இந்த வாரம் அப்படி – ராஜீவ் விளம்பரங்கள், கனிமொழி கைது,

This entry is part 37 of 42 in the series 22 மே 2011

ராஜீவ் விளம்பரங்கள்
நேற்றைக்கு ராஜீவ் கொலையுண்ட நாளை நினைவு படுத்தும் வகையில் இந்திய மத்திய அரசின் அனைத்து துறைகளும் விளம்பரங்கள் வெளியிட்டிருக்கின்றன. சுற்றுலாத்துறையிலிருந்து மாசு கட்டுப்பாடு துறை வரைக்கும். அது மட்டுமல்ல, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் இதே போல அனைத்து துறைகளும் ராஜீவ் காந்தி நினைவு நாளை நினைவு படுத்தி விளம்பரங்கள் வெளியிட்டிருக்கின்றன.
இது இந்தியாவின் அனைத்து பத்திரிக்கை, தொலைக்காட்சிகளிலும் செய்யப்பட்டிருக்கிறது.
மத்திய அரசு இதற்காக செலவழித்த தொகை மட்டுமே சுமார் 65 கோடி ரூபாய் என்று ராமச்சந்திர குஹா எழுதியிருக்கிறார். இதர மாநிலங்களிலும் சேர்த்து செலவழித்த தொகை இன்னும் அதிகமாக இருக்கும்.
இது இந்த வருடம் மட்டுமே நடக்கும் வீண் செலவு அல்ல. காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற கடந்த ஆறு வருடங்களிலும் இந்த வீண் செலவு செய்யப்பட்டிருக்கிறது. இது மக்கள் வரிப்பணத்திலிருந்து காங்கிரஸ் கட்சிக்கு விளம்பரம்  செய்யப்படுகிறது என்றுதான் சொல்லமுடியும்.
வெறும் மத்திய அரசு செலவை மட்டுமே வைத்து பார்த்தாலும் சுமார் 400 கோடி ரூபாய் இந்த வீண் செலவுக்காக செய்யப்பட்டிருக்கிறது. கனிமொழி கைது செய்யப்பட்டு உள்ளே உட்கார்ந்திருப்பது 200 கோடிக்காக.
இந்த 400 கோடி செலவுக்கு பாராளுமன்றத்தில் தாக்கீது செய்து அனுமதி பெற்றார்களா? மக்கள் வரிப்பணத்திலிருந்து செய்யப்படும் இந்த செலவுக்கு மக்கள் அனுமதியோ மக்கள் பிரதிநிதிகள் அனுமதியோ இல்லாமல் இப்படி செலவு செய்யப்படுவதை கண்டித்து ஒரு வழக்கு போடலாம். எந்த பிரயோசனமும் இல்லை என்றாலும் வழக்கு போட வேண்டும் என்று கருதுகிறேன்.
–கனிமொழி கைது- சட்டம் தன் வேலையை செய்திருக்கிறதா?

இல்லை என்றுதான் தோன்றுகிறது. கனிமொழி தான் 20 சதவீத பங்குதாரராக இருக்கும் தொலைக்காட்சியான கலைஞர் டிவி நிறுவனத்தில் டைரக்டராக இருக்கிறார். கூடவே சரத்குமார் என்ற டைரக்டர் 20 சதவீத பங்குகளை வைத்திருக்கிறார். 60 சதவீத பங்குகள் தயாளு அம்மாள் என்ற கருணாநிதியின் மனைவி வைத்திருக்கிறார்.
கனிமொழி கருணாநிதியின் மகள் என்பதாலேயே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் மூலம் பெற்ற லஞ்ச பணத்தை கலைஞர் டிவி நிறுவனத்தில் பங்கீடு செய்யமுடிந்தது. இங்கே முதல் குற்றவாளி கருணாநிதி தானே தவிர கனிமொழி அல்ல.
தயாளு அம்மாள் வைத்திருக்கும் 60 சதவீதமும் கருணாநிதியின் பினாமியாக அல்லாமல் தானாக அல்ல. கருணாநிதி யாரோ சைக்கிள் ரிக்‌ஷாகாரனாக இருந்தால், அவரது மனைவிக்கு அவ்வளவு பணம் யாராவது தருவார்களா?
இங்கே முதல் குற்றவாளியாக சேர்த்திருக்கப்பட வேண்டியது கலைஞர் கருணாநிதி. அவரது மகள் அல்ல. ஆகவே,  இங்கே நடப்பது ஒரு நாடகம் என்றுதான் கருதவேண்டியுள்ளது. ஒரு லட்சத்தில் எழுபதாயிரம் கோடி இந்திய அரசுக்கும் இந்திய மக்களுக்கு நஷ்டம் உருவாக்கியவர்கள் வெறும் 200 கோடிதான் லஞ்சப்பணம் என்று சொல்வதும் ஒரு சித்துவிளையாட்டுதான். பதுங்கியிருக்கும் பணம் எங்கே பதுங்கியிருக்கிறது என்பதை நாம் அறியோம்.
போபர்ஸ் வழக்கில் குட்டரோச்சி மீது ஒரு குறையும் இல்லை என்று வழக்குகளை கிழித்து எறிந்த அன்றைய சட்ட அமைச்சர் பரத்வாஜ் இன்று கர்னாடக கவர்னராக இருக்கிறார். போபர்ஸ் வழக்கில் குட்டரோச்சிமீது வழக்குகளை நீக்கி அவர் வெளிநாடு செல்ல அனுமதித்தது இதே சிபிஐ. ஆகவே நாம் காண்பது எந்த விதத்திலும் நீதிக்காகவோ சட்டத்துக்காகவோ நடப்பது அல்ல. மேலும் இது சுப்ரீம் கோர்ட் நேரடி பார்வைக்கு வந்தபின்னால்தான் இந்த வழக்குகளும் போடப்பட்டிருக்கின்றன. இந்த வழக்குகளில் 200 கோடிதான் பெரிய தொகை என்பது மாபெரும் நாடகம், பல்லாயிரம் கோடி பணத்தை புதைக்க சிபிஐயும், காங்கிரசும், திமுகவும் இணைந்து நடத்தும் ஒரு நாடகம் என்றே எனக்கு தோன்றுகிறது.
அடுத்த தேர்தலிலும் காங்கிரஸே வெற்றிபெறும் என்பதற்கான அறிகுறிகள் நாடெங்கும் தென்படுகின்றன.  சிபிஎம் ஒரு மூன்றாவது அணி கட்டமுடியாது என்ற அளவுக்கு வங்காளத்திலும் கேரளாவிலும் தோற்று இடத்தை காங்கிரசுக்கும் தோழமை கட்சிகளுக்கும் அளித்திருக்கின்ற நிலை. தமிழகத்திலிருந்து காஷ்மீர் வரைக்கும் பாஜக வலுவிழந்து போய்க்கொண்டிருக்கிறது. ஆந்திரா, கேரளா, தமிழகம், உத்தரபிரதேசம், அஸ்ஸாம் வங்காளம், ஒரிஸ்ஸா மகாராஷ்டிரம் என்று முக்கியமான இடங்களில் முக்கிய எதிர்கட்சியாக இருக்கும் பாஜக ஒரு அரசியல் சக்தியாக கூட இல்லை. ஆகையால் காங்கிரசும் அதன் தோழமை கட்சிகளுமே ஆட்சிக்கு வரும் என்று தோன்றுகிறது.
அப்படி மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது , சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஓய்வு பெறும்போது காட்சிகள் மாறும். போபர்ஸ் வழக்கில் சோனியாவும், அவரது தோழர்களும் அபாண்டமாக எப்படி தப்பித்தார்களோ அதே காட்சிகள் ராஜா, கனிமொழி போன்றோர்களுக்கும் நடக்கும். உப்புக்கு சப்பாணியாக கலைஞர் டிவி சரத்குமார் ஒருவேளை சிறைபடுத்தப்படலாம்.

 

Series Navigationஇலக்கியத்திற்கு ஒரு ’முன்றில்’தானாய் நிரம்பும் கிணற்றடி! கவிஞர் அய்யப்ப மாதவனின் சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டுவிழா!
author

சின்னக்கருப்பன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *