மயிலு இசை விமர்சனம்

This entry is part 9 of 31 in the series 19 பிப்ரவரி 2012

எவையெல்லாம் இசை என்று கூறத்தகுதியில்லையோ அப்படிப்பட்ட இப்போதைய இசைக்கு மத்தியில் , இந்த மயிலின் இசை கொண்டு வந்து கொடுத்திருக்கிறார் ராஜா சார் நமக்காக. இன்னும் கொலவெறி’யோட சுத்திக்கிட்டு இருக்கிற தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு அருமருந்தாக இந்த எண்பதுகளின் இசை மீண்டும் அவரின் பறைசாற்ற வந்திருக்கிறது. எனக்கென்னவோ ஜெயா ப்ளஸ்’ஸ ஆன் பண்ணிவிட்ட மாதிரி ஒரு Feeling. மயிலிறகின் தென்றலாக நம்மை வருடிச்செல்கிறது அத்தனை பாடல்களும்.அவரின் அதே மண் மணம் மாறாத இசை. அனைத்துப்பாடல்களிலும் இக்கால இசைக்கென/பாணிக்கெனத் தம்மை எந்த விதத்திலும் விட்டுக்கொடுக்காமல் மேலும் தமது பாணியிலிருந்து கிஞ்சித்தும் மாறாமல் அதே பாணியில் இசையைக் கொடுத்திருக்கிறார் ராஜா சார். அனைத்துப்பாடல்களும் வில்லுப்பாட்டின் இசையை ஒத்திருப்பதாக , உருக்கொண்டு இசைப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. அந்த 16 வயதினிலே மயிலு போலவே , இன்னும் இளையராஜாவின் இசைக்கு வயது பதினாறேதான் என்று நிரூபிக்கிறது அத்தனை பாடல்களும்..!
நம்மளோட பாட்டுதாண்டா
கார்த்திக், திப்பு மற்றும் சைந்தவி இணைந்து பாடிய பாடல் , “ நம்மளோட பாட்டுத்தாண்டா ஒலகம் பூரா மக்கா, கண்டபாட்டக்கேக்க நாங்க காணப்பயறு தொக்கா..?! “ என்று ஆரம்பிக்கும் பாடல் “வேற எந்த பாட்டயும் நாங்க உள்ளவிடமாட்டோம்” என்று திப்பு’வுடன் கார்த்திக்கும் தொடர்கிறார். தொடக்கத்தில் வில்லுப்பாட்டு கோஷ்டியினரின் பாடல்கள் போல உருப்பெற்றிருக்கும் பாட்டு தொடர்ந்தும் அதே பாணியில் பின்னால் கோரஸ் ஒலிக்க கை விரல்களால் நம்மை தாளம் போடவைக்கும் பாடல். இப்டி ஒரு பாட்டு கேட்டு எத்தன நாளாகுது..?! ஹ்ம்.. யுவன் கூட “கோவா”வில ஒரு பாட்டு போட்ருந்தார் , ஏறக்குறய இதே பாணீல..ஐயா இத இப்டித்தான் சொல்லணும் , அய்யா பாட்ட பாத்து மகன் போட்ருந்தார்னு 
இப்பல்லாம் ஊர்த்திருவிழாவில என்ன பாட்டு போட்றாங்கன்னு பாத்தா இன்னும் கரகாட்டக்காரனும், “ஒத்த ரூவா தாரேன்” பாட்டுந்தான் ஓடிக்கிட்டுருக்கு, இனிமே இந்தப்பாடல் ஒலிக்கும் அத்தனை திருவிழாக்களிலும். 1:47 ல் தொடங்கும் ஷெனாயின் ஒலியுடன் “தப்பு” வாத்தியம் பின்னர் தாளத்திற்கென சேர்ந்து கொள்ள அது தொடர்ந்தும் 2:10 வரை ஒலிக்கிறது.ராஜா சார் எப்பவுமே ஒரே நோட்ஸ பல காற்றுக்கருவிகள் வாசிப்பவருக்கு கொடுத்து [ க்ளாரினெட் , புல்லாங்குழல், ஷெனாய் போன்ற ] ஒரே நேரத்திலும் அந்த நோட்ஸ்களை வாசிக்கச்சொல்வார் , அதனால இந்த வாத்தியத்துலதான் இசை வருகிறதுன்னு சாதாரண காதுகள் கொண்ட நம்மால பிரித்தறிவது மிகக்கடினம்.சிம்ஃபொனி இசைப்பவருக்கு இதெல்லாம் என்ன ஒரு பெரிய விஷயமா..?! ஹ்ம்..?! பிறகு 2:20 லிருந்து 2:20 வரை அதே நோட்ஸை வயலின்,மாண்டலின் மற்றும் லீட் கிட்டாரில் வாசிக்க முதல் interlude முற்றுப்பெறுகிறது. பின்னர் திப்பு’வே பாடத்தொடங்குகிறார் முதல் சரணத்தை. “செந்தூரப்பொட்டு மாறி இப்ப ஸ்டிக்கராகிப்போச்சு “ என்று அடிக்குரலில் திப்பு பாடும்போது இதுகாறும் முப்பது ஆண்டுகளாக நம்மை மயக்கிக்கட்டிப் போட்டிருந்த ஹார்மனி பின்னில் இசைக்கிறது சைந்தவி மற்றும் பிற பெண்களின் குரல்களில்.. ஐயா சாமி ,,இப்பல்லாம் இதெல்லாம் கேக்கவே முடியிறதில்லீங்கோ….தொடருங்க..:-) 3:14 ல் தொடரும் தவில் இசையுடன் பின்னர் சேரும் ஷெனாயும் , மத்தளம் கொஞ்சம் எதிர்நடை கொடுக்க , திப்புவே இரண்டாவது சரணத்தையும் பாட கோரஸ் அவ்வப்போது வந்து செல்கிறது , Typical Raaja Style குதூகலமான பாட்டு..!
துக்கமென்ன துயரமென்ன
ரீட்டா என்ற ஒரு புதுப்பாடகியுடன் ஸ்ரீராம் பார்த்தசாரதி இணைந்து பாடும் பாடல்.எனக்கென்னவோ பாடல் தொடங்கியவுடனே “நிலவே முகம் காட்டு” ( எஜமான் படத்தில் இடம் பெற்ற பாடல் ) மற்றும் “முத்துமணி மால “ ( சின்னக்கவுண்டர் படப்பாடல் ) தான் ஞாபகம் வந்து விட்டது. மனதை உருக்கும் பாடல் முற்றிலும். முதல் Interlude , violin மற்றும் புல்லாங்குழலுடன் 0:56 ல் தொடங்கி பின்னர் Synthesizer உடன் 1:18 ல் முடிவடைய ஸ்ரீராம் தொடர்கிறார் முதல் சரணத்தை. இரண்டாவது Interlude கொஞ்சமே வந்தாலும் , பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சீக்கிரமே முடிந்துவிடுகிறது. பாடல்களில் இரண்டு Interludes களையும் , வேறுவேறாக இசைத்தது , அவர் இசைக்கத்தொடங்கிய காலத்திலிருந்தே ராஜா சார் மட்டுமே.அதுவரை ஓரே மாதிரியான Interludes களையே தமிழ்கூறும் நல்லுலக மக்கள் கேட்டு வந்தனர். இந்தப்பாடலிலும் ராஜா சார் இரு வேறு இசைத் துணுக்குகளை இரண்டு interludesகளுக்கும் பயன்படுத்தியிருக்கிறார். இந்தப்பாடலை “இலங்கை வானொலி’ல (அதெல்லாம் ஒரு காலம் மக்கா ) , இரவு பத்து மணிக்குமேல் , இரவின் மடியில் என்று B.H.அப்துல் ஹமீத் இசைப்பார். அந்த நிகழ்ச்சிக்கான மிகப்பொருத்தமான இரவுச்சூழலுக்கான பாடல்,இதைக்கேட்ட பிறகு உங்களுக்கு நிம்மதியான உறக்கம் வரவில்லை என்றால் என்னிடம் வாருங்கள்..! 

