தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

22 நவம்பர் 2020

எல்ரெட் குமாரின் ‘ முப்பொழுதும் உன் கற்பனைகள் ‘

சிறகு இரவிச்சந்திரன்

Spread the love

முதல் காத்தாடி பெரிய ப்ளாக் பஸ்ட்டர் இல்லைதான். ஆனால் முரளி மகன் அதர்வா அவசரப்படவில்லை. இரண்டு வருடம் ஆகியிருக்கிறது, அவருக்கு அடுத்த படம் வர. முதல் படம் வெளிவர இருக்கும்போதே, தந்தை முரளி அகால மரணமடைந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். இங்கே நல்ல வெற்றிப்படம், மக்கள் மனதில் பதிவாகிறது. நிறைய படங்கள் இல்லை.
ராம் ( அதர்வா ) என்கிற ராமச்சந்திரன் ஐடி இளைஞன். அதிபுத்திசாலி. ஆனால் வாரக்கடைசி யில் பெங்களூர் போய் காதலி சாருவிடம் ( அமலா பால் ) சேர்கிறான். அவளும் ஐடி. அடிக்கடி கட்டி, கட்டி காதலைச் சொல்கிறார்கள். ஏ ஆர் ரகுமானின் ஹக் மீ பாடல் வீடியோவைப் போல. படத்தின் பெரிய டிவிஸ்ட் (? ) சாரு தான் ராம் வேலை செய்கிற கம்பெனியின் சி இ ஓ. முழுப்பெயர் சாருலதா. ராம் பெங்களூர் செல்லும்போதெல்லாம், அவள் அமெரிக்காவில் இருக்கிறார். பின் எப்படி? ஒரு காலத்தில் இதை படங்களில் அம்னீஷியா என்றார்கள். ( படம் நினைவில் நின்றவள் ) பிறகு அதையே டெம்ப்ரரி மெமரி என்றார்கள். ( படம் கஜினி ) டாக்டர் ஜெயப்பிரகாஷ், மொமெண்ட்ரி டெல்யூஷன் என்று ஏதோ சொல்கிறார். அதாவது பெங்களூரில் இருக்கும்போது மட்டும், இல்லாத சாருவை இருப்பதாக எண்ணிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறானாம் ராம். மற்றபடி சென்னையில் வேலையில் கெட்டி. ஒரு குறையில்லை. சாருவின் இந்திய செல்பேசி எண்ணை வைத்துக் கொண்டு, ஒரு பார்வையில்லாத பெண், சாருவாக, அவனிடம் பேசிக் கொண்டிருக்கிறார். ( இயக்குனரின் லாஜிக் ) சி இ ஓ சாருலதா இருக்கற வேலையை எல்லாம் விட்டுவிட்டு, ராமின் கிராமம் போய், நாசரைப் ( அந்தண குருக்கள்.. ‘ வந்திட்டு கூட்டிண்டு ‘ குழப்ப உச்சரிப்பு ) பார்த்து ப்ளாஷ் பேக் போய், ராமின் அம்மா ( அனுபமா குமார் – கடுகு காரம் ) முதுகில் ஏறி, ஒட்டுண்ணியாய் வளரும் ராம், அம்மா இறந்தவுடன் சாருவின் ஒட்டுண்ணியாக வாழத்துவங்கும் உளவியல் (? ) காரணத்தைத் தெரிந்து கொள்கிறாள். அவளுக்கு ஏற்கனவே அமெரிக்காவில் விக்கியுடன் திருமணம் அடுத்த வாரம். இடையில் சாருவை கேலி செய்யும் பெரிய இடத்து பையன்களை, ராம் போட்டுத் தள்ளுவது, முடிவில் விக்கியின் வெள்ளைக்கார நண்பர்களைப் போட்டு வெல்வதும் ( பீகாக் பைட் கிளாஸ் ) எனப் படம் முடிவதும், ராமுடன் சாரு சேர்வதுமான சுபம்.
