தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

20 செப்டம்பர் 2020

வெறும் தோற்ற மயக்கங்களோ?

சபீர்

Spread the love

அதற்கப்புறம்
ஆறேழு மாதங்களாகியும்
அம்மாவுக்கு
அப்பாவின் மறைவு குறித்து
தீர்மானமாக ஏதும்
புரிந்துவிடவில்லை

அன்றாட வாழ்க்கையில்
அதிகப்படியான உரையாடல்களை
அம்மா அப்பாவிடம்
சொல்லிக் கொண்டுதானிருந்தாள்

அப்பா வாழ்ந்த வீட்டின்
அத்தனை இடங்களிலும்
நின்றதுவும் நடந்ததுவும்
மொத்த நேரமும்
கூடவே இருந்ததுவும்
சில்லறைக் காரியங்களைச்
செய்து தந்ததுவும்

மாடியில்
தண்ணீர்தொட்டி நிரம்பி
அருவியாய் கொட்டும்போதெல்லாம்
மோட்டாரை நிறுத்தச்சொல்வதும்

காய்கறிக் கடையில்
மறக்காமல் புதினா மல்லியோடு
கறிவேப்பிலைக் கொத்தும்
கிள்ளிப்போட்டு வாங்கிவரச்சொல்வதும்

அடமான நகைக்கு
வங்கியில்
கெடு முடிவடையப்போவதை நினைவுறுத்துவதும்

மாமா வீட்டில்
மண்ணெண்ணெய் வாங்க
இரவல் கொடுத்த
குடும்ப அட்டையை
மறவாமல்
அன்றாவது திரும்ப வாங்கச் சொல்வதும்

என
அப்பாவை
ஏதாவது சொல்லிக்கொண்டிருக்கும்
அம்மாவுக்கு
வீடு முழுவதும் அப்பா இருப்பதாக
தோன்றல்கள்
எனினும்

வீடே உறங்கும்
விடிகாலையில்
ஃபிளாஸ்க்கில் முக்கால்வாசிச் சூடு
நீர்த்துப் போன
காஃபி ஊற்றி
பிஸ்கோத்து நனைத்து
தனியாக
உண்ணும்போது மட்டும்
அம்மாவுக்கு
விழிகளில் நீர் கோர்த்துக்கொள்ளும்.

-Sabeer

Series Navigationசோவின் ‘ என்று தணியும் இந்த சுதந்திர தாகம் _ மேடை நாடகம் (நகலச்சு)பஞ்சதந்திரம் தொடர் 36 – இரந்துண்ணும் நிலை எப்படி?

5 Comments for “வெறும் தோற்ற மயக்கங்களோ?”

 • சோமா says:

  நீர்த்துப் போன காஃபி ஊற்றி பிஸ்கோத்து நனைத்து தனியாக உண்ணும்போது……..very realisable words…we people are realising the worth of things when we miss it.

 • ”கவியன்பன்” கலாம் says:

  உற்ற கணவர் உயிருட னில்லாமல்
  வெற்றில்ல தோற்ற வுணர்வினால்- பற்றுடன்
  மாயம் மறைக்கும் மனைவியின் பற்றினால்
  காயம் மறையுதே காண்

 • சேக்கனா M. நிஜாம் says:

  வாழ்த்துகள் சகோ. கவி. சபீர் அவர்களுக்கு,

  இன்றைய ஏழை எளியோரின் அன்றாட வாழ்கையின் சில நேரங்களில் சிந்துகின்ற “நினைவு /துயரம்/ஆனந்தக்கண்ணீர்” களை கோர்வையாக்கியுள்ளீர்கள்.

 • ஒ.நூருல் அமீன் says:

  இதயத்தை மயிலிறகால் வருடும் அருமையான கவிதை

 • சபீர் says:

  நன்றி சகோதரர்களே


Leave a Comment

Archives