தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

20 ஜனவரி 2019

ஆதாம் சிதைத்த ஏவாளின் மிச்சங்கள்

சு.மு.அகமது


 

வழிப்போக்கன் விட்டுச் சென்ற மூட்டையில்

கந்தலாய் அவனது வழித்தடங்கள்

ஆதாம் சிதைத்த ஏவாளின் மிச்சமாய்

பாவக்கனியின் அழுகல் பிசிறுகள்

தொற்றாய் கிருமிகளென

 

வார்தெடுத்த சர்பமொன்று

சாத்தானின் நிழலென ஊடுருவி

மாயமான மானை விழுங்கி ஏப்பமிடும்

எரிமலையின் பொருமலாய்

 

அந்தி சாய்கிற நேரத்தில்

எரியும் சிவந்த தழலோடு

வாய் பிளந்து அபகரிக்கும்

பொசுங்கும் நினைவு -சாம்பலை

 

பொழுது புலராத முன்பனிக்காலத்து

மழுங்கின படலங்களினூடே

பாய்ந்து பாயும் விண்மினிச்சிதறல்கள்

விழியற்றோனின் உதவிக்கம்பாய் நீண்டும் மடங்கியும்

 

விட்டுச் சென்றவன் திரும்புகையில்

எடுத்துச் செல்வான் கந்தலையும்

நான் சேர்த்த அழுகல் பிசிறுகளையும்

கிருமிகளை மட்டும் சுதந்திரமாய் விட்டுவிட்டு…

 

-சு.மு.அகமது

Series Navigationதொலைவில் மழைகிருமி நுழைந்து விட்டது

One Comment for “ஆதாம் சிதைத்த ஏவாளின் மிச்சங்கள்”

  • ஒ.நூருல் அமீன் says:

    //பொழுது புலராத முன்பனிக்காலத்து

    மழுங்கின படலங்களினூடே

    பாய்ந்து பாயும் விண்மினிச்சிதறல்கள்

    விழியற்றோனின் உதவிக்கம்பாய் நீண்டும் மடங்கியும்// அழகிய வரிகள்


Leave a Comment

Archives