நெடுந்தொகையில் வழிபாட்டு முறைகள்

This entry is part 2 of 39 in the series 18 டிசம்பர் 2011

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

சமுதாய வாழ்வு மேம்பாடு அடைவதற்குச் சமய வழிபாட்டு முறைகள் வழிகோலுகின்றன. எவ்வண்ணம் வழிபாடு செய்தல் வேண்டும் என்பதை நம் முன்னோர் வரையறை செய்துள்ளனர். யாருக்கெல்லாம் வழிபாடு செய்தல் வேண்டும் என்பதை விரிவாக எடுத்துக் கூறியுள்ளனர். இறைவனை வணங்குதல், அரசன் சான்றோர் ஆகியோருக்கு வணக்கம் செய்தல், பெரியவர்களை வணங்குதல் ஆகிய வழிபாட்டுப் பண்பாடுகளை வகுத்துக் கூறியுள்ளனர். நெடுந்தொகை என்று வழங்கப்படும் அகநானூற்றில் வழிபாடு குறித்த பல்வேறு செய்திகள் காணப்படுகின்றன.

வழிபாட்டுத் தொடக்கம்

இந்து மதம் எனப் பொதுவாகக் கொண்டு வேள்வி அல்லது யாகம் அல்லது யக்ஞம் செய்து வந்த நிலைதான், வழிபாட்டின் தொடக்க நிலையாக இருந்து வந்தது என்பது அறிஞர் சிலரின் கொள்கை. இவ்வழிபாட்டுக்கு வேள்வி இயற்றுதல் அடிப்படையாக அமைந்தன. வேதம் சொல்லி வேள்வி செய்து வழிபாடு நடத்தினர்.

வேதங்களை அடிப்படையாகக் கொண்டு வேள்வி இயற்றி வழிபாடு செய்தமுறை அதாவது வேத வேள்வி வழிபாட்டுமுறை, வேதங்களை அடிப்படையாகக் கொண்டு தோன்றி வளர்ந்து இயங்குகின்ற வைதிக சமயத்துக்கே முற்றிலும் பொருந்தும். தமிழ் நாட்டில் பழங்காலத்தில் தோன்றிய இயற்கை வழிபாட்டு முறைகளுக்கும், பண்டைத் தமிழர் கடவுள் நெறிக்கும், வேதத்தை அடிப்படையாகக் கொண்டு வேள்வி செய்து வழிபட்டமுறை சற்றும் பொருத்தமாக அமையாது.

சங்க இலக்கியங்களில் காணப்படுகின்ற இயற்கை வழிபாட்டு முறைகளே, சங்க காலத்திற்கு முன்னோர் வழிபாட்டின் தொடக்க நிலையாக அமைந்திருந்தன. இவ்வியற்கை வழிபாட்டு முறைகள், காலந்தோறும் வளர்ச்சியடைந்து வந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

அகநானூற்றில் முருகன் வழிபாடு

முற்காலத்தில் தமிழ்க் கடவுளாய் முருகனை வழிபட்டனர். முருகன் வழிபாட்டினை வேலன் வெறியாட்டுச் செய்தியின் மூலம் நாம் அறியலாம். காதல் வயப்பட்ட தலைவியின் மேனி மாற்றத்தினைத் தீர;க்க வேலன் வெறியாட்டு என்ற நிகழ்ச்சியை நடத்தி முருகனை வழிபடுவர் என்பதை சங்க இலக்கியங்கள் நமக்கு மிகுதியாகக் காட்டுகின்றன. இதில் பத்துப்பாட்டான திருமுருகாற்றுப்டையும், பரிபாடலில் ஆறுபாடல்களும் முருகனைப் பற்றியே சிறப்பாக உணர்த்துகின்றன.

முருகன் வழிபாடு பற்றி அகநானூறு குறிப்பிடும்போது,

‘‘சூர்மருங்கு அறுத்த சுடர்இலை நெடுவேல்

சினம்மிகு வேந்தன் தண்பரங்குன்றத்து’’

(அகம்., பா.எ., 59)

என்ற வரிகளில், முருகன் தெய்வப் பண்புகளையன்றி, வீரப்பண்பு உடையவனாகத் திகழ்ந்திருக்கிறான். தமது பகைவனாகிய சூரபன்மாவினைச் சுற்றத்தோடு அழித்துச் சுடரும் முனையினையுடைய நெடுவேலினையுடையவன் சினம் மிகுந்த முருகன்; அச்சினம் தணிந்து அவன் அருளுடையவனாகக் கோயில் கொண்டிருக்கும் தட்பம் வாய்ந்த அறுபடைவீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் பற்றியதில் தெரியவருகிறது.

‘‘புரிக்கணத் தன்ன நாய்தொடர் விட்டு

முருகன் அன்ன சீற்றத்துக் கருந்திறல்’’(பா.எ.68)

என்ற அகநானூற்று வரிகளில் ஒலியையொத்தக் கடுஞ்சீற்றத்துடனும் பகைவரை எதிர்க்கக் கூடியவனாகிய முருகனின் வலிமையை இவ்வடிகள் தெளிவுறுத்துகின்றன.

குறிஞ்சி நிலத் தெய்வம் முருகன். மக்கள் தோன்றிய இடமும் வாழ்வு தொடங்கிய இடமுமாகக் கருதப்பெறும் மலையை முருகன் இடமாகக் கொண்டான். முருகன் வேலை போர்க்கருவியாகவும், சேவலைக் கொடியாகவும் கொண்டான். இந்திரன் பணியாளரான அக்கினியையும், வாயுவையும் சுப்பிரமணியர் என்றழைக்கப்பட்டனர் என்று தைத்ரீய ஆரணியகம் கூறுகிறது. தமிழ் இலக்கியங்கள் முருகனைத் தாய்வழி உரிமை பெறும் திராவிடத் தெய்வமாகக் காட்டுகின்றன. பண்டைத் தமிழ் இலக்கியங்களில் காணப்படும் முருக வழிபாடு முறையாகிய வெறியாட்டு மிகப் பழைமையானது என்பதும், சமுதாயக் கூட்டு வாழ்க்கையின் அடிப்படையில் தோன்றியது என்பதும் அறியப்படுகின்றன. கடவுட் கோட்பாட்டில் முதலில் தோன்றியது முருக வழிபாடு குறித்த கோட்பாடே. தமிழ் நாட்டில் முருக வழிபாட்டிற்குத் தோற்றமாயிருந்தது. வேலன் வெறியாடல். இஃது ஓர் இனக்குழு வழிபாட்டு முறை என்பர். கடவுள் வழிபாட்டிற்குத் தொடக்க நிலையில் உருவங்கள் வைத்து வணங்கப்படவில்லை. குறிப்பிட்ட அடையாளங்களை வைத்தே வழிபட்டனர். அதுபோல முருகனுக்கு அடையாளமாக வேலாயுதம் வைத்து வணங்கப்பட்டது.

சங்க காலத்தில் முருகன் கோயில் கொண்டிருந்த இடங்களைப் பற்றிய பல குறிப்புகள் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. கடம்ப மரத்தடியில் முருகன் வீற்றிருந்ததை,

‘‘….. . ..புகழ் பூத்தகடம்ப மர்ந்து

அருமுளி மரபின் ஆன்றவர் நுகர்ச்சியின்

இந்நிலத்தோடும் இயைகெனக் கீத்தநின்

தண்பரங்குன்றத்து’’(பரிபாடல், பா.எ.,19)

என்ற பரிபாடல் அடிகளிலிருந்தும் உணரலாம். குறிஞ்சி நில மக்கள் தம் பண்டைய மரபு முறையிலேயே வழிபாடுசெய்து வந்தனர் இலக்கியங்களில் முருகக் கடவுளைப் பற்றி எழுந்த பழைமையான நீண்ட முதல் தனிப்பாட்டு திருமுருகாற்றுப்படையாகும். திருமுருகாற்றுப்படை சுட்டும் முருகன் கோயில்கள் பல பாண்டிய நாட்டிலேயே அமைந்துள்ளன. பாண்டிய நாட்டில் சிறந்திருந்த முருக வழிபாடு பண்டைக் காலத்திலேயே ஈழநாட்டிலும் சிறப்புற்றிருந்திருக்கிறது என்பர் ஆ.வேலுப்பிள்ளை.

இந்தோனேசியாத் தீவிலும், சுமத்திராவிலும், ஆப்பிரிக்காவின் தென்கோடிக்கு அருகேயுள்ள மொரீசீயஸ் தீவிலும், சிங்கப்பூர், பினாங்கு போன்ற இடங்களிலும் முருகனுக்குக் கோயில் அமைத்து வழிபாடு செய்துள்ளனர் என்றறியப்படுகிறது. முருகனுக்குப் பல்வேறு பெயர்களிருந்தாலும் திருக்கோயிலில் பெரும்பாலும் சுப்பிரமணியர் என்ற பெயரே நிலைத்திருக்கிறது. முருகன் ஆண் கடவுளர்களில் அதிகமான முகமும், அதிகமான கரங்களும் கொண்டவர்.

அதிகமான முகங்கள் அறிவுப் பெருக்கத்தையும், அதிகமான கரங்கள் வரம்பில்லா ஆற்றலையும் காட்டுவதாகச் சமய நூலார் கூறுகின்றனர். முருகனுக்குப் பதினாறு வடிவங்கள் உள்ளதாகச் சனத்குமார பிரச்சனகுமார தந்திரம் என்ற நூல் கூறுகிறது. இவை தவிரப் பிரஹத் ஸம்ஹிதை, விஷ்ணு தர்மோத்தரம், சமரங்கன சூத்திரதாரம், மத்ஸ்ய புராணம், சிவபுராணம் ஆகிய நூல்களும் முருகன் வடிவங்களைப் பற்றிக் கூறுகின்றன.

சேயோனாகிய முருகன் சங்க இலக்கியங்களில் பல்வேறு நிலைகளில் புகழப்பட்டுள்ளமை நோக்கத்தக்கது. ‘‘முருகு என்பதன் பொருள் தெய்வத் தன்மை கொண்டது; அது முருகக் கடவுளுக்கு ஆகுபெயராக அமைந்தது’’ என மதுரைக் காஞ்சியில் உரையாசிரியர் நச்சினார்கினியர் கூறுகின்றார்.

‘‘வெண்மலைப் புணரி அலைக்கும் செந்தில் நெடுவேள்’’(புறம்.,55)

கடல் அலைகள் வந்து மோதுகின்ற மதில் சுவர் சூழ்ந்த செந்தில் கோயிலில் வீற்றிருக்கும் முருகப் பெருமான்.

‘‘படியோர்த் தேய்த்த பல்புகழ் தடக்கை

நெடுவேள். …..’’(அகம்., பா.எ.,22)

பகைவரை அழித்த வலிமை மிக்க கரங்களை உடைய நெடுவேளாகிய முருகன்.

‘‘முருகன் சீற்றத்து உருகெழு குரிசில்’’(பொருநர்.,181-வது வரி)

‘‘மறுவில் கற்பில் வாள்நுதல் கணவன்’’

ஆல்கெழு கடவுள் புதல்வன்’’

‘‘கொற்றவை சிறுவன்’’

‘‘இழையணி சிறப்பில் பழையோன் குழவி’’

‘‘வானோர் வணங்குவில் தானைத் தலைவன்; திருமுருகாற்றுப்படையில் வள்ளியின் கணவன்; சிவபெருமானின் புதல்வன்; உமையம்மையின் மைந்தன்; பழையோளாகிய இறைவியின் மகவு; வானோர் வணங்கும் தேவ சேனாபதி என்று முருகப் பெருமான் புகழப்படுகிறான்.

‘‘மணிநிற மஞ்ஞை ஓங்கிப் புட்கொடிப்

பணிமுகம் ஊர;ந்த வெல்போர் இறைவ!’’(பரிபாடல், பா.எ.17)

சேவற்கொடி ஏந்தியவன்; மயில், பிணிமுகம் என்னும் யானை இவற்றை ஊர்தியாக உடையவன் முருகப் பெருமான் எனப்பரிபாடல் கூறுகிறது.

வெறியாட்டயர்தல்

தமிழரின் வழிபாட்டுமுறையில் மிகவும் பழமையானது வெறியாட்டு என்பதாகும். மனிதர் மேல் தெய்வம் ஏறி வருவதுண்டு என்ற நம்பிக்கையில் இருந்து உருவானதே இது. ஆவேசம் என்று இதனைக் கூறுவர். இன்றும் கோயிற் பூசாரிகள் சாமியாடி வருவதுரைத்தலைக் காணலாம். சங்க காலத்தில் முருகனோடு தொடர்புடையதாக இவ்வெறியாடல் திகழ்ந்தது. முருகனுக்குரிய வேலினைக் கையில் ஏந்தி ஆடியோன் வேலன் எனப்பட்டான். வேலனின் வெறியாடல் பற்றி அகப்பாடல்களே கூறுகின்றன.

குறிஞ்சி நில மக்கள் தங்களின் மூலம் தெய்வம் வெளிப்படும் என்னும் உயரிய, உறுதியான, உவப்பான நம்பிக்கையில் வெறியாட்டயர்ந்தனர். வேலைக் கையில் ஏந்தி, முருகப் பெருமானைப் போற்றி அழைத்துக் கொண்டே, வேலன் வெறியாட்டயர்வோன் ஆடுவான்! தங்கள் குலத்துக்கு ஏற்படுகின்ற துன்பங்களை நீக்குதல் வேண்டும்என வேண்டிக் கொள்வான்; பிறருக்கும் வேண்டுவான்.

வெறியாட்டயர்வோன் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தில், அளவுக்கு விஞ்சிய பக்தி உணர;வை மொழியை ஒரு கருவியாகப் பெரிதும் எதிர்பார்க்கவில்லை. அவனுடைய உடம்பில் தெய்வ ஆற்றல் வந்தபொழுது, அவனை அறியாமல் அவனுடைய உடம்பில் நடுக்கம் ஏற்பட்டது. கண்ணீர் பெருகியது. தனது உணர்வை வெளிப்படுத்த மெய்விதிர்ப்பு அடைந்து ஆடினான். அப்போதைய உள்ளத்து உணர்வை வாய்மொழியால் வெளிப்படுத்தாமல், உடல் மொழியால், முக உணர்வால் புலப்படுத்தினான்; சைகைகளாலும் விளக்கினான். அவனுடைய உள்ளுணர்வு உணர;த்த ‘இன்னது நிகழும்’ என ஒன்றிரண்டு சொற்களால் பயனும் கூறினான் இவ்வாறு முருகப் பெருமானை வெறியாட்டயர்ந்து அழைத்ததன் தாக்கந்தான் பிற்காலத்தில் பிள்ளைத் தமிழ் நூலில் வருகைப் பருவமாகவும், ‘‘வாராதிருக்க வழக்குண்டோ?’’ என்று பகழிக் கூத்தரெல்லாம் வினவுவதற்குப் பாடுமாறும் அமைந்துள்ளது.

‘‘தொண்டர் கூடித் தொழுது அழுது ஆடிப்பாடும் அன்பு அலால் பொருளும் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே’’, ‘‘அழையாவும் அரற்றாவும்’’ என்றெல்லாம் தேவாரத்தில் வருவன, சங்க கால வெறியாட்டயர்ந்து விளித்ததன் தொடர்ச்சியேயாகும். வெறியாட்டயர்ந்தவனே, கால மாறுபாட்டினால் தமிழகத் தென் மாவட்டங்களிலும், கேரளத்திலும் கோயில் திருவிழாக்களில், சிறுதெய்வ வழிபாட்டு விழாவில், கோமரத்தாடியாக உருமாற்றம் பெற்றுவிட்டான்.

தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே வெறியாட்டு பெருவழக்காகவிருந்தது.

‘‘வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்

வெறியாட் டயர்ந்த காந்தளும்’’ (தொல். பொருள்., நூற்பா, 60)

இடுக்கண் யாவற்றிற்கும் முருகனே காரணம் என்று கூறுவது வேலனுடைய இயல்பு. மகளின் மெலிவுக்குக் காரணம் என்று கூறுவாள். இது பற்றிய குறிப்புகள் பலவாகக் கிடைக்கின்றன. ஐங்குறுநூற்றில், ‘வெறிப்பத்து’ என்பது ஒரு பகுதியாகும். வெறியைச் சிறப்பித்துப் பாடிய ஒரு புலவர், ‘வெறிபாடிய காமக்கண்ணியார்’ எனப்பட்டார்.

‘‘வேலன் வெறிஅயர் வியன்களம்’’ (அகம்., பா.எ., 182;17 -வது வரி)

வேலன் வேடம் புனைந்து வெறியாட்டயர்கின்ற பெரிய களம்.

‘‘வேலன் புனைந்த வெறிஅயர் களம் தொறும்

செந்நெல் வான்பொரி சிதறி அன்ன’’ (குறுந்தொகை, பா.எ., 58)

‘வேலன் வேடம் புனைந்தேன் வெறியாட்டயர்கின்ற விழாக்களில் இடங்களில், வழிபாடு செய்து பலி தூவியதன் காரணமாகச் செந்நெல்லின் வெண்பொரி சிதறிக் கிடப்பதைப் போல. . . . .’ என்று சொல்லப்படுவதிலிருந்து, மலையில் விளைகின்ற செந்நெல், வெண்ணெல் இவற்றால் பொரி பொரித்து வேலனுக்குப் பலி தூவி வழிபாடு செய்வார்கள் என்பது தெரிகிறது.

‘‘அறியா வேலன் தரீஇ, அன்னை

வெறிஅயர் வியன்களம் பொலிய ஏத்தி

மறிஉயிர் வழங்கா அளவை’’

(அகம்., பா.எ., 242;10 – 12-வது வரிகள்)

‘வேலன் வெறியாட்டயரும், வெறியாடு களத்தில் அவ்வேலனை அன்னை வணங்கினாள்’ என்று கூறப்படுகிறது.

‘‘பெண்போழ் கடம்பொடு குடி இன்சீர்

ஐதுஅமை பாணி இரீஇ கைபெயரா

செல்வன் பெரும்பெயர் ஏத்திவேலன்

வெறிஅயர் வியன்களம் பொற்ப’’(அகம்., பா.எ., 98)

வெறியாடும் வேலன் வௌ;ளிய பனந்தோட்டொடு கடம்ப மலரைத் தொடுத்துச் சூடிக் கொள்வான். இனிய சீர்அமைந்த தாளத்தோடு கூடிய முருகக் கடவுளின் பெரும் புகழினைக் கூறி ஆடுவான். வெறியாடும் களம் அகன்றதாகவிருந்தது. அக்களத்தின் கண் செந்நெல்லின் வெண் பொறிகள் சிதறிக் கிடந்தன.

‘‘பொய்யா மரபின் ஊர்முது வேலன்

கழங்கு மெய்படுத்துக் கன்னந் தூக்கி

முருகென மொழியும்’’ (ஐங்குநுறூறு, பா.எ., 245)

வெறிக் களத்தில் புதுமணல் பரப்பினர்.

‘‘பெய்ம்மணல் முற்றம்’’ (ஐங்குநுறூறு, பா.எ., 248)

வெறியாட்டின் அசைவுக்கு மயிலின் ஆட்டமும் விறலியின் ஆட்டமும் விறலியின் ஆட்டமும் உவமைகளாகக் கூறப்பட்டுள்ளன (பதிற்றுப்பத்து, பா.எ., 51).

‘‘கறிவளர் சிலம்பின் கடவுள் பேணி

அறியா வேலன் வெறிஎனக் கூறும்’’(ஐங்குநுறூறு, பா.எ., 243)

கறிவளரும் சிலம்பிலுள்ள முருகக் கடவுளைப் பணிந்து அறியாமை மிக்க வேலன் தலைவியின் துயரத்திற்கு முருகனே காரணம் என்றான். தலைவியின் மெல்லிய தோள் நெகிழ்விற்கு முருகனே காரணம் என்று கூறிய வேலனைக் குறுந்தொகையும் கூறுகிறது(குறுந்தொகை, பா.எ., 111).

‘‘அருங்காடி வேலன் முருகொடு வளைஇ

அரிக்கூடி இன்னியம் கறங்க நேர;நிறுத்தக்

கார்மலர் குறிஞ்சி சூடிக் கடம்பின்

சீர்மிகு நெடுவேள் பேணித் தழுஉப்பினையு+

மன்று தொறும் நின்ற குரவை’’(திருமுருகு., 218 -வது வரி)

வெறியாட்டயரும் வேலன், குறிஞ்சி மலரைச் சூடி, முருகனைத் தனது உடம்பிலே வருமாறு கொணர்ந்து நிறுத்தி வழிபடுகின்றான். அருகில் மலைக் குறமகளிர் வட்டமாக நின்று கைகோத்துக் குரவைக் கூத்து ஆடுகின்றனர்.

இம் மக்களின் பக்தி கற்பனைத் திறன், நுண்கலை ஆர்வம், ஒப்பனை செய்யும் ஆற்றல், முருகியல் உணர்வு ஆகிய பண்பாட்டுக் கூறுகளே, வேலன் வேடம் புனைவதிலிருந்து அறிந்து கொள்ளலாம். கொற்றவையைப் போற்றிப் பரவும் வெறியாட்டும் நடத்தினர்.

சங்க காலத்தில், போரில் வெற்றி பெறும் அரசன் வெற்றி வாகை ஊர்வலம் வருவான். ஊர்வலத்தில் தேரில் அமர்ந்து வருவான். அந்தத் தேருக்கு முன்னால் வீரர்களும், விறலியர்களும் ஆடிக் கொண்டு வருவது, ‘முன்தேர்க்குரவை’ எனப்படும். தேரின் பின்னால் அவர்கள் ஆடிக்கொண்டு வருவது, ‘பின்தேர்க்குரவை’ எனப்படும். பழங்கால, ‘வெறியாட்டயர்தல்’ தான் வேறு ஒரு வடிவத்தில் இக்‘குரவை’களாக மாற்றம் பெற்றன.

‘‘பேஎ விழவினுள்’’ (பரிபாடல், பாடல் எண், 5;14-வது வரி)

‘நீ வெளிப்படுதலானே கண்டார்க்கு அச்சம் தரும் வெறியாட்டு விழாக் களத்தின் கண்னே’ என்பது பரிபாடலின் பழைய உரை. வெறியாட்டு நிகழும் களத்தில் எல்லா மக்களும் கூடி நின்று வெறியாட்டயர;வோனைக் காணுவார;கள். அவனைக் கண்ட மாத்திரத்தில் அவர்கள் மனதில் ஒரு வித அச்ச உணர்வு தோன்றும்.

ஆட்டுப் பலி

வெறியாடும் பொழுதுது ஆட்டுக் குட்டியைப் பலியிடுதல் மரபாகும். அதன் குருதியினைத் தினையரிசியோடு சேர்த்துத் தூவுவர். ஆட்டின் கழுத்தை அறுப்பதோடு தினைப் பிரப்பை வைத்து வழிபட்டனர்.

‘‘மறிக்குரல் அறுத்துத் தினைப்பிரப் பிரீஇ’’

(குறுந்தொகை, பா.எ., 265).

‘‘சிறுதினை மலரொடு விரைஇ மறிஅறுத்து’’

(திருமுருகு., 218 -வது வரி)

‘‘குருதியோடு வரைஇய தூவௌ் அரிசி’’

(திருமுருகு., 233 -வது வரி)

‘‘குருதிச் செந்தினை பரப்பி’’(திருமுருகு., 242 -வது வரி)

மலையில் விளைகின்ற உருவத்தில் சிறிய தினை அரிசியுடன் மலையில் மலரும் காட்டு மலர்களைப் பறித்து விரவிச் சுளகில் பரப்புவார்கள். வரையாட்டை அறுத்து அதன் ஊனைத் தேக்கிலையில் வைப்பார்ள். இரண்டையும் தெய்வத்திற்குப் படைப்பார்கள். மலையில் விளைந்த தூய வெண்ணெல் அரிசியை வரையாட்டுக் குருதியில் விரவி, தேக்கிலையில் இட்டுப் படைப்பார்கள். செந்தினை அரிசியை வரையாட்டுக் குருதியுடன் கலந்து சுளகில் இட்டுப் பரப்பிப் படைப்பார்கள்.

பலவாகிய வேறுபட்ட நிறமுடைய சோற்றையுடைய பலியுடன் ஆட்டுக்குட்டியைக் கொன்று, நோய்கொண்ட பெண்ணின் நறுநுதலை நீவி முருகனை வேண்டிப் பலியாகக் கொடுக்கும் மரபை குறுந்தொகை கூறுகிறது(குறுந்தொகை, பா.எ., 362).

வெறியாட்டம் மேவிய மகளிரின் தோற்றப் பொலிவு முதலியவற்றைச் செய்யுட்களில் காணலாம். இன்னும் இந்த மரபு சிற்றூர்களில் உண்டு.

‘‘படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை

நெடுவேள் பேணத் தணிகுவள் இவள்என

முதுவாய்ப் பெண்டிர் அதுவாய் கூற

களம் நன்கு இழைத்துக் கண்ணி சூட்டி

வளநகர் சிலம்பப் பாடி பலி கொடுத்து

உருவச் செந்தினை குருதியோடு தூஉய்

முருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள்’’

(அகம்., பா.எ., 22;5 – 11-வது வரிகள்).

சூரபதுமன் போன்ற பகைவர்களை அழித்தொழித்த முருகவேளைப் போற்றி வணங்கிட, இவள் வாட்டம் தணியப் பெறுவாள் என்று முடிவு செய்தனர். அனுபவம் மிக்க மகளிர் அவ்விடத்தில் ஒன்று கூடி வெறியாடு களத்தை உண்டு பண்ணினர். மலர்க் கண்ணி சூட்டி அலங்காரம் செய்தனர். மலை முழுவதும் எதிரொலிக்குமாறு முருகனைப் போற்றிப் பாடினர். வரையாட்டைப் பலி கொடுத்தனர். நன்கு முற்றிய செந்தினை அரிசியோடு வரையாட்டுக் குருதியைக் கலந்து பலி தூவி முருகப் பெருமானிடத்து ஆற்றுப்படுத்தினர். சங்க காலத்தில் முருகப் பெருமானுக்கு உயிர்ப்பலி கொடுத்தனர். இப்போது இவ்வழக்கம் இல்லை.

குளி்ர் மிகுந்த மலைப் பகுதிகளில் மக்கள் தங்களின் உடல் வெப்பம் குறையாமல் சமநிலையில் வைத்துக் கொள்ளவும், குளிரிலிருந்து காத்துக் கொள்ளவும், கடுமையான தொழில்களைச் செய்வதற்கு ஏற்ற உடல் வலிமை பெறவும் புலால் உணவு அருந்தினர். தாங்கள் உண்ணும் புலால் உணவையே தாங்கள் வழிபடுகின்ற கடவுளர்க்கும் படைத்து வழிபட்டனர். படைத்தவற்றை உணவாக ஏற்றுக் கொண்டனர்.

‘‘கனங்கெழு கடவுட்கு உயிர்ப்பலி தூஉய்ப்

பரவினம் வருகஞ் சென்மோ’’

(நற்றிணை, பா.எ., 358;6 – 7வது வரி)

கடவுளர்க்கு உயிர்ப் பலிகொடுப்பதைப் பற்றி இந்நற்றிணைப் பகுதி கூறுகிறது.

‘‘ஒல்லார் நாண பெரியவர்க் கண்ணிச்

சொல்லிய வகையின் ஒன்றோடு புணர்ந்து

தொல்லியிர் வழங்கிய அவிப்பலி யானும்’’(தொல். வாகை., நூற்பா, 1022.)

தான் கலந்து கொள்ளும் போரில் தன் பக்கம் வெற்றி பெற விழைந்த வீரன் ஒருவன் தீயை வளர்த்தான். தனது பக்க வெற்றிக்காக அத்தீயில் தன்னையே அவிப்பலியாக்கிக் கொண்டு விழுந்து உயிர் நீத்தான். உயிர்ப்பலி கொடுத்துத் தெய்வத்தை வழிபாடு செய்யும் வழக்கம் சங்க காலத்தில் இருந்து வந்தது. மேலும், வெறியாட்டினைக் கூறும்போது,

‘‘கடியுடை வியல்நகர்க் காவல் கண்ணி

முருகு என வேலன் தரூஉம்

பவருமாகப் பயந்தன்றால் நமக்கே’’(அகம்., பா.எ., 232).

என்ற வரிகளினாலும்,

‘‘மெய்ம்மலி உவகையன் அந்நிலைகண்டு

முருகு என உணர்ந்து முகமன் கூறி

உருவச் செந்தினை நீரோடு தூவி தூஉய்’’(அகம்., பா.எ., 272).

என்ற வரிகளாலும்,

‘‘உருகெழு சிறப்பின் முருகுமனைத் தழீஇக்

கடம்பும் கணனும் பாடி நுடங்குடி’’ (அகம்., பா.எ., 138).

என்ற வரிகளாலும் வேலன் வெறியாட்டு என்ற முறையில் பண்டைத் தமிழ் மக்கள் முருகனை அதிமாக வழிபட்டு இடையிறாத தெய்வ விழாக்களும் நிகழ்த்தி ஆடிப்பாடியும் பலிகொடுத்தும் இரவில் வழிபாடு நிகழ்த்தினர் என்ற செய்திகளை அறியலாம்.

தோப்பிக்கள் படைத்தல்

‘‘தோப்பிக் கள்ளுடன் துரூஉப்பலி கொடுக்கும்’’( அகம்., பா.எ., 35).

அரிசியிலிருந்து வடித்து எடுக்கப்பட்ட ஒருவகைக் கள்ளைத் தாங்கள் வழிபடுகின்ற தெய்வங்களுக்குப் படைத்தனர். கூடவே, மலை ஆட்டையும் பலி கொடுத்து வழிபட்டனர்.

‘‘நனைமுதிர் நறவின் வாட்பலி கொடுக்கும்’’(அகம்., பா.எ., 13).

கடும் புளிப்பு நிறைந்த கள்ளைப் படைத்து வழிபட்டதை இவ்வகநானூற்றுப் பாடற் பகுதிகள் குறிப்பிடுகின்றன.

‘‘கள்ளும் கண்ணியும் கையுறையாக

நிலைக்கோட்டு வௌ்ளை நால்செவிக் கிடாய்

நிலைத்துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சி’’(அகம்., பா.எ., 156).

கடவுளுக்குக் கையுறையாக மலர்க் கண்ணியுடன் கள் படைக்கப்பட்டதையும் அகநானூறு சொல்லுகிறது.

வெற்றி நல்குவதற்குப் பலி

‘‘பலிபெறும் வியன்களம் மலிய ஏற்றி’’

(பெரும்பாணாற்றுப்படை, 233-வது வரி)

குளத்திலே உறைகின்ற தெய்வங்களுக்கு மிகுந்த பலி இட்டு வழிபட்டனர்.

‘‘உயர்பலி பெறூஉம் உருகெழு தெய்வம்’’

(அகம்., பா.எ., 166;7-வது வரி)

சிறந்த பலியைப்பெறுகின்ற வலிமை மிக்க தெய்வம்.

போர் முனைக்குச் செல்லுவதற்கு முன்னால் போர் வீரர் அனைவரும் படைஞர் திடலில் அணிவகுத்து நிற்பார்கள். போரில் தங்களுக்கு வெற்றியை நல்க வேண்டும் என்று வேண்டி, கொற்றவைக்குப் பலி இட்டு வழிபடுவார்கள். இதுவே, ‘களப்பலி’ எனப்படும்.

விளைந்த உணவு தானியங்களை அறுடை செய்து கொண்ர்ந்து களத்திலே சேர்ப்பர். களத்திலே குவித்து, இவ்வாறு மிகுந்த விளைச்சலைத் தந்தமைக்கு அகம் மகிழ்ந்து, களத்திலே உறைகின்ற தெய்வத்துக்குப் பலி இடுவார்கள். மென்மேலும் விளைச்சல் பெருக வேண்டும் என்று வேண்டியும், இப்போது நல்ல விளைச்சலைக் கொடுத்தமைக்கு மகிழ்ச்சியடைந்தும் வழிபடுவார்கள். சங்க காலத்தில் உயிர்ப்பலி இட்டு வழிபாடு செய்தார்கள். கள் படைத்தும், வெற்றி நல்க வேண்டியும் வழிபட்டனர்.

நடுகல் வழிபாடு

போரில் இறந்துபட்ட வீரர்கட்குக் கல் நட்டு அவர்களைக் கடவுளாக வழிபட்ட மரபினை இலக்கியம் பலபடப் பேசுகிறது. வேட்சித் திணையின் பகுதியில் காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல், பெரும்படை வாழ்த்து என்றும் நடுகல் வணக்கத்தின் ஆறு படிநிலைகளைத் தொல்காப்பியர் கூறியுள்ளது. நோக்க இம்மரபு அவர் காலமாகிய கி.மு.மூன்றாம் நூற்றாண்டுக்கு முற்பட்டதெனத் தெரிகின்றது. மாடுகளே பண்டு செல்வமாகக் கருதப்பட்டன. எனவே, பகைவரிடமிருந்து மாடுகளைக் காக்கும் முயற்சியிலீடுபட்டு உயிர் நீத்த கரந்தை வீரர்கட்கே பெரும்பான்மையான கற்கள் நடப்பட்ன என்று அறிய வேண்டியுள்ளது.

நடுகற்கள் ஊருக்குப் புறத்தே தொலைவில் இருந்த திடல்களில் நடப்பட்டன. ஓங்கி வளர்ந்த வேங்கையின் மலர்களை வௌ்ளிய பனந்தோட்டோடு விரவித் தொடுத்து மாலையாகச் சூட்டிக் கோவலர் ஒரு வீரனுக்குக் கல் நட்டதைப் புறநானூற்றுப் பாடலொன்று கூறுகின்றது.

‘‘ஊர்நனி யிறந்த பார்மூதிர் பறந்தலை

ஓங்குநிலை வேங்கை ஔ்ளிரன் நறுவீப்

போந்தையந் தோட்டில் புனைந்தனர்

மல்லான் கோவலர் படலை சூட்டக்

கல்லா யினையே கடுமான் தோன்றல்’’

(புறம்., பா.எ., 265;1 – 5-வது வரிகள்)

இக்கற்களில் வீரனுடைய பெயரும்பீடும் எழுதப்பட்டன. அணிமயிற் பீலியும் மலர; மாலைகளும் சூட்டப்பட்டன.

‘‘நல்லமர்க் கடந்த நாணுடை மறவர்

பெயரும் பீடும் எழுதி அதன்தொறும்

பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்’’(அகம்., பா.எ., 67)

என்னும் சான்றாலும் இதுபோன்ற வேறு குறிப்புகளாலும் அறியலாம். இக்கற்கள் பலவாக நடப்பட்டஇடம் வேலை ஊன்றி அதிலே கிடுகுப்படையை வைத்த பகைப்புலம் போலத் தோன்றும் என்று கூறுகின்றனர். வீரர்கட்கு நடப்பட்ட கற்கள் வரிசை வரிசையாக அமைந்திருந்தன.

‘‘நல்லிசை நிறுத்த நாணுடை மறவர்

நிரை நிலை நடுகல்’’(அகம்., பா.எ., 387)

இந்த நடுகற்கட்கு மாலைகளும் மயிற் பீலிகளும் சூட்டப்பட்டமையைப் பல சான்றுகளால் அறிகின்றோம். கல்லை நட்டு அந்த இடத்தல் துணிப் பந்தலையிட்டனர்.

‘‘உயரிசை வெறுப்பத் தோன்றி பெயரே

மடருசால் மஞ்ஞை அணிமயில் சூட்டி

இடம்பிறர் கொள்ளாச் சிறுவழிப்

படஞ்சால் பந்தர;க் கணிமிசை யதுவே’’(புறம், பா.எ., 260)

வேங்கைப் பூவும், பனந்தோடும், கரந்தைப் பூவும் தொடுத்துச் சூட்டுவது மரபு.

‘‘நாகு முலையன்ன நறும்பூங் கரந்தை

வீரகறியாளர் மரபிற் சூட்ட’’(புறம், பா.எ., 261)

‘‘பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி

மரல்வகுத்துத் தொடுத்த செம்பூங் கண்ணியொடு

அணிமயிர் பீலி சூட்டிப் பெயர் பொறித்து

இனிநட்டனரே கல்லும்’’(புறம், பா.எ., 264)

என்னும் சான்றுகள் கல்நட்ட முறையினைக் கூறுவனவாகும். இந்த நடுகற்கட்கு நாள் வழிபாடு செய்து வணங்கியுள்ளனர்.

‘‘சிலையே றட்ட கணைவீழ் வம்பலர்

உயர்பதுக் கிவர்ந்த ததர்கொடி அதிரல்

நெடுநிலை நடுகல் நாட்பலி கூட்டும் சுரன்’’(அகம்., பா.எ., 289)

என்பது சான்றாகும். கள் உகுத்துப் பரவுதலும் வழக்கமாக விருந்தது. அதியமான் இறந்தபோது ஔவையார்,

‘‘இல்லாகியரோ காலை மாலை

அல்லா கியர்யான் வாழும் நாளே

நடுகற் பீலி சூட்டி நாரரி

சிறுகலத் துகுப்பவும் கொள்வன் கொல்லே’’(புறம், பா.எ., 232)

என்று வருந்தியுள்ளார். ஒரு தலைவி தனக்கு நல்ல விருந்தினரும் தன் கணவனுக்கு நல்ல பகையும் வேண்டி நடுகல்லைக் கை தொழுது வணங்கினாள்(புறம், பா.எ., 304). வழிச்செல்லுவார். அங்காங்கு அமைந்திருந்த நடுகற்களை வணங்கிச் செல்வது மரபாகும்.

இன்னொரு வகையான இயற்கை நடுகல் பற்றிச் சங்கஇலக்கியத்தில் ஒரேயொரு சான்று கிடைத்துள்ளது. பெண் யானை படுத்தாலொத்த குன்றின் பக்கத்திலே பல வீரர்களின் பெயர்கள் பொறிக்கப் பட்டிருந்தனவாம். அப்பெயர்கள் அகன்ற இடத்தில் செதுக்கப்பட்டிருந்தன. அக்கல்லை வீரர்கள் மஞ்சள் நீரிட்டுக் கழுவினர். மேலும் கரந்தைப் பூவையும் சூட்டி வணங்கிச் சென்றனர். ஒரு வேளை தொகுதியாக மடிந்த வீரர் கூட்டத்திற்கு இத்தகு முறையில் பெருமை செய்தனரோவென எண்ண வேண்டியுள்ளது.

‘‘படிமடிந் தன்ன குறும்பொறை மருங்கில்

நட்ட போலும் நடாஅ நெடுங்கல்

ஆகலிடம் குயின்ற பான்பயர் மண்ணி

நறுவிரை மஞ்சள் ஈர்ம்புறம் பொலிய

வம்புகொண் டறுத்த வார்நார் உரிவையிற்

செம்பூங் கரந்தை புனைந்த கண்ணி

வரிவண் டார்ப்பச் சூட்டிக் கழற்கால்

இளையர் பதிப் பெயரும் அருஞ்சுரம்’’(அகம்., பா.எ., 269)

தொல்லியலார் கல்திட்டைகளையும் பதுக்கைகளையும் பல இடங்களில் கண்டுபிடித்துள்ளனர். சங்க காலத்தில் இத்தகைய கல் பதுக்கைகள் இருந்தன. தரையைத் தோண்டிச் சிறிது நிலத்திற்கடியில் இருக்குமாறோ அல்லது முழுவதும் அடியிலிருக்குமாறோ பிணக் குழியை அமைப்பர். நன்கு செதுக்கப்பட்ட கருங்கற் பட்டைகளை இதற்குப் பயன்படுத்தனர். இக்குழியைச் சுற்றிலும் ஒன்றிரண்டு வரிரசைகளில் கல்சுவர்கள் எடுப்பர். ஈமப் பொருளைக் குழியிற் போட்டபின் ஒரு கல்லால் மூடிவிடுவர். அதற்குப் பிறகு மேலே கூழாங்கற்கள் பரப்பப்பட்டன. இது புதைபொருள் ஆய்வாளர் கண்டுள்ள பதுக்கைகளின் அமைப்பாகும். சங்க இலக்கியங்கள் கூறும் பதுக்கை இந்த அமைப்புடையதா என்பது ஆய்வுக்குரியது.

‘‘நல்லிசை வலித்த நாணுடை மனத்தர்

கொடுவிற் கானவர் கணையிடத் தொலைந்தோர்

படுகளத்து உயர்த்த மயிர்தலைப் பதுக்கை’’(அகம்., பா.எ., 231)

‘‘வெந்நுனை அம்பின் விசையிட வீழ்ந்தோர்

எண்ணுவரம் பறிய உவலிடு பதுக்கைச்

சுரங்கெழு கவலை’’(அகம்., பா.எ., 109)

என்னும் பாடற் பகுதிகள் இப்பதுக்கைகளைப் பற்றி அறிவிக்கின்றன.

‘‘தாம் வசித்த கற்களைவிட்டுத் தெய்வங்கள் நீங்கி விட்டமையால் அம்பலங்கள் பாழடைந்து கிடக்கின்றன’’(புறம், பா.எ., 52)

‘‘தெய்வம் நீங்கிச் சென்றுவிட்ட தூண்களை உடைய மண்டபங்கள், புதர்கள் மண்டிப் பாழடைந்து விட்டன’’(புறம், பா.எ., 30)

என்று நடுகல் பற்றிய செய்திகள் சொல்லப்படுகின்றன.

‘‘கிடுகு நிரைத்து எஃகு ஊன்றி

நடுகல்லில் அரண்போல’’(பட்டினப்பாலை, 78 – 79 -வது வரிகள்)

நடுகல்லில் தெய்வமாக நிற்கிறான் வீரன். ஆவன் முன்னிலையில் கேடயம், ஈட்டி ஆகிய போர்க்கருவிகள் அரண் போலப் பாதுகாப்பாக நிற்கின்றன.

‘‘இன்புறு முறற்கை நும்பாட்டு விருப்பாகத்

தொன்று ஒழுகும் மரபினும்’’

(மலைபடுகடாம், 390 – 391-வது வரிகள்)

இன்பத்தை மிகுதிப்படுத்தும் தாளத்துடன் கூடிய நுமது உருமிமேளப் பாட்டு நடுகல் தெய்வத்துக்கு விருப்பத்தைத் தந்தது. எனவே, நடுகல் தெய்வத்தின் முன்னால், உருமி மேளம் கொட்டி இசையுடன் பாடி வழிபாடு செய்வார்கள். அதனை அத்தெய்வம் விருப்பத்துடன் ஏற்கும் என்பது தெரிகிறது. மேன்மை உள்ளத்தையும் வன்மையான உள்ளமாக மாற்றவல்லது உருமி மேளம்.

‘‘விழுத்தொடை மறவர; வில்லிடத் தொலைந்தோர்

எழுத்துஉடை நடுகல் அன்ன’’(ஐங்குநுறூறு, பா.எ., 352)

பகைவர் எய்த அம்புகள் உடம்பில்

Series Navigationசுஜாதாவின் ஏறக்குறைய சொர்க்கம்நிறையும் பொறையும்
author

முனைவர் சி.சேதுராமன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *