ஸ்ரீ கிருஷ்ண ஆலனஹள்ளியின் வனக்கோயில் (தமிழில் ராஜேஸ்வரி கோதண்டம்.) நூல் பார்வை

This entry is part 1 of 42 in the series 25 மார்ச் 2012

மொழிபெயர்ப்பு நூல்களின் தேவை அதிகமான காலகட்டம் இது. ஒவ்வொரு மொழிபெயர்ப்பு நூலும் தான் சார்ந்த மண்ணின் மணத்தையும். தன்  மொழி வளத்தையும் சுமந்து வந்து நமக்கு அந்த மண்ணை நுகரச் செய்யும் அழகான முயற்சி.அந்த முயற்சியில் மிகச் சிறப்பாகச் சாதித்துவரும் திருமதி ராஜேஸ்வரி கோதண்டம் அவர்களின் அருமையான நடையில் வெளிவந்துள்ள நூல் “ வனக்கோயில்”. ஸ்ரீ கிருஷ்ண ஆலனஹள்ளியின்  “ அடவி” என்ற  கன்னடப் புதினத்தைத் தமிழில் வனக்கோயில் என்ற பெயரில் மொழியாக்கம் செய்துள்ளார்.

இவர் கிட்டத்தட்ட 100 புத்தகங்கள் வெளியிட்ட திரு கொ. மா. கோதண்டம் அவர்களின் துணைவியார். இவரும் தன்னுடைய எழுத்துப் பணியில் முத்திரை பதித்திருப்பதோடு மட்டுமல்ல. இவர்களது மக்கட் செல்வங்களும் முத்திரை பதித்தவர்களே. மொழியாக்க நூல்களுக்குப் பல விருதுகளும் பெற்றுள்ளார். இந்த அடவியையும் தன் சிறப்பான நடையினால் வனக்கோயிலாகப் படைத்துள்ளார்.கங்கை புத்தக நிலைய வெளியீடான இதற்கு சிலம்பொலி சு. செல்லப்பன் அணிந்துரை எழுதி இருக்கிறார்.

வனக்கோயிலில் ஆரம்பிக்கும் கதை வனக்கோயிலிலேயே முடிகிறது. தன் கணவர் சந்த்ரே கவுடர் பசக்காவிடம் போவதைத் தடுக்கும் பொருட்டு மந்திரக்காரனிடம் பூசை செய்யும் கமலி கோழியைப் பலிகொடுக்கும் இடத்துக்கு அருகிலேயே முடிவில் தானும் பலியாவது குரூரம்.ஒரு பெண்ணாக எவ்வளவு விட்டுக் கொடுத்துப் போக முடியுமோ அவ்வளவு விட்டுக் கொடுத்துப் போகிறாள் கமலி.

இந்தக் கதை முழுதும் கிட்டி என்ற சிறுவனின் பாத்திரம் மூலமாக சொல்லப்பட்டிருக்கிறது. இதில் கமலி, பசக்கா, கல்யாணி, கௌரி, சாவித்ரி, காளி, தேவி, அவன் வகுப்புத்தோழி நாகு, அவள் அப்பத்தா எனப் பலவிதமான  பெண்கள் வந்து செல்கிறார்கள். ஒவ்வொருவர் வாழ்விலும் ஒவ்வொரு துயரம். ஆண்கள் தங்கள் உலகில் தனியாகவும் பெண்கள் தங்கள் வீட்டில் தனியாகவும் வாழும் வாழ்வை சித்தரிக்கிறது கதைப்போக்கு. ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளாமல் வாழ்ந்தே சாவது என்பதுதான்  அநேக தாம்பத்தியங்களின் முடிவாக இருக்கிறது.

ஆண்கள் ராட்சசர்களாக தாங்கள் சார்ந்த ஆணாதிக்க உலகில் கோபம் மதம் மாச்சர்யம், காமம் லோபம் எல்லாம் கலந்த கலவையாக இருக்கிறார்கள். அநேகமாக தாங்கள் விரும்பியதை முடிக்கும் முருதாடிகளாக, ராட்சசர்களாக. வலிமைமிக்க முரடர்களாக. பெண் அவள் வாழ்வு, அவள் தேவை  அவள் கண்ணீர். அவள் ஏக்கம்..  என எதையுமே உணராத சமூக நிலை பல காலங்களாக நிலவி வருவதை இது காட்டுகிறது.

வீட்டில் சமைத்து வீட்டைக் கவனித்து எல்லார் தேவைகளையும் நிறைவேற்றும் பெண்ணைப் போல அந்த வயலில் உழைக்கும் உழைப்பாளிகளும் வயலில், காட்டில் வீட்டுக் கொட்டடியில் காலம் காலமாக உழைத்து கூழுக்காக அழிகிறார்கள். மேலோர், கீழோர், வலியோர், மெலியோர், பணக்காரன், ஏழை போன்ற அனைத்தும் கோடிட்டுக் காட்டப்படுகிறது கதையில்.

சக்கிலியக் குடியிருப்பும் கொசவக் குடியிருப்பு, வண்ணான் குடியிருப்பு என மக்கள் பகுதி பகுதியாக பிரிந்து வாழ்ந்திருக்கிறார்கள் என்பதைக் கதை உணர்த்துகிறது.மாட்டுக்குத் தீவனத்தில் வெடிமருந்தை வைப்பது., வசந்தவிழாவில் ராட்சசர்களாக மோதிக் கொள்வது, களத்து மேட்டில் குவித்து வைக்கப்பட்டிருந்த கேழ்வரகுப் பயிர் தீயில் அழிவது எல்லாம் கிராமத்தின் இன்னொரு கோர முகத்தை பிரதிபலிக்கின்றன.

கிட்டியின் உலகில் பறவைகளைப் பிடிக்க வலை வைத்தல், மரத்தில் குரங்காட்டம் தாவுதல், நீச்சல் கற்றுக் கொள்ளுதல், நாடக ஒத்திகைகளை வேடிக்கை பார்த்தல் , கதை கேட்டல், என சின்னஞ் சிறிய உலகம் அது. அதில் பள்ளிக்கூடப் படிப்பு என்பதே வேப்பங்காய்க் கசப்பு அவனுக்கு  என பல இடங்களில் சுட்டப்படுவது இன்றைய கட்டாயக் கல்வி முறையின்பால் ஏற்பட்ட கசப்பைக் காட்டுகிறது. இப்போதெல்லாம் அரசுப் பள்ளிகளில் செயல் வழிக் கற்றல் முறை இருப்பதால் சுலபமாக குழந்தைகள் கற்றுக் கொள்கிறார்கள். அதற்கெல்லாம் வாய்ப்பளிக்காதது அந்தப் பழைய கல்வி முறை. மனனம் செய்து ஒப்புவித்தல் மட்டுமே கல்லூரி வரையிலும் கூட கடைப்பிடிக்கப்பட்ட முறை.

கிராமங்களின் தெருக்கூத்து, திருவிழா, அந்த ஊரின் மக்களின் வாழ்வும் உணவு முறை ( ரொட்டி , அரிசி அடை, வெண்ணெய் ) மற்றும் வேலைக்காரர்களுக்கு வீட்டம்மா உணவளித்தல்,  வேலைக்காரர்கள் எஜமானர்களைச் சார்ந்து வாழ்தல்  போன்றவையும், அந்த ஊரின் பெயர்களாக புட்டண்ணா, கௌவுடர் . புந்தேமாலன், கெச்சன், சிவகெங்கன், ரத்தப்பன், சென்னூர்,  லொம்பி, சில்லன்,

கொப்பலு தீர்ப்பு, நூத்து  ஐம்பது பஸ்தா  கேழ்வரகு, எடதொரை நதீதீரத்து மாகாணியில் வெளைஞ்ச நெல்லு, ஊர்ச்சாவடி, அதில் பஞ்சாயத்து, வனத்திலிருந்து வந்து பயிரை எல்லாம் அழிக்கும் யானையை விரட்ட தாரை தப்பட்டை அடித்தல், தீ மூட்டுதல், மனுசக் குரலில் அழைக்கும் குருவி,திண்ணை வித்த வீடுகள், அதில் சீட்டாட்டம் ஆடும் ஆண்கள், பொம்மலாட்டம் காட்டுபவர்கள், ஊசி பாசி விற்கும் நாடோடிக் குறக் கும்பல் திருவிழாவை ஒட்டி நாடகம் போடுதல் என ஒரு அடர் கிராமத்தை வரைகிறது புதினம்.

அதோடு அதாக அந்த கிராமமே கிட்டியின் கண்களின் மிருகங்கள் வாழும் அடர் வனமாகவும் தோற்றமளிக்கிறது. ராட்சசர்கள் நிறைந்த காடாகவும். முடிவில் அந்த அழகிய கிராமத்தில் தன்னை வளர்த்த கமலியம்மா அந்த மனித வக்கிரங்களுக்குப் பலியானபின் தன்னை வளர்க்க எடுத்துச் சென்ற சந்த்ரே கௌடர் கொலையாளியாகி சிறைக்குக் சென்றபின் தன் அம்மா அப்பாவின் வருகைக்காகக் காத்திருப்பதாக கதை முடிகிறது.

ஐந்திலிருந்து எட்டு  வயதுக்குள் ஒரு பையனின் கண்ணெதிரில் நடக்கும் கிராமத்துக் காட்சிகள்தான் இந்தப் புதினம். இதில் அந்தப் பையனின் அறிவுக்கும் எட்டாத விபரங்களையும் சரளமான நடையில் பகிர்ந்தபடி செல்கிறார் ஆசிரியர். சொல்ல முடியாத விஷயங்களை எல்லாம் இயற்கை நடைமுறைகளே கற்பிக்கின்றன என போகிறது கதை. இதை ஒரு மொழிபெயர்ப்பு என கருத முடியாதபடி தனது சரளமான நடையில் கொடுத்துள்ளார் ராஜேஸ்வரி.

இந்த மாதிரி அயல்மொழிக் கதைகள் அந்தந்த ஊரின் அந்தக் காலகட்டத்து வாழ்வையும், வட்டார மொழியையும், உலக நடைமுறை, நம்பிக்கைகளையும் சொல்லிச் செல்கின்றன. இதற்காகவே இந்த நூலைப் படித்துப் பாருங்கள்.

எண்டமூரி வீரேந்திரநாத் கதைகளை சுசீலா கனகதுர்க்காவின் மொழிபெயர்ப்பில் படித்துள்ளேன். துளசிதளம் மறக்க இயலாத ஒன்று.  கன்னட கிராமத்தின் வாழ்வியலைச் சொல்லிச் செல்லும் இந்த நூலும் அருமை. இன்னும் பல மொழிபெயர்ப்பு நூல்களைப் படைக்க வேண்டும். திருமதி ராஜேஸ்வரி அவர்கள். இது அவர்கள் மொழிக்காற்றிய பெரும் சேவை. குடும்பத்தலைவியாய் இருந்தும் மொழிக்கும் சிறப்பாகச் சேவையாற்றி வரும் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நூல் :- வனக்கோயில் ( அடவி என்ற கன்னட நூலின் தமிழ் மொழியாக்கம்)

ஆசிரியர்  :- ஸ்ரீ கிருஷ்ண ஆலனஹள்ளி

தமிழில் :-  ராஜேஸ்வரி கோதண்டம்

பதிப்பகம் :- கங்கை புத்தக நிலையம்

விலை ரூ :- 70/-

Series Navigationவைரமுத்து படைப்புகளில் வாழ்வியல் சடங்குகள்
author

தேனம்மை லெக்ஷ்மணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *