கோகர்மலை நாடு அமைதியாக இருந்தது.
சகல இன சஞ்சீவனி எந்தத் தெருவிலும் யார் வீட்டிலும் உண்டாக்கப்படவில்லை. ஈக்களும். மாட்டு ஈக்களான உண்ணிகளும் சுவர்களில் ஈஷியிருந்தன. பறக்கத் தெரியாதவை போல் அவை சிறகுகளை மெல்லிய ரரரரர ஒலியெழ அதிர வைத்து செவிப்புலன் மூலம் சூழும் போதையில் அமிழ்ந்திருந்தன.
தெருவில் சாக்கடை போல் சகல இன சஞ்சீவனியை பிரயோஜனமற்றது என்று பலரும் பானைகளில் ஏற்றி உடைத்து புளிவாடை எங்கும் மூக்கில் குத்த, பாதை வழுக்கச் செய்திருந்தனர்.
கூட்டம் கூட்டமாக தலையில் சகல இன சஞ்சீவனி ஏற்றி வந்து தேளரசர் அரண்மனை முன்னும் துயிலரங்கத்துச் சுற்று வெளியிலும் மேலும் கர்ப்பூரம் வீட்டு வாசலிலும் பானை உடைத்துப் போனார்கள்.
சகல இன சஞ்சீவனி ஏற்றுமதி மையம் என்று பலகை வைத்த பழைய பெரிய கட்டிடத்துக்குள் ஏழெட்டு நாய்கள் சுருண்டு படுத்திருக்க, ஒரு நாற்காலியோ மேசையோ காணக் கிடைக்கவில்லை எனினும் மின்விசிறிகள் அதிவேகமாகச் சுழன்று கொண்டிருந்தன.
சகல இன சஞ்சீவனி என்ற கர்ப்பூரத்தின் திட்டம் தோல்வி. அதைப் பற்றிய கவலையே இல்லாமல் கர்ப்பூரம் தேளரசரின் ஆட்சியை உடனே பாதுகாக்க என்ன செய்யலாம் எனத் தீவிரமாக யோசித்தபடி பழைய சிற்றுந்துவில் பெருந்தேளரசரைச் சந்திக்கப் போய்க்கொண்டிருந்தான்.
கூடவே பிரதி நீலனான ஆல்ட் க்யூ பிரபஞ்சத்து கசாப்புக்கடை நீலனும் அமர்ந்திருந்தார். அவர் தேளரசரோடு சேர்ந்தாலும் குழலனோடு ஓர் அணியில் நின்றாலும் அவர்களுக்கு என்ன பயன்? அவருக்குத்தான், கசாப்புக்கடை நீலனுக்குத்தான் என்ன பயன்?
கர்ப்பூரத்திடம் சொல்லி விடலாமா நான் அசல் நீலன் இல்லை, ஆல்ட் க்யூ பிரபஞ்சத்து கசாப்புக்கடை நீலன் என்று?
கசாப்புக்கடைக் கத்தி அவர் தலையைக் கழுத்திலிருந்து அகற்ற வேண்டுமென்றால் அதை வெளிப்படுத்தலாம். ஏன் அந்த விபரீத ஆசை?
தேளரசனைப் பொறுத்தவரை சகல இன சஞ்சீவனி ஒரு திசையில் முழு வெற்றி. உறவுக்கு தூண்டும் உறுதியான மனமும் உடலும் நீள்நேரக் கலவியும் மருந்தில் இருக்கிறதோ என்னமோ, நம்புகிறார்கள் அது உண்டென்று.
அசல் நீலன் வந்திருந்தால் கூட இப்படி ஒரு புது மருந்தை உருவாக்கி இருக்க முடியாது. ஆடச் சொன்னதற்கு மேலாகவே ஆடி விட்டார் கசாப்பு நீலன்.
குழலன் கூட்டி வரும்போது தருவதாகச் சத்தியம் செய்த பத்தாயிரம் பைனரி நாணயங்களைக் குழலனிடமிருந்தும், கர்ப்பூரத்திடம் இருந்து சகல இன சஞ்சீவனி வருமானத்தில் பங்கையும் வாங்கிக்கொண்டு, ஆல்ட் க்யூ பிரபஞ்சத்துக்கு அடுத்த ஆட்டையும் மாட்டையும் வெட்டப் போய்விடுவார் அவர்.
ஒரு வாரமாக இந்த சகல இன சஞ்சீவனி காய்ச்சுவதில் மும்முரமாக கசாப்பு நீலன் மூழ்கியதை தேளரசர் கவனித்திருப்பார். சகல இன சஞ்சீவனி வருமானம் மூன்றில் ஒரு பாகம் ஆல்ட் க்யூ நீலனுக்கும் மீதி வருமானத்தில் 60% பெருந்தேளருக்கும் பாக்கி 40% கர்ப்பூரத்துக்கும் போகிறது.
வினாடி நேரமும் ஓய்வு எடுக்காத, உறக்கத்தைக் குறைத்து ஓய்வைக் குறைத்து ஊர் முழுக்க நாடு முழுக்க எல்லாம் மாற்றி இருக்க புது சீலம், புதுச் சிந்தனை, புது ஒழுங்கு, புது கட்டற்ற தன்மை என்று மாறி இருக்கச் செய்ததை தேளரசன் தனியாகச் செய்திருக்க முடியாது.
அவர் தேவையான மரியாதை செய்து தன சகாயமும் கையைச் சுருக்காமல் வேண்டுமளவு அளித்து கால யந்திரத்தில் ஏற்றி. சட்டென்று ஆல்ட் க்யூ கசாப்பு பிரதி நீலனுக்கு உண்மை உரைப்பானது. கசாப்பு நீலனை எங்கே அனுப்புவார் தேளர்? அசல் நீலன் என்றல்லவோ இதுவரை அவரோடு நெருங்கிப் பழகி வருகிறார்? ஆல்ட் க்யூ கசாப்புக்கடை நீலன் என்று வெளிப்படுத்தாவிட்டால் இங்கே இருந்து எப்படி வெளியேறுவது? ஆயுசு உள்ளவரை இங்கேயே ஈ அடித்துக் கொண்டு இருந்தாக வேண்டி அவருக்குத் தண்டனை விதிக்கப் பட்டுள்ளதா?
பக்கத்தில் கர்ப்பூரம் வேறே லொடலொடவென்று ஈச்சம்பாயில் ஒண்ணுக்கு போனமாதிரி பேசிக்கொண்டே இருக்கிறான். அவன் குரல் சத்தமாக இருந்தாலும் மெலிந்திருந்தாலும் நிறுத்தாமல் கேட்டுக் காதை செவிப்பூரன் புகுந்த மாதிரி துளைக்கிறது. பேசாமல் இதே காஸ்மாஸ் பிரபஞ்சத்திலேயே பொது யுகம் 230-க்குப் போய் விடலாமா? அசல் நீலன் அங்கே இருந்தால் நான் யாராவது? இருத்தலியல் சிக்கல் என்பது இதுதானா?
இன்றைக்கு கர்ப்பூரத்தைத் தவிர்த்து விட்டுத் தனியாக தேளரசரைச் சந்தித்திருக்கலாம். எல்லாம் கிழட்டுப் பிணம் முதுதேளரசன் காரணமாக நினைத்தபடி எதுவும் செய்ய முடியாமல் போனது.
விடிகாலையில் எழுந்து உட்கார்ந்து ரொட்டி, ஜாம், வெண்ணெய் என்று அமர்க்களமாக உண்டு கொண்டிருந்தான். கொண்டிருந்தார். நீலரே, வாருங்கள் அரண்மனை போயாக வேண்டும். நீங்கள் தேளரசின் சக்கரவர்த்தியோடு வார்த்தை சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். இந்த நிமிடத்திலிருந்து நான் மீண்டும் பேரரசராகிறேன்.
சுவாமி அதெல்லாம் சரிதான். நீரே சக்கரவர்த்தி நீரே மெழுகுவர்த்தி. எல்லாம் இருக்கட்டும். அப்போது தற்போதைய தேளரசர் உம் புதல்வர் என்ன ஆவார்?
கசாப்புக்கடை பிரதி நீலன் அவரைக் கேட்டபடி நிற்க, உட்காருமய்யா என்று கைகாட்டி எதிர் வரிசையில் கால் ஆடிக் கொண்டிருந்த பழைய மர நாற்காலி ஒன்றைச் சுட்டிக்காட்டி. ரொட்டி எடுத்துக் கொள்ளும் என்றபடி தான் சவைத்துக் கொண்டிருந்த ரொட்டித் துண்டில் பாதியைக் கிழித்து நீலனிடம் நீட்டினார்.
இதேது பேய்க்கு வாழ்க்கைப்பட்டு புளியமரம் ஏறியது போல் இந்தத் தேட்சவத்தோடு பழகின தோஷத்துக்கு அதன் எச்சில் திங்கணுமோ கஷ்டம் என்று நினைத்தபடி வயிற்றைப் பிடித்துக் கொண்டு நின்றார். வயிறு சரியில்லை அப்புறம் உண்கிறேன் என்றபடி அங்கிருந்து மெல்ல அகலப் பார்த்தார் ஆல்ட் க்யூ பிரபஞ்ச நீலன். தேட்சவமா விடும்? தேட்கிழமா போய்வரச் சொல்லிக்கனிவு காட்டும்?
நீலரே எனக்கு கொஞ்சம் அது ஏதோ மருந்து உற்பத்தி செய்திருப்பதாகப் போன தடவை எழுந்தபோது சொன்னீர்களே சகல ரோக சஞ்சீவினி.
ஐயா சகல இன சஞ்சீவனி.
என்னவோ ஒரு பெயர் அதில் ஒரு கோப்பை எடுத்து வரச் சொல்லுங்கள். வடிவான இரண்டு பையன்களை அந்தக் கோப்பைகளோடு அனுப்ப வேண்டும். என்ன புரிந்ததா? அழகான மங்கையர்கள் கோப்பையில் இருந்து ஊற்றிக் கொடுத்திடவும் புகட்டவும் மட்டும் போதும்.
கிழம் உளற ஆரம்பித்தபோது அது தன்னை உடனே வெளியேற விடாது என்று தோன்றியது ஆல்ட் க்யூ நீலனுக்கு. இந்த முதுதேளரை சமாளிக்க கர்ப்பூரம் வேண்டும் என்று தோன்ற அவனை அழைத்தார் அந்த கசாப்புக்கடை நீலன்.
கர்ப்பூரம் வந்ததுமே அதிகார தோரணையில் சத்தம் கூட்டிப் பேச ஆரம்பித்து விட்டான்.
ஓய் முதுபெருந்தேளா, எழுந்ததும் ஒண்ணுக்கு போய்ட்டு வந்தீரா இல்லே ஏற்கனவே பேழையை நாறடிச்சிருக்கியா என்று ஒருமையில் விளிக்க ஆல்ட் க்யூ கசாப்பு நீலன் பதறி அவர் ராஜா என்று அவர் பின்னால் இருந்து தலையில் கொம்பு முளைத்திருக்கும் அபிநயத்தைக் காட்டினார்.
பெரிசுக்கு இன்னொரு கொம்பு தலையிலே வந்திருக்காமே சபாஷ் என்று சொல்லி நீலனிடம் மெதுவாகச் சொன்னது – பொணம் ஆயாச்சு. ராஜா என்ன மந்திரி என்ன ஊரான் என்ன? கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு முதுபெரும்தேளர் உறுமினார் அதுவும் கிருத்திருமம் நிறைந்த கர்ப்பூரத்தைப் பார்த்து.
போய் சஞ்சீவனி எடுத்துக்கிட்டு பையன்களை கூட்டிட்டு வாடா. எல்லா வாடையோடும் இருக்கணும் ஆமா. என்னடா முறைக்கிறே.
கர்ப்பூரம் சிரித்துக் கொண்டே முதுதேளன் பின்னால் போனான். காலில் போட்டிருந்த செருப்பை எடுத்து ஓங்கி ஒரு அடி கொடுத்தான் அந்தத் தேள் சவத்துக்கு. கூழான உடம்போடு கிடக்கும் முதுபெரும் தேளன் உடம்பு வாடை தெள்ளுப் பூச்சிக் கும்பலுக்குப் பரவ அடுத்த பத்து நிமிடத்தில் துயிலரங்கில் இரண்டு தேளர்கள் முற்றுகையிடப்பட்டனர். முதுபெருந்தேளரும் அவரது இளைய மகனான இளந்தேளரும் அந்த இருவர்.
முதுபெருந்தேளரின் சவத்தின்மேல் தெள்ளுப் பூச்சிகள் படர்ந்து விருந்து உட்கொண்டன. கொஞ்சம் கொஞ்சமாக அவை முதுவரின் முகத்தை அரித்தெடுத்து கண்களை மட்டும் விட்டு வைத்து கால்களை அரித்துத் தின்ன முனைந்தன.
இலந்தேளன் உயிரோடு இருக்கிறான் என்பதில் மகிழ்ச்சி அடைந்ததுபோல் தெள்ளுப் பூச்சிகள் அந்தத் தேளன் அலற அலற அவனைக் கொஞ்சம் கொஞ்சமாக பிய்த்து உண்டன. கொஞ்ச நேரத்தில் முதுபெருந்தேளனும் இல்லை இளந்தேளனும் அங்கே இல்லை.
வந்த வேகத்தில் தெள்ளுப் பூச்சி உயிர்கொல்லிப் படை துயிலரங்கம் கடந்து தாழப் பறந்து போயின. கர்ப்பூரமும் ஆல்ட் க்யூ பிரபஞ்சத்து கசாப்புக்கடை நீலனும் அவற்றைப் பார்த்து அச்சம் மூண்டெழுந்து பிரமித்துப் போய் நின்றனர்.
சிற்றுந்து ஓட்டுநர் மணியடித்து நேரமாகி விட்டதென்று அழைக்க, கர்ப்பூரம் பிரதி நீலனோடு வாகனமேறினான். அவர்களுக்குப் பேச எல்லாம் இருந்தது. எனில் சிற்றுந்து ஓட்டுநன் முன்னிலையில் பேச ஏதுமில்லை.
வாகன ஓட்டுநர் கர்ப்பூரத்திடம் அதென்ன ஐயா தெள்ளுப் பூச்சிகள் பிறந்த தேள்குஞ்சுகள் மேல் தான் விருந்துண்டு இன அழிப்புச் செய்தலில் முன்முனைப்பு காட்டும் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவை மூத்த தேளர் போன்ற தேள் உயிர்போன உடல்களையும் விரும்பி உட்கொள்ளத் தொடங்கியது எப்போதிலிருந்து ஐயா.
பிரதி நீலன் சினம் கொண்டு ஓய் உம் தொழில் உந்து செலுத்துதல். இமைப் பொழுதும் சோராமல் இருத்தல். தேள் போனாலென்ன தெள்ளுப்பூச்சி வந்தாலென்ன உனக்கும் எனக்கும்? ஓட்டுநன் அமைதியானான். தேளரமணை வந்து சேர்ந்ததும் ஓட்டுநன் கர்ப்பூரத்திடம் சொன்னான் –
வண்டிச்சாவி இந்தாரும். இனிமேல் நான் வேலைக்கு வரலை. சம்பளம் வாராவாரம் தருகிறேன் என்று சொன்னது காற்றோடு போச்சு. சகல புருடா சஞ்சினி பத்து பீப்பாய் தருகிறேன் விற்று சம்பளத்துக்கீடாக எடுத்துக் கொள்ளும் என்கிறார் அரண்மனை தலைமை அதிகாரி. எனக்கு அதொன்றும் வேணாம்.. கர்ப்பூரமே சாவி இந்தாரும் அரண்மனைக்குள் உமக்கு தேளரசரோ பெருந்தேள்பெண்டோ உமக்கு பார்க்க பேசக் கிடைக்கலாம். சாவியைக் கையைப் பிடித்துக் கொடுத்துவிடும் என்றபடி கர்ப்பூரத்தின் கையைப் பற்றி இழுத்து சிற்றுந்து சாவியை வைத்துவிட்டு உலகமே எதிரி தோரணையோடு நடந்து போனான் அவன்.
அரசவைக் கதவுகள் அடைபட்டிருந்தன.கர்ப்பூரம் ஆல்ட் க்யூ நீலனை நோக்கினான். ஒரு அஞ்சு நிமிஷம் நான் தேளரசரை சந்திச்சுட்டு வந்திடறேன். அப்புறம் நீங்க போகலாம் என்று வெளியே தூசி அடைந்து கிடக்கிற ஓட்டை உடைசல் மர நாற்காலியைக் காட்டிவிட்டு நேரே கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனான் அவன்.
அங்கே அரியாசனத்தில் பெருந்தேள்பெண்டு வழித்துக்கொண்டு உட்கார்ந்து காலை நீட்டி வைத்துக் கொண்டிருக்க, தரையில் அமர்ந்து பெண்டுவின் கால் பிடித்து விட்டுக்கொண்டிருந்த பெருந்தேளரசர். கர்ப்பூரம் திரும்பப் போகிறதாகப் போக்குக் காட்டி தேள்களின் பூர்வ சம்போக விளையாட்டை ரசித்துக் கொண்டிருந்தான். போகம் எல்லாம் காண இனிது என்று இல்லை. விலையின்றிக் காணக் கிடைத்த சந்தோஷமது. திடீரென்று பெருந்தேள்ப்பெண்டின் குரல் உயர்ந்தது.
அந்த ரெண்டு தேவிடிச்சிகள் காலையிலே சூரியன் வந்ததற்கு அப்புறம் நாளைக்கு உசிரோடு இருக்கக் கூடாது. நீ தேளனா இந்தக் கொடுக்கோட பிறந்து இருக்கப்பட்டவன். அந்தத் தேவடியாள்களோடு இதை வச்சுக்கிட்டு இன்பம் எப்படி அனுபவிக்கப் போறே. முழுக்க உள்ளே போனா திரும்பறது உன் கட்டுப்பாட்டிலே இல்லே.
அவள் சொன்னதை கர்ப்பூரம் கேட்கவில்லை என்ற பாவனையில் அணுஅணுவாக ரசித்தான். சரி நாளைக்கு முடியாது கூடிய சீக்கிரம் அந்தப் பெண்களை உயிர் நீக்கிக் கிடத்த ஒருபடை செந்தேள்களையும் இன்னொன்று கருந்தேள்களையும் எடுத்து.
அதெல்லாம் உள்நுழைந்து கொட்டினால் அப்புறம் உசிரு தங்காது. என்ன சொல்றே கர்ப்பூரம் என்றபடி பெருந்தேள்பெண்டின் ஒரு காலுக்கு முத்தமிட்டு அவளை மகிழ்ச்சிப்படுத்தினார் தேளரசர்.
கர்ப்பூரத்துக்குக் கண்காட்டி உடனே பெருந்தேள்பெண்டின் கால்களை ஒவ்வொன்றாக ஒடிக்கத் தொடங்கினார் அந்த இங்கிதமற்ற தேளர். மறுபடி கர்ப்பூரத்தைப் பார்க்க, புரிந்தது என்று தலையாட்டி தன் காலிலிருந்து காலணிகளை அகற்றி ஓங்கி பெருந்தேள்பெண்டின்மேல் அடித்தான் கர்ப்பூரம். தேளரசர் பெருந்தேள்பெண்டு முதுகில் ஏறிக் குதித்து கொடுக்கை நசிப்பித்தார்.
ரொம்பப் பேசினே இதுதான் தண்டனை. அந்தக் குட்டிகளுக்கும் வேசி மகன் குழலனோடு சேர்ந்து சல்லாபம் பண்ணி தாந்தோன்றியாக செயல்பட்டா உயிர் உடம்பிலே நிக்காதுன்னு சொல்லியாகணும். என்ன சொல்றே கர்ப்பூரம். குயிலி, வானி போங்கடி. சாவப் போங்கடி.
நான் உங்க பக்கம் தான் என்று கர்ப்பூரம் கையுயர்த்திச் சொன்னான். அப்போது வெளிக்கதவைத் திறந்து உள்ளே வந்த ஆல்ட் க்யூ நீலனும் அதையே அவசரமாகச் சொன்னார்.
அதாவது, கர்ப்பூரர் ஆதரவு தருவதுபோல் அரசருக்கு நானும் சகல இன சஞ்சீவனி வெற்றி தொடர என் உழைப்பையும், ஆதரவையும் தருகிறேன். அரசர் எனக்கு அருள வேண்டும் என்று கோருகிறேன்.
ஆசிதானே அத்தனையும் உண்டு என்று தாராளம் காட்டினார் தேளரசர். அதோடு கூட என் பங்கு சகல இன சஞ்சீவனி வருமானமும். கடந்த ஒரு மாத வருமானத்தில் கொஞ்சம் நிதி இப்போது கொடுத்தாலாகும் என்று அவசரம் காட்டினார் ஆல்ட் க்யூ நீலன்.
கர்ப்பூரம் தேளரசரையும் ஆல்ட் க்யூ பிரபஞ்ச பிரதி நீலனையும் மாறிமாறிப் பார்த்தான். எவ்வளவு எதிர்பார்க்கிறீர்கள் என்று தெரிந்தால் அதற்காக ஒரு தொகை ஒதுக்கிவைத்து மற்ற இன்றியமையாத செலவுகளுக்குப் பணம் ஒதுக்கலாம். கஜானாவும் மிக அதலபாளத்தில் கொஞ்சம் காசுபணத்தோடு இருக்கிறது. ஏற்றுமதி மழை எதிர்பார்த்ததுபோல் இல்லை.
இதெல்லாம் பெருந்தேளர் சொன்னது. மற்ற நேரமாக இருந்தால் அவர் நீலன் போன்ற கீழ்த்தட்டு மனிதர்களோடு இப்படி நேரடியாக, அதுவும் பணிந்த குரலில் பேசியிருக்க மாட்டார். என்ன செய்ய? இது அவர் அடங்கி இருக்க வேண்டிய காலம்.
இன்னும் நம்பிக்கை இருக்கிறது ராஜன். மனதில் அவரே சொல்லிக்கொண்டார்.
வரும் வெள்ளிக்கிழமை ஐம்பது விழுக்காடு உம் பங்கு தருகிறேன். மகிழ்ச்சி தானே நீலரே? பெருந்தேளர் வினவினார்.
ஆம் என்றார் மகிழ்ச்சியோடு நீலன்.
மிக அதிகமாக சத்தம் போடாமல் பெருந்தேள்பெண்டின் சவத்தை அகற்ற முற்பட்டார் தேளரசர். சிற்றுந்து ஓட்டுநன் கபிலன் வாசலில் இருப்பான் சற்று வரச்சொல்ல முடியுமா என்று கர்ப்பூரத்தை வினவினார் அவர். அவன் இருக்க மாட்டான் என்றபடி கர்ப்பூரம் சிற்றுந்து சாவியை அசைத்துக் காட்டி தன் சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டான்.
ஓ ஓட்டுநன் நின்று விட்டானா? சரி நானே ஓட்டிப் போகிறேன். கர்ப்பூரரே நீரும் கூட வாரும். இப்படிச் சொல்லி சிற்றுந்தின் பின் இருக்கையில் பெருந்தேள்பெண்டின் உடலையும் மேலே தனியாக வந்த கால்கள், கொடுக்குகளையும் விருந்து சாப்பிடும் தெள்ளுப்பூச்சிகளைக் கையசைத்து வாகனத்துக்கு வெளியே பறந்து போக அனுப்பினான்.
கர்ப்பூரன் சொன்னான் வண்டியை நான் ஓட்டுகிறேன். நீங்கள் உங்கள் மடியில் ராணியைப் போட்டுக்கொண்டி இருங்கள்.
நான் எப்படி அதுபோல எல்லாம் என்று சமயம் புரியாமல் சூழ்நிலை புரியாமல் ஆல்ட் க்யூ நீலன் அசடு வழிந்தார்.
ஓய் உம்மையும் தெள்ளுப்பூச்சி கடிக்க விட்டிருக்கணும். பேசாமல் முன்னால் என் அருகில் உட்கார்ந்து ஒரு வார்த்தை பேசாமல் வரும் என்று நீலனை இருத்தினான் கர்ப்பூரம்.
ராஜன் நீர் பின்னால். புரிந்தது புரிந்தது என்று அவசரமாகச் சொன்னார் தேளரசர். தேள்ராணிக்கு உடம்பு சரியில்லையா என்று நீலன் கேட்டார்.
ஓ இந்த வைத்தியனைக் கூடக் கூட்டிப் போகறது மடியில் பூனையைக் கட்டிக்கிட்டு சகுனம் பார்க்கறமாதிரி ஆச்சுதே. தெலுங்கில் அப்படிப் பாட்டாகப் பாடியபடி உட்கார்ந்திருந்தான் கர்ப்பூரம். தேளரசர் ராணியம்மா மேல் நோய் கவிந்தது என்று சுருக்கமாகச் சொன்னார்.
நான் வைத்தியம் பார்க்கட்டுமா என்று நீலன் சொல்வதை எந்த நிமிடமும் எதிர்பார்த்தார் அவர். ஆனால் புள்ளிக்காரர் நீலன் இல்லையே. ஆல்ட் க்யூ பிரபஞ்ச பிரதி நீலன் அல்லவா?
நீலனுக்கோ தன்னை வைத்தியம் பார்க்கச் சொல்வார்கள் என்று பயம். கர்ப்பூரம் பாடலாகச் சொன்னது பிணத்துக்கு யார் வைத்தியம் பார்த்து என்ன, யார் மருந்து கொடுத்து என்ன. அவுனு அவுனு என்றார் தேளரசர் தெலுங்கு தெரிந்த மாதிரி.
துயிலரங்கம். தேளரசனும் நீலனும் பெருந்தேள்பெண்டை ஒரு பேழையில் இடலாம் என்று நடந்தால் அங்கே எல்லாப் பேழைகளும் வெற்றிடமாகக் கிடந்தன. தரையெங்கும் கரப்புகள் ஊர்ந்து கொண்டிருந்தன. தெள்ளுப் பூச்சிகளை அவை ஆகாரமாக்கிக் கொண்டிருந்தன,
(தொடரும்)
- கனடா எழுத்தாளர் வ.ந. கிரிதரனின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா
- நாவல் தினை அத்தியாயம் நாற்பத்தொன்று பொ.யு 5000
- தகுதி 1
- தகுதி 2
- ஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் – 5