யாத்தே அடி யாத்தே
பவதாரிணி தான் சிரமப்பட்டு “யாத்தே யாத்தே” என்று ஆரம்பிக்கிறார். “ பாவிப்பய பாத்தே கொல்லுற்யான்” என்றும் தொடர்கிறார்.இருந்தாலும் அந்தப்பாடலுக்குத் தேவையான விரகத்தை தன் குரலில் காட்ட மிகவும் சிரமப்பட்டிருக்கிறார். இயக்குனர் பாலச்சந்தர் , “தாஜ்மகால்” பட ஆரம்ப விழாவில பேசினது தான் எனக்கு நினைவுக்கு வருது.அந்த நிகழ்ச்சில அவர் பாரதிராஜாவை பற்றி சொன்னார் இப்டி.” என்ன அப்பாவே மகனுக்கு காதலிக்கிறது எப்படி’ன்னு சொல்லிக்குடுக்கிறதில் ஒரு Embarrassment இருக்கும்னு சொன்னது போல , ராஜா சாரே எப்டி தன் மகளுக்கு அத விளக்கி சொல்லிருக்க முடியும்னு, ரொம்பக்கஷ்ட்டம் தான். “மஸ்த்தானா மஸ்த்தானா” பாட்டுத்தான் முதலில் ராஜா சாரிடம் பவதாரிணி பாடின பாடல்னு நினக்கிறேன்.அப்ப ராஜா சார் இப்டி சொல்லீருந்தார்னு ஒரு பேட்டில பவதாரிணி சொல்லிருந்தார். “ சரியா கத்துக்காமவே பாட்ட பாடீட்ட”ன்னு..அதே மாதிரிதான் இந்தப்பாட்டும் இருக்கு,! இருந்தாலும் இடையில பாரதி படத்திற்கென அவர் “ மயில் போல பொண்ணு ஒண்ணு “ என்று பாடி தேசீய விருது பெறவும் தவறவில்லை அவர் .
Friends படத்திலருந்து தன்னுடைய வழக்கமான Bongos வெச்சிக்கிட்டு தாளத்துக்கென இசைக்கிற பாணிய மாற்றிவிட்டார் ராஜா சார். பின்னர் வந்த பாடல்களில் எதிலும் அந்த Bongos பின்னணி தாள இசையை கேட்கவே நம்மால் முடியல. அதே பாணியில் இந்தப்பாடலும் ஸிந்தஸைஸரே பாடலின் தாளத்திற்கென யன்படுத்தப்பட்டிருக்கிறது. ஓரளவு “ஒளியிலே தெரிவது ( அழகி படப்பாடல்) “ போல ஒரு Feelஐ இந்தப்பாடல் தருவதை தவிர்க்க இயலவில்லை.1: 32 ல் Interludeக்கென பவதாரிணி ஹார்மனி பாடுகையில் ‘ஓளியிலே’ நன்றாகவே ‘தெரிகிறது’ . 2:50 ல் தொடங்கும் இரண்டாவது Interlude முழுக்க ஸிந்தஸைஸரிலேயே இசைக்கப்பட,பின்னணிக்கு மட்டும் தபேலா சேர்ந்து கொள்கிறது தாளத்திற்கென. பின்னர் கூடவே தொடர்கிறார் ஸ்ரீராம் பார்த்தசாரதி.
என்ன குத்தம்
வழக்கமான கரகரப்பான ராஜா சாரின் குரலில் ஆரம்பிக்கும் பாடல் , காட்சிகளின் பின்னணியில் ஒலிப்பதெற்கென இசைக்கப்பட்ட பாட்டு போலவே இருக்கிறது. இருந்தாலும் அந்த மதுரக்குரல் இன்னும் நம் மனதை கீறிடத்தவறவில்லை. வயலின் கூடவே பாடுகிறது ராஜா சாருடன். சோகத்தை இழைத்து இழைத்து ஓடவிடும் பாடலுக்கு உரம் கொடுக்கும் அதிர்வில்லாத பின்னணி இசை. “நானானனா “ என்ற ராஜா சார் பாடும் பாடல்களில் எப்போதும் காணக்கிடைக்கும் ஹார்மனி இந்தப்பாடலிலும் ஒலிக்கத்தவறவில்லை. ஒலம் ஒலிக்கிறது பாடலில். சமீபத்திய ராஜா சாரின் நிகழ்ச்சியில் “பிரகாஷ்ராஜ்” கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர் தமது பழைய பாடல்களில் ஒன்றை அவர் குரலிலேயே பாடியது போலவே இருக்கிறது இந்தப்பாடலும்..!
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம் என்று குதூகலமாக ஆரம்பிக்கிறார் சின்னப்பொண்ணு. “ஒத்த ரூவா தாரேன்” பாடலின் பின்னணி தவில் போல தொடங்கும் இசையுடன் தொடர்ந்தும் பாடுகிறார் சின்னப்பொண்ணு.முதல் Interlude 1:15ல் நாதஸ்வரத்துக்குப் பின்னரான புல்லாங்குழல் இசை’யை இப்போதும் “அருண்மொழி”யே வாசித்திருக்கக்கூடும். அத்தனை நேர்த்தி ,அத்தனை கச்சிதமாக ஒலிக்கிறது , பாடலின் Tempoவிற்குத்தகுந்த மாதிரி..!  பாடல் முழுக்க நாதஸ்வரமும் ,தவிலுமாக நமது முந்தைய ஊர்த்திருவிழாக்களை ஞாபகப்படுத்தத் தவறவில்லை. 

சின்னப்பயல் (chinnappayal@gmail.com)

Series Navigationபிரகாஷ்ராஜின் ‘ டோனி ‘பஞ்சதந்திரம் தொடர் 31- பாருண்டப் பறவைகள்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *