தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

13 ஜனவரி 2019

இருத்தலுக்கான கனவுகள்…

லறீனா அப்துல் ஹக்

இழந்தது என்னவென்று தெரியவில்லைதான்
ஆனாலும்…
எதையோ இழந்ததான வலியில்
உயிர் துவண்டு கசிகிறது.
வாழ்தல் பற்றிய கனவுகளின் விலையாய்
எதனை இழந்திருக்கக்கூடும் நான்?
தெரியவில்லை.
என்
உள்ளார்ந்த விம்மலின் சத்தம்
உன் ஆழ்ந்த மௌனத்துள்
அமிழ்ந்துதான் போயிற்று!
இருள்களின் எல்லை தாண்டிய
பயணம் பற்றிய
என்னுடைய கனவுகள்
நடுவானிலேயே தம் சிறகுகளை
இழந்துவிட்டனவா, என்ன!
எழுந்து தொடரும் பெருமூச்சுக்களின் நீளத்தை
நீ என்றேனும் அளந்து பார்த்திருக்கிறாயா,
நண்பனே?
உனக்கான வாழ்க்கையில்
எனக்கான மணித்துளிகள்…
அந்தோ! உன் வேலைப் பளுவுக்குள்…
களைத்துறங்கும் உன் கணங்களுக்குள்
கரைந்துதான் போயிற்று!
இழந்தது என்னவென்று புரியவில்லைதான்
என்றாலும்…
எதையோ இழந்ததான வலியில்
ஆன்மா விம்மி விம்மியழுகிறது!

-லறீனா அப்துல் ஹக்
(இலங்கை)

Series Navigationகல்வி குறித்த கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கம்நினைவுகளின் சுவட்டில் – (81)

Leave a Comment

Archives