சத்யசிவாவின் ‘ கழுகு ‘

This entry is part 30 of 36 in the series 18 மார்ச் 2012

வித்தியாசமான கதைக் களத்தைத் தேர்வு செய்ததற்காக, இயக்குனரைப் பாராட்ட வேண்டும். இன்னொரு மைனாவாக வேண்டிய படம். மலைப்பாதைகளில் எடுக்கப் பட்டதால், கொஞ்சம் சறுக்கி விட்டது.

படத்தில் இன்னொரு வருடும் அம்சம், பிஜ்லி பட்டாசுகள் போல் ஆங்காங்கே தெறித்து விழும் மெல்லிய நகைச்சுவை. இளைஞர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்கிறார்கள்.

ஒரு சாதாரண மெட்டை, ஆர்கெஸ்ட்ரேஷனில், இன்னொரு தளத்திற்குக் கொண்டு போக முடியும் என்று, ஏற்கனவே இளையராஜா நிரூபித்து விட்டார் பல பாடல்களில், அவரே பாடி. வாரிசு இன்னொரு முறை நிரூபித்திருக்கிறது. நிச்சயமாக யுவன் பூனை இல்லை.

இயக்குனர் விஷ்ணுவர்த்தனின் தம்பி என்பது, எந்த வகையிலும் கிருஷ்ணாவுக்கு உதவவில்லை முந்தைய படங்களில். இதிலும் கதையை நம்பியே நிற்கிறார். பிந்து மாதவிக்கு கொஞ்சம் நடிக்க வாய்ப்பு. கண்கள் பேசுகின்றன. தம்பி ராமையா, மைனாவுக்குப் பிறகு நிமிர்ந்து உட்கார வைக்கிறார். கருணாஸில் குத்தல்கள் ரசிக்க வைக்கின்றன. இயக்குனர் மிஷ்கினின் சீடர் போலிருக்கிறது. லுங்கியைத் தூக்கி, அண்டராயரைக் காட்டி ஆடும் ஆட்டம், இதிலும் உண்டு. மஞ்சள் புடவைதான் மிஸ்ஸிங்.

சேலா, சித்தப்பா, நண்டு, குமார் இவர்கள் நால்வருக்கும், தற்கொலை முனையிலிருந்து விழுந்து செத்தவர் சடலங்களை மீட்டெடுக்கும் வேலை. எடுக்கும்முன் சவத்தின் நகைகளை, லவட்டி விடுகிறார்கள். அதை சேட்டிடம் விற்று, தண்ணியடிக்கிறார்கள். சேட்டு ஒரு நாள் போலிசிடம் சொல்லி விடுகிறான். ஆனாலும் சவம் எடுக்க ஆள் இல்லையென்பதால், அவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள். தேயிலை பதனிடும் ஆலையில் வேலை செய்யும் கவிதா, சேலா மேல் காதல் கொள்கிறாள். ரகம் பிரிக்கப்பட்ட தேயிலையைக் கொண்டு செல்லும் லாரிகளைக் கடத்தும் அய்யா ஜெயப்பிரகாஷ், ஒரு கடத்தலின் போது செக்போஸ்ட் போலீஸ்காரர்களையே வெட்டிச் சாய்த்ததால் ஜெயிலுக்குப் போகிறார். கொலை என்று நிரூபிக்க, சடலங்களை மேலெடுத்த, நால்வர் மீது, அவர் கோபம் திரும்புகிறது. மூன்று நண்பர்கள் கொல்லப்பட்ட பின், சேலா எப்படி பழி தீர்க்கிறான் என்பது முடிவு. சேலாவுக்கு சேரவேண்டிய கத்திக்குத்து கவிதாவின் மேல் பாய் அவள் க்ளோஸ். கடைசியில் கவிதாவின் உடலைக் கட்டிக் கொண்டு, சேலா தற்கொலை முனையிலிருந்து குதிக்கிறான்.

மைனா ரீப்ளே போல் இருக்கிறதா? ஆனால் சுவாரஸ்யமான இடங்கள், வசனங்கள் உண்டு.

‘ காதல் முறிஞ்சு போனா யாரும் இப்போ இங்க தேவதாஸ் ஆகறதில்ல.. ‘ ‘ மாசத்துக்கு ஒண்ணோ ரெண்டோதான் பீஸ் ( சடலம் ) கெடைக்குது. முன்னமாதிரி தெனைக்கும் இல்ல.. பசங்க தெளிஞ்சுட்டாங்க ‘

‘ பீசுங்கள்ல இப்பல்லாம் நகைங்க இருக்கறதில்லப்பா.. ஓடி வந்தவங்க, லாட்ஜில ரூம் போட்டு, சேட்டு கடையில நகைய வித்து, புல்லா குஜால் பண்ணிட்டு, மொட்டையா வந்துதான் செத்து போறாங்க ‘

‘ லவ் பண்ண ஆரம்பிச்சுட்ட, 24 மணிநேரமும் லவ்வர பாத்துகினே இருக்கணும்.. பத்து நிமிசம் கேப் உட்டே, பத்தாயிரம் பேர் நுழைய காத்துகினு இருப்பான்.. ‘

முதல் பாதி ஜிவ்வு, பின்பாதி ஜவ்வு என்றெல்லாம் சொல்ல மாட்டேன். கதைக்குண்டான வேகத்தில் அது பாட்டுக்கு ஓடிக்கொண்டிருக்கிறது. என்ன பெரிய டிவிஸ்ட் எல்லாம் இல்லை. பெரிய வில்லானாகச் சித்தரிக்கப்படும் ஜெயப்பிரகாஷ், வேட்டியை மடித்துக் கட்டுவதைத் தவிர, வேறு எதையும் வெட்டி முறிக்கவில்லை. ஓளிப்பதிவு பல இடங்களில் ப்ளர் ஆகத் தெரிகிறது. கார்த்தியைப் போல், சட்டென்று ரசிகன் மனதில் ஒட்டிக் கொள்ளும் முகமில்லை கிருஷ்ணாவிற்கு. அன்னக்கொடி அமீருக்குக் கிடைத்தது போல் ஒரு மின்னக்கொடி இவருக்குக் கிடைத்தால் தேறலாம்.

#

கொசுறு

சாலிக்கிராமம் எஸ் எஸ் ஆர் பங்கஜம் மிகப் பழைய தியேட்டர். இளவயதில் பத்து ரூபாய்க்கு பதினொன்றரை மணி ஆட்டம் பார்த்த நினைவுகள் எனக்குண்டு. இப்போது தரையிலிருந்து பத்தடி உயர்த்தி, டிடிஎஸ், ஏசி பண்ணியிருக்கிறார்கள். சுவீப் ஏசி மெல்ல காதுகளை வருடுகிறது. எண்ணூறு சொச்ச இருக்கைகள், 70 எம் எம் திரை, சொற்ப கூட்டம் என்று சொகுசாக இருந்தது அனுபவம். இடைவேளையில்தான் ஹிக்கப்பே! டாய்லெட்டில், திரிசங்கு மாதிரி, மேலும் கீழும் பிடிப்பு இல்லாமல் இரண்டு ஸ்க்ரூக்களில் தொங்குகின்றன யூரினல்கள்.

வடபழனி பேருந்து நிறுத்தத்தில், ஒரே சமயத்தில் இரண்டு எம் 88 குன்றத்தூர் பேருந்துகள். இதுவா அதுவா என்று அல்லாடிக்கொண்டிருந்த பின்சீட்டுக் குடிமகன், அவசரமாய் அடுத்த வண்டியில் ஏற, அவரது பக்கத்து இருக்கைக்காரர் அவர் விட்டுப் போன பிளாஸ்டிக் பையை ஆராய, கிடைத்தது லக்கி பிரைஸ். ‘ குவாட்டர் சார் ‘ என்று மகிழ்ச்சியுடன் சிரித்தார். என் பக்கத்து இருக்கைக்காரருக்கு பரபரப்பு தொற்றிக்கொண்டது. ‘ நல்லா பிரிச்சு பாருங்க.. வேற ஏதாவது இருக்கப்போவுது.. அப்புறம் வம்பாயிடும் ‘ என்று பயத்தைக் கிளப்பினார். பின்சீட் பிரித்துப் பார்த்து குவாட்டர் தான் என்று கன்பர்ம் செய்தார். ‘ எழுபத்தி ஐந்து ரூபா இருக்குமா? ‘ என்றேன் நான். ‘ முப்பத்தி ஐந்து.. பாதியை காலி பண்ணிட்டாரு ‘ என்றார் வருத்தத்துடன் பின் சீட்.

#

Series Navigationபஞ்சதந்திரம் தொடர் 35- பேராசை பெருநஷ்டம்இலக்குமி குமாரன் ஞானதிரவியம் படைப்புகளில் கிராம சமுதாயம்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *