போராட்டத்திலிறங்கும் இடம்பெயர்ந்த மக்கள்

This entry is part 27 of 43 in the series 29 மே 2011

இன்று மே மாதம் 16ம் திகதி. நான் கொழும்பில் இருக்கிறேன். வீதி முழுதும் புத்தரின் பிறந்த நாளைக் கொண்டாடும் மகிழ்ச்சி எதிரொலிக்கிறது. எனது கைத்தொலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. எனக்கு மட்டுமல்ல. அது நாட்டிலிருக்கும் எல்லோருக்கும் அனுப்பப்பட்டவோர் தகவல்.

 

‘நோயற்ற சுக வாழ்வோடு நீண்ட ஆயுள் கிடைக்கட்டும்’ எனும் வாழ்த்துச் செய்தி அது. அவ் வாழ்த்தினை நினைவிலிருத்திக் கொண்டு நான் இப்பொழுது கிழக்குக்குச் செல்கிறேன்.

 

இப்பொழுது நான் திருகோணமலை – சேருநுவர வீதியிலிருக்கும் கிளிவெட்டி இடம்பெயர் முகாமுக்கு முன்னால் இன்னும் சில நண்பர்களுடன் நிற்கிறேன். இடம்பெயர் முகாமுக்கு முன்னாலிருக்கும் பாதையின் மறுபுறம் இருக்கும் வெற்றுவெளியின் மூலையில் தகரக் கொட்டகையொன்று இருக்கிறது.

 

‘அதோ இருக்கிறது பாடசாலையொன்று’ மொழிபெயர்ப்பாளராக வந்த குமார் அப் பகுதியை விரல் நீட்டி சுட்டிக் காட்டியபடியே சொன்னார்.

 

பாடசாலையொன்றெனச் சொல்லப்பட்ட சிறிய தகரக் கொட்டகைக்குள் நான் நுழைந்தேன். பாடசாலையொன்று எனச் சொல்லப்பட்ட போதிலும் அச் சிறிய தகரக் கொட்டகைக்குள் இரண்டு பாடசாலைகள் இருக்கின்றன. ஒன்று திரு/குன்னத்தீவு நாவலர் ஆரம்பப் பாடசாலை, மற்றையது திரு/ சுடைக்காடு பாரதி ஆரம்பப் பாடசாலை. இத் தகரக் கொட்டகைக்குள் முதலாம் ஆண்டிலிருந்து ஐந்தாம் ஆண்டு வரையிலான பிள்ளைகள் இன்று கல்வி போதிக்கப்படுகிறார்கள். எவ்விதத்திலேனும் பாடசாலையொன்று எனச் சொல்லமுடியாத 60 X 20 அடிகள் நீள அகலம் கொண்ட இத் தகரக் கொட்டகைக்குள் குன்னத்தீவு பாடசாலைப் பிள்ளைகள் 41 பேரும், சுடைக்காடு பாரதி பாடசாலைப் பிள்ளைகள் 32 பேரும் கல்வி பயில்கிறார்கள். அனேகமான பிள்ளைகள் நிலத்தில் அமர்ந்துதான் எழுத்துக்களை எழுதுகிறார்கள். எமது ‘தேசாபிமான ஜனாதிபதி’ துரத்தத் துணிந்த பேன் கீ மூன்கள் தந்த கேன்வஸ் துணிகளில்தான் இக் குழந்தைகள் இன்னும் அமர்ந்திருந்திருக்கிறார்கள்.

 

பாடசாலையொன்றுக்குத் தேவையான எதுவுமே இல்லாத இடமொன்றில், ‘என்ன குறைகளிருக்கின்றன?’ என்று கேட்கும் சம்பிரதாயமான கேள்வியை எனது மனதுக்குள்ளேயே சிறைப்படுத்திக் கொண்டேன். இரண்டு பாடசாலைகளுக்குமே அதிபர்களோடு சேர்த்து ஐந்து ஆசிரியர்களே இருக்கின்றனர். எங்களது கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்குப் பதிலாக குன்னத்தீவு பாடசாலையின் அதிபராகக் கடமையாற்றும் திரு. எஸ். தங்கேஸ்வரம் இவ்வாறு கூறினார்.

 

“கோபப்படாதீர்கள் ஐயா. பிரதேசக் கல்விக் காரியாலத்தின் அனுமதி பெற்று வாருங்கள். அனுமதியில்லாமல் எங்களால் எதுவும் சொல்ல முடியாது.”

 

கேட்ட கேள்விகளுக்கு பதில்களற்றுப் போனாலும் காண்பவைகளை எழுத எங்களால் முடியும். நான்கு பக்கங்களும் தகரங்களால் அடைக்கப்பட்ட 60 X 20 தகரக் கொட்டகைக்குள் நிலத்தில் அமர்ந்து, வியர்வை வழிய வழிய வாழ்க்கையைக் கொண்டு செல்லத் துடிக்கும் இச் சிறு பிள்ளைகளுக்காக, இவற்றை நாட்டுக்கே சொல்வது எங்கள் கடமை.

 

“நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள் பிள்ளைகளே?”

 

எங்களது மொழிபெயர்ப்பாளர் குமார், தமிழில் கேட்ட கேள்விக்கு ஒரு துடிப்பான குழந்தை இவ்வாறு சொன்னது.

 

“அதோ தென்படும் முகாமில. எனது அண்ணாவென்றால் குன்னத்தீவுல எங்க வீட்டில பிறந்தாராம்.”

 

“பிள்ளையோட வயது என்ன?”

 

தமிழில் விரல் விட்டு எண்ணிய குழந்தை ‘ஐந்து வயது’ எனச் சொன்ன போது நண்பன் எனது முகம் நோக்கினான்.

 

“இப்போ எங்கே அந்தக் கிராமத்து வீடு?”

 

“தெரியாது. எங்களை அங்க போக விட மாட்டாங்களாம்”

 

குழந்தை ரகு ‘டீச்சரிடம் புத்தகத்தைக் காட்டி வருகிறேன்’ எனச் சொல்லி எங்களை விட்டும் விலகிப் போனது. குழந்தை ரகு நிலத்தில் அமர்ந்து எழுத்துக்கள் எழுதியிருந்த அதனது கொப்பியையும் எடுத்துக் கொண்டு ஆசிரியையிடம் ஓடியது. பிள்ளைகளின் ஆசிரியை அப்பாவித்தனமாக எங்களைப் பார்த்துப் புன்னகைத்தபடி கொப்பியைக் கையில் வாங்கிக் கொண்டார்.

 

குண்டுச் சத்தத்துக்கு சிறிய எழுத்துக்கள் கோணலாகும்

என்ன செய்வது குழந்தையே

ஆசிரியை நான் மாணவி நீ

எனினும் நாம் ஒரு வகுப்பில்……”

 

பாடகி தீபிகா பாடும் இப் பாடல் எனது நினைவில் எழுந்தது. குண்டுச் சத்தம் இல்லா விடினும் இன்னும் இக் குழந்தைகளின் எழுத்துக்கள் கோணல்தான். அது ஏனெனில் தகரக் கொட்டகையொன்றுக்குள் வியர்வை வழிய வழிய நிலத்திலமர்ந்து எழுத்துக்களை எழுத வேண்டியிருப்பதால்தான்.

 

இக் குழந்தைகளிடமிருந்து விரைவிலேயே விலகிச் செல்ல மனம் இடந் தரவில்லையெனினும் நாங்கள் அங்கிருந்து விடை பெற்றோம். ஏனெனில் அரச அதிகாரிகளின் அனுமதியற்று அழைக்கப்படாமலேயே சென்ற எங்கள் பயணமானது, தகரக் கொட்டகையொன்றுக்குள் வியர்வையில் நனைந்தபடி இக் குழந்தைகளின் கல்விக் கண் திறக்கப் பாடுபடும் இந்த ஆசிரியர்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் எனத் தோன்றியமையால்தான்.

 

இவ்வளவு நேரமும் அமைதியாக இருந்த அதிபர் நாங்கள் வெளியேற முற்படுகையில் இவ்வாறு கூறினார்.

 

“எங்களால் வேறு குறைபாடுகளையென்றால் கொஞ்சம் கொஞ்சமாகவாவது நிவர்த்தி செய்து கொள்ளலாம். ஆனால் குழந்தைகளுக்கு இருக்கிற பெரிய பிரச்சினை இருக்க வீடில்லாததுதான்.”

 

அடுத்ததாக நாங்கள் கிளிவெட்டி இடம்பெயர் முகாமுக்குப் போனோம். அவர்களது முழு வாழ்க்கையுமே 12 X 12 அடி தகரக் கொட்டகைக்குள் சிறைப்பட்டிருக்கிறது. பிள்ளைகளின் பாடசாலை வேலைகள், சமையல், பெற்றோரின் தாம்பத்திய உறவு எல்லாமுமே 12 அடிகளுக்குள் சிறைப்பட்ட வாழ்க்கை. ஏக்கர் சிலவற்றுக்குள்ளான சிறிய நிலத்தில் 575 குடும்பங்கள். அவர்கள் எல்லோருக்குமே இருப்பது ஒரே மாதிரியான நடைமுறை வாழ்க்கை. அவ் வாழ்க்கை நடைமுறைகளை அவர்களுக்குப் பதிலாக எங்களிடம் சுருக்கமாகச் சொன்னார்  கிழக்கு பிரதேச சபையின் மக்கள் விடுதலை முன்னணி அமைச்சர் திரு விமல் பியதிஸ்ஸ.

 

“இன்று இவ்வாறு இங்கு சிறைப்படுத்தப்பட்டிருப்பது ஏக்கர் கணக்கில் நிலங்கள் இருந்த, வீடு வாசல்கள் இருந்த, நல்ல உழைப்பினால் பயன் தரக் கூடிய விவசாய நிலங்கள் இருந்த சாம்பூர் மக்கள். சாம்பூரைத் தமிழில் சம்பூர் என அழைக்கிறார்கள். சாம்பூரானது அரிசி, காய்கறிகள், பால், குளத்து மீன்கள், கருவாடு போன்ற உணவு வகைகளினால் நிறைந்திருந்த ஓர் பிரதேசம். இப் பிரதேசத்தில் மட்டும் 47 குளங்கள் இருக்கின்றன.  ஆயிரக்கணக்கிலான பால் தரும் மாடுகள் இப்பொழுது காட்டு மாடுகளாகி விட்டன. இன்று இவ்வாறு சிறைப்படுத்தப்பட்டிருக்கும் மக்கள்தான் மூதூர் நகரத்திற்கு கருவாடு, மரக்கறி வகைகள், அரிசி போன்றவற்றை வழங்கியவர்கள். இன்று இந்த கிளிவெட்டி முகாமில் 575 குடும்பங்களைச் சேர்ந்த 1755 பேர் இருக்கிறார்கள்.

 

சாம்பூர் எனப்படுவது ஐந்து கிராம சேவகர் பிரிவுகளின் மக்கள் வாழ்ந்த பிரதேசம். அவை குன்னத்தீவு, நவரத்தினபுரம், கடற்கரைச் சேனை, சாம்பூர் கிழக்கு, சாம்பூர் மேற்கு ஆகியன. இங்கு அனாதரவாக்கப்பட்டிருப்பது அவற்றின் மக்கள். இங்கு இவர்கள் எட்டு வருடங்களாக இருக்கிறார்கள். நான் இதுபற்றி கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கேட்டபோது அதிகாரி, ‘அது தேசியப் பாதுகாப்பு சம்பந்தமான பிரச்சினை..அதனால் அது எமக்குச் சம்பந்தப்பட்டதல்ல’ என்று கூறினார். இப்பொழுது இந்தச் சாம்பூரானது இந்தியாவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. குறைந்தபட்சம் இலங்கை இராணுவத்துக்குக் கூட அங்கு செல்ல முடியாதென நாங்கள் நினைக்கிறோம். அது தேசியப் பாதுகாப்புக்கு நல்லதா என நாங்கள் கேட்கிறோம்.”

 

அமைச்சர் விமல் பியதிஸ்ஸவினுடைய நீண்ட விளக்கத்தின் பிறகு நாங்கள் முகாமினுள்ளே மக்களைச் சந்தித்தோம். அவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு தண்ணீர் பவுஸர்களே கிடைக்கின்றன. 575 குடும்பங்களைச் சேர்ந்த 1755 பேருக்கு இந்த இரண்டு பவுஸர்களில் 6000 லீற்றர் தண்ணீர் வந்தால் 1755 பேரில் ஒருவருக்குக் கிடைப்பது 3 1/2 லீற்றரிலும் குறைந்த அளவே. கழிப்பறைத் தேவைக்கு, குளிக்க, துணி தோய்க்க, குடிக்க எல்லாவற்றுக்கும் அவ்வளவுதான். அவர்கள் இந் நரகத்தில் வாழும் வாழ்க்கையைத் தீர்மானிக்க இதுவே போதாதா என்ன? அடுத்ததாக, நாட்டுக்கு அரிசி வழங்கிய இம் மக்கள் மத்தியில் மூவர் அடங்கிய குடும்பமொன்றுக்கு ஒரு மாதத்துக்குக் கிடைப்பது 26 கிலோ அரிசி, தேங்காயெண்ணெய் 1 1/2 லீற்றர், 3 கிலோ பருப்பு மாத்திரமே. அவர்கள் ஒருமித்த குரலில் கேட்பது ‘எங்களுக்கு வேறு எதுவுமே வேண்டாம். எங்களை எங்கள் ஊர்களுக்குச் செல்ல அனுமதியுங்கள்’ என்ற வேண்டுகோளை மாத்திரமே.

 

ஐந்து வருடங்களாகக் கேட்கும் அவர்களது வேண்டுகோளானது செவிட்டு யானைகளிடத்தில் வீணை வாசிப்பது போல ஆகியமையால் அவர்கள் தமது உரிமைகளுக்காக வீதியிலிறங்கத் தீர்மானித்திருக்கிறார்கள். மக்கள் விடுதலை முண்ணனிக் கட்சி, முண்ணனியில் வந்து நின்றிருக்கிறது. சேருநுவர – திருகோணமலை வீதியில் முகாமுக்கு முன்னே வந்து நின்று கிளிவெட்டி இடம்பெயர் முகாம் மக்கள் தங்களது போராட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். இவ்வளவு காலமும் அடங்கிப் போயிருந்த மக்கள் போராட்ட அட்டைகளை உயர்த்தியபடி கோஷமெழுப்புகிறார்கள்.

 

‘சாம்பூர் எங்களது இடம்! எங்களுக்கு எங்களது இடம் வேண்டும்!!’

 

அந்தப் பாடசாலையில் நாங்கள் சந்தித்த சிறு குழந்தையின் கையிலும் ஒரு போராட்ட அட்டை இருந்தது. கிளிவெட்டி முகாமானது நாளை பற்றியெரியக் கூடிய மக்கள் போராட்டத்தின் முதல் வித்தோடு திரும்பவும் இரவின் இருளில் மூழ்கியது. நான் மீண்டும் கொழும்பு திரும்பினேன். கொழும்பானது வெசாக் தோரணங்களாலும், மின்விளக்குகளாலும் களைகட்டியிருந்தது.

 

நான் எனது கைத்தொலைபேசிக்கு வந்திருந்த ஜனாதிபதியின் வாழ்த்துக் குறுஞ்செய்தியை மீண்டும் படித்துப் பார்த்தேன்.

 

‘நோயற்ற சுக வாழ்வோடு நீண்ட ஆயுள் கிடைக்கட்டும்’

 

கிளிவெட்டி அகதி முகாமில் தினமொன்றுக்குக் கிடைக்கும் 3 1/2 லீற்றர் தண்ணீரில், சிறிய பெரிய எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ள வேண்டியிருக்கும் மக்களுக்கு இது எவ்வாறு பொருந்தும்? அவர்கள் வாழ்ந்த இடத்தை இழக்கச் செய்து, பலாத்காரமாக முகாம்களுக்குள் இழுத்துப் போடப்பட்டிருக்கும் மக்களுக்குக் கிடைக்காத சுக வாழ்க்கை இருப்பது ஜனாதிபதியின் குறுஞ்செய்தியில் மாத்திரமே.

 

ப்ரியந்த லியனகே

தமிழில்எம்.ரிஷான் ஷெரீப்,

இலங்கை

 

 

Series Navigationஏதுமற்றுக் கரைதல்காஷ்மீர் பையன்
author

எம்.ரிஷான் ஷெரீப்

Similar Posts

Comments

  1. Avatar
    latha ramakrishnan says:

    The very fact that this article is written by a Sinhalese goes to show that not all Sinhalese remain insensitive to the plights of their suffereing Thamizh brethren. The need of the hour is to spread this sensitivity and awareness across the Sinhalese as well as Thamizhs.

    People want to live in peace and brotherhood. It is always the powers-that-be(and the arms-dealers) who want people to be in perpetual conflict.

    it is very painful that the Thamizh people of Sri Lanka are still kept in detention camps and transit camps and are languishing day in and day out, hoping against hope to return to their homes and hometowns, with even the basic rights and facilities denied to them and a life of dignity not at all in sight.

    No country can afford to treat its citizens in such a callous manner and yet hope to be worthy of the phrase ‘civilized society’.

    in the name of peace and brotherhood, in the name of liberty,equality and fraternity i appeal to all right thinking Sinhalese to join hands and raise their voice in their land as well as in the international forum for securing a free and fair life to their Thamizh brethren.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *