தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

5 ஜூலை 2020

அர்ஜண்ட் வெயிட் லாஸ்.. ஒரு யாத்ரா டிக்கட் ப்ளீஸ்..

தேனம்மை லெக்ஷ்மணன்

Spread the love

நல்லா குண்டாயிட்டே நீ என தோழிகள் கலாய்க்கிறாங்களா.. எந்தக் கடையில அரிசி வாங்குறேன்னு யாரோ ரெண்டு பேர் எதுத்தாப்புல பேசிக்கிட்டே போறாங்களா.. விளம்பரத்துல வர்ற பொண்ணுங்க எல்லாம் சிக் சிக்னு சிக்கன் மாதிரி சுத்துறாங்களா… சே இந்த ஹிந்தி ஹீரோயின் எல்லாம் எப்பிடி இப்படி ஸ்லிம்மா இருக்காங்கன்னு வயித்தெரிச்சலா இருக்கா.. கொஞ்சம் தண்ணீரை குடிச்சு வயித்தெரிச்சலை அணைச்சிட்டு நம்ம தென்னக ரயில்வேயில ஒரு டிக்கெட் ரெண்டு ராத்திரிக்கு புக் பண்ணுங்க போதும்.. என்ன விஷேஷம்னு கேக்குறீங்களா .. அட நீங்க ஸ்லிம் ஆகத்தான். எதுக்கு ரெண்டு..? வீட்டுக்காரர் கூட போகவான்னு கேக்குறீங்க. அட அது ரெண்டுமே உங்களுக்குத்தாங்க.. ஏன்னா ஒரு ஊருக்குப் போயிட்டு திரும்ப வீட்டுக்கு வரணும்ல.. அதான்.

முக்கியமா அது ராமேஸ்வரம் எக்ஸ்ப்ரஸ் அல்லது சேரன் அல்லது ப்ளூ மவுண்டனா கூட இருக்கலாம். கொஞ்சம் இருங்க வெயிட் லாசுக்காக உங்களை மலை எல்லாம் ஏற சொல்லலை. நீலகிரி எக்ஸ்ப்ரஸைத்தான் அப்பிடிச் சொன்னேன். அப்புறம் முக்கியமா. ராத்திரி ட்ரெயினுக்கு புக் பண்ணுங்க.அதுவும் கடைசி சமயத்துலதான் தட்கால்ல புக் பண்ணனும் . அப்பத்தான் நம்ம கோச்சே இருக்கோ இல்லையோன்னு தேடிக்கிட்டே போனாம்னா ஏ1., ஏ2.,ஏ3., ஏ4 இது போல பி1 லேருந்து பி 4 வரை அப்புறம் ஏசி கோச். அப்புறம் எஸ் 1 எஸ் 2 லேருந்து எஸ் 11 வரைக்கும் இருக்கும். ஆனா எஸ் 12 இருக்காது. அதுக்குத்தான் நீங்க டிக்கட் புக் பண்ணி இருப்பீங்க. நீங்க நடந்து நடந்து கடைசியா எஞ்சினே வரபோகுது. ஒரு வேளை பாத யாத்திரையாவே போகப்போறமோன்னு நினைக்கும்போது ஜெனரல் கம்பார்ட்மெண்ட் அப்புறம் கொஞ்சம் லக்கேஜ் கம்பார்ட்மெண்ட் அதுக்கும் அப்புறம் எஞ்சின் பக்கத்துல அப்பாடா உங்க எஸ் 12 வந்திருச்சு. சரி விருவிருன்னு ஏறி உக்காருங்க..அடுத்த ஊருக்க்கே வந்துட்டமோன்னு களைப்பா நடந்து வந்த நேரத்துல ட்ரெயின் கிளம்பிறப்போகுது.

பஸ்ஸுன்னா கூட அது கிளம்புனவோடனே நீங்க தூங்கிறலாம். ஆனா ட்ரெயின்ல முதல் மூணு ஊரு கடைசி மூணு ஊருக்கு மக்கள் தூங்க விடமாட்டாங்க.. அது எல்லாம் தாண்டி நீங்க தூங்க ஆரம்பிக்கிறீங்கன்னு வைங்க. காதோரம் கொசு வந்து நொய்னு ராகம் பாடிக்கிட்டே பிரயாணம் பண்ணும். என்னது அதுக்கு டிக்கட் எல்லாம் கிடையாது. எல்லா ஸ்டேஷன்லயும் ஃப்ரீதான்.

சரின்னு ஃபானைப் போடப்போறீங்க.. பால்பாயிண்ட் பேனா எல்லாம் கைவசம் கொண்டு போங்க . பின்ன ஃபானை சுத்தி விடணும்ல.. ஸ்டார்ட்டிங் டரபுள்ங்க. அப்புறம் ஒரு வழியா போர்த்திக்கிட்டு தூங்க ஆரம்பிச்சிடுறீங்க.. நீங்க கும்பகர்ணன் பரம்பரைன்னு நிரூபிக்க நினைக்கலாம். ஆனா கொசுங்க விடாது.. அதுவும் தவிர அதுங்களோட ஒண்ணுவிட்ட சகோதரர்கள்., ரத்தப் பங்காளிங்க மூட்டைப்பூச்சிங்களும் ஒரம் போட்டு வளர்த்த மாதிரி உங்க ரத்த வாடையை மோப்பம் பிடிச்சிகிட்டு எல்லா ஓரத்திலேருந்தும் கிளம்பிடுவாய்ங்க. நீங்க கொசுவைப் பிடிக்கிறதா., மூட்டைப்பூச்சியை அடிக்கிறதா. அல்லது பாத்ரூமோட வாடைக்காக மூக்கைப் பிடிக்கிறதான்னு 3 இன் 1 டாஸ் போட்டு முடிவு செய்யலாம்.

சிலர் வீட்டுல சாப்பிடாம அசந்தர்ப்பமா நல்ல வெரைட்டியா சாப்பாட்டு வேற கொண்டு வந்து உங்களை ஜொள்ளு விட வைப்பாங்க.. சீச்சீ இந்த பாத்ரூம் வாடையில என்ன சாப்பாடு .. நாம் வீட்டிலேயே சாப்பிட்டுட்டோம்னு அமைதியா இருக்கணும். இல்லாட்டி வித்துக்கிட்டுப் போற கடலை., நைட் டிஃபன் பாக்கெட்., வாழைப்பழம் .,பால்னு வாங்கி மூக்கைப் மூடிக்கிட்டு ஊத்திக்கிட்டீங்கன்னா இறங்கும் போது வெயிட் அதிகமாயிரும். சோ நோ ஈட்டபிள்ஸ்.

அப்பிடி அவங்க சாப்பிடும்போது பார்த்தா சீட் எல்லாம் ஒட்டுப் போட்டு கறுப்பு செலஃபன் பேப்பர் ஒட்டி இருக்கும். அதுக்கு கீழேயிருந்து அப்புறம் சீட்டுக்குப் பக்கவாட்டுல இருந்தெல்லாம் கரப்பான் பூச்சிகள் பல சைஸ்ல கிளம்பி வந்துகிட்டே இருக்கும். இதுக்கெல்லாம் மறத்தமிழச்சிங்க பயந்தா எப்பிடி. ஒதுங்கி படுத்துக்க வேண்டியதுதான் . இந்தக் கரப்பான் பூச்சிங்களுக்கெல்லாம் எப்பிடித்தான் தெரியுமோ புருஷங்களுக்குப் பயப்படாத பொம்பளைங்க எல்லாம் கரப்பான் பூச்சிக்குப் பயப்படுவாங்கன்னு . அப்புறம் என்ன சிவராத்திரிதான். எந்த பக்கத்துலேருந்து எந்த எக்ஸ்ரா டெரெஸ்டியல் வருமோன்னு டெரர்லயே தூக்கம் வராது.

சரின்னு ஒரு வழியா நீங்க தூங்க ஆரம்பிக்கும் போது திடு திடுன்னு ஒண்ணு உங்க மேல ஓடும் .. என்னன்னு பார்த்தா உங்க பை எல்லாம் குதறி ஒரு எலி.. சொந்தக்காரங்க வீட்டுக்குப் போறமேன்னு நீங்க வீட்டுல செய்தது., கடையில வாங்குனதுன்னு பலகாரங்களை அடுக்கி வைச்சிருப்பீங்க அதை எல்லாம் எலியார் வந்து பார்வையிட்டு பிடிச்சதை குதறி வைச்சிருப்பார்.. என்னங்க கொசு., சரி., கரப்பு சரி., மூட்டைப்பூச்சி சரி., எலியுமான்னா .. ஆமாங்க ஆமாம்; அதையும்தான் வளக்குறாங்க..

எதிர்த்தாப்புல இருந்த ஒரு அம்மா தன்னோட குழந்தைக்கு ஒரு பாட்டில்ல பிஸ்கட்டைப் போட்டு வந்து திறந்து எடுத்துக் கொடுத்துகிட்டு இருந்தாங்க.. கண்ணாடி பாட்டிலதான் எலியால கடிக்க முடியல.. அடுத்த தடவைகள்ல அது மூடிய திறக்க கத்துகிட்டாலும் ஆச்சரியமில்லை.. அப்புறம் நாம எல்லாரையும் பார்த்து முக்கா ராத்த்திரியான பின்னாடி அடுத்தடுத்த ஸ்டேஷன்கள் வர ஆரம்பிச்சுரும். எனவே முழுச்சுக்க வேண்டியதுதான்..

அப்புறம் போற ஊர்லயும் இறங்கினவுடனே உங்களுக்கு ஸ்டேஷன் வாசல் வந்துடாது. ஏழு கடல் ஏழு மலை தாண்டி போற மாதிரி ஏறி இறங்கி ஸ்டேஷனை விட்டு வெளியே போகணும். திரும்ப அன்னிக்கு நைட்டே உங்க டிக்கட்டை அதே ரிடர்ன் ட்ரெயின்ல புக் பண்ணீங்கன்னா. சொந்தக்காரங்களை பார்த்து குசலம் விசாரிச்சிட்டுப் போற மாதிரி திரும்பி அதே கரப்பு., மூட்டைப்பூச்சி., கொசு., எலி எல்லாத்தோடயும் பேசிக்கிட்டே வீட்டுக்க் வரலாம். திரும்பவும் ஸ்டேஷன்ல பாத யாத்திரை. அதுக்குன்னு நீங்க உங்க லக்கேஜை நீங்கதான் தூக்கணும். கூலி எல்லாம் கூப்பிடக்கூடாது..

வீட்டுக்கு நேரே போய் வெயிங் மிஷினை எடுத்து வைச்சு வெயிட் பாருங்க நிச்சயமா ஒரு ரெண்டு கிலோவாவது குறைஞ்சிருப்பீங்க. ட்ரெயின்ல கொசு கடிச்சு வீங்கி ., முட்டைப்பூச்சி கடிச்சு தடிச்சு மந்திரிக்கிற அளவு வீங்கிட்டீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பில்ல. முன் சாக்கிரதையா நீங்கதான் இருந்திருக்கோணும். வீட்டுலயும் மூட்டைப் பூச்சிகளை உங்க லக்கேஜுங்களோட பார்சல் பண்ணிக் கொண்டாந்துட்டீங்கன்னா அதுங்க அன்னியன்ல வர்ற அட்டைப்பூச்சிங்க மாதிரி ரத்தத்தைக் குடிச்சு உங்கள ஸ்லிம்மாக்கிடும். ( அதுக்கு பார்சல் பில் போட்டா ரயில்வேயில கட்டிடுங்க மறந்துடாம). அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். இந்த வெயிட் லாஸுக்கா ஒரு 500 ஆயிரம் கொடுத்து டிக்கெட் வாங்கிப் போகணும்னு சொல்றீங்கன்னு கேக்குறீங்களா. ஏங்க யார் யாரோ உங்க வெயிட்டைக் குறைக்கிறேன்னு ஏமாத்துறாங்க .. அதை எல்லாம் நம்புறீங்க.. நான் சொன்னா மட்டும் நம்ப மாட்டேங்குறீங்க..

அர்ஜண்டா வெயிட் லாஸுக்கு ஒரு யாத்ரா டிக்கெட் ப்ளீஸ்னு ஒரு ஸ்கீம் நடத்திகிட்டு இருக்கேங்க.. அதுக்கு நீங்க ஒரு டிக்கெட் வாங்கிட்டு மூணு பேரை சேர்த்து விட்டா போதும். அப்புறம் அவங்க மூணு பேரை சேர்ப்பாங்க.. இப்படியே நம்ம நாட்டுல இருக்குற எல்லாரையும் ஸ்லிம்மாக்கணும்னு முடிவு பண்ணிட்டேனுங்க.. எங்கங்க ஓடுறீங்க .. ஒரே ஒரு டிக்கெட் ப்ளீஸ்…

Series Navigationதமிழ் பெண் கவிஞர்கள் – ஆங்கிலத்தில் – ஆதி மந்தியார் முதல் உமா மஹேஸ்வரி வரைஅப்பா

6 Comments for “அர்ஜண்ட் வெயிட் லாஸ்.. ஒரு யாத்ரா டிக்கட் ப்ளீஸ்..”

 • sathyanandhan says:

  Thenammai Madam, Thanks. We all lack a sense of humor. the article is on the lighter side of our life we encournter frequently. You have not mentioned four typical south indian passengers 1. a person who will negotiate for 3 hours in a six hour journey to unite his family in one compartment.2.Middle berth passenger who is always at the mercy of lower berth neighbour. 3.People who have got very strong batteries in their mobiles and hijack the peace inside a compartment.4. Females who grab the lower berths at any cost and keep the windows shut for ever. regards. Sathyanandhan

 • Thenammai says:

  ஹாஹா இன்னும் நிறைய விஷயங்கள் கொடுத்திருக்கீங்க சத்யானந்தன்.. என்னுடைய ப்லாகிலும்., தென்னக ரயில்வேயில் ஒரு நாற்றம் பிடித்த பயணம் என்று செப்டம்பர் மாதம் ஒரு பதிவிட்டிருக்கிறேன்..

  தென்னக ரயில்வே என்பதை பற்றி சரித்திரம் பூகோளம் எல்லாம் எழுதலாம்.. அவ்வளவு இருக்கு.. ரயில்களின் நேசிப்பாளினி நான்.. என்னையே வெறுக்க வைத்த சம்பவங்களும் இருக்கு..

  நன்றி உங்க பின்னூட்டத்துக்கு..

 • Anu says:

  Thenachi rombe arumai :)

 • லறீனா அப்துல் ஹக் says:

  ஐயோ! சிரிச்சு சிரிச்சு… முடியல! ரொம்பவும் அருமையா இருக்கு! இன்னும் இதுபோல் நிறைய எழுதுங்கள்;களைப்பு மறந்து சிரித்து சற்றே நம் உள்ளங்கள் ஆசுவாசமடையட்டும்… :)

 • Thenammai says:

  நன்றி லறீனா அப்துல் ஹக்..உங்களைப் போன்றோரின் ஊக்க மொழிதான் இன்னும் எழுதுவதற்கான ஆர்வத்தைத் தருகிறது.. பாராட்டுக்கு நன்றி..


Leave a Comment

Archives