தமிழ் பெண் கவிஞர்கள் – ஆங்கிலத்தில் – ஆதி மந்தியார் முதல் உமா மஹேஸ்வரி வரை

This entry is part 3 of 38 in the series 20 நவம்பர் 2011

சில ஆச்சரியகரமான நிகழ்வுகள் இன்றைய தமிழ்ச் சூழலில் கூட நிகழ்ந்துவிடுகின்றனதான். இவையெல்லாம் நாமறிந்த தர்க்கத்தின் வட்டத்திற்குள் அகப்பட்டு விடுவதில்லை

சங்க காலத்திலிருந்து இன்றைய உமா மகேஸ்வரி வரை,, ஒரு வேளை இவர்களில் மிக இளம் வயதினராக லீனா மணிமேகலையோ அல்லது அ.வெண்ணிலாவோ இருக்கக் கூடும். ஆக கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருட நீட்சியில் தமிழ் கவிதைக்கு பெண் கவிஞர்களின் பங்களிப்பை நம் முன் வைத்துள்ளார் கே.எஸ் சுப்ரமணியன். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். பத்து வருடங்களுக்கு முன்
நான் சென்னை வந்ததும் எனக்கு அறிமுகமானவர். அதற்கு முன் இருபது வருடகாலமாக மணிலாவில் ஆசிய வளர்ச்சி வங்கியின் இயக்குனராக பணியாற்றியவர். அவர் இங்கு வந்ததும் ஐம்பது வருடங்களுக்கு மேலாக தில்லியில் இருந்த, இங்குள்ளவர்களே மறந்திருந்த, யாரென்று தெரிந்து கொள்ள விரும்பாத என்னை வழிமறித்து சினேகம் கொள்வார் என்ற எதிர்பாராத ஆச்சரியம்.

ஜெயகாந்தன் எழுத்துக்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். நிறைய ஜெய காந்தனின் எழுத்துக்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் நிறைய தற்கால எழுத்துக்களைப் படித்து வருகிறார் என்றும் தெரிந்தது. அதெல்லாம் சரி. ஆனால், இவ்வளவு நீண்ட காலம் தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் வெளியே இருந்தவருக்கு வேறு துறையில் நிபுணத்துவம் பெற்றவருக்கு தமிழிலும் இலக்கியத்திலும் இவ்வளவு ஈடுபாடு இருப்பது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. படிப்போடு நில்லாது தான் ரசித்தவற்றைப் பற்றியும் நிறைய எழுதிவருகிறார்.

இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த அவரது இரண்டு ஆங்கில மொழிபெயர்ப்புகள். இரண்டுமே இன்றைய தமிழ்க் கவிதைகளில் அவர் தேர்ந்து மொழிபெயர்த்தவை. பாரதி முதல் வைரமுத்து, சிற்பி ஆகியோர் வரை. கவிதைகளிலும் மொழிபெயர்ப்பிலும் ஆழ்ந்த ஈடுபாடும் ரசனையும் இல்லாது இது சாத்தியமில்லை. அவரது மொழிபெயர்ப்பும் இரண்டு மொழிகளிலும் அவருக்கு இருந்த சொல்லாட்சித் திறனைச் சொல்வதாக இருந்தது. அது தற்கால தமிழ்க் கவிதை பற்றியது.

இப்போது எனக்குக் கிடைத்திருப்பது (Tamil Women Poets – Sangam to the Present) சங்க காலத்திலிருந்து இன்று வரை பெண் கவிஞர்களின் பங்களிப்பை ஒரு வேக பருந்துப் பார்வை தரும் வகையில் அவராகத் தேர்ந்தெடுத்த கவிதைகளை மொழிபெயர்த்துத் தந்துள்ளார் கே. எஸ் சுப்பிரமணியம். எனக்கு மிக மன மகிழ்வைத் தந்த சமீபத்திய புத்தகங்களில் இதுவும் ஒன்று. இம்மாதிரியான ஒரு கவிதைத் தொகுப்பை தேர்வு செய்து மொழிபெயர்க்க வேண்டும் என்று தோன்றியதே, சந்தையை மனதில் கொண்டு செயல்படாத மனிதர்களும் இன்றைய தமிழ்ச் சூழலில் இருக்கிறார்கள் என்பதே ஆச்சரியம் தான். தற்காலத் தமிழ்க் கவிதைகளை மொழிபெயர்க்க முன்னர் முனைந்த போது இத்தகைய ஒரு தொகுப்பு பற்றிய எண்ணம் மனத்தில் உதித்ததாகச் சொல்கிறார் கே.எஸ். சுப்பிரமணியம்.

சுமார் இரண்டாயிரம் ஆண்டு நீட்சி கொண்ட தமிழ்க் கவிதையினூடே ஒரு பிரயாணம் சங்க கால கவிதைகளிலிருந்து தொடங்கி, நீதி போதனைப் பாடல்கள்,, பக்தி காலம், தனிப்பாடல்கள் (இதில் கால வரையறை இல்லை) நாட்டுப் பாடல்கள் எல்லாம் கடந்து வந்து நவீன தமிழ்க் கவிதை வரை. பார்வை நீள்கிறது. தமிழ் வரலாற்றில் ஔவையார்கள் வெவ்வேறு கால கட்டங்களில் பலர் இருந்தனர்.ஒற்றை வரியில் நீதி போதனைகள் தந்த ஔவையாரையும்கூட விடுவதற்கு சுப்ரமண்யத்திற்கு மனம் வரவில்லை. இருப்பினும் இத் தொகுப்பு தமிழ் அறியாதோர்க்கு தமிழ்க் கவிதை வளத்தைக் காட்டும் எண்ணத்தை மனதில் வைத்துச் செய்யப்பட்டது என்பதை நினைவு கொள்ளவேண்டும்.

குறுந்தொகைப் பாட்டு ஒன்றில் காணப்படும் ஔவையார் ஒரு இளம் பெண்ணாகத் தான் நம் முன் காட்சி தருகிறார்.

முட்டுவேன்கொல் தாக்குவேன்கொல்
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல்லெனக் கூவு வேன்கொல்
அலமரல் அசைவளி அலைப்பவென்
உயவுநோ வறியாது துஞ்சும் ஊர்க்கே.

இதை சுப்பிரமண்யன் எவ்வளவு எளிதாக, அழகாக ஆங்கிலத்தில் தந்திருக்கிறார்!

Do I butt them? Do I toss them?\
Spurred by some impulse
Do I shout hoarse
I am at a loss
The prancing breeze
Torments me to no end
Townsfolk in slumber buried
Blissfully oblivious
Of my agony of suppressed libido
What to do I know not.

Prancing breeze என்ற சொற்றொடர் மிக அழகாக வந்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அதே சமயம் libido என்ற சொல்லைத் தவிர்த்து desire அல்லது longing என்று சொல்லியிருக்கலாமோ, What to do I know not க்குப் பதில் what do I do I know not என்று சொல்லியிருக்கலாமே என்றும் தோன்றுகிறது. ஆனால் இதெல்லாம் கட்டிய வீட்டுக்குப் பழுது சொல்லும் காரியம்தானே. முதலில் சுப்ரமண்யம் செய்துள்ள அளவுக்கு நான் என்ன, எனக்குத் தெரிந்தவர்கள் மற்றவர்கள் யாரும் செய்திருக்கிறார்களா என்[பது சந்தேகம் தான். இதிலும் நான் மிகவும் மதிக்கும் டாக்டர் பி.ஆர். சுப்ரமண்யம் வேறு இம்மொழி பெயர்ப்புகளைப் பார்வையிட்டிருக்கிறார்.

நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐங்குறுநூறு,, அகநானூறு, பொருநராற்றுப் படை என தன் தேர்வுக்கு அவர் பார்வை மிகப் பரவலாகத் தான் சுப்பிரமணியம் வீசிய வலை இருந்திருக்கிறது. ஆனால் ஒரு சந்தேகம் இப்பாடல்கள் எழுந்த வாழ்க்கைச் சூழல், அக்காலத் தமிழர்களின் வாழ்க்கை சார்ந்திருந்த அறமும் மதிப்புகளும், இது பற்றிய தகவல் இல்லாது இக் கவிதைகள் இந்தியாவுக்கு வெளியே உள்ள அன்னியரால் புரிந்து கொள்ளப் படுமா என்பது தெரியவில்லை எனவே இதுபற்றிய வரலாற்றறிவோடு இக்கவிதைகளை அணுகுபவர்களுக்கு கூடிய ரசனை தரும் என்று நினைக்கிறேன். இது எவ்விதத்திலும் சுப்ரமண்யத்தின் மொழிபெயர்ப்புகள் தரும் அனுபவத்தை குறைத்து மதிப்பிட்டு விடமுடியாது.

அகநானூறிலிருந்து ஒரு சில வரிகள் மாத்திரம். எவ்வளவு கஷ்டமான பகுதியையும் எவ்வளவு தெளிவாக இன்றைய வாசகனுக்கு எளிதில் .கிடைக்கச் செய்துவிடுகிறார்! சங்க காலத் தமிழ்ப் பாட்டை இன்றைய ஆங்கிலத்தில் கொண்டு வருவதில் எவ்வளவு சிரமங்கள் இருந்திருக்கும் என்பதை எளிதில் கிடைத்த ஒன்றிலிருந்து நாம் புரிந்து கொள்ள முடியாது.

அகநானூறு 154 –

குறும்புதற் பிடவின் நெருங்கால் அலர்
செந்நில மருங்கின் நுண் அயிர் வரிப்ப
வெஞ்சின அரவின் பை அணந்தன்ன
தண்கமழ் கோடல் தாது பிணி அவிழத்

இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு

Long stemmed flowers of pidavan bushes
Carpet the red soil
Lending it allure
Like the raised hoods of angry snakes
Cool kanthal buds unfold
Spreading aroma around;

பக்திப் பாடல்களிலிருந்து இங்கு இடம் பெற்றிருக்கும் காரைக்கால் அம்மையாரும் ஆண்டாளும் இருவரே ஆனாலும் இருவரும் இரு சிகரங்கள்.

கீசுகீ சென்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே

இது எவ்வளவு அழகாக சரளமான அதே இனிய நடையில் ஆங்கிலத்தில்..

Black sparrows in droves
Fill the air with ‘keech keech’ chirps
Don’t you hear it, stupid girl?

தனிப்பாடல்கள் என்ற வகையில் நாம் சாதாரணமாகக் கேள்விப் படாத பெயர்களும் பாட்டுக்களும் காணப்படுகின்றன. இவற்றின் கால கட்டத்தை அறிவது கஷ்டம் தான். அவசியமும் இல்லை. ஆனால் இவையெல்லாம் 17, 18-ம் நூற்றாண்டுகளில் சிற்றரசர்கள் ஆண்டுவந்த காலகட்டத்தியவையாக இருக்கும். முனையதரையன் என்ற அரசனுக்கு திருக்கண்ணபுரம் தாசி சொல்கிறாள்:

இன்றுவரி லென்னுயிரை நீ பெறுவை இற்றைக்கு
நின்று வரிலதுவும் நீயறிவை – வென்றி
முனையா கலவி முயங்கியவா றெல்லாம்
நினையாயோ நெஞ்சத்து நீ.

Come this day
You’ll find me alive
Delay by a day or two
Sure you’ll see the result
O Victorious Munayaa
Won’t your heart recall
Many a passionate union?

நாட்டுப்பாடல் வகையில் தாலாட்டுப் பாடல்கள் அவ்வளவாக ஆங்கிலத்தில் சுகமான வாசிப்புத் தருவதில்லை. அவர்கள் தொட்டிலிலோ ஊஞ்சலிலோ குழந்தையை இட்டுத் தூங்கச் செய்யும் வழக்கம் என்றுமே இருந்ததில்லை போலும். தாலாட்டுப் பாடல்களின் தமிழ் ஓசை நயத்தைக் கொணராவிட்டால் பின் அவை எப்படி தாலாட்டு ஆகும்.? ஆக இதில் சுப்பிரமணியத்தை நாம் குற்றம் சொல்ல முடியாது.

ஆனால் சக்களத்திச் சண்டைகள் எங்கும் இருக்கும் தானே. அது இன்றைய் பொருளாதாரத்துக்கு முன்னேயே உலகமயமானது தான் (Globalised} இதோ மாதிரிக்கு சில வரிகள். பின் ஆங்கிலத்திலும் வாசிக்க சுவாரஸ்யமாகத் தான் இருக்கின்றன..

மாதிரிக்கு சில வரிகள்

”………………………………………………………………
செட்டிக்கடை வெட்டி வேரு
சிவகாசிப் பன்னீரு
மதுரைக் கடைச்சக்களத்தி
மறக்கப் பொடிபோட்டா
குதிரைவாலிக் கருது போல
குறிச்ச பொண்ணு நானிருக்கேன்
சரவட்டைக் கருதுக்காக
சாம வழி போகலாமா?…….”

எந்தத் துறையானால் என்ன, எந்த மக்களானால் என்ன, எந்த மொழியானாலென்ன, வெகு சுலபமான ஆங்கிலத்தில் சொல்லிவிட முடிகிறது சுப்பிரமண்யத்தால்.

Cuscus grass from Chetty shop
Fragrant Sivakasi pannier
He forgets in the vile spell
Cast by the Madurai slut

Here I am so georgeous
Like lush paddy sheaf
And I’am the girl anointed too;
In search of measely stalk
Should you scurry so far.

iஇதிலெல்லாம் நமக்கு அனேகமாக ஏதும் பிரசினை இருக்காது. நீதிப் பாடல்கள் தான் கவிதையாகுமா, அதில் ஏது பாவமும் மற்றதும் என்று நாம் நினைப்போம். சங்கப்பாடல்களும், பக்திப் பாசுரங்களும் ஏற்கனவே தொகுக்கப்பட்டவை. அவற்றில் எதைச் சோடை என்பது? யார் எந்தத் தேர்வு செய்தாலும், யாரும் ஏதும் சர்சைக்கு வரமாட்டார்கள். பழசெல்லாம் புனிதம் என்ற மரபு சார்ந்த பார்வை வேறு.

ஆனால் சமீப கால எழுத்துக்களில் அதிலும் பெண் கவிஞர்கள் என்றால் நமக்குள் நிறைய கருத்து வேறு பாடுகள் இருக்கும். ஆனால் சுப்பிரமணியம் இந்த வம்புக்கெல்லாம் போவதில்லை. பெண் கவிஞர்களே முப்பத்து மூன்று பேர்களை நம் முன் வைத்திருக்கிறார். இவ்வளவு பெண் கவிஞர்கள் இருக்கிறார்களா என்று நமக்குத் திகைப்பு. இருக்கிறார்கள் தான். நம்மில் அதிகம் கண்களில் படும் பெயர்களை மட்டுமல்ல, அவர்களையும் தாண்டி நாம் அநியாயமாக மறந்து விட்டவர்களையும், சுப்பிரமணியம் தேடிப்பிடித்து வந்துள்ளார். சமீபத்தில் தெரிய வந்த, வயதில் மூத்த பூரணி, பின் நாம் மறந்துவிட்ட திரிசடை, இரா.மீனாட்சி வயதில் எல்லோரிலும் இளைய என்று நான் யூகிக்கும் வெண்ணிலா/அழகுநிலாவோடு அனேகமாக பெண் கவிஞர் குழாமே தம்முள் ஒருவராகக் கருதாத ஆனால் பேசப்படவேண்டிய திலக பாமா வரை நிறைய பெண் கவிஞர்களை இத்தொகுப்பில் சுப்பிரமணியம் சேர்த்துள்ளார்

இக்குரல்கள், பல வகைப்பட்டவை. அவர்கள் கவிதையாக்கியுள்ள அனுபவங்களும் பார்வைகளும், அவர்கள் கையாளும் மொழியும் அவரவர்க்கு உரியன. இவர்கள் எல்லாம் தான் எங்களது இன்றைய ஆதிமந்தியாரும் அஞ்சில் அஞ்சியாரும் என்று சொல்வது போல. நமக்கு மட்டுமல்ல. தமிழுக்கு அன்னியமான ஆங்கிலம் வழி இப் பெண்கவிஞர்களையும் அவர்கள் பேச வந்துள்ளதையும் பரிச்சயப்படுத்திக்கொள்ள வருபவர்களுக்கும் இவ்வுலகத்தைக் காண சில ஜன்னல்களையும் கதவுகளையும் திறந்தது போல இருக்கும். அவை நிச்சயமாக வேறு பட்டவையாகவும் அதேசமயம் சுவாரஸ்யமாகவும் இருக்கும்.

இது நமக்கு ஒரு பருந்துப் பார்வை தரும் அதே சமயம் சுப்பிரமண்யத்தின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கும். இரண்டுமே நல்ல அனுபவங்கள் என்னைப் பொறுத்த வரை. என் இஷ்டத்துக்கு என் தேர்வுகளில் சில. எல்லாவற்றையும் கொடுக்க இயலாது.. அப்படித்தானே நம் எல்லோருக்கும் இருக்கும்.

சல்மாவின் கவிதை ஒன்று. அதன் முதல் பத்தியும் கடைசிப் பத்தியும்.

தன் வழி தவறி
அறைக்குள் சிக்கிய
பட்டாம்பூச்சி துவக்கிற்று
தன் தேடலை

……………………

என்றேனும்
கதவு திறந்து வழி கிடைக்குமெனில்
அது பறந்து தான் போகும்
வர்ணங்கள் இல்லையென்றாலும் கூட

Losing its way
Trapped in the room
Starts its search
This butterfly

One day some day
Should door open and way found
Sure it would wing its way out
Though robbed of its hues.

இதே போல திலக பாமா கவிதை ஒன்றின் ஆரம்பமும் இடையில் ஒன்றும்..

நினைவுப் பரணிலிருந்து எழுப்ப முடியவில்லை
தூசிக்குள் சிக்கிக் கொண்டிருக்கும்
வார்த்தைகளை
………………

மூடிய இமைகளுக்குள்
உலவும் இருளுக்கு
வெள்ளைக் காகிதங்களின் குணம்
கவிகதைகளாய் என்
நினைவுகளைச் சுமந்து
மடி நிரப்பியிருக்கிறது……

Words
Buried in a pool of dust
I can’t retrieve from the memory’s loft

The inky darkness
Encased in shut eyelids
Assumes
White paper’s aspect
Films my madi
As poems
Carrying my memories

இன்னும் ஒரே ஒன்று. உமா மகேஸ்வரியின் தனிமையையும் வெறுமையையும் காட்சிப் படுத்தும் ஒரு கவிதை. ஆரம்பப் பத்தி மாத்திரம்

வெளிவாசல் வழியே
சலித்த மதியம்
சாக்கடை நீரருந்தும் குருவி
உதிர்கிற மென்மையும்
உடைபடாக் கடினமும்
விசித்திரமாய் முடைந்த மௌனம்

The noon
Filtered through the front door
A sparrow drinking gutter water
A silence
A strange weave of
Softly enveloping tenderness
And unrelenting hardness.

போதிய பரிச்சயம் தந்துவிட்டேன் என்று நினைக்கிறேன். தமிழ்த் துறைக்கே, தமிழ்க் கவிதைக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்களிடமிருந்து இத்தகைய ஒரு முயற்சி வரும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. அவர்கள் வண்டிச் சுவடை ஒட்டியே தம் பயணத்தை மேற்கொண்டு தடம் முடியும் இடத்தில் முடித்துக் கொள்பவர்கள். தமிழைப்புதிய தடத்தில் இட்டுச்சென்ற வர்கள் அனேகமாக தமிழ் துறை சாராதவர்களாக இருந்திருக்கிறார்கள். வக்கீலுக்குப் படித்த வையாபுரிப் பிள்ளையும் ரசிக மணியும் சட்டென நினைவுக்கு வருகிறார்கள்.. ஒரு சமயம் ஐம்பதுகளின் இறுதியில் ஒரு கூட்டத்தில் ரா.பி.சேதுப் பிள்ளையும் இருந்தார். விஞ்ஞானி கே.எஸ் கிருஷ்ணனும் இருந்தார். ஒரு ஓய்வு பெற்ற ஐ.பி. அதிகாரியும் இருந்தார். பெயர் மறந்து விட்டது. ரா.பி. சேதுப் பிள்ளையிடமிருந்து புதிதாகப் பெற எனக்கு ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் கே.எஸ் கிருஷ்ணன் தான் ஆத்மார்த்தமாக தான் படித்துப் புரிந்து கொண்ட திருக்குறளைப் பற்றிப் பேசியது ஒரு புதிய பார்வையாகவும் அனுபவமுமாக இருந்தது.

கம்பன் ராமகாதையைத் தொடங்குமுன் “ஆசை பற்றி அறையலுற்றேன்” என்று சொல்லித் தான் தொடங்குகிறான். ஆசை பற்றி செயல்படும் எதுவும் சிறப்புடன் இருக்கும். மற்றதெல்லாம் தான் நமக்குத் தெரியுமே.

அது போல் தான் ஆசிய வளர்ச்சி வங்கியில் மணிலாவில் இருபதாண்டு காலம் கழித்த கே.எஸ் சுப்பிரமணியம் தந்துள்ள இந்த் தமிழ்க் கவிதைத் தொகுப்பும் அதன் ஆங்கில மொழி பெயர்ப்பும்,.

Tamil Women Poets: Sangam to the Present: Translation: K.S.Subramaniam
Tamil University, Thanjavur pages 276 + 16 Rs100

Series Navigationரவுடிச் சாமியும் ரங்கமன்னாரும்அர்ஜண்ட் வெயிட் லாஸ்.. ஒரு யாத்ரா டிக்கட் ப்ளீஸ்..
author

வெங்கட் சாமிநாதன்

Similar Posts

8 Comments

  1. Avatar
    காவ்யா says:

    Dear Saaminaathan saar, Sorry நான் முழுக்க கட்டுரையைப் படிக்கவில்லை. எல்லாத்துக்கு ரீஆக்ஷன் கொடுக்க வேண்டியதாகிவிடுமே என்ற தயக்கம்தான்!

    உங்கள் அங்கலாய்ப்பு ஏற்கத்தக்கது: அஃதாவது, சங்கப்பாடல்கள் மொழிபெயர்க்கப்பட்டு தமிழறியா பிற மாநில அல்லது தேயமக்களைச் சென்றடைய வேண்டுமென்பதே நோக்கம். இல்லையா ? ஆனால் அவர்களுக்கு சங்கத் தமிழ்நாட்டின் பிற்புலம் தெரியாவிட்டால் நோக்கம் முழுமை பெறாது. எனவே முதலில் அதை ஆழமாகச் சொல்லிவிட்டுப் பின்னர் கவிதைகளில் நுழையும் போது மேற்சொன்ன நோக்கம் நிறைவேறும். பிற பாடல்களுக்குத் தேவையில்லை. It is a good point from you. Mr Subramanian may bring out his next edition with an elaborate introduction to Sangam period.

    இப்போது மொழிபெயர்ப்புக்கு வருவோம். நான் கட்டுரையை படிப்பதைப் பாதியிலே நிறுத்திவிட்டேன். படித்த மட்டும் முதலில் சொல்லப்பட்ட குறுந்தொகைப் பாடலின் மொழி பெயர்ப்பு சிறப்பாக இருக்கிறது; அப்பாடலின் உயிர் ஊசலாடாமல் மொழிபெயர்த்துவிட்டது என்று சொல்வதற்கு முதலில் அக்குறுந்தொகைப்பாடலே புரிபடனுமே சார்? உங்களுக்குப் புரிபட்டிருக்கிறது. அதை நீங்கள் சொல்லியிருக்கணும் கட்டுரையில். நீங்கள் மட்டும் அம்மொழிபெயர்ப்பு அப்படி, இப்படின்னா எப்படி சார்? Why didn’t you give d meaning of the sangam poem word for wor?
    அதே வேளையில் ஆண்டால் பாடல் எனக்குப் பிடிபட்ட பாடல். ஆழ்வார்கள் எனக்கு நன்கு பரிச்சயமனான தமிழ்ப் பாவலர்கள். It is not an uphill task to understand them at majority of the places – I mean, if you take their verses as poetry. Because they did not write in Sangam style of Tamil. எனவே அப்பாடலையும் அம்மொழி பெயர்ப்பையும் நான் கொஞ்சம் சிலாகிக்கலாம்.

  2. Avatar
    காவ்யா says:

    //I mean, if you take their verses as poetry.//

    Pl read it like:

    I mean, if you take their verses as pure poetry only. The Vaishanva samradhayees dont take it that way. Besides, the interpretation they give to these verses, will astound the ordinary readers. Here, I want all Thinnai readers to kindly become ordinary readers now.

  3. Avatar
    காவ்யா says:

    கீசுகீசு சென்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
    பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
    இதன் மொழிப்பெயர்ப்பு இப்படிப் போடுகிறார் சுப்ரமணியன்:

    Black sparrows in droves
    Fill the air with ‘keech keech’ chirps
    Don’t you hear it, stupid girl?

    இதுதான் ஆண்டாளின் வரிகள். திருப்பாவையின் ஒரு பாசுரத்தில் இரு வரிகள். அதாவது முழுப்பாசுரம் அல்லது பா போடப்படவில்லை. போகட்டும். போட்டமட்டும் இவை என்ன சொல்கின்றன என்ற தெரிந்த பின்பே மொழிபெயர்ப்பை நாம் உற்றுநோக்க முடியும்.
    ஆனைச் சாத்தன் என்பது ஒரு சிறு பறவை. ஆனால் சிட்டுக்குருவின்று!. சிட்டுக்குருவி நகரங்களிலும் காணப்படும். ஆனைச்சாத்தன் கிராமப்புறங்களில் விடியலில் கீச்சு கீச்சு எனவொலியெழுப்பும் பறவை. அது கருமையான பறவையுமில்லை. எப்படி பிளாக் ஸ்பாரோக்களாயின அவை?
    அவை ஓரிரண்டாக தென்படுமா? சிட்டுக்குருவிகளைப்போல ஆணும் பெண்ணுமாகவா ? அல்லது கூட்டம் கூட்டமாகவா? பின்னதற்கு ஆம் என்பது பதிலானால் ஒழிய, in droves எனபது சரியாகாது.
    மொழிபெயர்ப்பாளர் அப்பறவையைப்பற்றி ஒரு ஆர்னிதாலாஜிஸ்ட் கேட்டுத்தெரிய வேண்டும். கண்டிப்பாக ஆனைச்சாத்தனுக்கு விஞ்ஞானப்பெயர் இருக்கும். பரவலான பெயரும் இருக்கும். மொழிபெயர்ப்பில் அதைத்தான் பயன்படுத்தவேண்டும். என்னெனில், ஆண்டாள் was a highly imaginative person – all eyes and ears to the flora and fauna of Srivilliputthuur. She responded sensuously to even buildings and places. We must not travesty her imagination which correctly picked up aaanaithsaathtnan only although she had full availability of roosters, nightingales, (koels), crows, and the domestic cocks and hens. Why did she leave all of them out and picked up only this tiny bird? Readers remember here, Srivilliputhur is near wester ghats and birds visit the village from the mountain side.

    A fair guess can delight us here. She is the only daughter (adopted) of a man who has no other folk, either male or female, at home. He had lost his wife long ago and had no issue from his marriage. His divine nature would have made the fellow villagers to treat him differently. Some would have even called him a religious nut. (When saints lived, only a few people are aware that he is a saint!) We might say his socialising must have been to a necessary extent only. Being a woman who needed to be gregarious and needed a constant company of fellow girls to exercise such gregariousness, she was very popular with them. She would have regaled them with a lot of sangma poetry learnt from her dad. Her father was unique in the sense had had a lot of load in his head of all ancient poetry, folklore etc. He passed all to her; and she must have passed many to her playmates. (She is the only Azhwaar who refers to Sangam poetry in her pasuram) Most of the girls must have been her playmates, and, as usual with girls, must have discussed among themselves what all they around, in nature and people and the bird must have occurred many times having been noticed regularly. I did it with my own sister when we were children about the winged in our courtyard. (I am a male!). The Azwaar also would have. Therefore, I dare say, the bird is special in the pasuram.. Let us not attempt to remove the bird from it replacing it with a sparrow. Sparrow does not chirp early in the morning, like roosters. The pasuram refers to an action that takes place very early in the morning. Waking up the girls for the ritual bath in the river. Early morning is important here.

    The translator killed the pasuram by wrongly identifying the bird with a black sparrow (No sparrow is black, by the way }

    ஆங்கில மொழிபெயர்ப்பில் தமிழ்ச்சொற்கள் இடம்பெறுவது தமிழறியா மக்களுக்குக் குழப்பத்தையே தரும். கீச் கீச் என்ற அடுக்குத்தொடரை அப்படியேயா பயன்படுத்துவது?

    The translator should furst grasp the pasuram in all its subtle and intricate nuances before attempting to translate so that he would do justice to it.

    1. Avatar
      காவ்யா says:

      Just give your comment on the qn:

      Can a translator change the bird anaichaththan into black sparrows ?

      U don’t need an expert to tell you that it is violating the meaning of the poem.

      If the poet mentions sparrow, say that. I she mentions some other bird, say that only. How can you alter the bird ?

  4. Avatar
    லறீனா அப்துல் ஹக் says:

    இப்பதிவும் பின்னூட்டங்களும் மிகவும் சுவாரஷ்யமானவை. மொழிபெயர்ப்பின் சிக்கல்கள், சவால்கள் குறித்துப் பயிலும் மாணவர்களுக்கு மேற்படி ஆக்கமும் அதையடுத்துள்ள காவ்யாவின் பின்னூட்டங்களும் மிகுந்த பயன்தரும் என்பதில் ஐயமில்லை. நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *