ஏ.நஸ்புள்ளாஹ்
அவர் கண்களைத் திறந்தபோது, எங்கும் மணல் மட்டுமே.
எந்த மரமும் இல்லை
எந்த சத்தமும் இல்லை
காற்று வீசினாலும், அது கூட ஒரு இறந்த இசையைப் போல இருந்தது.
“நான் எங்கே வந்துவிட்டேன்?” என்று அவர் தன்னிடம் கேட்டார்.
ஆனால் அதற்கு விடை எங்கும் இல்லை.
நீங்கள் ஒருபோதும் மக்கள் இல்லாத வெளியில் தனியாக நின்றிருக்கிறீர்களா?
மணல் மட்டுமே பரந்து கிடக்கும் இடத்தில், உங்களுடைய குரல் கூட உங்களுக்குத் திரும்பிவராமல் தொலைந்துவிடும்.
அவருக்கு அப்படித்தான் தோன்றியது.
அவர் யார்?
அவர் எங்கிருந்து வந்தார்?
அவருக்குத் தெரியவில்லை
ஆனால் கையில் ஒரு காகிதம் இருந்தது.
அதில் ஒரு வார்த்தை மட்டும் “தேடு.”
எதைத் தேட வேண்டும்?
யாரைக் தேட வேண்டும்?
அவர் அறியவில்லை.
ஆனால் அந்தக் காகிதம் தான் அவரது உயிரின் காரணம் போல உணர்ந்தார்.
மணலில் சில தடங்கள்
அவை ஒருவரின் காலடிகள்
சில ஆழமாக, சில மெல்லியதாக இருந்தது
அவர் அவற்றைப் பின்தொடர்ந்தார்
ஒவ்வொரு அடியும் அவரை எங்கோ அழைத்துச் சென்றது.
ஆனால் சில நேரம் கழித்து, தடங்கள் திடீரென மறைந்துவிட்டது.
மணல் சுத்தமாய் இருந்தது
அவர் தனியாக நின்றார்.
“நான் பின்தொடர்ந்தது யாருடைய தடம்? அல்லது என் தடமா?” என்று எண்ணினார்.
தொலைவில் ஒரு நகரம் தெரிந்தது
வீடுகள், மரங்கள், கிணறுகள்.
அவர் ஓடினார்.
ஆனால் அருகில் சென்றபோது அது மறைந்துவிட்டது.
வெறும் மணல் மட்டுமே.
அவர் திகைத்தார்
“இந்த வெறிச்சாலை எனக்கு விளையாடுகிறதா? அல்லது என் மனமே என்னை ஏமாற்றுகிறதா?”
அவர் திடீரென ஒரு குரல் கேட்டார்.
“நீ ஏன் வந்தாய்?”
அவர் சுற்றிப் பார்த்தார்.
யாரும் இல்லை.
“நீங்கள் யார்?” என்று அவர் கேட்டார்.
குரல் சிரித்தது.
“நீங்கள் படிக்கிறீர்கள் என்பதால்தான் நான் இருக்கிறேன்.”
அவர் அச்சமடைந்தார்
“யார் படிக்கிறார்கள்?”
குரல் அமைதியானது.
அவர் சில முகங்களை நினைத்தார்
ஆனால் அவை தெளிவாக இல்லை.
சிலர் சிரித்தார்கள்
சிலர் அழுதார்கள்
சிலர் அவரை விட்டு சென்றார்கள்.
அவர் யாரை தேடுகிறேன் என்று புரிந்துகொள்ள முடியவில்லை.
ஆனால் அந்த முகங்கள் அனைத்தும் மணலில் கலந்து மறைந்தன.
ஒரு இடத்தில் அவர் ஒரு கிணறு கண்டார்.
அதில் தண்ணீர் இல்லை.
ஆனால் அவர் தலையை குனிந்து பார்த்தபோது, அதில் அவரது முகம் தெரிந்தது.
அவர் அதிர்ந்தார்
ஏனெனில் அந்த முகம் அவர் அறிந்த முகம் இல்லை.
மற்றொருவரின் முகம்.
அவர் மெதுவாகச் சொன்னார்
“அது நானா? அல்லது நான் தேடுகிறவனா?”
திடீரென மணல் புயல் எழுந்தது
அவர் கண்களை மூடிக்கொண்டார்
மணல் துகள்கள் உடலை எரித்தது.
புயல் அடங்கியபோது, அவர் வேறொரு இடத்தில் நின்றிருந்தார்.
அங்கே ஒரு சின்னக் கல்லில் எழுதப்பட்டிருந்தது: “இங்கும் வெறிச்சாலை தான்.”
அவர் சிரித்தார்
“வெறிச்சாலையில் இருந்து ஓடினாலும், வெறிச்சாலையில்தான் வந்து சேர்கிறேன்.”
அவர் திடீரென உங்களை நோக்கிப் பார்த்தார்.
“நீங்கள் தான் என்னைத் தாங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.
நீங்கள் வாசிக்காமல் இருந்தால், நான் மணலிலே மறைந்து விடுவேன்.
நீங்கள் தொடர்ந்து வாசிக்கிறீர்கள் என்பதால் தான், இந்தக் கதை இன்னும் உயிரோடு இருக்கிறது.”
அவர் கேட்டார்
“ நீங்கள் எப்போது நிறுத்துவீர்கள்?”
சூரியன் மறையவில்லை
இரவு வரவில்லை.
எல்லாம் ஒரே மாதிரியான நேரம்தான்.
அவர் இன்னும் நடந்துகொண்டே இருந்தார்.
கையில் அந்தக் காகிதம்.
மனதில் அந்தக் கேள்வி
“எதைத் தேட வேண்டும்?”
மணல் காற்று மீண்டும் எழுந்தது
குரல் மீண்டும் ஒலித்தது
“வெறிச்சாலை உன் உள்ளேதான். அதிலிருந்து வெளியேறுவது உனக்கே முடியாதது.”
அவர் நின்றார்
சுற்றிலும் வெறும் வெறுமை.
ஆனால் அந்த வெறுமையிலேயே ஒரு அமைதி.
அவர் உங்களைப் பார்த்தார்.
“இப்போது சொல்லுங்கள் நீங்கள் இருந்தால், இந்த பாலைவனத்தை விட்டுத் திரும்பிச் செல்வீர்களா?
அல்லது இங்கேயே இருந்து, மணலுடன் ஒன்றாகிப் போவீர்களா?”