யுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்கள்

This entry is part 13 of 43 in the series 29 மே 2011

விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான யுத்தம் முடிவுற்று இன்றோடு இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமானது, கடந்த இரண்டு வருடங்கள் பூராகவும் இடைக்கிடையே அந்த யுத்த வெற்றி மனப்பான்மையை மக்கள் மத்தியிலும் இராணுவத்தினர் மத்தியிலும் நிலை நிறுத்துவதற்காக பல விதமான விழாக்களை ஏற்பாடு செய்திருக்கிறது. அதனடிப்படையில் இன்றும் கூட அது போன்ற விழாக்கள் அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

 

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கெனில் இன்றைய தினமானது ‘பலகாரம், பாற்சோறு சாப்பிட்டு’க் கொண்டாடப்பட வேண்டிய தினமென்பது உண்மை. ஏனெனில் ராஜபக்ஷ பரம்பரைக்குக் கிடைத்த ‘அதிர்ஷ்டம்’ இரண்டு வருடங்களுக்கு முன்னர் கிடைத்த அந்த யுத்த வெற்றியே. ராஜபக்ஷ குடும்பத்தின் கூட்டுச் சகோதர்கள் உள்ளிட்ட ஏழேழு பரம்பரைக்கும் வேண்டிய சொத்துக்களைப் பெற்றுத் தந்த ‘புதையல்’ அது. எனினும் அந் நிலை உருவானது ராஜபக்ஷ குழுவினருக்கு மட்டுமே.

 

உண்மையாகவே அரசாங்கமானது மக்களுக்காக இயங்கியிருந்தால் இற்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு யுத்தம் முடிவடைந்ததானது, இந் நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய எல்லா மக்களுக்கும் ஏதேனுமொரு வெற்றியையோ, சுதந்திரத்தையோ உருவாக்கக் கூடிய ஒன்றாக அமைந்திருக்கும். எனினும் கடந்த இரண்டு வருடங்களில் நிகழ்ந்தவைகள் அதன்படியல்ல. அரசாங்கத்தின் ஊடகக் கண்காட்சிகளில் இரு விழிகளும் மயங்காத எவர்க்கும், சற்றுக் கூர்ந்து நோக்குகையில் இந் நிலையைப் புரிந்துகொள்ள முடியும்.

 

மேலே குறிப்பிட்ட படி ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு குடும்ப ஆட்சியை நீண்ட காலத்துக்கு நிலை நிறுத்திக் கொள்வதற்கு வழியமைத்த, கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த வரம்கொடுத்த, நினைத்த விதத்தில் சட்டங்களைக் கூட பலவந்தமாக மாற்றியமைத்து தனக்கு வேண்டிய விதத்தில் ஆட்சியைக் கொண்டு செல்லும் வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்த யுத்த வெற்றி கிடைத்து, இன்றோடு இரண்டு வருடங்கள்.

 

எனினும் வடக்கு தமிழ் மக்களுக்கென்றால், தமது வீடுகளைக் கை விட்டுவிட்டு, அகதி முகாம்களெனும் சிறைகளுக்குள் வர நேர்ந்து, இன்றோடு இரண்டு வருடங்கள். குடும்பத்தின் உயிர்களைக் காப்பாற்றவென செய்து கொண்டிருந்த தொழில்களைக் கைவிட்டுவிட்டு அரசாங்கத்தின் முட்கம்பிகளுக்குள் சிறைப்பட்டு ‘வெறுமனே’ பார்த்திருக்க நேர்ந்து, இன்றோடு இரண்டு வருடங்கள். பாடுபட்டு உழைத்த பணத்தைக் கொண்டு, சுடச் சுட சமைத்து உண்ணும் புதிய உணவுகளுக்குப் பதிலாக பூஞ்சனம் பிடித்த சோற்றையும் பருப்பையும் விழுங்கி உள்ளே தள்ள நேர்ந்து, இன்றோடு இன்றோடு இரண்டு வருடங்கள்.

 

பிள்ளைகளின் பாடசாலைகள் இராணுவ முகாம்களுக்கென கைப்பற்றப்பட்டதால் பிள்ளைகளின் கல்விப் பயணம் நிறுத்தப்பட்டு இன்றோடு இரண்டு வருடங்கள். இந்தியாவில் தேர்தல்கள் நெருங்கும்போது இலங்கைத் தமிழ் மக்கள் குறித்து முதலைக் கண்ணீர் விடும் சோனியா காந்தி போன்றவர்களுக்கு நிலையங்கள், சுற்றுலாப் பயணிகளுக்கான ஹோட்டல்களைக் கட்டுவதற்கு இடங்களைக் கொடுத்துவிட்டு தாம் பிறந்த மண்ணிலேயே அனாதைகளாகி இன்றோடு இரண்டு வருடங்கள்.

 

அது மட்டுமல்லாது, குறைந்தபட்சம் தமக்கெதிராக முறைப்பாடொன்று கூட அற்ற தமிழ் இளைஞர்கள், தமது கறுத்த தோல் நிறத்தினாலும், தமிழ் மொழியைப் பேசுவதன் காரணத்தினாலும் சிறைச்சாலைகளில் தடுத்து நிறுத்தப்பட்டு, இன்றோடு இரண்டு வருடங்கள். தமிழ்த் தாய்மார்கள் காணாமல் போன தமது பிள்ளைகள் மற்றும் உறவினர்களைத் தேடி பல துயரங்களை அனுபவித்தபடி, கேலி கிண்டல்களுக்கு ஆளான படி ஒவ்வொரு இராணுவ முகாம்களாக அலைய ஆரம்பித்து, இன்றோடு இரண்டு வருடங்கள்.

 

ஆகவே இந்த ‘இரண்டு வருடக் கொண்டாட்டம்’ ஆனது, வெற்றியின் இரண்டு வருடங்களல்ல. துயரங்களினதும் கட்டுப்பாடுகளினதும் இரண்டு வருடங்கள். வன்முறையினதும் ஏகாதிபத்தியத்தினதும் இரண்டு வருடங்கள். வரப் போகும் இருபது வருடங்களையும் கூட, கடந்த இரண்டு வருடங்களைப் போல இலகுவாகக் கழித்துவிட ராஜபக்ஷ அரசாங்கம் தயாராகி வருகிறது. அந் நிலையை மாற்ற வேண்டும். யுத்தம் முடிவுற்ற மூன்றாம் வருடத்தை நாம் இன்றிலிருந்து ஆரம்பிக்கிறோம். நாம் எல்லோரும் இவ் வருடத்திலாவது இந் நிலையை மாற்றத் தீர்மானிக்க வேண்டும். உண்மையான தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்பக் கூடிய, சகோதர தமிழ் மக்களின் மீது சுமத்தப்பட்டிருக்கும் வன்முறையை அகற்றுதலுக்கும், அதற்காகப் போராடுதலுக்குமான வருடமாக இவ் வருடத்தை ஆக்கிக் கொள்வோமாக.

உதுல் ப்ரேமரத்ன

தமிழில்எம்.ரிஷான் ஷெரீப்,

இலங்கை

 

Series Navigationதக திமி தாஒரு கொத்துப் புல்
author

எம்.ரிஷான் ஷெரீப்

Similar Posts

3 Comments

  1. Avatar
    லதா ராமகிருஷ்ணன் says:

    1) போராட்டத்திலிறங்கும் இடம்பெயர்ந்த மக்கள்
    ப்ரியந்த லியனகே
    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,
    இலங்கை
    2) யுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்கள்
    – உதுல் ப்ரேமரத்ன
    தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்,
    இலங்கை

    வணக்கம். இந்த இதழில் இடம்பெற்றுள்ள இன்று இலங்கையில் தமிழர்களின் நிலை குறித்த இரண்டு கட்டுரைகளுமே குறிப்பிடத்தக்கவை. எனில், அவற்றை எழுதிய மூல ஆசிரியர்களின் பெயர்கள் கட்டுரையின் மேற்பக்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கவேண்டும். அவையிரண்டுமே சிங்கள சகோதரர்களால் எழுதப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. மூல ஆசிரியரின் பெயருக்குப் பிறகு மொழிபெயர்ப்பாளர் பெயர் தரப்பட்டிருந்தால் சரியாக இருந்திருக்கும்.

    இந்தக் கட்டுரையில் ‘இந்தியாவில் தேர்தல்கள் நெருங்கும்போது இலங்கைத் தமிழ் மக்கள் குறித்து முதலைக் கண்ணீர் விடும் சோனியா காந்தி போன்றவர்களுக்கு நிலையங்கள், சுற்றுலாப் பயணிகளுக்கான ஹோட்டல்களைக் கட்டுவதற்கு இடங்களைக் கொடுத்துவிட்டு தாம் பிறந்த மண்ணிலேயே அனாதைகளாகி இன்றோடு இரண்டு வருடங்கள்’ என்று கட்டுரையாளர் மனம் வருந்திக் குறிப்பிட்டுள்ளார். சோனியா போன்றவர்கள் என்று மிகவும் பொதுப்படையாக ஒட்டுமொத்த இந்திய அரசியல்வாதிகளையே குற்றஞ்சாட்டுவதைக் காட்டிலும் குறிப்பாகத் தெரிந்த சில பெயர்களைச் சுட்டுவது மேல் என்று தோன்றுகிறது.

  2. Avatar
    latha ramakrishnan says:

    வணக்கம், இந்த இதழில் இலங்கையிலுள்ள தமிழர்களின் நிலை குறித்து வெளியாகியுள்ள இரண்டு கட்டுரைகளுமே குறிப்பிடத்தக்கவை. எனில், மூல ஆசிரியரின் பெயர்களைக் கட்டுரைகளின் மேற்பகுதியில் இடம்பெறச் செய்திருக்கவேண்டும். அதற்குக் கீழே மொழிபெயர்ப்பாளரின் பெயரை இடம்பெறச் செய்திருக்கலாம்.

    இந்தக் கட்டுரையில் ”இந்தியாவில் தேர்தல்கள் நெருங்கும்போது இலங்கைத் தமிழ் மக்கள் குறித்து முதலைக் கண்ணீர் விடும் சோனியா காந்தி போன்றவர்களுக்கு நிலையங்கள், சுற்றுலாப் பயணிகளுக்கான ஹோட்டல்களைக் கட்டுவதற்கு இடங்களைக் கொடுத்துவிட்டு தாம் பிறந்த மண்ணிலேயே அனாதைகளாகி இன்றோடு இரண்டு வருடங்கள்”, என்று கூறப்பட்டிருக்கிறது. சோனியா போன்றவர்களுக்கு என்றால்..? சோனியா காந்தி அங்கே நிலம் வாங்கியிருக்கிறாரா? வேறு யாரெல்லாம் வாங்கியிருக்கிறார்கள்? பொதுப்படையாக ‘சோனியா போன்றவர்களெல்லாம்’ என்று சொல்வதைக் காட்டிலும் குறிப்பாகச் சில பெயர்களைச் சுட்டுவது தான் சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது.

  3. Avatar
    latha ramakrishnan says:

    வணக்கம். மேற்குறிப்பிட்ட இரு கட்டுரைகளுமே சிங்கள சகோதரர்களால் எழுதப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகப் படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *