சுஜாதாவின் ” விரும்பி சொன்ன பொய்கள் ” நாவல் விமர்சனம்

This entry is part 2 of 40 in the series 12 பிப்ரவரி 2012

விரும்பி சொன்ன பொய்கள் – என்ன அழகான தலைப்பு ! பொய்மையும் வாய்மையிடத்த என்கிற மாதிரி இருக்கிறது இந்த தலைப்பு. சுஜாதாவின் க்ரைம் த்ரில்லர் இந்த நாவல்.
கதை
ராதாகிருஷ்ணன் என்பவன் மதுரைக்கு வரும் தன் முதலாளி மனைவியை வரவேற்க விமான நிலையத்தில் காத்திருக்கிறான். சுருக்கமாக அவன் பிளாஸ் பேக் விரிகிறது. இதற்கு முன் சர்க்கஸில் வேலை பார்த்து தான் காதலித்த பெண் மீது வேண்டுமென்றே அம்பு எய்து காயப்படுத்தியதால் ஜெயிலுக்கு போய் திரும்பியவன். அவனது பழைய கதை தெரிந்து யாரும் வேலை தராத போது இந்த நிறுவனத்தில் தான் வேலை கிடைக்கிறது.
“மதுரை வரும் தன் மனைவியை பார்த்து கொள்” என சொல்கிறார் முதலாளி. வரும் மனைவியோ புயல் மாதிரி இருக்கிறாள். அலை பாயும் மனம் கொண்ட அவளின் செயல்கள் புதிராய் இருக்கின்றன. அவள் செல்லும் இடமெல்லாம் கூட செல்ல வேண்டும் என்ற பாஸின் கட்டளையால் அப்படியே செய்கிறான் ராதாகிருஷ்ணன். ஒரு இரவில் தனிமையான பீச்சில் இருவருக்கும் உறவும் நடக்கிறது. இதன் பின் மறு நாள் அவள் சென்னை சென்று விடுகிறாள். ராதா கிருஷ்ணனோ அவள் நினைவாக பித்து பிடித்து அலைகிறான்
அவளை காண சென்னை செல்கிறான். சந்திக்கவும் செய்கிறான். சந்தித்த அன்று இரவே அவள் இறக்கிறாள். அது தற்கொலையா கொலையா என ஆராயும் போலிஸ் சொல்லும் கதை ராதா கிருஷ்ணனை மட்டுமல்ல நம்மையும் தூக்கி வாரி போடுகிறது.
ராதா கிருஷ்ணனை வந்து சந்தித்தது வேறு பெண். அவர் முதலாளி மனைவி அல்ல. ராதா கிருஷ்ணனின் past-ஐ வைத்து அவனை இந்த வலையில் விழ வைப்பதுடன் கொலை பழியும் வருகிற மாதிரி செய்தது அந்த முதலாளி தான் என்கிற ரீதியில் கேள்வி குறி மட்டும் எழுப்பி கதையை நிறைவு செய்கிறார்.

***
முடிவில் இறந்த பெண் அவர் மனைவி தானா இல்லையா? இந்த கேள்விக்கு ஆம் என்பதா இல்லை என்பதா என்று கேட்டு விட்டு, அதனை வாசகர்களே நீங்களே சொல்லுங்கள் என முடிக்கும் போது நமக்கு ஏமாற்றம் ஆகி விடுவது நிஜம்.
சர்க்கஸ் வாழ்க்கை பற்றி சுவாரஸ்யமாக முதல் சில பக்கங்களில் சொல்கிறார். ராதா கிருஷ்ணனின் ஜெயில் வாழ்க்கை பற்றி நீண்டு செல்லும் ஒரே வரியில் வலியை நமக்கு உணர வைப்பது டிபிகல் சுஜாதா !
கதையில் வரும் பாத்திரங்கள் பலவும் ” கல்யாணம் பண்ணிக்காதே ” என்கிறார்கள். (அவ்வப்போது சுஜாதாவின் பாத்திரங்கள் பிற கதைகளிலும் இந்த வரியை சொல்வதுண்டு”)
சிவகங்கை அருகில் இரவு சென்று தங்கினார்கள் என கூறிவிட்டு பீச் சென்று குளிப்பதாக சொல்வது இடிக்கிறது. சிவகங்கை அருகே எங்கே பீச்?
முன்னுரையில் சுஜாதாவே ” வாசகரிடம் முடிவை ஊகிக்க சொல்வது எனக்கு மிக பிடித்த உத்தி” என்கிறார்.ஆனால் இந்த கதையில் முடிவு தெரியாமல் நமக்கு சற்று என்னவோ போல் தான் உள்ளது !
விரும்பி சொன்ன பொய்கள் : Diehard Sujatha fans-க்கு மட்டும் பிடிக்கும்!

நாவல் பெயர்: விரும்பி சொன்ன பொய்கள்
வெளியீடு: விசா பதிப்பகம்
விலை: ரூ. 40

Series Navigationகல்விச்சாலைஅள்ளிக்கொண்டுபோன மரணம் – தி.சு.சதாசிவம் – அஞ்சலிக்குறிப்புகள்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *