நாய்ப்பிழைப்பு

This entry is part 13 of 42 in the series 29 ஜனவரி 2012

றோமனொஸ்க்கி என்னுடன் வேலை செய்பவன். போலந்து நாட்டவன். றோமன் என்று சுருக்கமாகக் கூப்பிடுவோம். 65 வயதை நெருங்கியும் இளமை குன்றாமல் இருப்பான். எனக்கு அடுத்த தெருவில் வசிக்கின்றான். தினமும் காலை எட்டு ஒன்பது மணிக்குள், குறைந்தது மூன்று தடவையாவது எனது வீட்டைக் கடந்து ஓடுவான்.

கடந்த சில தினங்களாக அவனுடன் ஒரு நாயும் கூடவே ஓடுகின்றது. ஒரு கையில் ‘ஷொப்பிங் பாக்’கும் மறு கையில் கயிற்றில் நாயுமாக பாய்ந்து செல்லும் அவனைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும். சில வேளைகளில் மூச்சு இரைத்தபடி நாய் அவனை முந்திச் செல்வதையும் காணலாம்.
“என்ன நாயொண்டு வாங்கியிருக்கிறாய் போல?” வேலை செய்யுமிடத்தில் றோமனைக் கேட்டேன்.
அது தன்னுடைய பெண் சினேகிதி (Girl friend) றெக்ஷ்சினுடைய நாய் ‘ஷீலா’ என்றான். விவாகரத்துப் பெற்று இருபது இருபத்தைந்து வருடங்களின் பின்பு ஒரு சினேகிதி கிடைத்திருந்தும், அவளது நாயைத்தான் துணைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருக்கிறது என்று கவலைப்பட்டான். உடற்பயிற்சியும் அளவான சாப்பாடும் உடலுக்கு எவ்வளவு இன்றியமையாதது என்பதை றோமனைப் பார்த்து புரிந்து கொள்ளலாம்.

இன்று எனக்கு ஒரு வினோத அனுபவம் கிட்டியது. நாய் பற்றிய அறிவு எனக்கு ‘கம்மி’தான் என்றாலும், அவற்றின் நிறங்களை வேறுபடுத்தும் திறனில் குறைவில்லை. முதல் இரண்டு ரவுண்டில் வெள்ளை நிறத்தில் ஓடிய ஷீலா, அடுத்த இரண்டு ரவுண்டிலும் கறுப்பு நிறத்தில் ஓடியது. ஐந்தாவது ரவுண்டில் றோமனை மடக்கிப் பிடித்து விஷயமறிய வாசலுக்கு விரைந்தேன்.

அதிர்ச்சி காத்திருந்தது ஐந்தாவது ரவுண்டில். ஷீலா தன் வெள்ளை நிறத்திற்கு கறுப்புப்பொட்டுகள் போட்டுக் கொண்டு ஓடியது. எனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சந்தேகத்தை றோமனிடம் கேட்டேன். முதலில் அவன் மூச்சிரைக்க சிரித்தான். பின்னர் விலாவாரியாக விளக்கம் தந்தான்.
“முதலில் ஓடியது ஷீலா. அது லப்பிறடொர் (Labrador) இனம்.
அடுத்து போனது மாலா. அது பிற்புல் (Pitbull) இனம்.
இது ஷரன். டல்மேஷன் (Dalmatian) இனம்.”
“அப்ப உனக்கு இப்பொழுது மூன்று கேர்ள் ·பிரண்டா? என்ற எனது நியாயமான கேள்வியை அவன் முன் வைத்தேன்.
சிரித்து விட்டு, “இல்லை… இல்லை. றெக்ஷ் எனக்கு இன்னும் இரண்டு கஸ்டமர்ஷை பிடித்துத் தந்திருக்கின்றாள்” என்றான் றோமன்.
“வாடிக்கையாளர்களா?”
“ஆமாம். ஒவ்வொரு நாயிற்கும் இருபது நிமிடங்கள் ஓட்டிச் செல்வதற்கு பத்து டொலர்கள் வீதம் வாங்குகின்றேன். நாய்ப்பிழைப்பு அப்பிடியொன்றும் இலகுவான காரியமல்ல. சிலவேளைகளில் ஓட வரமாட்டேன் என்று அடம் பிடிக்குங்கள். சிலசமயங்களில் துணை ஒன்றைக் கண்டுவிட்டால் ஓடுவதைக் குழப்பிவிட்டு குறுக்காலை போய் விடுங்கள். பொறுத்த இடத்திலை சூவும் அடிச்சிடுங்கள்” விளக்கம் தந்தான் றோமன்.
“ஒருமுறை எனது பெண் தோழியின் நாய், ஷீலா, எனது படுக்கை அறைக்குள் புகுந்து கொண்டது. போகமாட்டேன் என அடம் பிடித்து அங்கேயே படுத்தும் விட்டது. விட்டேன் ஒரு உதை. எனக்கு நாய்கள் என்றால் பிடிப்பதே இல்லை. விசர்தான் வரும்.”
“அப்படியென்றால் உங்களுடைய கேர்ள் ·பிரண்டிடம் இருந்தும் பணம் வாங்குகின்றீர்களா?” என்ற எனது வியப்பிற்கு
“ஆமாம் நட்பு வேறு. வியாபாரம் வேறு. Friendship is different from business” என்றான்.

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் அவனுடைய மனைவி ஏன் றோமனை விட்டுப் பிரிந்தாள் என்பது இப்போது புரிந்தது. இப்போதெல்லாம் அவனைப் பார்க்கும் போதும் நாய்தான் நினைவுக்கு வருகின்றது. என்ன ஒரு வித்தியாசம். நாக்கு தொங்குவதில்லை.

Series Navigationஜென் ஒரு புரிதல்- பகுதி 29மகள்
author

கே.எஸ்.சுதாகர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *