முத்து டிராகன் – சீன நாடோடிக் கதை

This entry is part 13 of 37 in the series 23 அக்டோபர் 2011

சியாவ் செங் என்ற சிறுவன், சீனாவின் ஒரு நகரில் தன் தாயுடன் வாழ்ந்து வந்தான். தாய்க்கு உதவியாக, தினமும் வீட்டிற்கு அக்கம்பக்கம் இருக்கும் காட்டுப் புற்களை வெட்டித் தருவான். அதைத் தாய், சந்தையில் விற்று, கிடைக்கும் பணத்தில் உண்ணத் தேவையான அரிசி, டம்பிளிங் என்னும் கொழுக்கட்டை செய்யும் மாவையும், குடிக்கத் தேவையான தேநீர் இலைகளையும் வாங்கி வருவார்.

ஒரு கோடை காலத்தில், எங்கும் வறட்சி ஏற்பட்டது. எல்லா பக்கங்களிலும் புற்கள் வாடிச் சாய்ந்திருந்தன.

ஒரு நாள், தாய், “சியாவ்.. என்ன செய்வது என்றே தெரியவில்லை.. ஜாடியில் அரிசி கொஞ்சமே இருக்கிறது” என்று கூறி வருந்தினார்.

“அம்மா.. கவலைப்படாதீர்கள். நான் புல்லை எங்கிருந்தாவது கொண்டு வருகிறேன்” என்று திடமாகச் சொல்லி தன் காலணிகளைப் போட்டுக் கொண்டு, காட்டிற்குள் சென்றான். நாள் முழுதும் காடு மேடெல்லாம் அலைந்து திரிந்தான். கோடை காலமானதால், வெயில் எல்லாப் பயிர்களையும் நாசம் செய்திருந்தது. ஒரு சிறிய செடி கூட தென்படவில்லை.

வீடு திரும்பிய மகனிடம், “புல் கிடைத்ததா?” என்று ஆர்வத்துடன் தாய் கேட்டார்.

“இல்லை..” என்றான் சியாவ் வருத்தத்துடன்.

“எனக்குக் கொஞ்சம் கிடைத்தது..” என்று பறித்திருந்த புல் இருக்கும் கூடையைக் காட்டிச் சொன்னதும், சியாவ்விற்கு ஆச்சரியம்.

“நான் எல்லா இடங்களிலும் தேடினேன். கிடைக்கவில்லை. உங்களுக்கு மட்டும் எங்கே கிடைத்தது?” என்று ஆர்வத்துடன் கேட்டான்.

“நம் வீட்டிற்கு பின்னால் இருக்கும் குதிர் பக்கத்தில்” என்றார்.

தான் புற்கள் பறித்த இடத்திற்கு சியாவ்வை அழைத்துச் சென்றார் தாய்.

“அங்கே பார்.. நான் நிறைய புல்லைப் பறித்த போதும், பறித்த அடையாளமே தெரியாத அளவிற்கு மறுபடியும் வளர்ந்திருக்கிறதே!” என்று அதிசயித்தார்.
சியாவ் அந்த கெட்டியான காய்ந்த இடத்தில் மண்டியிட்டு கவனித்தான். புல்லை விரல்களால் தொட்டுப் பார்த்தான். அதன் வேர் அருகே சற்றே குத்திப் பார்த்தான். அதன் வேரில் ஏதோ தட்டுப்பட்டது.

உடனே அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தான்.

அந்த இடத்தில் ஒரு முத்து ஒளிர்ந்தது.

அதைக் கண்ட தாய், “அது டிராகன் முத்து ஆயிற்றே!” என்று ஆச்சரியத்தில் திணறினார்.

“டிராகன் முத்து..” என்று முணுமுணுத்த சியாவ், “இது தான் புல் பசேலென்று விளையக் காரணம்” என்றான் புரிந்தவனாக.

“நாம் இதை நம்முடைய அரிசி ஜாடியில் ஒளித்து வைக்கலாம் வா..” என்றார் தாய்.

உடனே வேகமாக இருவரும் வீட்டிற்குள் சென்று, அந்த முத்தை அரிசி ஜாடியில் இட்டனர்.

தாய் பறித்து வைத்திருந்த புற்களை மரத் தொட்டியில் போட்டு அலசி, அடுத்த நாள் சந்தைக்கு எடுத்துச் சென்று விற்க ஆயத்தம் செய்தான்.
தாய் இரவு உணவைச் சமைத்துக் கொடுத்தார்.

அடுத்த நாள் தாய், சியாவ்வை அவசரமாக எழுப்பினார்.

“மகனே.. பார் இங்கே..” என்றார் மிகுந்த ஆச்சரியத்துடன். “ஜாடி நிறைய அரிசி உள்ளது..:” என்றார் மேலும்.

“என்ன அம்மா.. என்ன சொல்கிறீர்கள்?” என்று ஜாடியை தூக்கக் கலக்கத்தில் வெறித்துப் பார்த்தான் சியாவ்.

ஆம். தாய் சொன்னது சரி தான். அந்த ஜாடி விளிம்பு வரைக்கும் அரிசி இருந்தது.

“மறுபடியும் முத்து டிராகன்..” என்று உணர்ந்தான் சியாவ்.

மகிழ்ச்சியில் திளைத்த தாய், சிறிது அரிசியைத் தன் மேல் அங்கியில் போட்டார். தன்னுடைய அண்டை வீட்டிற்குச் சென்று, “எங்களுக்குக் கிடைத்ததை நீங்களும் பகிர்ந்து கொள்ளுங்கள்..” என்று சொல்லி அரிசியைக் கொடுத்தார்.

அவர்கள் மகிழ்ச்சியுடன் அதைப் பெற்றுக் கொண்டனர்.

தங்களுக்குக் கிடைத்ததை மற்ற நண்பர்களுக்கும் சொன்னார்கள். அவர்கள் இதைக் கேட்டு, வயிரார சாப்பிடும் ஆர்வத்துடன் சியாவ் வீட்டின் முன்னால் கூடினர். தாய் எல்லோருக்கும் தாராளமாக அரிசியைக் கொடுத்தார்.

டிராகன் முத்தைப் பற்றிய சேதி பக்கத்துக் கிராமத்தார்க்கும் போய்ச் சேர்ந்தது. இன்னும் தூர தேசங்களுக்கும் சேதி சென்றது.

தாய் எப்போதும் போல, வந்து கேட்டவர்களுக்கு, மனமார அள்ளி அள்ளிக் கொடுத்து உதவினார்.

ஆனால் நடந்தது என்ன?

அவரது இரக்கக் குணம் பலரையும் பொறாமைப்பட வைத்தது.

சிலர் தங்களிடம் அந்த முத்து இருந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணினர்.

அதில் இருவர், முத்தினை திருடவும் தயாரானார்கள்.

“நாம் சியாவ் வீட்டிற்கு சென்று முத்தை களவாடலாமா?” என்றான் ஒருவன்.

“ஆமாம்.. முத்து நம்மிடம் இருந்தால், கிடைக்கும் அரிசியை விற்று நிறைய சம்பாதிக்கலாம்” என்றான் நண்பன்.

திருடத் திட்டமிட்ட இருவரும், அன்றிரவே சியாவ் வீட்டிற்குச் சென்றனர். அரிசி ஜாடியை இருட்டில் தேடினர்.

சத்தம் கேட்டு எழுந்த தாய், “யாரது?” என்று குரல் கொடுத்துக் கொண்டே, சமையலறைப் பக்கம் சென்றார். அவர் வருவதை அறிந்து கொண்டு, அவரை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, “முத்தைப் கொடு..” என்று மிரட்டினான் ஒருவன்.

“முடியவே முடியாது..” என்று கத்தினார் தாய்.

சத்தம் கேட்டெழுந்த சியாவ், கண்களைக் கசக்கிக் கொண்டே அங்கு வந்தான்.

தாய் சமயோசிதமாக, “சியாவ்.. வேகமாக நீர் வாளியில் இருக்கும் முத்தை எடு..” என்று அவசரப்படுத்தினார்.

திருடர்கள் உடனே நீர் வாளியை நோக்கிப் பாய்ந்தனர்.

சியாவ் தாயின் புத்திசாலிதனத்தைப் புரிந்து கொண்டு, உடனே அரிசி ஜாடிப் பக்கம் சென்று முத்தைத் துளாவி எடுத்தான்.

திருடர்கள், “ஏய்.. அதைக் கொடு” என்றனர் சியாவின் கையிலிருந்த முத்தைக் கண்டதும்.

“முடியாது..” என்று சொன்ன சியாவ், அவர்களிடமிருந்து முத்தைப் பாதுகாக்க, அதைத் தன் வாயில் போட்டு விழுங்கினான்.

“அடடா.. சியாவ்.. அவசரப்பட்டு விட்டாயே!” என்று அலறினார் தாய்.

சியாவ் வயிற்றில் வலியை உணர்ந்தான். மண்டியிட்டுத் துடித்தான்.

அவனது நிலையைக் கண்டு பயந்து திருடர்கள் பயந்தோடினர்.

“சியாவ்.. சியாவ்..” என்று அழைத்து அழுதார் தாய். “டிராகன் முத்து விஷமாச்சே!” என்று கூறி வருந்தினார்.

கண்களில் நீருடன் தாயைப் பார்த்தான் சியாவ். அவனது வயிற்றிலிருந்து கிளம்பிய வலியெனும் நெருப்பு, அவனது கைகளையும் கால்களையும் அடைந்தது. பிறகு அது பரவி, அவன் தலையை அடைந்து வாயை வரளச் செய்தது. அவன் தன் கைகளைப் பார்த்தான். அவனது உடல் பச்சையாகவும் செதில் செதிலாகவும் மாறத் தொடங்கியது.

“அம்மா.. நான் டிராகனாக மாறுகிறேன் போலிருக்கிறது” என்றான் மெல்லிய குரலில்.

தாய் அழுது கொண்டே அவனை வீட்டிற்கு வெளியே அழைத்துச் சென்றார். அவன் தரையில் விழுந்து கண்களை மூடிக் கொண்டான்.

அவனால் வலி பொறுக்க முடியவில்லை. ஏதேதோ சத்தம் கேட்டது. இடி இடித்தது.

சிறிது நேரத்தில் கண்களைத் திறந்தான். வலி போயிவிட்டிருந்தது. தன்னைச் சுற்றிலும் வண்ணமயமாக இருப்பதைக் கண்டான். வானம் தெளிவாக இருந்தது. கீழே பார்த்தான். அவன் அப்போது பூமியில் இருக்கவில்லை. அவன் மேலே மேலே ஆகாயத்தில் தன்னுடைய பெரிய இறக்கைகளை அடித்துக் கொண்டு, நெருப்பைக் கக்கிக் கொண்டு டிராகனாக இருந்தான்.

“சியாவ்..” என்று தாய் கூப்பிட்டார். அவ்வளவு உயரத்தில் இருந்த போதும், அது அவன் காதுகளில் விழுந்தது. கீழே, விலை மதிக்க முடியாத முத்தைப் போன்று ஒரு சிறு புள்ளியாகத் தோன்றினார். சியாவ், அவரருகே பறந்து சென்றான். ஆனால் அவர் அலறினார். பயந்து ஓடிக் கொண்டிருந்த கூட்டத்தாருடன் தானும் ஓடினார்.

“அம்மா.. நான் தான்.. நான் தான்..” என்று சொல்ல எத்தனித்தான். ஆனால் அவன் வாயிலிருந்து வார்த்தைகளுக்கு பதிலாக நெருப்பே வந்தது.

தன்னுடைய நிலையை எண்ணி, கலக்கத்துடன், வானில் உயர உயரப் பறந்தான். அங்கே அவனைக் கண்ட மற்ற டிராகன்கள் அவனை வரவேற்றன.

“வா.. நீர் டிராகனே.. சந்தோஷமாக ஆடு.. பாடு..” என்றன

தாயைப் பிரிந்த சோகத்தில், கண்ணீருடன், தன்னுடைய இறக்கையால் வானத்தைக் கடைந்து, மேகங்களைச் செய்து நடனம் ஆடினான்.
மழை பெய்யத் தொடங்கியது.

கீழே புல் பச்சையாக மாறும் என்று எண்ணினான்.

இனிமேல் தன்னால் புல் பறிக்க முடியாது. தாயுடன் இருக்க முடியாது. தாயைக் காப்பாற்ற முடியாது. பேச முடியாது.

மழையில் நின்ற கூட்டத்தினர் மகிழ்ச்சியுடன் ஆடினர்.

சியாவ்வின் தாயிடம், “உங்கள் மகன் நம்மைக் காப்பாற்றி விட்டான். மழையைக் கொடுத்திருக்கிறான். மிக்க நன்றி” என்றனர் ஊரார்.

சியாவ் மக்கள் மகிழ்வதைக் கண்ட போதும், சோர்வுடன் பொங்கி வரும் நதியிலே மூழ்கினான்.

“எங்களுடன் வா.. புதிய உலகம் உனக்காக காத்திருக்கிறது” என்றன மற்ற டிராகன்கள்.

நண்பர்களைத் தொடர்ந்து சென்ற போதும், அவ்வப்போது தாயைக் காணச் செல்வான். தாயைக் கண்டதும் தன் பெரிய இறக்கைகளை அடிப்பான். அது நதிக்கரையில் சிக்கிக் கொள்ளும். இப்படியே இருபத்தி எட்டு முறை முயன்றான். இறுதியில் மனம் வெறுத்து, தாய்க்கு விடை கொடுத்துவிட்டு மறைந்தான். டிராகன் உலகில் வாழச் சென்றான்.

அவன் மறைந்த போதும், நதியிலே அவன் விட்டுச் சென்ற இருபத்தி எட்டு வளைவுகள் அவனை இன்றளவும் நினைவுறுத்திக் கொண்டிருக்கிறது.

Series Navigationசொல்லி விடாதீர்கள்சுடர் மறந்த அகல்
author

சித்ரா

Similar Posts

Comments

  1. Avatar
    chithra says:

    வணக்கத்திற்குரிய திண்ணை ஆசிரியருக்கு,
    இந்த கதையை நான் சமர்ப்பிக்கவில்லை . தவறுதலாக ,என் படைப்பு தொகுப்புகளின்(http://puthu.thinnai.com/?author=26) கீழ் இடம் பெற்றிருக்கிறது . உரியவர்களின் தொகுப்புகளில் சேருவதற்காக ,உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தேன் ,நன்றி,சித்ரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *