தஞ்சாவூரு மாடத்தி (வாகைசூடவா விமர்சனம்)

This entry is part 3 of 44 in the series 16 அக்டோபர் 2011

முருங்கைக்காய் வாங்கிக்கொண்டு வரும் எண்பதுகளின் வாத்தியார் பாக்யராஜ் ,தான் அப்போது சென்ற கிராமத்துக்கு தமது மகனை அனுப்புகிறார். வழக்கம் போல கிராமத்துக்கு செல்ல மாட்டேன் என்று அடம் பிடிக்கும் மகனாக விமல்.பொட்டக்காட்டில் புழுதி பறக்க வந்திறங்குகிறார் தனது அரசாங்க வேலைக்கும்,Certificate-க்குமாக.

“இதுஹள்லாம் படிச்சு என்ன கலெக்டர் வேலைக்கா போஹப்போகுதுஹ.? பொழப்பப்பாருங்க வாத்யாரே” என்று டிப்பிக்கல் வில்லனாக வரும் பொன்வண்ணன். அவரும் அவரது அடியாட்களும் வரும் எல்லாக்காட்சிகளிலும் கட்டியிருக்கும் வேட்டி சட்டையில்,ஒரு துளிகூட மண்தூசு ஒட்டாமல் வந்து செல்கின்றனர்.அத்தனை புழுதிக்காட்டில்,உடலெங்கும் சேறும் சகதியுமாக படம் முழுக்க வந்து செல்லும் கிராமமக்கள். உழைக்கும் வர்க்கமும் அதனைச்சுரண்டிப்பிழைக்கும் முதலாளி வர்க்கமும் எப்படி வாழ்கிறது என்பதற்கான குறியீடு அவர்களின் தும்பைப்பூ வெள்ளை வேட்டியும் இவர்களின் கோலமும் .அவர்களை அந்த அளவிலேயே வைத்திருப்பது தான் தமக்கு நல்லது என்று கருதி செங்கற்களின் எண்ணிக்கையை எப்போதும் குறைத்து சொல்லுதல், ‘ஆண்டையை எங்களுக்கு பல வருசமா தெரியும்,நீ இப்ப வந்தவன்’ என்று விமலுக்கு எதிராகவும் கிராமமக்களை அவர்களைக்கொண்டே பேசவைக்கும் காலங்காலமாக ஊறிக்கிடக்கும் அடிமைத்தனம், குடுக்குற வேலையப்பாப்போம், நீதி,நியாயம்னு எதுத்துக்கேள்வி கேட்டா , மொத்தப்பணத்தையும் திரும்பக்கேப்பானே, என்று அவர்களைக்கேள்வி கேட்கவிடாமல் அதே இடத்தில் வைத்திருக்கும் அடக்குமுறை, என்று படம் முழுக்க முழுக்க பிரச்சார நெடியின்றி வந்து செல்லும் காட்சிகள் அருமை.

இத்தனை நாளும் விடலைப்பையனாகவே வந்து கொண்டிருந்த விமலுக்கு இந்த வாத்தியார் வேடம் குருவி தலையில் பனங்காய்தான்.இருப்பினும் நன்கு சமாளிக்கிறார்.பட்டம் பெற்றவர்கள் எங்கனம் வாழ்க்கைப்பாடம் தெரியாதவர்களாக இருக்கின்றனர் என்பதன் அடையாளம் விமல்.முட்ட வரும் ஆட்டை சமாளிக்கத்தெரியாமலிருப்பது,மீன்கள் வகைகள் அறியாமலிருப்பது, தண்ணீர் பாம்பைப்பார்த்து அலறி அடித்து ஓடுவது என்று தினசரி வாழ்க்கையில் சாதாரணமாக நாம் எல்லோரும் இருப்பது போல அவரும் இருப்பதைக் காட்டியிருப்பது இயற்கை.பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கத்துக்கொள்கிறார்.

எப்போதும் கிராமத்தை விட்டு ஓடிப்போகும் நினைப்புடன் இருக்கும் விமல் மேல் எதனால் காதல் வருகிறது என்று அழுத்தமாக சொல்ல எந்தக்காரணமுமில்லை இனியாவிற்கு. “உங்க வீட்டுல சீர் செனத்தி எதிர்பாக்காட்டாக்கூட நீங்க எதிர்பாப்பீஹ, கொஞ்சக்காசு சேர்த்து வெச்சிருக்கேன், பட்டணத்துல உங்க வீட்டுக்குப்பக்கத்துல ஒரு டீக்கடை வெச்சு மிச்ச சீரையும் அடைச்சிருவேன் , என்னக்கல்யாணம் பண்ணிக்குவீஹளா ?” என்று கேட்கும் வெள்ளந்தி இனியா (இவரும் மல்லு’வாமே ?!) “மூணு நாளாப்பாக்கல, ஊருல எந்தப்பூவும் பூக்கல “ பாடிக்கொண்டே வாத்தியாரை மடக்கிப்போட நினைக்கும் இனியா. முழுக்கச்சல்லடைக்கண்ணாக இருக்கும் ஆலிலையைக்கையில் வைத்துக்கொண்டு தமது முகம் மறைக்கும் இனியா. ‘சொச்சக்கதய எப்ப சொல்லுவீரு’ன்னு வாத்தியாரை ஆழம் பார்க்கும் இனியா. வயலின் இசைக்கு தகுந்தவாறு கொஞ்ச வருவது போல் தமது முக அசைவினால் கொள்ளைகொள்ளும் இனியா.விட்டால் இந்த விமர்சனம் முழுக்கவே அள்ளிக்கொண்டு போய்விடுமளவிற்கு இனியா.. J

“தனது கிடை அடைக்கும் பட்டியில் தங்குவதற்கு ஆள் வந்து விட்டானே என்று நினைத்து ஆட்டுக்கிடாவை மோதவிட்டு பழி தீர்த்துக்கொள்ளும் கிராமத்தான்” “யாருக்குமே புரியாது என்று நினைத்துக்கொண்டு தான் போடும் கணக்கை தீர்க்க எவனுமேயில்லை என்று இறுமாப்புடன் அலைந்து கொண்டிருக்கும் தம்பி ராமையா”,”எங்க நம்மளயும் படிக்கச்சொல்லி இம்சை பண்ணுவானோன்னு நினைத்துக்கொண்டு, மண்பானையை தலையில் கவிழ்த்துக்கொண்டு கிணற்றில் விழும் சிறுவன்”, “படிப்பு சொல்லிக்குடுக்குற வாத்தி இப்டி வீடு பெருக்கலாமான்னு கேட்டு, உங்க வீட்ட நல்லா சுத்தமா பெருக்கி கூட்டி வெச்சிருவேன், என்னப்படிக்கக்கிடிக்கன்னு கூப்டக்கூடாதுன்னு சொல்லும் சிறுமி”, என்று படம் முழுக்க இறைந்து கிடக்கும் இவர்களெல்லாம் கிராமத்து இயல்பின் பதிவுகள்.

“நீ விதைக்கல, அறுக்கிற”, “நீ விதைக்கல, அறுக்கிற” என்று வாத்தியாருக்கு புரியும் மொழியில் பேசும் குருவிக்காரர் இளங்கோ குமரவேல் , “நான் போறேன் நீ இரு”
என்று சொல்லிவிட்டு கதையில் விமலை இருக்க வைப்பதோடு , நம்மையும் விமலுடன் சேர்ந்து இருக்க வைக்கிறார் அந்தக்கிராமத்தில்.

புதிய மலராக மலர்ந்திருக்கும் இசையமைப்பாளர் ஜிப்ரான்.படத்தின் பின்னணி இசையில் கொஞ்சம் சிரமப்பட்டிருந்தாலும் பாடல்களில் ஜொலிக்கிறார் .மேலும் இவருக்கென ஒரு பாணி/ஸ்டைல் இருப்பதை அழுத்தமாகவே நிரூபித்திருக்கிறார். இவருக்கு இன்னொரு படம் வரட்டும் அப்புறம் சொல்றேன் என்று சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.

“போறானே போறானே”, விரகத்தை வேறு பாணியில் வித்தியாசமாகச் சொல்லியிருக்கும் பாட்டு. கஞ்சிரா’வையும், வயலினையும் வைத்துக்கொண்டு இனியாவிற்கென அவர் போட்டிருக்கும் “சாரக்காத்து” காதுகளுக்கு தேன் வார்க்கிறது.கொட்டாங்குச்சி வயலினை வைத்துக்கொண்டு இசைத்திருக்கும், ஒரு நிமிடத்திற்கும் குறைவாகவே வரும் ‘தஞ்சாவூரு மாடத்தி’யும் அருமை.

முதல் படமே Period Film என்றானதால் பின்னணி இசையில் சருக்கித்தானிருக்கிறார். அறுபதுகளில் இப்போதிருக்கும் எந்த எலக்ட்ரானிக் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸும் இல்லாத காலங்களில் உள்ள இசையை நமக்குக்காண்பிக்க அக்கார்டியனும்,ட்ரெம்ப்பட்டும்,வயலினும்,கொஞ்சம் Double Bass –மாக வைத்து சமாளித்திருக்கிறார்.இப்போதைய நவீனம் எந்த இடத்திலும் தெரிந்துவிடக்கூடாது என்று மெனக்கட்டிருக்கிறார் ஜிப்ரான். பின்னணியில் அப்போதைய சமகாலத்திய திரைப்பாடல்களை இலங்கை வானொலி மூலம் இசைத்திருப்பதின் மூலமும் நமக்கு ஒரு Feel கொண்டு வருகிறார்.பின்னணி இசையில் குறிப்பிட்டுச்சொல்ல வேணுமெனில் இனியா’விற்கான வருடிச்செல்லும் Flute bit –ஐ தீம் மியூஸிக்கை சொல்லலாம். பிற காட்சி/நடிகர்களுக்கென தனியாக தீம் என்று வைத்துக்கொள்ளாமல் படத்தோடு ஒன்றிச்செல்கிறது பின்னணி இசை. Lisbon International Symphony Orchestra  வை வைத்துக்கொண்டு Children Choir –ஆக அவர் இசைத்திருக்கும் “ஆனாஆவன்னா’ இந்திரா’வில் வந்த ரஹ்மானின் “அச்சம் அச்சம் இல்லை” பாடலை நினைவுபடுத்துவது தவிர்க்க இயலவில்லை. Same Genre என்பதால் இருக்கலாம். J Sorry Gibran.

கொத்தடிமைகளாகவே காலந்தள்ளும்,அப்படி இருக்கிறோம் என்று அறியாமலேயே உள்ள கிராம மக்கள்,அவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க அங்கு வந்து சேரும் வாத்தியார் ,அவ்வப்போது கடிதம் கொடுக்க வரும் PostWoman என்று அறுபதுகளில் நடக்கும் கதைக்குப்பொருத்தமாக முழுக்க Sepia Tone-லேயே படம் முழுக்க நகர்ந்து செல்வது அருமை.”இடைவேளை” என்பதைக்காண்பிக்கும் போது கூட “ளை”க்கு கொம்பு வைத்து காண்பிப்பது என்று மிகவும் மெனக்கெட்டிருக்கிறார் இயக்குனர்.எந்த இடத்திலும் ‘பாரதிராஜா’ தெரியாமல் பார்த்துக்கொள்வதிலும் வெற்றி பெற்றிருக்கிறார்.

‘உழைப்பவனுக்கு சிலை எடுத்தால் அதிலும் கூட அவன் உழைத்துக்கொண்டு தான் இருப்பான்’னு ஒரு கவிஞர் சொன்னது எவ்வளவு நிஜம்.உழைப்பதற்கென ஒரு ஜாதியும் அதை எப்போதும் சுரண்டித்தின்னும் ஒரு ஜாதியும் காலங்காலமாக தொடர்ந்து வருவது சோகம். தன்னாலியன்றவரை இந்த மையக்கருத்தை, பார்ப்பவர் மனதில் கொண்டுபோய்ச்சேர்த்து விட வேண்டும் என்ற துடிப்பில் ,படத்தை ஒரு  Period Film-ஆக கொடுத்திருக்கும் இயக்குனர் சற்குணம் உயர்ந்து நிற்கிறார் நம் மனதில்.

–    சின்னப்பயல் (chinnappayal@gmail.com)

Series Navigationஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 11பேக்குப் பையன்
author

சின்னப்பயல்

Similar Posts

Comments

  1. Avatar
    gramian says:

    padathin amaippu muzhuvathum MUNDANAI MUDICHU vaaddai veesuvathu mookkuku theriya vittalum kannukkth theriya vendama? pasangalum ponnum kathanayaganai kindaladippadu ?? 2 padathaiyum parunga!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *