அன்றைக்கும் கையில் பேப்பர்களோடு திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தார் சுப்ரமணியன்.எஸ்.டி.டி.பூத்தைத் தேடிக்கண்டுபிடித்துப் பேசிவிட்டு எரிச்சலோடு”இதே பொழப்பாப் போச்சு” எத்தன தடவ தான் போன் பண்றது, சலித்துக்கொண்டே வந்தவர் செருப்பைக்கழட்டிப்போட்டு விட்டு , வீட்டுக்குள் வந்ததும் “சிவகாமி” என மனைவியை அழைத்தவாறே அருகில் கிடந்த சேரில் அமர்ந்தார்.பின்னர் காலரைப் பின்னுக்குத்தள்ளிவிட்டு “ஸ்..அப்பாடா..என்னா வெய்யில்..” என்றவரை “ என்ன இன்னிக்காவது அந்தக் கூரியர்காரன் ஏதாவது சொன்னானா? “எனக்கேட்டவாறு தண்ணீர் டம்ப்ளருடன் வந்தவளிடம் “ கிழிச்சானுங்க, திரும்ப திரும்ப கிளிப்பிள்ள சொல்ற மாதிரி , நீங்க அட்ரஸ் சரியாக்குடுத்தீங்களா, இன்னொரு தடவை பெங்களூர் லோக்கல் செண்டர்ல செக் பண்ணிட்டு சொல்றோம்”னு சொல்லிக்கிட்டே தான் இருக்கிறானுங்க, எனக்கென்னவோ கம்ப்ளைண்ட் சர்வீஸ்ல கம்ப்யூட்டரப் போட்டு வெச்சிருக்கானுங்கன்னு தோணுது,ஒவ்வொரு தடவையும் இதே பதில் தான் வருது”
“ம்..என்ன பண்றது,அறுபதாம் கல்யாணத்துக்கு பத்திரிக்கை அனுப்பறதுக்கு, மகளுக்கா ச்சேன்னு,கூரியர்ல போட்டுவிட்டா அதுக்கு இத்தன மாசமா இழுப்பானுங்க? மாப்ளகிட்ட போன்ல சொல்லிட்டு , சீக்கிரம் போய்ச்சேரட்டும்னு அனுப்பி வெச்சோம்,அந்தப் படுபாவி அதத்தூக்கி எங்க போட்டான்னு தெரியல.கல்யாணமும் நடந்து முடிஞ்சு ரெண்டு ,மாசம் ஆச்சு, இன்னுந்தான் பத்திரிக்கை போய்ச்சேருது பெங்களூருக்கு…!” மகளும் , மருமகனும், கல்யாணத்துக்கு வந்துட்டும் போயாச்சு.இருந்தாலும் பத்திரிகை போய்ச்சேரணுமா இல்லயா ?குடுத்த காசுக்கு ஒழுங்கா வேல செய்யணும்ல,எங்க போயிருவான் அவ(ன்), விடறதில்ல அவன, என்றவர் எழுந்து மின் விசிறியைச் சுழல விட்டு திரும்ப அமர்ந்தார்.
விஷயம் ஒன்றும் பெரிதாக இல்லை.அறுபதாம் கல்யாணம் சுப்ரமணியனுக்கும் சிவகாமிக்கும், பத்திரிக்கை எல்லாம் அடிச்சு , எல்லார் வீட்டுக்கும் அனுப்பியும் விட்டாச்சு.எல்லாருக்கும் பத்திரிக்கை கையில் கிடைத்தும்விட்டது.பெங்களூர் ரெண்டாவது மாப்பிள்ளைக்கு மட்டும் போய்ச் சேரவில்லை.இரண்டு வாரங்களுக்கு முன்பே , கூரியரில் [ ராக்கெட் கூரியர் ] மதுரையிலிருந்து பெங்களூருக்கு அனுப்பியாகிவிட்டது.கல்யாணமும் முடிஞ்சு , ரெண்டு மாப்பிள்ளைகளும் குடும்ப சமேதராக [ ஒருத்தர் உள்ளூரிலேயே இருக்கார், ] வந்துட்டும் போயாச்சு.இன்னமும் பத்திரிக்கை பெங்களூர் சென்றடைந்த பாடில்லை.அதான் புலம்பலும் வருத்தமும்.வீட்ல எஸ்.டீ.டி. வசதி வெக்கல.அதான் வெளியில போய்ப்பண்ண வேண்டிருக்கு.
“உங்க மக , நேத்துக்கூட , பேசும்போது கேக்கறா, என்னம்மா,உன்னோட எம்பதாம் கல்யாணத்துக்குள்ளயாவது பத்திரிக்க வந்து சேருமான்னு “ஒரே சிரிப்பா இருந்துது “ “நீ வேறடி ,நேரங்காலம் தெரியாம ?”ன்னு கடிந்து கொண்டார். சுப்ரமணியன் ஸ்ற்றைட்ஃபார்வேர்டு பேர்வழி.லஞ்சம் வாங்கறது, இன்ன பிற விஷயங்கள்லாம் தப்பும்பார்.ரெண்டு மூணு பேர ஆஃபீஸுல புடிச்சும் குடுத்துருக்கார்.எல்லாம் கோடு கிழிச்சா மாதிரி நடக்கணும்.அவருக்கு இப்படி ஒரு பத்திரிக்கை ரெண்டு மாசத்துக்கு மேலயே போய்ச்சேரலேன்னதும் பொறுக்கல.
“வர வர எவனுக்குமே ரெஸ்பான்ஸிபிலிட்டிங்கறதே இல்லாமப்போச்சு, ஒரு மாரல் ரெஸ்பான்ஸிபிலிட்டி வேணாம் ?, கூரியர் கம்பனியிலருந்து ஒரு ஃபோனாவது பண்ணிருப்பானுங்களா ?என்ன ப்ராப்ளம்,என்னன்னு ஒரு விசாரிப்பும் இல்ல,” “ நீங்களும் நல்ல கூரியர்காரனாத் தேடிப்பாத்து தான் அனுப்பி வெச்சீங்க..என்னவோ “ராக்கெட் கூரியராம்” அவன் அத சந்திரமண்டலத்துக்கு அனுப்பி வெச்சுட்டானோ என்னவோ ? அடுத்த தடவ ஃபோன் பண்ணும் போது அதயும் கொஞ்சம் விசாரிங்க”…” நீ வேற ஜோக்கடிக்காதடி, நானே இங்க எரிச்சல்ல இருக்கேன்,” “ சரி சரி,வேகாத வெய்யில்ல போய்ட்டு வந்தா , வெங்காயக்காரனுக்கு கோவம் வந்த மாதிரித்தான் இருக்கும்…இருங்க, போய்க்கொஞ்சம் மோர் கொண்டுவாரேன்”..னு அடுக்களைக்குள் புகுந்தாள்.
அவள் உள்ளே சென்றதும், பாலித்தீன் பைக்குள்ளிருந்த கூரியர் சம்பந்தப்பட்ட அத்தனை பேப்பர்களையும் வெளியே எடுத்து சரி பார்த்துக்கொண்டிருந்தார்.பத்திரிக்கை அனுப்பினதற்கான ரசீது, அதுல கூரியர் கம்பனியோட சீல், அப்புறம் சென்னை கஸ்டமர் செல்’லுக்கு பேசின அத்தனை எஸ்.டீ.டி. பில்ஸ்,அத்தனையும் ஒன்றாகச்சேர்த்து பின்னடித்து வைத்திருந்தார்.ரசீதில் கம்ப்ளைண்ட் புக்கிங் நம்பர்களையும் அடிக்கோடிட்டு வைத்திருந்தார்.இடையில் ஒரு தடவை கம்ப்ளைண்ட் செல்லுக்கு பேசினப்போ , யாரோ ஒரு புண்ணியவான், சார், நீங்க ஓயாம போன் பண்றதவிட, உங்க கம்ப்ளைண்ட , ஒரு பேப்பர்ல எழுதி,எல்லா விவரங்களையும் அதுல சேர்த்து வெச்சு,ஜெராக்ஸ் காப்பி பில்ஸோட,ஃப்ரம் அட்றஸ், ட்டூ அட்றஸ்,கூரியர் ஜாப் நம்பர், எல்லாத்தையும் நோட் பண்ணி, எங்க சென்னை ஆஃபீஸுக்கு அனுப்பி வைங்களேன்”னு சொன்னத வெச்சு அதையும் செய்தார் சுப்ரமணியன், அந்த லெட்டருக்கும் ஒரு ஜெராக்ஸ் காப்பி எடுத்து வெச்சுக்கிட்டு அனுப்பி வைத்தார்.அது மட்டும் “மிகச்சரியாக”ப் போய்ச்சேர்ந்து விட்டது சென்னை ஹெட்ஆஃபீஸுக்கு,அடுத்த தடவை பேசினப்போ அதயும் கன்ஃப்ர்ம் பண்ணி வெச்சுக்கிட்டார்.
இப்படி ஏகப்பட்ட ஜெராக்ஸ் காப்பிகள்,எஸ்.டீ.டி. பூத் பில்கள்,ஒரிஜினல் ரசீது என அந்தப்பை கொஞ்ச நாளில் ஏகத்துக்கு வீங்கிக்கொண்டே சென்றது.ஒவ்வொரு தடவையும் ஃபோன் பண்ணப்போகும்போது அந்தப்பையை தூக்கிக்கொண்டே செல்வார்.கனமும் கூடி விட்டது, அதோடு எரிச்சலும்.
“திரும்ப எப்ப வரச்சொல்லிருக்கான்” “அடுத்த வாரம் , பெங்களூர்லருந்து ஏதாவது ரெஸ்பான்ஸ் வந்தா சொல்றோம் சார்ன்னு சொல்லிருக்கான்.” “ஏண்டி இது தான் கரெக்டான அட்றஸான்னு ஒன் மககிட்ட கொஞ்சம் வெசாரிச்சு சொல்றியா? “ நூறு தடவை கேட்டாச்சு, எனக்கு மனப்பாடமே ஆயிருச்சு, நீங்க தூக்கத்தில எழுப்பிக் கேட்டாக்கூட சொல்லுவேன்”னு எரிஞ்சு விழுந்தாள். “சரி சரி , தப்பு நடக்கறது சகஜம் தானே,ஓயாம அவனயே குத்தம் சொல்லிக்கிட்டிருந்தா , நாமளும் சரியாத்தான் எழுதினமான்னு தெரியணும்ல “என்று சமாளித்தார்.அட்றஸு என்னவோ கன்னடத்துல ஹொள,ஹொளா, ஹள, ஹளான்னு பேரு, ஒரு எழவும் வெளங்கல.ரெண்டு மூணு தடவ மாத்தியும் எழுதித் தொலச்சிருக்கார் அவர்.சிவகாமிக்கு தெரியாது அது. என்ன எழவுக்கு பெங்களூர்ல வேல பாக்கணும்,இப்ப எல்லா ஐ.டி.கம்பனியும் சென்னைல ஒரு பிராஞ்ச் வெச்சிருக்காங்களாம்.பேசாம இங்க மாத்தல் வாங்கிக்கிட்டு வந்துட வேண்டியது தானே.ஒரு எட்டு போய்ப்பாக்கறதுக்கும் வசதியா இருக்கும்.மதுரைக்கு வேணாம், அட்லீஸ்ட் சென்னைக்காவது வரலாம்ல.மாப்ள கிட்ட பேசினா அவருக்கு கோவம் வருது.” இங்க இருக்கிற க்ளைமேட் அங்க வராது மாமா,அதோட எனக்கும் உங்க மகளுக்கும் இங்கயே செட் ஆயிருச்சு,அதனால இனி அந்தப்பக்கம் வர்றதுங்கறது ஆகாது”ன்னு அவசரமாப்பேசி முடிச்சிடுவார். மாப்பிள்ளையாச்சே ஒரு அளவுக்கு தான் உரிமையோட பேச முடியும்.ரொம்ப பேசினாலும் தப்பு.சலித்துக்கொண்டார் அவர்.
அடுத்த வாரம் திரும்பப் படையெடுத்தார்.எஸ்டீடி பூத்காரன் அவரைப்பாத்தவுடனே , “என்ன சார் சென்னைக்கா?ன்னு கேட்டுட்டு அவனே நம்பரையும் போட்டு கையில் குடுத்துவிட்டான்,சுப்ரமணியனுக்கோ ஒரே எரிச்சல்,..ச்ச..நம்ம பிரச்னை ஊரெல்லாம் தெரிஞ்சு போச்சேன்னு. “ இந்தாப்பா, இனிமே நீ நம்பரெல்லாம் போட்டுத்தராத, நானே போட்டுக்குவேன்,” “இல்ல சார் வழக்கமா, இதே பையத்தூக்கிக்கிட்டு நம்ம பூத் பக்கம் வந்தீங்கன்னா சென்னை நம்பருக்கு, அதே கூரியர் கம்பெனிக்குதான் பேசுவீங்க..ரெகுலர் கஸ்டமர குஷிப்படுத்தணும்ல அதான் போட்டுக்குடுத்தேன்”…நீ ஒண்ணும் குஷிப்படுத்தல, அவனோட சேர்ந்துகிட்டு என்னப்படுத்தற என மனதிற்குள் நினைத்துக்கொண்டார்.கையில் ரிஸீவரை வாங்கிக்கொண்டு போனைக் கட் செய்தார். “ நானே போட்டுக்குவேன், நீ வேற எதுனா நம்பர் போட்டு அப்புறம் கன்னாபின்னானு பில் வந்துட்டா யார் கட்டறது? “ன்னு சொல்லிட்டு அதே நம்பரை டயல் செய்தார்.திரையில் தெரிந்த நம்பரைப் பார்த்துவிட்டு பூத்காரன் முணுமுணுத்துக்கொண்டே சிரித்துக்கொண்டான்.
முகத்தை வேறு பக்கம் திருப்பி “ ஹெலோ ராக்கெட் கூரியர் சென்னை கம்ப்ளைண்ட் செல்லா ?” “ சார் சுப்ரமணியம் சார் “ சொல்லுங்க என்றது குரல்.” எப்படிப்பா கண்டு புடிச்ச ?” “ அதான் உங்க குரல்லருந்தே தெரியுமே சார் !, அந்த பெங்களூர் கூரியர் தானே சார், போன வாரம் அங்கருந்து தகவல் வந்துச்சு,கிருஷ்ணன்ங்கற பேருக்குதானே அனுப்புனீங்க, “டோர் லாக்டு”ன்னு திரும்பி பெங்களூர் ஆபீஸுக்கே வந்திருச்சாம் சார்.” அங்க வீட்ல ஆளு இருக்காங்களா சார் ? “ நாலு வருஷமா அதே வீட்ல தான் இருக்கா என் மக,எங்கயும் போகல,சும்மா பொய்யெல்லாம் சொல்லக்கூடாது” “ இல்ல சார் பொய்யில்ல,” அப்ப அந்த கூரியர எனக்கு மதுரைக்கு அனுப்பி வை” “ ஓ அப்டியா சார், அது ரொம்ப முக்கியமான போஸ்ட்டா சார் ?” அதெல்லாம் ஒனக்கு எதுக்கு ?, அந்தக்கவர் எனக்கு திரும்பக் கெடக்கணும் , அவ்ளவு தான்” “ சரி சார், திரும்ப பெங்களூரூக்கு பேசி உங்க அட்றஸுக்கு அனுப்பி வைக்கச் சொல்றேன் சார் “ அவருக்கு ஒன்றுமே சொல்லத்தோணவில்லை.” சரி” ன்னு கோவமாக போனை வைத்து விட்டு , பூத்காரனுக்கு தெண்டம் கட்டி, ரசீதும் வாங்கிக்கொண்டு நடையைக்கட்டினார் சுப்ரமணியன்
“என்ன இப்ப என்ன சொன்னான்”ங்கற மாதிரி பார்த்துவிட்டு உள்ளே சென்று விட்டாள் சிவகாமி.இந்தத்தடவையும் ஏதோ கதை சொல்லி அனுப்பியிருப்பான்னு நினைத்து அவளுக்குள் சிரித்துக்கொண்டாள்.” டோர் லாக்டு”ன்னு பெங்களூர் செண்டருக்கே திரும்பி வந்துருச்சாம் பத்திரிக்கை,திரும்ப அத மதுரைக்கே அனுப்பி வைங்கடான்னு சொல்லிட்டு வந்துட்டேன்.” ம் சரி “ என்றவாறு தண்ணீர் டம்ளரை நீட்டினாள் “நான் இப்டி லொண்டா போட்றதப்பார்த்து உனக்கு வேடிக்கையாத்தானிருக்கு. சிரிப்பு தாங்கவில்லை சிவகாமிக்கு.” ம்ம்..என்ன செய்யறது , ரிட்டயர் ஆகி வீட்ல ஒக்காந்திருக்கிற உங்களுக்கும் பொழுது போகணும்ல “ இவளுக்கு எல்லாம் எளக்காரமாத்தானிருக்கு.எல்லாம் வேலக்கி போற வரைக்குந்தான் , அதுக்கப்புறம் ஒரு நாய் கூடச் சீண்ட்றதில்ல, அதுக்காக ரொம்பவெல்லாம் கேலி பண்ண மாட்டா, ஆனால் இப்ப அந்த தொனி அவரை ஏதோ பண்ணியது.
“ஏங்க , எதுக்கு ஓயாம இந்த வேகாத வெய்யில்ல நடந்து பூத் வரைக்கும் போய் போன் பண்றதுக்கு பேசாம இந்த செல் போன்லருந்து பண்ண வேண்டியது தானே.?” ரொம்பத்தான் கரிசனம்.” எனக்கென்ன தெரியாதுன்னு நெனச்சியா ? ப்ரீபெய்டு இதுல பேசறதுக்கு பில் வராது, அப்புறம் நாம இவ்ளவ் பேசினதுக்கு அத்தாட்சியே இல்லாமப்போயிடும்.” “ ம்…எனக்கு இதெல்லாம் என்ன தெரியுது ? வெய்யில்ல அலயறீங்களேன்னு சொன்னேன்.”
மத்தியான வெய்யில் சுட்டெரித்துக்கொண்டிருந்தது.வத்தக்குழம்பு ஊற்றிய சோற்றையும், காரட் பொரியலையும் சாப்பிட்டுவிட்டு ஆயாசமாகப்படுத்திருந்தார் சுப்ரமணியன்.சிவகாமி அடுக்களைக்குள்ளேயே முடங்கிக்கொண்டாள்.” எடி “ திடுக்கென குரல் வந்ததும் ,என்னாச்சு, என்ன , என்றவாறு,வெளியே வந்தாள்.” இல்ல கன்ஸ்யூமர் கோர்ட் போனா என்ன ? இந்தக்கூரியர்க்காரன ஒரு இழுப்பு இழுத்துவிட்டாதான் சரியா வரும்” “ ம்…இதுல கோர்ட்டுக்கு வேற போகப்போறீங்களாக்கும் , அப்புறம் அதுக்கும் நடையா நடக்கணும், சும்மா இருங்க, இந்த வயசான காலத்துல அதெல்லாம் தேவயா ? “ நீ ஒண்ணு , கன்ஸ்யூமர் கோர்ட்டுக்கு போறதுக்கு முன்னாடி , நம்ம நாலாவது வீடு கோபாலன் பையன் , வக்கீலுக்கு படிச்சுட்டு,வேங்கடராமன் கிட்ட அஸிஸ்டென்டா இருக்கான்ல, அவங்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு , அதுக்கப்புறம் போவோம்..” சரி சரி , எங்க போறதுன்னாலும் சாயங்காலம் வெய்யில் தாழப் போங்க, இப்போதைக்கு கொஞ்சம் படுத்து ஒறங்குங்க..” என்றாள்.அதுவும் சரி , சாயங்காலம் பார்த்துக்கலாம்னு படுத்துக்கொண்டார்.
“என்னப்பா கோபாலா, உன் பையன் வந்துட்டானா ? “ ம் வந்துட்டான்,என்ன எதாவது கேஸ் விஷயமா ?ன்னார் கோபாலன்.வர்றவன் எல்லாம் கேஸோட தான் வரணுமா ?ரொம்பத்தாம் திமிர் இவனுக்கு.தாஸில்தார் ஆபீஸுல குப்ப கொட்டிட்டு இருந்தவனுக்கு இப்டி ஒரு வாழ்வு.” இல்ல சின்ன விஷயந்தான் , கன்ஸ்யூமர் கோர்ட் பத்தி விசாரிக்கணும்,அதான், சரி சரி உள்ள வாங்க “ சீனிவாசா , “ இதோ வந்துட்டேன்பா , உள்ளிருந்து குரல் கேட்டது. “நாலாவது வீடு சுப்ரமணி மாமா வந்துருக்கார், ஏதோ கன்ஸ்யூமர் கோர்ட் விஷயமாம், கொஞ்சம் விசாரி.” வாங்க மாமா” , ரூம்ல உக்காந்து பேசலாம் என்றவன், உள்ளே லைட் போட்டுவிட்டு சேரை இழுத்து உக்காருங்க என்றான்.” என்னப்பா ப்ராக்டீஸெல்லாம் எப்டி போய்ட்டிருக்கு ?” என்றவர் “ இந்தக் கூரியர் கம்பனிய கன்ஸ்யூமர் கோர்ட்ல இழுக்க முடியுமான்னு கேக்கலாம்னு வந்தேன்.” “ஓ செய்யலாமே..விஷயம் என்னன்னு சொல்லுங்க, செஞ்சு குடுக்கறேன்”.எல்லாவற்றையும் விளக்கினார். “ இவ்ளவ் தானே , இவனக் கோர்ட்ல இழுத்து விட்டு நல்ல ஒரு அமௌண்ட் வாங்கித்தாரேன்”னு போல்டாப் பேசினான்.திருப்தியாக இருந்தது அவருக்கு.” பேப்பர்ஸ் எல்லாம் எடுத்துட்டு வாங்க,சரி பாத்துட்டு பின்னால கேஸ் போட்றலாம்” இல்லப்பா, எல்லாம் கையோடவே கொண்டு வந்துருக்கேன்’ பாரு என்று அவனிடம் பாலித்தீன் பையை நீட்டினார். “ பை” ரொம்பப் பெருசா இருக்கே , ஏதாவது ரெஜிஸ்டெர், நோட்புக் எல்லாம் வெச்சிருந்தா எடுத்துடுங்க” “ அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா, எல்லாம் அந்த கூரியர் சம்பந்தப்பட்ட விஷயந்தான்.” என்றார் அயர்ச்சியாக.”அப்படியா..!” என்றவன் பையை வாங்கி , அதிலிருந்த பேப்பர்களை மொத்தமாக வெளியே எடுத்த ஒவ்வொன்றாகச் சரி பார்த்தான்.” எல்லாம் பில்லெல்லாம் சரியா தேதியோட வெச்சுருக்கீங்களே , பர்ஃபெக்ட்டா இருக்குது , மாமான்னா மாமாதான்.” மகிழ்ச்சியில் குளிர்ந்தார். “ ஒண்ணு பண்ணுங்க , எனக்கு ஒரு வாரம் டைம் குடுங்க, என்ன செக்ஷ்ன்ல எப்டி கேஸ் போடலாம்னு விசாரிச்சுப்பாத்துட்டு உங்களுக்கு தகவல் சொல்றேன். “ சரிப்பா, உங்கிட்ட பேசினப்புறம் தான் எனக்கு நம்பிக்கையே வந்திருக்கு “ என்ன தான் சொல்றான் கூரியர்லருந்து? “ “ அவனுங்க என்ன சொல்லப்போறானுங்க, அட்றஸ் தப்பா இருக்கும், டோர் லாக்டு”ன்னு இல்லாத ரீசனெல்லாம் கண்டுபுடிச்சு சொல்லிக் காலம் கடத்துறானுங்க. “ சரி சரி , நீங்க போங்க, நான் பாத்துக்குறேன்.”என்றவன் முழுக்காகிதங்களையும் பைக்குள் வைத்து , அதைத்தூக்கி அருகிலிருந்த அலமாரிக்குள் வைத்தான்.
சிவகாமி கேட்டுக்கொண்டிருந்தாள், “என்ன அந்தப்பையன் என்னதான் சொல்றான் ? “ பேப்பர்ஸ் எல்லாம் பக்காவா இருக்கு, கேஸ் போட்றலாம்னு ஒரு வாரம் கழிச்சு வரச்சொல்லிருக்கான்.”அப்பாடா இப்பவாவது ஒரு விடிவுகாலம் வந்துதேன்னு சந்தோஷப்படுங்க” என்றவள் பிறகு , எதுக்கு இந்த ஒரு பத்திரிகைக்கு இவ்ளவு அலயணும்,எல்லாம் முடிஞ்சு போச்சு,அது போய் சேர்ந்தா என்ன, சேராட்டா என்ன, சும்மா விட வேண்டியது தானே,தேவையில்லாத அலச்சல் தான்” என்று மனதிற்குள் நினைத்து சிரித்துக்கொண்டாள்.ஒரு வீம்பு புடிச்சா அத நடத்தியே காட்றது, தெரியாதா அவளுக்கு, முப்பத்தஞ்சு வருஷம் கூடவே குப்ப கொட்னவளுக்கு.சொன்னாமட்டும் மூக்குக்கு மேல கோவம் வரும், சுள்ளுன்னு விழுவார்.
“மாப்ள என்ன நினைப்பார் நம்மளப்பத்தி , பத்திரிக்கை நேர்ல வந்து குடுக்காம,அழைக்காம,கூரியர்ல அனுப்புனதும் போய்ச்சேராம , நாளப்பின்ன அவங்க வீட்லருந்து சொல்லிக்காட்றதுக்கு வசதியால்ல எல்லாம் நடக்குது ?” “ ம்..மாப்ள, இதத்தான் உங்ககிட்ட வந்து கேக்கப்போறாராக்கும்? , அவருக்கு ஆயிரம் ஜோலி “ “ ஏதோ வெய்யில்ல அலயாம சாயங்கால நேரத்துல போய் இந்தப் பையன பாக்கப்போறீங்களே, அதுவே போதும் எனக்கு” என்று முடித்துக்கொண்டாள்.
டீ.வி.யை ஆன் பண்ணினார்,ராக்கெட் கூரியர் விளம்பரம், இல்லாத ஜோடனையெல்லாம் பண்ணி, சின்னஞ்சிறுசுக காதல் கடிதம் அனுப்புறதும், அத அவ வாங்கி முத்தம் குடுக்குறதுமா ஓடிக்கிட்டிருந்தது.கோவத்தில டீ.வி.யை ஆஃப் பண்ணி விட்டார்.”ச்சீ எதுக்கு எத வெச்சு வெளம்பரம் பண்றதுன்னு தெரியாது ?” என்றவரைப் பார்த்து சிவகாமி சிரித்துக்கொண்டாள்.
பிறகு மறந்தே போய்விட்டார் அந்தப்பிரச்னையை.காலையில் வாக்கிங் போவதும் வருவதும் சரி, பிறகு வெளியே கிளம்புவதேயில்லை.ஒரு வாரம் கழித்து கோபாலன் வீட்டிற்கு விளக்கேற்றும் நேரம் பார்த்து சென்றார்.” என்னப்பா சீனிவாசா, ஏதானும் தகவல் கிடைக்குமா ?” மாமா, சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க,கோவிச்சுக்காதீங்க.. நீங்க குடுத்த பேப்பர்ஸ், அப்புறம் அந்த பில்ஸ்,எல்லாம் அந்த பையில தான் வச்சு அலமாரிக்குள்ள வெச்சிருந்தேன்.கரப்பான் , ராமபாணப்பூச்சி தொல்லை அதிகமாயிட்டதால , எல்லாத்தையும் வெளிய எடுத்து வெச்சுட்டு மருந்தடிச்சு வச்சுருந்தேன்.திருப்பி எல்லா கேஸ் கட்டுகளையும் வெக்கப்போறப்ப உங்க பை மட்டும் எங்கயோ மிஸ் ஆயிடுச்சி.அதான் ரெண்டு நாளா தேடிட்டுருக்கேன்.” என்னப்பாது, இப்டி பண்ணிட்டியே” தொண்டை அடைத்தது அவருக்கு.” இப்டி அஜாக்ரதையா இருக்கலாமா ? நல்லாத்தேடிப்பாருப்பா, எல்லாக் காப்பீஸும் அதுக்குள்ள தான் இருக்கு, எங்கிட்ட வேற எந்த பேப்பரோ, ஆதாரமோ இல்ல,அத வெச்சிதான் மூவ் பண்ணணும்” “ தெரியும் மாமா நீங்க போய்ட்டு ஒரு நாலு நாள் கழிச்சு வாங்க, தேடி வெக்கிறேன், எங்கயும் போயிருக்காது , இங்கதான் எதுனா பைக்குள்ள இருக்கும்,நம்பர் போட்டு வெக்காதது தப்பாப்போச்சு,இருந்தாலும் கண்டுபுடிச்சிடுவேன் “ என்றான். “ சரிப்பா” என்று சலித்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தார் அவர்.
“என்ன தம்பி என்ன சொல்லுது ? கேஸ் எப்பப் போடலாம்னு ?” என்றாள் சிவகாமி “ ம்..போடலாம். சரியான செக்சன் பார்த்து போடணும், இப்ப ஒரு க்ரிமினல் கேஸ் விஷயமா பிஸியா இருக்கேன், நாலு நாள் கழிச்சு வாங்க”ன்னு சொல்லிருக்கான்.கட்டு தொலைந்து போன விஷயத்தை அவளிடமிருந்து மறைத்துவிட்டார்.சந்தேகத்துடன் அங்கிருந்து நகர்ந்த சிவகாமி,அவரின் முகம் வாடியிருப்பதை கவனிக்கத்தவறவில்லை.
நாலு நாள் கழித்து பார்க்க சென்றார் , அன்று சீனிவாசன் இன்னும் வீடு திரும்பவில்லை, கோபாலனுடன் பேசிக்கொண்டிருந்து விட்டு,அவர் வீட்டுக் கழனித்தண்ணியை ( கேஸ் விஷயமா பாக்க வர்ற எல்லாருக்கும் இதுதான் கெடக்கும் போல ) குடித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தார்.இப்படி அலைவது கொஞ்ச நாள் தொடர்ந்தது.”பை” கிடைக்கிற வழியைக்காணோம்.இடையில் அந்த கூரியர் செல்லுக்கு ஒரு தடவை போன் பண்ணினார்.” இன்னும் ஒரு வாரத்துல வந்துரும் சார் “ “ம் வருது , மகனே உன்னத்தூக்கி உள்ள போட்றேன் இரு”ன்னு சபித்துக்கொண்டார்.
“ஏங்க, நீங்களும் நடையா நடக்கறீங்க, அந்த கோபாலன் வீட்டுக்கு, என்னதான் சொல்றான் அந்தப்பையன், அவனே இப்ப தான் படிப்ப முடிச்சுட்டு ப்ராக்டீஸ் பண்ணிட்டுருக்கான், அவனுக்கு அவ்வளவா விஷயம் பத்தாது, அவங்கிட்ட போறதுக்கு பதிலா வேற நல்ல வக்கீல் கிட்ட போலாமேன்னு” சிவகாமி சொல்லிக்கொண்டிருந்தாள். “ போலாம் தான் , எல்லாப் பேப்பர்ஸும் இருந்தா போலாம் “என்றார் சிரித்தபடியே “ என்ன புரியலயே “ “ எடி அந்தப் பையன் ஏதோ ஒதுங்க வெக்கிறேன் பேர்வழின்னு சொல்லி , நம்மளோட பேப்பர்ஸ் எல்லாம் காணாம அடிச்சுட்டான்” ன்னு போட்டு உடைத்தார். சிரிப்பு மாளவில்லை சிவகாமிக்கு…இரண்டு பேருக்குமே அன்று முழுவதும் சிரித்து வயிறு புண்ணாகிப்போனது.
அடுத்த நாள் மகளிடமிருந்து வந்த போனில் விலாவரியாக விளக்கிக்கொண்டிருந்தாள் சிவகாமி.” அந்த வக்கீலுமா அப்டி இருக்கணும், கூரியர்காரன் தான் தொலச்சான்னா , இவனுமில்ல தொலச்சுட்டு நிக்கிறான்” கூடமே அதிர்ந்தது சிரிப்பொலியில்.” அப்பாவ , அந்த வக்கீல் பையன் மேல ஏதாவது கேஸ் போடமுடியுமான்னு விசாரிக்கச்சொல்லு “ என்று சொல்லி மேலும் சிரிப்புக்கு உரமேற்றினாள் மகள்.
கடைசி வரை அந்தப்”பை” கிடைக்கவேயில்லை வக்கீல் சீனிவாசனுக்கு,இவரும் அலைந்து அலைந்து பார்த்து விட்டுப் பிறகு சோர்ந்து போய் அதைப்பற்றி பேசுவதையே விட்டுவிட்டார்.இப்படியாக ரெண்டு மாதங்கள் கழிந்தது.
ஒரு நாள் காலை பதினோரு மணியளவில் , காலிங் பெல் ஒலிக்கும் சத்தம் கேட்டது.” சிவகாமி ..யாருன்னு பாரு “ “ கதவைத்திறந்தாள் , பிறகு ஏதோ கையெழுத்துப்போட்டுவிட்டு வாங்கிக்கொண்டு உள்ளே வந்து “ உங்களுக்கு தான் கூரியர் வந்திருக்கு “ என்று அந்தக் கவரை அவரிடம் கொடுத்துவிட்டு நமுட்டுச்சிரிப்புடன் சென்றாள். நுனிகளில் கிழிந்து , நைந்து போய்,முகவரி எழுத்துகள் சரியாகத் தெரியாமல்,அவர் பெங்களூருக்கு அனுப்பிய “கல்யாணப்பத்திரிக்கை” தான் திரும்ப வந்திருந்தது.
“மனத்தினும் கடிது செல்லும் உங்கள் கடிதம் “ என்ற ‘ராக்கெட் கூரியர்’ கம்பனியின் வாசகம் மட்டும் தெளிவாகத் தெரிந்தது அதில்..!
n சின்னப்பயல்
– Chinnappayal@gmail.com
- கோமாளி ராஜாக்கள்
- மோனநிலை..:-
- பலூன்
- சொர்க்கவாசி
- பம்பரம்
- இவர்களது எழுத்துமுறை – 40 பி.எஸ்.ராமையா
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -12
- கலாமணி பரணீதரனின் “மீண்டும் துளிர்ப்போம்” – சிறுகதைகள் தொகுப்பு — நூல்விமர்சனம்
- வழங்கப்பட்டிருக்கின்றதா?
- மிச்சம் !
- இருள் போர்வைகளின் முடிச்சுக்கள்
- தக திமி தா
- யுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்கள்
- ஒரு கொத்துப் புல்
- ராக்கெட் கூரியர்
- அடங்கிய எழுத்துக்கள்
- வட்டத்தில் புள்ளி
- வேரற்ற மரம்
- பிறப்பிடம்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (காதலின் புனித பீடம்) (கவிதை -36 பாகம் -2)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -2)
- ஜப்பான் புகுஷிமாவில் 2011 மார்ச் சுனாமியால் நாசமடைந்த நான்கு அணுமின் உலைகள் -1 மே 20, 2011
- தொலைந்து போன சந்தோசங்கள் – சைக்கிள்
- இந்தியப் பொருளாதாரத்தின் உண்மையான பிரச்சனைகள்
- “தேசிய ஆலோசனைக் குழுமம்” தயாரித்துள்ள “மத வன்முறை மசோதா” – ஒரு கருத்தாய்வு
- ஏதுமற்றுக் கரைதல்
- போராட்டத்திலிறங்கும் இடம்பெயர்ந்த மக்கள்
- காஷ்மீர் பையன்
- பாதைகளை விழுங்கும் குழி
- பண்பாட்டு உரையாடல்
- பனியூறிய மேகங்கள் கவிந்த வேளிமலையின் உருவம்
- தாமரை இலையும் சின்னக்குத்தூசியும்
- செக்ஸிஸம், பெண்ணியம் – ஓர் ஆணின் குறிப்புகள்
- உறையூர் தேவதைகள்.
- காரைக்குடி கம்பன் கழகத்தின் புதுமையான முயற்சி
- குழந்தைகளின் நலம் – சமுதாய நலவாழ்வின் அடித்தளம்! (ஸ்ரீ ராம சரண் அறக்கட்டளையின் கல்விப்பணி – ஒரு அறிமுகம்)
- மீன்பிடி கொக்குகள்..
- செல்வி இனி திரும்பமாட்டாள்!
- வழக்குரை மன்றம்
- சில மனிதர்கள்…
- ’ரிஷி’யின் கவிதைகள்:
- ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இசை நாதம் பற்றி (கவிதை -44 பாகம் -2)