாராளுமன்ற கூட்டணியின் அச்சாணி திரு ராகுல்காந்திதானே தவிர ஸ்டாலின் அல்ல. மேலும் தமிழ்நாட்டில் திமுகவுக்கு இருக்கும் கெட்டபெயர் காங்கிரஸுக்கும் அகில இந்திய அளவில் பாதிப்புத்தான். ஆனால், திமுக பெரும்பான்மை இடங்களை எடுத்துகொண்டு, ஐந்தோ ஆறோ சீட்டுக்களை காங்கிரஸுக்கு கொடுப்பது காங்கிரஸ் தனது ஏமாளித்தனத்தைத்தான் வெளிப்படுத்திகொள்கிறது எனக்கூறலாம்.
ஆனால், காங்கிரஸ் தனது தலைமையில் களம் கண்டால், சுமார் 30 சதவீத வாக்குக்களை நிச்சயம் பெறும். தமிழ்நாட்டில் சமீபத்திய கருத்து கணிப்பில் ராகுல்காந்தி பிரதமராக ஆவதற்கு சுமார் 71 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்ததாக அறியப்படுகிறது. திரு நரேந்திர மோடி அவர்களுக்கு சுமார் 27 சதவீத ஆதரவே இருக்கிறது.
இந்த 71 சதவீத ஆதரவை இன்றே தமிழக காங்கிரஸ் தனது நீண்டகால வளர்ச்சிக்கு அடித்தளமாக ஆக்கிகொள்ளவேண்டும். இந்த 71 சதவீத ஆதரவில் பெரும்பான்மை திமுகவின் ஆதரவு நிலைப்பாடு உள்ளவர்கள் கொடுக்கும் ஆதரவு என்று நினைக்கலாம். ஆனால் திமுகவுக்கான ஆதரவு என்றுமே 30 சதவீதத்தை தமிழ்நாட்டில் தாண்டியதில்லை என்பதை நினைவில் கொண்டால், சுமார் 40 சதவீத மக்கள் திமுக ஆதரவு நிலைப்பாடு இல்லாமலேயே காங்கிரஸின் ராகுல்காந்திக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்று புரிந்துகொள்ளலாம்.
இந்த 40 சதவீத ஆதரவு சுருங்கி 30 சதவீத ஆதரவாக மட்டுமே பாராளுமன்ற தேர்தலில் வெளிப்படுகிறது என்றே வைத்துகொள்வோம்.
அப்போது தமிழ்நாட்டில் இந்த கட்சிகளும் அணிகளும் பெறக்கூடிய வாக்குகள் இப்படித்தான் இருக்கும்
திமுக – 30 சதவீதம் (இந்த திமுகவுக்கு பிரதமர் வேட்பாளரும் இல்லை என்பதால் இன்னும் குறையக்கூடும்)
அதிமுக-பாஜக கூட்டணி 27 சதவீதம் (இது அதிகரிக்க இப்போது வாய்ப்பில்லை என்றுதான் கருதுகிறேன் )
காங்கிரஸ் 30இலிருந்து 40 சதவீதம் (இந்த காங்கிரஸ் அணிக்கு கிறிஸ்துவர்கள், முஸ்லீம்கள் ஆதரவு இயற்கையாகவே வரும். இது தவிர விசிக, கம்யூனிஸ்டு கட்சியினர் இந்த காங்கிரஸ் அணிக்கு வந்தால் 40 சதவீத வாக்குக்களை நிச்சயம் பெறும் )
ஆகவே காங்கிரஸ் தனித்து பாராளுமன்ற தேர்தலில் களம் காணுவது அதற்கு நிச்சயம் பின்னடைவாக ஆகாது. ராகுல் காந்தி பிரதமராக ஆவதற்கு இருக்கின்ற பெருவாரியான வாக்குக்களை பெற்று அது நிச்சயம் 20 தொகுதிகளையாவது கைப்பற்றும். இந்த எண்ணிக்கை, அது திமுக அணியில் இருந்து பெறக்கூடிய தொகுதிகளை விட நிச்சயம் அதிகமாகவே இருக்கும்.
சசிகாந்த் செந்தில், சுனில் போன்றவர்களுக்கு இதெல்லாம் தெரியாது என்று நான் கருதவில்லை. அவர்கள் கர்னாடகாவில் காங்கிரஸை ஆட்சிக்கு கொண்டு வர அருமையாக திட்டமிட்டு செயல்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், அதற்கு கட்சி மேலிடமும், தமிழக காங்கிரசும் ஒத்துழைக்க வேண்டும். அவர்கள் கனவு காணவேண்டும். அது நனவாகும். இதுவோ கையில் எட்டிப்பறிக்க காத்திருக்கும் கனி. கனவு கூட காணவேண்டியதில்லை.
இந்த ஆதரவை தமிழக காங்கிரஸ் நன்கு பயன்படுத்திகொள்ளவேண்டும். இப்போது காங்கிரஸ் தன் சுயத்தை மீண்டும் கண்டெடுத்து தனியாக நிற்பதன் மூலம் அந்த ஆதரவை பகிரங்கப்படுத்தி, அதன் விசிக, கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் அணியை தக்கவைத்துகொண்டு அதனை வைத்து 2026 சட்டமன்ற தேர்தலில் தனித்து களம் கண்டால், ஆளும் கட்சியாக ஆகமுடியாவிட்டாலும் கூட முதன்மை எதிர்கட்சியாக அங்கீகாரம் பெறும்.
இது தமிழக காங்கிரஸுக்கு பொன்னான வாய்ப்பு. இதனை தவற விட்டால், இன்னும் குறைந்தது 20 ஆண்டுகளுக்கு அதற்கு விமோசனம் கிடையாது.
- ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம்: அங்கம் -2 காட்சி -3 பாகம் -1
- அப்பாவின் கை பற்றி…
- திரை
- நிழலாடும் நினைவுகள்
- ஜனநேசன் என்ற படைப்பாளியும் மொழிக்கலைஞனும் – நூல் அறிமுகம்
- நாடகக்கலைஞர் நா. சாந்திநாதன்
- நாவல் தினை அத்தியாயம் பத்தொன்பது CE 1900
- மௌனி
- தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஒரு மகத்தான வாய்ப்பு