கொஞ்சம் ஜீவா, கொஞ்சம் சூர்யா, துளியூண்டு முரளி சிரிப்பு எனக் கலவையான முகம் அதர்வாவுக்கு. ஆனால் ஏகத்துக்குப் பள்ளம் இரண்டு கன்னங்களிலும். உதடு குவித்தால் க்ளோஸ்ப்பில் அசிங்கமாகத் தெரிகிறது. அலெக்ஸ் பாண்டியன் போல இரு பக்கமும் ரப்பர் அடைத்துக் கொண்டால் தேவலை. மற்றபடி ஊடுருவும் கண்கள், நளினமான நடன அசைவுகள், மிரட்டலான ஸ்டண்ட் எனத் தேறிவிடுகிறார். அமலா பாலுக்கு இது இன்னொரு மைனா இல்லை. காசைத் தேத்திக்கொள்ள இது போன்ற படங்களைத் தேர்ந்தெடுத்திருப்பார் போல. தன் பாத்திரம் என்ன என்கிற குழப்பம் அவரது கண்களிலேயே தெரிகிறது. பா எ பாஸ்கரன், தெய்வத்திருமகள் தந்த இடத்தைத் தக்க வைக்கத் தவறிவிட்டார் சந்தானம். தனி காமெடி என்று ஏதேதோ பண்ணுகிறார். சுவைக்கவில்லை.
நல்ல ஒளிப்பதிவு, நல்ல இசை, அருமையான அயல்நாட்டு லொகேஷன்கள். ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் நோ கிரேட் கதை. திரில்லரா, காதல் கதையா என்று இயக்குனர் குழம்பியிருப்பது சராசரி ரசிகனுக்கே தெரிகிறது. ஆரம்பத்திலேயே கௌதமுக்கும் கோ ஆனந்துக்கும் நன்றி கார்டு போடுகிறார். அதுதான் பிழையே. கோவா கௌதமா என்று குட்டை குழம்பியதில் காணாமல் போய்விடுகிறது படம்.
எல்ரெட் குமார் நல்ல படங்களைத் தேர்வு செய்வதில் வல்லவராக இருக்கிறார். உதாரணம், வி தா வருவாயா, கோ. அவர் அதோடு நிறுத்திக் கொண்டால் ரசிகன் பிழைப்பான்.
அதர்வாவுக்கு ஒரு அட்வைஸ். பாலா படம் முடிந்தபின் அவர் மொட்டையாகாமல், மாறுகண் ஆகாமல், முக்கியமாக,. மெண்டல் ஆகாமல், ஒரு ஷேப்பில் வந்தால், கௌதமோ, கோ ஆனந்தோ அவரை வைத்து படமெடுக்கலாம். அவரிடம் இருக்கிறது ஹீரோ மெட்டீரியல்.
#
கொசுறு
நான் எழுதியதும், காக்காய் உட்கார பனம்பழம் விழுந்தது போலவும், அரசு கவனத்திற்குப் போய், ( அட்ரா சக்கை ) சத்தமில்லாமல், ஆங்காங்கே கதவுகளைத் திறந்துவிட்டு, சொகுசு பேருந்துகளை எல்லாம் சாதாரணக் கட்டணப் பேருந்துகளாக ஆக்கியிருக்கிறது. ‘ அதெல்லாம் சிட்டியிலே தான் சார். மொப்சல்ல இல்ல ‘ என்கிறார் வெள்ளவேடு பேருந்து நடத்துனர். என்ன பண்ணுவார்கள் கிராமத்து மக்கள். என் எஸ் கே சொன்னது போல ‘ பட்டணம் தான் போக வேண்டும் பொம்பள ‘
விருகம்பாக்கம் தேவி கருமாரியில் ஒவ்வொரு காட்சிக்கும் இடைவேளைக்குப் பிறகு ஏசி ஆப். மின் விசிறி போடுகிறார்கள். இருக்கற ஜில் போவதற்குள் படம் முடிந்தவிடும். அடுத்த காட்சி ஆரம்பத்தில் ஏசியுடன் பேன். ஜில் பரவுவதற்குள் நெற்றி வியர்வை நிலத்தில். அதர்வா, ஆர்யா போல அரங்கின் மின்கட்டணம் கட்ட முன்வரலாம். இல்லை என்றால் படம் பார்க்கும் ரசிகனின் கைகள், நெற்றிக்கு அடிக்கடி போனால், அது படத்தைப் பற்றி ராங் சிக்னல் தரலாம்.
#

Series Navigationஎழுத்தாளர்களின் ஊர்வலம் (பாகம்..2)மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை –

Leave a Comment

Archives