சகல இன சஞ்சீவனி எங்களுக்கு வேண்டாம். அதைக் கொடுத்த பெருந்தேளரசரும் எங்களுக்கு வேண்டாம்.
காலையில் இருந்து நடுராத்திரி வரை சாரிசாரியாகச் சகல இனங்களும் தேளரண்மனை முன் கோஷம் முழங்கின. மற்ற இனங்களை விடவும் மும்முரமாகத் தேள் இனம் இந்த அரசு எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டது.
கரடியின் தலைமையில் துயிலரங்கத்துக்கு முன் பத்து பன்றிகளும், இருபது கழுதைகளும் பத்து நாய்களும் கோஷம் முழக்கி கற்களை விட்டெறிந்தன.
கரடியின் பொதுக்கூட்டச் சொற்பொழிவில் இருந்து –
குழலன் என்ற இளைஞர், இன்னும் இருநூறு ஆண்டுகள் சென்ற அப்புறம் பிறக்கப் போகிற அறிவுஜீவி நம்மைக் கடைத்தேற்ற காலத்தில் பின்னால் இருநூறு ஆண்டு கடந்து வந்து நம்மை உய்விக்க அழைக்கிறார். (மேலும்)
இந்த தற்குறிகள் தேளரும் கோலரும் நாட்டை மட்டுமில்லை பிரபஞ்சத்தையே அறமின்றி ஆக்கி விடுவார்கள்.
தேளர் ஆண்டது போதாதா மக்கள் மாண்டது போதாதா என்று சுருக்கென்று கேள்வி கேட்டுக் கூட வந்தவர்களைத் தேளரண்மையை நெல்லிக்காய், முட்டை, கருங்கல் கொண்டு தாக்கச் சொல்லி அறிவுறுத்தினார்.
ஏமப் பெருந்துயிலில் அங்கு அமிழ்ந்திருத்தும் யாராவது விழித்தால் கல்லெறியும் சமூக விரோதிகள் அவருடைய இடத்தில் துயிலப் பிடித்துப் போடப்படுவார்கள் என்று அரங்கத்தில் பாதுகாவலர்கள் அறிவிக்க, கரடி நாலுகால் பாய்ச்சலில் ஓடி விட்டது.
கூட வந்த கிளர்ச்சியாளர்கள் எல்லா திசையிலும் அரண்டு ஓட, அடுத்த மணி நேரத்தில் கரடியார் கண்டுபிடிக்கப்பட்டார். அவரைத் தேடி அலைந்தோர் தாசி நறும்வல்லியை மடியேற்றி அந்தரங்கமாக வைத்தியம் செய்துகொண்டிருந்த எண்ணெய்க்காப்பு திருக்கோலத்தில் லங்கோட்டோடு அவரைப் பார்த்தனர்.
ஐயனே நாம் யாரோடு இருக்கிறோம் என்று வழிகாட்டியருளும் என்று அந்தப் பன்றிகளும் கழுதைகளும் நாய்களும் அவரைச் சரணடைந்தன. அதைவிட, நம்மோடு யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று அவதானிப்பதே வேண்டியது என்று பொன்மொழி உதிர்த்தார் கரடியார். இப்போதைக்கு நறும்வல்லிக்கு வைத்தியம் செய்து குணமாக்கி விட்டுப் போம்வழி பற்றிப் பின்னர் யோசிக்கப்படும் என்று கூறினார் அவர்.
சொஸ்தமாச்சு என் அன்பரே இணைவோம் வாரீர் என்று பிதற்றியும் இன்னும் பல விதமாகவும் காதல் பாராட்டி நறும்வல்லி கரடியின் மடியிறங்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தாள். அப்படியே உறங்கியும் போக, அவளை நான் நீ என்று போட்டி போட்டு வீட்டுக்குள் கொண்டுபோய் ஊஞ்சலில் படுக்க வைத்துவிட்டு வந்தார்கள்.
நாட்டுக் காரியம் இருக்கிறதே தலை போகிறதாச்சே என்று புன்சிரிப்போடு கரடியார் கைகூப்பி நறும்வல்லி வீட்டுக்குள் இருந்து தைல வாடையோடு வெளியே வந்தார்.
தேசம் ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறது என்றும், இந்த அபாயக் கட்டத்தைக் கடந்து நாடு முன்னேற பெருந்தேளரின் அரசாட்சி மட்டும் நாட்டை வழிநடத்த முடியும் என்பதால் பெருந்தேளருக்கு முழு ஆதரவு தெரிவித்தார்.
குழலனால் தன் தலையையே தன் முண்டத்தோடு ஒட்டி வைத்திருக்க முடியவில்லை. கோகர்மலைநாடான பெருந்தேள் நாட்டை எப்படி ஓர் மொழி, ஓர் உணவு, ஓர் இலக்கியம் என்று ஐக்கிய நோக்கில் நல்லாட்சி தருவான் அவன் எனக் கூவினார்.
மற்ற இனமெல்லாம் குறைந்தது நூறு உருப்படியாவது கோகர்மலைநாட்டில் ஜீவித்திருக்க, கரடி மட்டும் ஏன் நீங்கள், ஒரே ஒரு கரடி என்று கூட்டத்தில் யாரோ கேட்டார்கள். இந்தப் பிரபஞ்சத்துக்கு அரைக் கரடியே போதும் என்று சொல்லிக் கைதட்டை வாரினார் கரடியார்.
தெரு முனையில் தொடர் உண்ணும் விரதம் என்று பலகை வைத்திருந்ததைப் படித்து அங்கே ஒரு பெருங்கூட்டம் விரைந்தது, தின்னச் சோறும் கறியும் மீனும் எதுவும் கிடைக்காமல் மழை பெய்து நிலத்திலிருந்து வெளிவரும் ஈசல்களைப் பிடித்துத் தணலில் வறுத்து உப்பிட்டு ஒரு பெரும் கூட்டம் உண்டபடி நகர்ந்தது.
அரசு தரப்பில் இருந்து ஒவ்வொரு குடிமகனுக்கும் தினசரி அரைப்படி பொரி கொடுக்கப்படுகிறது. தொடர் உண்ணும் விரதக் குழுவினர் குழலனின் புதுநாடு அமைப்பின் உறுப்பினர்கள்.
ஒரு பெரிய வீட்டின் கூடத்தில் பாய் விரித்து குழலன் அமர்ந்திருந்தான். இன்னும் கொஞ்ச நாள் நாற்பரிமாணக் கூறுகள் மாற்றி யார் கண்ணிலும் படாதவர்களாக அரசு ஊழியர்களான குயிலியும் வானம்பாடியும் இருக்க வேண்டும் என்று குழலன் அவர்களிடம் வற்புறுத்திச் சொல்லியிருந்தான்.
’தேளரசே நீ ஆண்டது போதாதா மக்கள் மாண்டது போதாதா’ என்ற கோஷம் நாடு முழுக்க எதிரொலித்ததில் குழலனுக்கு அலாதி மனநிறைவு. அதே அடிப்படையில் ’பெருந்தேள் குரங்கே பதவியை விட்டு இறங்கே’ என்று பாட்டு வாத்தியார் எழுதிக்கொடுத்த முழக்கம் நிராகரிக்கப்பட சாது மிரண்ட சினம் காட்டிய குரங்குகளும் காரணம்.
கறுந்தேளர் படைத் தலைவருக்கு காரிருளை வெல்ல வந்த முழுமதியே வருக என்ற கோஷத்தை மாற்றினால் பொருந்தும் – முழுமதியை வெல்ல வந்த காரிருளே வருக.
’எங்கேயோ குழந்தை அழும் சத்தம். எங்கேயும் குழந்தை அழும் சத்தம் தான்’. இந்த கோஷம் அறிவு அதிகம் இருந்தால் தான் புரியும் என்று பலரும் கருத்து சொன்னார்கள். சகல இன சஞ்சீவனியைக் குடித்து காமத்தில் ஈடுபட்டு ஊரெங்கும் குழந்தை பிறப்பு அதிகமானது பற்றி குயிலி இயற்றிய கோஷம் அது.
