பூர்த்தி
விடிந்தபிறகு தான் கரப்புகள் எவ்வளவு அழிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரியவந்தது. கிட்டத்தட்ட முழு இனப் படுகொலை.
அரசாங்கத்தில் வெவ்வேறு நல்ல பதவிகளில் இருக்கும் மூத்த, நிறம் மங்கிய கருப்புகள் அரண்மனை வாசலில் பழைய மோட்டார் வாகனங்களின் சக்கரங்கள் முன்னும் பின்னும் நகர நசுக்கப்பட்டு ரத்தவாடையோடும் தசை நாற்றத்தோடும் தெரு முழுக்க அங்கங்கே சாணகம் போல் ஒட்டியிருந்தன.
வீடுகளுக்குள் இருந்து இழுத்து வரப்பட்ட கரப்பு இனப் பெண்கள் விஷவாயு சுவாசிக்க வைக்கப்பட்டு உடல் முறுக்கி இறந்தன. பள்ளிகளுக்குள் இருந்து வெளியே உதைத்து அனுப்பப்பட்ட இளம் கரப்புகள் நீர்த்தொட்டிகளுக்குள் அமிழ்த்தப்பட்டு மூச்சு முட்டி மரித்தன.
நாடு முழுவதும் பல கரப்புகள் கரப்புகளாலேயே கொல்லப்பட்டன. இரண்டு இரண்டு கரப்புகளாக அணைப்பில் இருத்தப்பட்டு இந்த இணையர்களில் ஒருவர் மற்றவரின் தலையை கத்தி போன்ற கால் கொண்டு அறுத்து எறியக் கட்டளை பிறப்பிக்கப் பட்டது. கரகரவென்று தலையறுக்கிற காரியம் அவசரமில்லாமல் நடக்கவும், தலைகள் கீழே விழும்போது பாடிக்கொண்டிருக்கவும் நிர்பந்திக்கப்பட்டன அக்கரப்புகள்.
நெருப்புக் கொளுத்தி தீ கனன்று எரிய கரப்புகள் குடும்பம் குடும்பமாகத் தீயில் விரட்டப்பட்டுப் புகுந்து புகைந்து எரியும் காட்சிகள் நாடு முழுக்க அரங்கேறி சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டன.
நாடு முழுவதும் பெருந்தேளரசரும் குழலனும் கைகோர்த்து நிற்கும் பிரம்மாண்டமான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. ’இவர்கள் கூடினால் இணை ஏது உலகில்’ என்ற வாக்கியம் கீழே அச்சடித்து வந்த இந்தச் சுவரொட்டிகளைப் படித்து ’கூடினால்’ என்ற சொல்லுக்குச் சிறப்புப் பொருள் கற்பித்து நாடெங்கும் மிஞ்சியவர்கள் சிரிக்க, பிளாஸ்டிக் வாளிகளில் பசை காய்ச்சி எடுத்துப் போகப்பட்டுச் சுவர் தோறும் சுவரொட்டிகளின் கீழே கருப்புக் காகிதம் ஒட்டப்பட்டது.
சுவரொட்டிகளில் சதா சிரித்துக் கொண்டிருக்கிறான் குழலன். தெருவில் சுவரொட்டி ஒட்டிய சுவரைக் கடந்து நாற்பதுக்காரிப் பெண் யாராவது போகும்போது மட்டும் கண் விழுங்காமல் அவள் பின்னே போஸ்டர் குழலன் தொடர்வதாக எங்கும் பரவலாக வதந்தி பரவியது.
ஆடி ஆடி வரும் ஆசனம் பெருத்த மத்திய வயசுப் பேரழகி ஒருத்தியின் பின்னால், சுவரொட்டி ஒட்டி வைத்திருந்த சுவரே நடக்க ஆரம்பித்து விட்டதாகத் தகவல்.
நல்லவேளை பெருமுதுதேளர் கூட்டணியில் இல்லை. இருந்திருந்தால் பையன்மார் யாரும் தெருவில் நடக்க முடியாமல் போயிருக்கும்.
இதெல்லாம் விட முக்கியமான செயல்பாடு, கோகர்மலையின் அபூர்வ பிரஜையான ஒற்றைக் கரடி அரசியலில் அலைபாய்ந்தது தான்.
காலையில் கர்ப்பூரத்துக்கு ஆதரவு செயல்பாடு என்று அந்தக் கரடி அறிவித்தது. முற்பகலில் நீலன் வைத்தியர் எங்கே உண்டோ அங்கே நானும் போகிறேன் என்று குழப்பமாக ஆதரவு தெரிவித்தது.
மாலையில், இறந்த முதுபெருந்தேளரை நாட்டு நலன் கருதி இனி எப்போதும் ஆதரிக்கப் போவதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டது. துயிலகத்தில் முதுபெருந்தேளரின் சவத்துக்கு முன் நின்று வினோதமான ஏதோ மொழியில் பேசியது மோர்சிங்க் வாசிப்பது போல் இருந்தது. அதற்குக் கரடியே விளக்கம் சொல்லியது என்ன என்றால் முதுபெரும்தேளர் அடுத்து, கரடி தான், ஆமாம் கரடிதான் நாடாள விரும்புகிறார் என்று.
நடுராத்திரி குழலனுக்கு ஆதரவு தெரிவித்து இனி நான் நிம்மதியாக உறங்குவேன் என்றது பேசிக் களைத்த கரடி.
விடிகாலை பெருந்தேளருக்கு ஆயுள் உள்ளவரை ஆதரவு என்று சுவரொட்டி ஒட்டி அறிவித்தது அந்தக் கரடி.
யாரோடு இந்த நிமிடத்தில் கரடி இருக்கிறது என்று தெரியாமல் போனது. எல்லோரையும் குழப்பிச் சமூகத் தொண்டு புரியும் கரடியை எங்கே பார்த்ததும் உடனே கட்டிப்போடச் சொல்லி அரசு ஆணை.
அப்போது மாறி மாறி ஆடியும் உறங்கியும் செய்திருந்த கரடி நல்ல உச்சி வெயில் நேரத்தில் கட்டு அவிழ்ந்து பறக்கத் தொடங்கியது.
உயரம் போய் இன்னும் உயர்கிற கரடி கீழே நின்று மேல்நோக்கி ஆர்வத்தோடு பார்த்து நின்ற கும்பல் கேட்டபடி குறி அறுத்து விட்டெறிந்து போனதாகவும், துயிலகத்தில் அந்தக் குறி பத்திரமாகப் பேணப்படவிருக்கிறது என்றும் அதிகாரபூர்வமில்லாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இனப்படுகொலை புரிந்து கரப்பு இனம் இல்லாமல் ஒரு வாரம் போனது, இரண்டு வாரம் போனது. அப்புறம் மெல்லச் சாக்கடை ஓரமும் வீட்டுக் குளியலறையின் இருண்ட ஓரத்திலும் ஒன்று இரண்டாக அவை தட்டுப்பட ஆரம்பித்தன.
‘அணுகுண்டு வீசித் தாக்கி மூவாயிரம் ஆண்டு முன் எல்லா உயிரினமும் அழிந்தபோது கரப்புகள் பிழைத்து வந்தன; இந்த உள்நாட்டுப்போர் எம்மை என்ன செய்யும்’ என்று சவால் விடும் உயிரினமாக கரப்புகள் மெல்ல அதிகமாகி வரத் தொடங்கின.
தேள்களும் கரப்புகளும் முன்னிருந்ததைவிட ஆகக் குறைவாக இருந்ததால் கர்ப்பூரம் நிறைய மானுடர்களை முக்கியமான அரச பதவிகளில் நியமித்திருந்தான். எனினும் அந்த மனித ஜாதி நபர்கள் அவன் மேல் எந்த நன்றி பாராட்டுதலும் இன்றி politically correct ஆக குழலனுக்கும் பெருந்தேளரசருக்கும் ஆதரவு தெரிவித்தனர்.
அவர்கள், கரப்புகளை இனப்படுகொலை செய்ததற்காக, யாரெல்லாம் அதில் ஈடுபட்டார்களோ அவர்களை வீட்டுக்குள் பாராட்டி, வெளியே கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். அதேபோல் தேள் வம்சத்தை ஆட்டம் கண்டு கூட்டம் கூட்டமாக இறந்துபட வைத்த தெள்ளுப்பூச்சியினச் செயலையும் வீட்டில் பாராட்டி வெளியே பழித்தனர். மனுஷ தர்மம் அது என்று பெருமையும் பாராட்டினர். தேளாதரவு ஊர்வலங்களின் போதும், கரப்பர் மாநாட்டின் போதும் மனுஷ இனத்தவர் யாரும் தட்டுப்படவில்லை.
எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கேக் வெட்டி நீலன், ஆம் அசல் நீலன், பூவுலகு நீலன், அசல் சஞ்சீவனியை வெற்றிகரமாகச் சோதனை செய்ததைக் குயிலியும் வானம்பாடியும் கொண்டாடினார்கள். குழலன் அரசில் புகுந்தபிறகு இந்த மாதிரிக் கொண்டாட்டங்களைத் தவிர்க்க ஆரம்பித்ததால், அதுவும் எதிரணியர் முன்கை எடுத்து நடாத்தும் நிகழ்வுகளைத் தவிர்த்தே ஆக வேண்டும் என்பதால் அவன் வரவில்லை. மேலும் ஆல்ட் க்யூ பிரபஞ்ச கசாப்புக்கடை பிரதி நீலன் தான் இங்கே வைத்தியர் நீலனாகக் கருதப்படுகிறார். சகல இன சஞ்சீவனி வந்த பிறகு அசல் சஞ்சீவனியை யாரும் ஒரு பொருட்டாகக் கருதிப் பார்ப்பதில்லை. அதற்காக வசூலித்த கட்டணங்களைக் கூட ஏற்றுமதித் தரத்திலான சகல இன சஞ்சீவனி நிரம்பிய குடுவைகளாகவும், சீசாக்களாகவும் கட்டணம் செலுத்திய சகலருக்கும் திருப்பித் தந்தது தேளரசு. கோலாவை விட இந்த பானம் அதிகப் பிரபலமானது.
தேளரசரோடு கூட்டு இயக்கச் செயல்பாட்டை குழலன் அறிவித்ததும் செய்த முதல் காரியம் கர்ப்பூரத்தை ’அரச மகிழ்ச்சி’ என்ற சிறைச்சாலையில் தனியாகப் பூட்டியதுதான். தேளரசர் சொன்னாராம் – இந்த ஆள் கர்ப்பூரம் அங்கே இருக்கப்பட்ட மத்த எல்லோரையும் கிருத்துருமம் பிடிக்க வச்சு நமக்கு எதிரா நடக்க செஞ்சுடுவானே.
அதைக் கருத்தில் கொண்டு அவனை ஆல்ட் க்யூ பிரபஞ்சத்தில் கொண்டு விடலாமா என்று குழலன் யோசித்திருக்க, விடிந்தபோது கர்ப்பூரம் காணாமல் போனான்.
விடிந்தபோது குயிலியும் வானம்பாடியும் கல்யாணத்துக்குப் போகிறதுபோல் பட்டுப்புடவை உடுத்தினார்கள். சரிகை வேட்டி உடுத்திய பூவுலகு நீலனை அழைத்துக்கொண்டு காலப் படகேறினர் அவர்கள். காலப் படகு ஏறியதுமே நீலன் உறங்கத் தொடங்கி விட்டார்.
எல்லாப் பரிமாணக் கூறுகளையும் அரூபமான பயணம் என்ற அலகுகளுக்குத் திருத்தி காலப்படகும் பயணிகளும் யார் கண்ணிலும் படாதபடி மாற்றினாள் குயிலி.
நகரத் தொடங்கியபோது அந்தப் பெண்கள் கைகுலுக்கி முத்தமிட்டுக் கொண்டனர். குழலனின் அழைப்பு அவன் அளித்த பயோ டிரான்ஸீவரில், குயிலியின் காது மடல் வழியாகக் கேட்டது.
குரல் மட்டும் உள்ளே வர அனுமதிக்கும் நாற்பரிமாணக் கூறுகள் குயிலி அலகிட்டபடி இயங்கின. பத்திரமாகத் திரும்பி வாருங்கள் என்று அவன் குரலோடு பெருந்தேளரசர் குரலும் கேட்டது. ஆகட்டும் என்றாள் குயிலி.
அவர்கள் திரும்பப் போவதில்லை. காலக்கோட்டைத் திருத்தாமல் அதன் கூடவே ஓரமாக மெல்ல நகர்ந்தபடி எளிய ஒரு வாழ்க்கை அமையும் அவர்களுக்கு. மூன்றாம் நூற்றாண்டில் நீலனின் ஆயுர்வேத சித்த மருத்துவசாலை உதவியாளர்களாக இன்னும் நூறாண்டு இருப்பார்கள்.
அவரிடமிருந்து முழுக்க வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட அசல் சஞ்சீவனி பருகக் கிடைத்தவர்கள் அவர்கள். அந்த இரண்டு பெண்களுக்கு இடையே அந்தரங்க உறவு இந்த நூற்றாண்டில் இருப்பது போல்தான் பொது யுகம் முன்னூறிலும் இருக்கும் – கொஞ்சம் சுகித்து, கொஞ்சம் மறைத்து, கொஞ்சம் உச்சம் தொட்டு. கொஞ்சம் கீழிறங்கி. அதுவும்தான் வாழ்ந்திருத்தல்.
படகு விண்ணேறியபோது கைகாட்டி நிறுத்தச் சொல்லிக் கூவிக்கொண்டு தரையில் யாரோ ஓடி வந்துகொண்டிருப்பதைப் பார்த்தார்கள். கர்ப்பூரம்.
நிறைவு
சில குறிப்புகள்
ஆல்ட் க்யூ நீலனான கசாப்புக்கடை நீலனை தன் சொந்த கிரகத்துக்கே-சொந்த பிரபஞ்சத்துக்கு அனுப்பப் பட்டார். அவர் சகல சஞ்சீவனி நீலன் வகை என்ற பெயரில் சில சேர்மானங்கள் அதிகமாகச் சேர்த்து தாது புஷ்டி டானிக் செய்து பணம் பண்ணி இரண்டே வருடத்தில் செல்வந்தர் ஆனாராம். அப்புறம் குளிர்பானம் கோலா நிறையப் பருகி குடல் அழுகி இறந்தும் போனாராம். அவர் பிரபஞ்சம் விட்டுப் பிரபஞ்சம் போய்க் கை நிறைய சம்பாதித்துக் கொண்டு வீடு திரும்பிய கதையை இன்னும் ஆல்ட் க்யூ பிரபஞ்சத்தில் பொழுது போகாத முதியவர்கள் சகல இன சஞ்சீவனி நீலன் வகை சீசாக்களிலிருந்து பானமாக மாந்தியபடி எத்தனையாவது முறையாகவோ பகிர்ந்து கொள்கிறார்களாம். இந்தப் புதினம் அந்த வாய்மொழி வரலாற்றுப் பகிர்வுகளில் இருந்து கட்டியமைக்கப்பட்டது.
தேள் இனத்தைப் பெரும்பாலும் அழித்த தெள்ளுப் பூச்சிகளின் படை திருவில்வக்காட்டு யட்சி அனுப்பி வந்ததாம். வானம்பாடி இருந்த இடத்தில் ஒரு யட்சி புகுந்தது அவளும் குயிலியும் நட்பில் தொடங்கியதற்கு வெகு முன்பாம். திருவில்வக்காட்டு யட்சியின் இளைய சகோதரி அவள். குயிலிக்கு அவள் நல்ல மனைவியாக இருந்தாளாம்.
குயிலி சஞ்சீவனி பருகியதால் பதினேழு ஆண்டுகள் ஆயுள் நீட்டிப்பு பெற்று எண்பத்தேழு வயதில் வைகுந்த பதவி அடைந்தாளாம். நீலன் வைத்தியர் இருநூற்றிருபது ஆண்டுகள் நீடித்த ஆயுள் பெற்றிருந்தாராம். கண் தெரியாமல், காது கேட்காமல் அவர் பெருந்துன்பப்பட்டாராம்.
கர்ப்பூரத்தின் மனைவி கபிதாவும் தொடுப்பு பூரணாவும் அவன் செயலாக இருக்கும்போதே மறைந்தனர் என்பது வாசகர்கள் அறிந்ததே.
ஆல்ட் க்யூ பிரபஞ்ச பூரணா அங்கே சினிமாவில் கோரஸ் பாடுகிற பாடகியாக மின்னி மறைந்தாளாம். உல்லுல்லு கோரஸ் பாடுவதென்றால் ஆட்டோ ரிக்ஷா சார்ஜ் கொடுத்து அவளை ரெக்கார்டிங்க் கூட்டிப் போகிறார்களாம். அந்தப் பிரபஞ்சத்து கர்ப்பூரம் இன்னும் அங்கே பிறக்கவில்லையாம்.
ஆல்ட் எஸ் பிரபஞ்ச கபிதா பொது யுகம் 1947-ஆம் ஆண்டு தமிழ்ப் பத்திரிகைகளில் தேள்கள் பாத்திரமாக வரும் தொடர்கதைகள் எழுதினார். அவை விரைவில் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் சிறுகதைத் தொகுப்பாக வெளிவர இருக்கின்றன.
- கனடா இலக்கியவெளி வெளியிட்ட ‘மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ்’
- கனடாவில் சமீபத்தில் வெளிவந்த தமிழ் நூல்கள்
- நாவல் தினை அத்தியாயம் நாற்பத்துநாலு பொ.யு 5000
- ஒரு சாமான்யனின் ஒரு நாள் சலனங்கள் – 8
- அதுவே போதும்
- அறிதல்