அதே போல் வானம்பாடி இயற்றிய கோஷம் – அய்யோ பசிக்கு வேண்டும் ஆஹா பிடி காண்டோம். குழலனுக்கு ரொம்பப் பிடித்த கோஷம் என்று சொல்ல அவனோடு கூடத்துக் கூட்டமே கைதட்டியது.
வானம்பாடியும் குயிலியும் யாரும் காணாத வெளியில் இதழ் கலந்தனர். சகல இன சஞ்சீவனி உற்பத்தி மற்றும் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்ற தகவலை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று குழலன் சொன்னான்.
நீலன் ஏன் தேளரசரோடு சேர்ந்துவிட்டார் என்று யாரோ பல் குத்திக்கொண்டு கேட்க அவர் வாயிலிருந்து குத்தி எடுத்துப் போட்ட அழுகித் துர்வாடை வீசும் மாசை உண்ணக் கரப்புகள் போட்டி போட்டு வந்தன.
குழலன் வாந்தி எடுக்கப் போவதாக எழுந்து மிகுந்த மனவலிமையோடு அது வராமல் செய்து மறுபடி அமர்ந்தான். அப்போது வாகனமேறி வந்த யாரோ கூட்டத்தில் தெரிவித்தது –
மாசிவீதியில் முப்பது இளம் தேள்கள் சாவு. தேள் இனத்தைத் திட்டம் போட்டதுபோல் இயற்கை கிருமி வைத்து அழித்துக் கொண்டிருக்கிறதாம். (மேலும்)
ஒரு பக்கம் மற்ற இனங்கள் போல் தேளினம் பெருகி வந்தாலும், பிறந்து இரண்டு மாதமான தேள்குஞ்சுகள் மேலேறி வினோதமான தெள்ளுப் பூச்சி ஒன்று முதுகு பிளந்து இளம் தசை கிழித்து உண்டு தேளின எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்கிறதாம். (மேலும்)
தேளரசர் இளம் தேள்கள் ஒரு நூறையாவது தந்தையாக இருந்து பிறப்பித்தும், வினோத விஷப்பூச்சித் தாக்குதலால் அதில் 75% இறந்துபடுவது வயதான தேள்களுக்கும் பரவியிருக்கிறதாம். (மேலும்)
தேளினக் காலாந்தகனான தெள்ளுப் பூச்சிகளுக்கும் அந்த அவசரமாக அறிமுகப்படுத்தப்பட்ட மருந்து, எனில் சகல இன சஞ்சீவனி, இன விருத்திக்கு உதவியிருக்கும் போல.
குழலன் கேட்டுக் கொண்டிருந்தான். தேளினத்தை ஆதரிக்க வேண்டுமா, எதிர்க்க வேண்டுமா? அவன் இன்றிரவு ஒரு நாற்பத்தைந்துக்காரியை இணை சேர்ந்திருக்கும்போது, போகம் முந்தாமல் இருக்க இதை யோசிப்பான்.கட்டாயம் தீர்வு கிடைக்கும்.
மற்ற ஓர் ஆதரவாளர் பேசினார் –
இதுவரை வழக்கமாக நடப்பது என்ன? நாம் நாலு கோஷம் முழக்கிடுவோம். அவர்கள் குழலனைக் காலப்படகில் தள்ளிக்கொண்டு போவார்கள். பாதாளச் சாக்கடை ஓடைகள் சந்திப்பிலோ, பழைய கோட்டையிலோ, இருண்டு குளிர்ந்து நீண்டு போகும் குகைக்குள்ளோ அவரை இருத்துவார்கள். ஒரு மாதம் கழித்து மறக்காமல் அவரைத் திரும்பக் கொண்டு வந்து விடுவார்கள். (மேலும்)
இப்படி ஒளிஞ்சு பிடிச்சு நான் அடிக்கற மாதிரி அடிக்கறேன் நீ அழற மாதிரி அழு என்று இருந்த காலம் போயாச்சு. கோகர்மலை நாட்டை வழிநடத்த குழலன் முன்வந்து பொறுப்பு ஏற்கவேண்டும். இல்லை என்றால் வந்தேறிகள் நாடு பிடுங்கி நம் பூமியிலேயே நம்மை அகதிகளாகத் திரியவிட்டு விடுவார்கள்.
மூத்த பெண் ஒருத்தி குழகனிடம் தனியாகப் பேசுவது போல் இரண்டு ஒலிவாங்கிகளைக் கையில் வாங்கிப் பேசும்போது அந்த மறக்கமுடியாத நிமிடம் ஏற்பட்டது. சாந்தமாகப் பேசிக்கொண்டே வந்த மூதாட்டி சந்நதம் வந்ததுபோல் ஓவென்று இரையத் தொடங்கினாள்.
அற்பப் பிறவிகளான கரப்புகளோடும் அருவறுப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தும் தேள்களோடும் நாம் ஏன் சமாதானமாகப் போகவேண்டும்? அவர்கள் நம்மை ஏன் ஆளவேண்டும்? (மேலும்)
டாய்லெட் அலம்பும் விளக்குமாற்றால் அடித்துக் கொன்று வெளியே எறிய வேண்டிய உயிரினங்கள் கரப்பும் தேளும். எங்கே கண்டாலும் அடித்துக் கொல்லுங்கள். குழந்தைத் தேள் என்று எதுவும் இல்லை. இளம் தேள் இளம் கரப்பு எல்லாம் நாளைய அருவருப்பு சீவன். (மேலும்)
மனித இனம் மனுஷர்கள் நாம் மட்டுமே வாழப் பிறந்தவர்கள். நாம் மட்டுமே ஆளப் பிறந்தவர்கள். குழலன் அரசாள வேண்டிய பூமியில் ஒரே ஒரு வகை பிரஜைகள் – மனிதர்கள். (மேலும்)
தேளும் கரப்பும் சாக்கடையில் ஒளிந்திருந்து நம் அசுத்தம் புசிக்கட்டும்.
இப்போது கண்மறைவாக மனிதக் கழிவைப் புசிக்கும் இவை நாம் கண்டு நம் பார்வையில் பட்டு அடித்துக் கொல்லும் வரை எஜமானரே என்று எம்மைப் பயந்து எம் கழிவு உண்டு உய்யட்டும்.
அந்த மூதாட்டியை எங்கேயோ பார்த்ததாக குழலனுக்கு நினைவு. அவள் பாம்புப் பெண். தேள் வம்சமழிக்க வந்திருக்கிறாள்.அவள் இறந்து போனாளே. எனில் அவளது சாபம் உயிர்த்திருக்கிறதே.
ஓவென்று பெருஞ்சத்தம். கூட்டத்திலிருந்த தேள் இனத்தாரை அங்கிருந்த மனுஷர்கள் கையில் கிடைத்த ஆயுதம் எதையும் பயன்படுத்திக் கொல்ல ஆரம்பித்து விட்டார்கள்.
பாம்புப் பெண்ணின் சாபம் பலித்து வந்து கொண்டிருந்தது. நான் தலைமை ஏற்கிறேன். குழலன் குரல் உயர்த்திச் சொல்லும்போது முகம் கோணி இழுத்து வலிப்பு மிகுந்திடத் தரையில் விழுந்தான்.
குயிலி தன்னை காட்சிப் படுத்திக் கொண்டாள். அவள் தன் கையை விரித்து நீட்டி விரல்களை குழலன் வாயில் பற்களை இறுக அணைத்து வைத்தாள். வானம்பாடியும் தன்னைக் காட்சிப் படுத்திக்கொண்டாள். தன் கைப்பையில் இருந்து சிரிஞ்சை எடுத்து அவனுக்குத் தோளில் மருந்து செலுத்தினாள்.
ஓவென்று பெருங்கூட்டமாகத் தேள்கள் வேட்டையாடப்பட்டன. பிள்ளைத் தேள்கள் எரிக்கப்பட்டன. கரு தாங்கிய தேள்கள் தலையறுத்துக் கொல்லப்பட்டன. ஆண் தோள்கள் ஒன்றை ஒன்று கொட்டிக் கொட்டி விஷப்படுத்தி மரிக்க ஊக்குவிக்கப் பட்டன.
குழலா தலைமை ஏற்பாயா? உயிர் பிரியும் வாதனைக்கு இடையே ஒரு அலையாக குழலா குழலா என்று யாரோ அழைத்தார்கள். குழலா தலைமை ஏற்பாயா என்று முதல் அலையாக வந்த நூறு கரப்புகள் அத்தனை தேள்களைக் கொன்றுவிட்டு அவனைக் கேட்டார்கள். சொல்லாமல் வந்த தெள்ளுப்பூச்சிகள் அடுத்த பந்தி தேள் ஊணுக்குக் காத்திருந்தன. வீட்டு ஜன்னல் வழியே ஆபீஸுக்கு லீவு போட்டுவிட்டு சில மானுடர்கள் இந்தக் கோலாகலம் எல்லாம் பார்த்திருந்தார்கள்.
அவனும் பிறப்பால் தேள்தானே? குழலனின் மனம் ஒரு வினாடி எண்ணிப் பார்த்தது. அதைப் பற்றி யாருக்கென்ன கவலை. ஒரு கூட்டம் வேண்டும். ஒரு தலைவன் வேண்டும். ஒரு எதிரி வேண்டும். எதிரியை புல்பூண்டு இல்லாத வெளியில் காற்று நின்ற வெப்பமான பகலில் யார் இறப்பது யாரால் இறப்பது என்பது இருவருக்கும் மனதிலாக உயிர் நீக்கிக் கொன்று களைய வேண்டும்.
போர் ஓய்ந்த பூமிபோல் அமைதியாகக் கிடந்த மைதானத்தில் கால் செருப்புகளும், அவற்றின் பின்னால் பகுதி அப்பிக் கிடந்த தேள் உடல் தேய்வுகளும் இன்னும் துடிக்கும் பிள்ளைத் தேள்களும் இறப்பு என்ற மகா மருந்தைப் பருகி வாழ்வை முடித்திடக் காத்திருந்தார்கள்.
ஆறடி நீளமுள்ள பிரம்மாண்டமான தேள்கள் குருதி பெருக்கிக் கொடுக்கு அறுபட்டுக் கிடந்தன. தேள் மொழியில் அவை தாகம் தாகம் என்று குரலெடுத்துக் கரைந்தன.
இறகு முளைத்த கருந்தேள்கள் அவை கிழிக்கப்பட்டு வீசப்பட தரையில் இலக்கின்றி ஊர்ந்து கொண்டிருந்தன.ஓரமாக ஒரு திண்ணைதூங்கி உயிர்த் தலத்தைக் கையில் பிடித்துக்கொண்டு ஒரு பிள்ளைத் தேளை ஒவ்வொரு காலாகப் பிய்த்து அதன் கண்ணில் செருகிக் கொண்டிருந்தான்
ஓவென்று சத்தமிட்டபடி. தேவிடியாத் தேளு வெல்லத்துலே கொட்டிடுத்து அதைப் பிடிக்க முடியலே கிடைச்ச தேள்குட்டியைக் கொல்லறேன் என்று தர்மநியாயம் தன் செய்கைக்குக் கற்பித்தபடி அவன் அடுத்த தேள்காலைப் பிடுங்கினான்.
அலறலில் கண்கள் உயிர்ப்பிச்சை கேட்க இன்னும் நீ இருந்து என்ன இல்லாட்ட என்ன என்று எழுந்து நின்றவன் வழியடைத்துக் கிடந்த ஒற்றைச் செருப்பை எடுத்து இளம் தேளை அடித்து நசிப்பித்தான்.
ஒரு பெரிய படையாக கரப்புகள் மைதானம் நோக்கி வரும் இறக்கை ஒலி. தேளுடல்கள் அவர்களுக்கு விருந்தாகக் காத்திருந்தன.
(தொடரும்)
- நாவல் தினை உத்தராங்கம் அத்தியாயம் நாற்பது பொது யுகம் 5000
- பிரபஞ்சத்தை உருவாக்கும் பிண்டம், கரும் பிண்டம், எதிர்ப் பிண்டம் [Matter, Dark Matter, Anti-Matter] என்றால் என்ன ?
- ஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் – 4